தேவனின் தூதர்களின் போர்
நடப்பது போர்
உக்கிரப் போர்
ஒரு கரம் அறுபடலாம்
மறுகால் துண்டுபடலாம்
ஏன் அங்கங்கள்கூட சிதைபடலாம்.
உக்கிரப்போரில்
வெற்றியும் வரலாம்
தோல்வியும் வரலாம்
ஒருவேளை உங்களை
நீங்களே இழந்தும் விடலாம்
நாங்கள் விடுமுறையுடன்
வீடுகளுக்குள் களித்து தனித்திருக்க
நீங்களோ நெடுமுறை வகுத்து
நாட்டுக்காக களமாடுகிறீர்கள்
என் நம்பிக்கை இடம் கொடுத்திருந்தால்
கடவுளின் துகள்களை
உங்களின் காணலாம் என்றிருப்பேன்.
கண்ணுக்குத் தெரியா பகையோடு
ஊண், உறக்கம், உடை, குடும்பம் தவிர்த்து
நீங்கள் சமராடிய இந்த யுத்த காண்டக் காதையை
வரலாறு பொதிந்து கொள்ளும்
தேசத்தின் வீரவணக்கத்தை
உங்களுக்கு சொல்வதைத் தவிர
அல்லது
பின்னொரு நாளில்
வெள்ளொளி வீசும் பசிய ஆடைத் தேவதூதர்கள்
எப்படி இருப்பார்கள் என்று எங்கள் பிள்ளைகள் கேட்டால்
உங்கள் உருவந்தாங்கிய படங்களுக்கு
கைகாட்டுவதை தவிர
வேறு என்ன பெரிதாக எங்களால்
உங்களுக்குச் செய்துவிட முடியும்.
-அம்ரிதா ஏயெம்
No comments:
Post a Comment