- அம்ரிதா ஏயெம்
ஒப்புக்கோடல் இலக்கியம் என்பது தனிமனித சுயசரிதைப் பாணியாக அல்லது புனைவாக அல்லது புனைவற்றதாகவும் இருக்கலாம். இங்கு மறைக்கப்பட்ட மிகவும் விரிவானதும் இரகசியமானதுமான உண்மைகள் வெளிக்குவிடப்பட வேண்டும். இருண்ட பக்கங்கள், சுரண்டல்கள், அடாத்துக்கள், வன்முறைகள், பேரவலங்கள் அதற்கான காரணங்கள், கர்த்தாக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். சுய பச்சாதாபம், பாவமன்னிப்பு அல்லது பாவ ஒப்புக்கோடல் உணர்வுகள் தூக்கலாகவும் இருக்க வேண்டும். இவைகளுக்கெல்லாம் இரத்தமும் சதையுமான சாட்சியாகவுமிருந்த ஒருவரின் (அல்லது பலரின் உள்ளார்ந்த உண்மைகளின்), மிகவும் தீவிரமான தன்னைப் பற்றியதும், தான் சார்ந்த அமைப்பு பற்றியதும் அல்லது நம்பிக்கை பற்றியதுமான சுயபரிசோதனையே முன்னிறுத்தப்படவும் வேண்டும்.
ஈழத்துச் சூழலில் போரிலியக்கங்கள் வேறு. ஒப்புக்கோடல் இலக்கியங்கள் வேறு. போர் ஒப்புக்கோடல் இலக்கியங்கள் வேறு. இந்த வகையில் இலங்கை தமிழ்ச் சூழலில், முதலாவது அந்த வகையான இலக்கியம் கோவிந்தனின் புதியதோர் உலகம் (1985) ஆகும். அதன் பின்னர் பின்னர் பல உதாரணங்களாக இருக்கின்றன. அவற்றுள் சில. உதாரணமாக (கவனத்திற்கொள்க இது பட்டியல் அல்ல) ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் (சி. புஸ்பராஜன்), ஒரு கூர்வாளின் நிழலில் (தமிழினி), ஈழத்தின் வலி (உமாகாந்த்), நஞ்சுண்ட காடு (குணா கவியழகன்). இன்னும் பல எழுத்துக்கள் உள்ளன (உ-ம். சோபா சக்தி, சாத்திரி) (கவனிக்க இதுவும் பட்டியல் அல்ல). இந்த வகையான, யுத்தத்திற்கு பிறகான, ஒப்புக்கோடல் இலக்கியங்களுக்கு உந்துசக்தியாயும், கால்கோளாயும் இருந்தது, 2009, ஓகஸ்ட் மாத காலச்சுவடு இதழில் வெளிவந்த ஈழப் போரின் இறுதி நாட்கள் என்ற கவிஞர் கருணாகரனின் எழுத்துக்களாகும். அந்தக் காலகட்டத்தில் மிகவும் தையரியமான எழுத்துமாகும். இது எனது தனிப்பட்ட அவதானமும், கருத்துமாகும்.
No comments:
Post a Comment