Wednesday, April 26, 2017

இலங்கையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதிலுள்ள சவால்கள்.



-               .எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்)

அயனமண்டல, உப அயனமண்டல நாடுகளில் வேகமாக பரவிவரும், நுளம்பினால் காவி வைரசினால் தோற்றுவிக்கப்படும் உயிர்கொல்லி நோயான டெங்கு பற்றி போதுமான அளவு, அதன் தோற்றம்அறிகுறி, கண்டுபிடித்தல், சிகிச்சை, தடுத்தல் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. மிகவும் சவாலான டெங்கு நோயைத் தடுப்பதற்கு மிகுந்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தாலம், அதனை இலங்கையிலிருந்து முற்றாக கட்டுப்படுத்த முடியாதிருப்பதற்கு பல சவால்கள் காணப்படுகின்றன. அதனையே இந்தக் கட்டுரை பேச இருக்கின்றது.


டெங்குவால் வலிகளும், வேதனைகளும், மரணங்களும் மட்டுமல்ல, அந்த நோயை முகாமைத்துவம் செய்வதற்கான செலவுகள் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு தாங்க முடியாத சுமையாக இருக்கின்றது. கடந்த அரைநூற்றாண்டாக 30 மடங்கு அதிகரித்தும், 128 நாடுகளைச் சேர்ந்த 400 மில்லியன் மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் டெங்கு நோயால், உலகில் ஒவ்வொரு வருடமும்; கடுமையாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஐந்து இலட்சம் நோயாளர்களில், ;ருபத்தி ஐயாயிரம் பேர் பரிதாபமாக இறந்து போகின்றனர்.

கடந்த காலங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் மூன்று முக்கிய விடயங்களை மையமாக கொண்டிருந்தன. 1) கண்காணிப்பும், திட்டமிடலும், செயற்படுத்தலும், 2) நோயின் தீவிரத்தைக் குறைத்தல், 3) மக்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி நோய் காவியை கட்டுப்படுத்தி நோயை கட்டுக்குள் வைத்திருத்தல். இந்த கடந்த கால நடவடிக்கைகளின் வினைத்திறனற்ற தன்மை காரணமாக, சமீபகாலமாக டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் மிகுந்த தோல்விநிலை காணப்படுகின்றது. எனவே இந்த நடவடிக்கைகள் மீண்டும் மாற்றத்துக்குள்ளாக வேண்டும் என்ற குரல்கள் எழுப்பப்பட்டு, அதன் நிகழ்ச்சித் திட்டங்கள் மீண்டும் மறுசீரமைப்புக்குள்ளாக வேண்டும் என்ற அவசியமும் ஏற்பட்டிருக்கின்றது. மிகவும் குறைந்தளவாக இரசாயன பாவனை, வான்வழிப் போக்குவரத்தை முறைமைப்படுத்தல், டெங்கு நோயை கண்டுபிடிக்கும் நவீனநுட்ப முறைகளை விருத்தி செய்தலும் அதனை  உபயோகத்திற்கு கொண்டு வருதலும், டெங்கு நோய்க்கு எதிராக வக்சின்களை விருத்தி செய்து அதனை உபயோகித்தல் போன்றன புதிய விடயங்களுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பல புதிய முறைகள் வந்தாலும், பழைய முறையான மக்களின் ஆதரவுடன் நோய் காவியை ஒழித்தல் நடவடிக்கையின் நன்மைகள் காரணமாக அதனை நாம் ஒரேயடியாக மறுக்க முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை 1960ம் ஆண்டு டெங்கு அறிமுகமான காலத்திலிருந்து 2009, 2010 காலப் பகுதியே நோய்ப் பெருக்கம் கூடிய முதலாவது காலப் பகுதியாகும். 2014ல் 47502 பேரும், 2015ல் 29777 பேரும், 2016ல் 51823 பேரும் பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிரித்து நாட்டுக்கு பெரும் பொருளாதார சுமையை தோற்றுவித்து வருகின்றது. 1965-1968 வரை னுநுN -1, னுநுN -2 என்ற இரு வகை வைரசுக்கள்தான்  பாதித்து இருந்தன. 1978ல் DENV-4,  1980-1990 வரை DENV-3(IIIA), 1992ல் DEN-4, 2011-201 காலப் பகுதியில் DENV-1, DENV-4 போன்ற வைரசு வகைகள் மாறி மாறி டெங்கு நோயை உருவாக்கியிருந்தன.

மிகுந்த பொருட்செலவில், மிகப் பாரியளவில் சமீபகாலமாக டெங்கு நோய் ஒழிப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றபோதும், டெங்கு நோயை முற்றாக கட்டுப்படுத்த முடியாததிற்கான பல காரணங்களும் சவால்களும் உள்ளன. அவைகளை ஒவ்வொரு சிற தலையங்களிற்கு கிழ் சுருக்கமாக பார்ப்போம்.



01)           சுற்றாடல் முகாமைத்துவம் சம்பந்தமான குறைபாடுகள்:
1)             அதிகரித்த சனத்தொகை, மழைவீழ்ச்சி போக்குகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள், மாநகர, நகர, பிரதேச சபைகளினால் ஒழுங்காக திண்ம, திரவ கழிவு முகாமைத்துவம் செய்யப்படாமை போன்றவைகளின் காரணமாக நுளம்பு பெருகுகின்ற இடங்கள் அதிகரித்தமை.
2)             அதிகரித்த சனத்தொகை காரணமாக ஏற்பட்ட நீர்த்தேவைக்காக, நீரை சேமித்து வைக்கப் பயன்பட்ட நீர்த்தாங்கிககள் ஒழுங்காக மூடப்படாமை.
3)             கடந்த அரசாங்கத்தில், இலங்கை முழுவதும் பல கொங்கிறீற் வீதிகளும், வடிகான்களும் அமைக்கப்பட்டன. அதிலுள்ள குறைபாடுகளும், அதன் நிமித்தம் ஏற்பட்ட நீர்த் தேங்கல்களும்  நுளம்புக் குடித்தொகையைக் கூட்டியிருக்கலாம்.
4)             நுளம்புக் குடம்பிகள் நன்னீரில்தான் பெருகுகின்றன என்றுதான் பொதுவாக சொல்லப்படுகின்றன. இலங்கையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சவர்நீர், உவர்நீர், மாசடைந்த நீர் போன்ற எல்லாவற்றிலும் நுளம்புகளைப் பெருக்குகின்றன என்ற நிரூபித்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சி முடிவுகள் மேலும்; டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தலை சிக்கலாக்கியுள்ளன.
5)             தவளைகளும், வாற்பேத்தைகளும் (வாலாந் தவளைகளும்) ஒரு சூழற்தொகுதியில் பீடைகளையும், நுளம்புகள் போன்ற பூச்சிகளையும் கொன்றொழித்து அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. யுத்தத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்ட நிலங்களின் மீதான அதிகரித்த விவசாய இரசாயனப் பொருட்களின் பாவனை இலங்கையில் தவளைகளின் குடித்தொகையை வெகுவாகக் குறைத்திருக்கலாம். இதன் காரணமாக தவளைகளினால் நுளம்புகளின்மீது செய்யப்படும் உயிரினவியல் கட்டுப்பாடு தடைப்பட்டு, அதிகரித்த நுளம்புக் குடித்தொகை காரணமாக இலங்கையில் டெங்கு அதிகரித்து காணப்படலாம்


02)           உயிரியல் முகாமைத்துவம் சம்பந்தமான குறைபாடுகள்:
1.             உயிரியல் நோய் காவிக் கட்டுப்பாட்டு முறையில் டெங்கு நுளம்புகளை இரை கொல்லிகள், ஒட்டுண்ணிகள், நோயாக்கிகள் போன்ற உயிரிகளை பாவித்து நுளம்பை அல்லது நுளம்புக் குடம்பிகளை கொன்று கட்டுப்படுத்தலாம். இதனை சுற்றாடல் முகாமைத்துவத்தோடு இணைந்தவாற செய்தால் நிலைத்துநிற்கக்கூடிய பலாபலன்களை அடையலாம். இந்த விடயம் இலங்கையில் ஒரு முக்கிய குறைபாடாக காணப்படுகின்றது.
2.             உயிரியல் கட்டுப்பாட்டு முறையில், இறால் வகையைச் சேர்ந்த கொப்பேபொட், நுளம்பு குடம்பிகளை உண்ணக்கூடிய மைனொ மீனினம் போன்றவை தூய நீரிலும், கப்பி மீன் இனங்கள் சேதன மாசடைந்த நீரிலும், திலாப்பியா மீன் இனங்கள், ரொக்சோஹைச்சிட் போன்ற மீன் இனங்கள் மற்றைய நீரிலும் திறமையாக டெங்கு நோய் குடம்பிககைளக் கட்டுப்படுத்துகின்றன. இதனை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன.
3.             பசிலஸ் துறுன்ஜியன்ஜிஸ் வா இஸ்ரேலென்சிஸ், பசிலஸ் ஸ்பேரிகஸ் போன்ற பக்டீரியாக்கள் மிகவும் சிறப்பாக டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்;துகின்றன. இலங்கையில் அவ்;வப்போது இவைகளைப் பாவித்தாலும் அதனது விளைவுகள் பற்றிய அறிக்கைகள் வருவது குறைவு. அத்துடன் தொடர்ச்சியாக பாவிப்பதும் குறைவு.
4.             வோல்பாச்சியா பக்டீரியா டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு வியட்னாம் போன்ற ;நாடுகளில் பாவிக்கப்படுகின்றன.
5.             ஏனைய நாடுகள் நுளம்புகளைக் கட்டுப்படுத்த, புதிய அறிவு நுட்பங்களை பயன்படுத்துகின்றன. பரம்பரையலகு விகாரத்திற்குபட்டு உருவாக்கப்பட்ட விகாரி, டெங்கு நோயை உருவாக்கக்கூடிய வைரசு உள்ள நுளம்பை அழிக்கக்கூடியதாக அல்லது அதன் குடித்தொகையை குறைக்கக்கூடியதாக உள்ளது. எனவே நமது நாட்டில் டெங்கு நோயை கட்டுபடுத்துவதில் நவீன மூலக்கூற்று பரம்பரையியல் உயிரின தொழில்நுட்பவியலை பயன்படுத்த வேண்டும்.

03)           இரசாயன முகாமைத்துவம் சம்பந்தமான குறைபாடுகள்:
1.             டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தக்கூடிய பூச்சிநாசினிகள், குடம்பிநாசினிகள் பெரும்பாலான நாடுகளில் பாவிக்கப்படுகின்றன. டீடீரி இதற்கு பாவிக்கப்படும் நல்ல நாசினி என்றாலும், 1960 களிலிருந்து டீடீரி இற்கு எதிராக நுளம்பு எதிர்ப்பினங்கள் உருவாகியுள்ளன. சில வகை எண்ணெய்களும், கந்தக புகைகளும், நுளம்பின் வாழ்க்கை வட்ட ஒவ்வொரு நிலைகளை அழிப்பதற்கான சிறப்பான இரசாயனப் பொருட்களும் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாவிக்கபட்டுவருகின்றன. அந்த வகையான இரசாயன கொல்லிகளை இங்கே பாவிப்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.
2.             நுளம்புகள் உட்புகுவதை தடுக்ககூடிய, பூச்சி நாசினி பிரயோகிக்கப்பட்ட நுளம்பு வலை, ஜன்னல், கதவு, கிணறு போன்றபவற்றிற்கான திரைச்சீலைகளின் பாவனையானது லத்தீன் அமெரிக்க நாடுகளில் நல்ல பலாபலன்களதை; தந்துள்ளன. எனவே இதனை அரசாங்கம் சட்டமாக்கல் வேண்டும்.
3.             உலக சுகாதார ஸ்தாபனத்தால் விதந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினி பிரயோகிக்கப்பட்ட ஒவிரெப் நுளம்பு கொல்லி பொறிகளின் பாவனையானது பிறேசிலில் இந்த நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியது. இதனை இலங்கையிலும் நாம் அறிமுகப்படுத்தி பாவிக்க வேண்டும்.
4.             இளம் பூச்சிகளின் ஓமோன்களை ஒத்த இரசாயனப் பொருளான பைரிபுறொக்கிபென் நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பாக தொழிற்படுகின்றது என அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனை பாவிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்

04)           நிர்வாகம், மக்கள் சார்ந்த பிரச்சினைகள்:
1.             நோய்த் தீவிர காலங்களில் மட்டுமே நுளம்பு கட்டுபடுத்தலுக்காக புகையிடல் செய்யப்படுகின்றன. மற்றைய காலங்களில் இதனை தொடர்ச்சியாக செய்வதற்கு வளங்களின் பற்றாக்குறை காரணமாக இருக்கிறது.
2.             மிக அதிகமான கிராமப்புற, நகரப்புற மக்களின் ஆதரவை பல்வேறு காரணங்கள் காரணமாக டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்க பெற்றுக்கொள்ள முடியாமல் போனமை. உதாரணமாக இவ்வளவு காலமும் பரிசோதிக்கப்பட்ட வீடுகளில் 1 சதவீதமான வீடுகளிலேயே நுளம்புகள் இனம் பெருக்குவதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். நுளம்புகள் பெருகுவதை தடுப்பதற்கு மரங்களை அடியோடு சில இடங்களில் வெட்டச் சொல்கிறார்கள். இதை மக்கள் விரும்புவதுமில்லை. இது மரங்களுக்கும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கத்திற்கான தொடர்பு பிழையாக புரிந்துவைக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது. ஆகவே தொடர்ச்சியாக மக்களை நோக்கி இன்னும் கைகாட்டுவதில் பிரயோசனமில்லை.
3.             இன்றும் கிராமப்புறங்களில் மக்கள் நீர்த்தாங்கிகளை மூடி வைக்க விரும்புவதில்லை. அப்படி மூடப்படாத தாங்கிகளுக்கு மூடிக்கொடுக்க அரசாங்கத்தினால் முடிவதும் இல்லை. நீர்வழங்கல் சபையின் மூலமாக பெற்ற குழாய் நீரையும் தாங்கிகளில் சேமித்தே பாவிக்கும் பழக்கம் (அடிக்கடி நீர்வெட்டு காரணமாக) மக்களிடம் இருக்கிறது. இவைகளும் நுளம்புப் பெருக்கத்தை அதிகரித்துள்ளன.
4.             நுளம்பு விருத்தியடையும் இடங்களை கண்டுபிடிப்பதிலுள்ள சவால்கள். ஏனெனில் சிமெந்துக் கட்டின் சிறு வெடிப்பில் தொடங்கி அலுமினிய சிறுமூடியின் ஓரத்திலும் இந்த நுளம்புகள் மறைந்து வாழக்கூடியன.
5.             நுளம்பைக் கொல்லப் பாவிக்கம் இரசாயனம் நஞ்சாகும். அத்துடன் நுளம்பு தவிர்ந்த மற்ற உயிர்களையும் கொல்வதன் காரணமாக மக்கள் டெங்கு ஒழிப்பிற்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில் தயங்குவதாக தெரிகிறது.
6.             டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை, மனித, பௌதிக வளப் பற்றாக்குறை நிலவுதல்.
7.             நடைமுறைச் சாத்தியமான நிலைத்துநிற்கக்கூடிய தந்திரோபாயமான டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டங்களில்; உள்ள போதாமை.
8.             மக்களை முறைமையான கழிவகற்றல் முறைமைக்குப் பழக்கப்படுத்துவதிலும், வீசி எறிந்தால் நீர் தேங்கி நின்று நுளம்பின் விருத்தியை கூட்டக்கூடிய பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கும், சேதனக் கழிவுகளை சேதனப் பசளை தயாரிப்பதற்கும் வேண்டிய அறிவையும் விழிப்புணர்வையும் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதிலுள்ள குறைபாடுகள்.
9.             சூழல், நோய் காவியின் உயிரியல், பூச்சியியல், வைரசியல், நோயியல், நுளம்பு பரம்பல் முறைகள், பரம்பரையியல் பொருட்களின் மாற்றம் பற்றிய ஆய்வுகளைச் செய்து, காலநிலைக் காரணிகளுடன் இணைத்து, நோய் பரவலை எதிர்காலத்தில் எதிர்வுகூற வேண்டும். இதற்கு ஜீஐஎஸ் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தல்.
10.           நுளம்பு விரட்டிகளைப் பாவிப்பதிலும், இளம் நிறமான தடித்த துணிகளைப் பாவிப்பதன் மூலம் நுளம்புக் கடியிலிருந்து  தடுக்கலாம் என்பதை மக்களுக்கு விழிப்புணவர்பு செய்வதிலுள்ள குறைபாடுகள். இதற்கு பிரதான காரணம் பத்திரிகை, இலத்திரனியல் ஊடகங்களாகும்.
11.           பாடசாலை, உயர்கல்வி பாடவிதானங்களில்; டெங்கு நோயை உள்ளடக்கல்
12.           டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தில்வைத்தியசாலைகள். பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள், மாநகர, பிரதேச. நுகர சபைகள், பிரதேச செயலகங்கள், சமுர்த்தி அதிகார சபை, உள்ளுர்மத நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள், உள்ளுர் சுகாதார சங்கங்கள், இயற்கை சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றின் ஒத்துழைப்பபை பெறுவதிலுள்ள குறைபாடுகள்.

இலங்கையின் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டமானது நோய்காவியை கட்டுப்படுத்துதலை மட்டுமே பிரதான இலக்காக கொண்டு நிகழ்த்தப்படுகின்றது. இதன் காரணமாக இது இன்னும் பூரண நிலையை எட்டவில்லை. சுற்றாடல், உயிரியல், இரசாயன முகாமைத்துவங்கள், மற்றும் மக்கள், அரச நிறுவனங்கள் இணைந்ததும், அவைகளிலுள்ள குறைபாடுகளைக் களைந்ததுமான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்றிட்டத்தை விட தத்துவத்தை விளங்குவதை முன்னிலைப் படுத்தினாலேயே, வினைத்திறனான நிகழ்ச்சித் திட்டத்தை உருவாக்கலாம் என்று கருதுகின்றேன்.



பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...