பொதுவுடமை, சூழலியல், மாற்று-பூகோளமயவாதம், பூகோளமயஎதிர்ப்புவாதம் போன்றவைகளின் அம்சங்களை கலவகையாக கொண்டமைக்கப்பட்ட கருத்தியலே சூழலியல் சோசலிசம் என ஓரளவு வரையறுக்கலாம். பூகோளமயவாதம், ஏகாதிபத்தியம் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகள், வறுமை, போர், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றை முதலாளித்துவம் ஏற்படுத்துகின்றது என சோசலிச சுற்றுச்சூழல்வாதிகள் நம்புகின்றனர். மேலும் உற்பத்தி முறைமையானது அரசுடமை அல்லது பொதுவுடமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.
ஒரு சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறைகள்தான் மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவையும், மனிதனுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவையும் தீர்மானிக்கின்றன என்று மார்க்சியம் கூறுகின்றது. சுரண்டலை மையப்படுத்தாத சமூகத்தையும், முழுவளர்ச்சியை நோக்கிய மனித ஆற்றலை கட்டுப்படுத்தாத சமூகத்தையும், தனியாரின் இலாபத்திற்காக வர்க்கச் சார்பாக எடுக்கப்படுகின்ற சமூக முவுகளுக்கு முக்கியம் கொடுப்பதைவிட மனிதனின் தேவைகளுக்காக முக்கியத்துவம் கொடுப்பதையும் மார்க்சியம் ஆதரிக்கின்றது. இதன் காரணமாக அதிக இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்ட உற்பத்திக்காக இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் சுரண்டி சிதைவடையச் செய்தல், பாலின, மொழி பாகுபாடு போன்றவைகளுக்கு எதிராக மக்களை அணிதிரளச் செய்தல் போன்றவைகளினூடாக மாரச்சியமானது சுற்றுச்சூழல் மீதான தனது கரிசனையை வலியுறுத்தி வந்திருக்கின்றது.
முதலாளித்துவத்தின் இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட உற்பத்திமுறை காரணமாக உருவாகும் இயற்கை, மனிதர்கள் மீதான பேரழிவுகள் பற்றி மார்க்ஸ் தனது மூலதனம் என்ற நூலில் 151 வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டிருக்கின்றார். முதலாளியம் உலகத்தை ஆட்கொள்ளும் என்றும், தனது இலாப நோக்க உற்பத்திக்காக முழு உலகிலுமுள்ள இயற்கையை சுரண்டும் என்றும், முதலாளித்துவ உற்பத்தியை அதிகரிக்க பெரும் நகரப்புறங்களிலுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கு மக்கள் உழைப்புக்காக ஒன்று குவிக்கப்படுவார்கள் என்றும், மண் தனது வளத்தையும், விவசாய நிலங்களின் வளத்தையும் எவ்வாறு இழக்கும் என்றும், கிராமப்புறங்களின் மண்வளம் விளைவுப் பொருட்களாய் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, நகரப்புறங்களின் கழிவுகளால் கிராமப் புறங்கள் நஞ்சாதல் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் மனிதர்களுக்கும் இயற்கைக்குமிடையிலான வாழ்வுக்கு இன்றியமையாத இயற்கையிலிருந்து மனிதன் அந்நியமாதல் பற்றியும், மனிதனும், இயற்கையும் ஒரே உடலின் இருகூறுகளாகும் என்பதுபற்றியும் மார்க்ஸ் விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.
இவ்வாறான மனிதச் செயற்பாடுகளால் உருவான மாசுகள் அல்லது கழிவுகள் பாரியளவில் நகரங்களிலும், மற்றைய இடங்களிலும் நீரையும், நிலத்தையும், வளியையும் மாசாக்கி உயிரினங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளைக் கொடுக்கின்றன. இந்தப் புள்ளியிலேயே சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகள் உருவாகத் தொடங்குகின்றன என்பதே மார்க்சியர்களின் கருத்தாகும்.
அதேவேளை அதிகரித்த சனத்தொகைப் பெருக்கமும், சூழல்மீதான தனிநபரின் அக்கறையற்ற தன்மையும்தான் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு காரணம் என முதலாளித்துவம் கூறிவந்த வேளையில், அமரிக்காவின் சோசலிச சூழல்வாதியான பேராசிரியர் பேர் கொமனர் “முதலாளித்துவ சமூகத்தின் இலாப நோக்கிலான உற்பத்தி நடைமுறைகளே பெருகிவரும் சூழலியல் சிக்கல்களுக்கு காரணம் எனவும், தற்போதுள்ள உற்பத்தி முறைமையானது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் வகையில் உள்ளது எனவும் தற்போதைய மனித நாகரிமானது தற்கொலையை ஒத்துள்ளது எனவும்” The Closing Circle என்ற தனது நூலில் 1971ம் ஆண்டு; நவீன உலகிற்கு கூறினார்.
முதலாளித்துவ அமைப்பின் நோக்கம் எப்பொழுதும் இலாபத்தை அதிகரிப்பதாகவே இருந்து வருகிறது, ஒருபோதும் சமூக நலனுக்காகச் சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்ததில்லை. அனைத்து முதலாளிகளும் ஒன்று சேர்ந்து, அவர்களுடைய இலாபத்தை அதிகரித்து வருகிறார்கள், சமூகத்திற்குத் தேவையானதை உற்பத்தி செய்கிறார்கள், அதே சமயத்தில் தங்களுக்கிடையேயுள்ள பரஸ்பரப் போட்டியின் மூலம் ஒவ்வொருவரும் மற்றவரைக் கட்டுப்படுத்துகிறார்கள். சமூகத்தின் இருப்புக்கும் மறு உற்பத்திக்கும் தேவையான உணவு, உடை, உறைவிடம், பிற வசதிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதோடு மட்டும் முதலாளிகள் தங்களுடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில்லை. இலாபம் என்ற ஒரே நோக்கத்தில் முதலாளிகள் மேலும் மேலும் மூலதனத்தைக் குவிக்க உந்தப்படுகிறார்கள்;, இதன் காரணமாக போட்டியில் அழிந்து விடுவோம் என்ற பயத்தில் அனைவரும் அதில் ஒன்று சேர்கிறார்கள்..
மூலதனக் குவிப்பு என்னும் நோக்கத்தால் உந்தப்படும் ஓர் அமைப்பு ஒருபோதும் நிலையாக இருக்காது, அது எப்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கும். உற்பத்தியிலும் பகிர்விலும் பழைய முறைகளை உதறிவிட்டுப் புதிய முறைகளைப் பின்பற்றும். புதிய நாடுகளைத் தேடிச் செல்லும். தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவிற்குப் பலவீனமாக இருக்கும் சமூகங்களைத் தனது நோக்கங்களுக்கு அடிபணியச் செய்யும். இடையறாத புதிய கண்டுபிடிப்புகள், விரிவாக்கம் என்ற நிகழ்வுப்போக்கில் சிக்கியுள்ள இந்த அமைப்பு தனது சொந்தப் பயனாளிகள் மீதே, அவர்கள் தனது வழியில் குறுக்கிட்டாலும் அல்லது வீழ்ச்சியுற்றாலும் கொடூரமான ஆதிக்கத்தைச் செலுத்தும். இயற்கைச் சுற்றுச் சூழலைப் பொறுத்த வரையிலும், முதலாளியம் அதைப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாக அல்லது நேசிக்கக் கூடிய ஒன்றாகக் கருதுவதில்லை, மாறாக அதை எல்லாவற்றிற்கும் மேலான இலக்குகளாக இருக்கும் இலாபத்தை உருவாக்குதல்
என்பதற்கான ஒரு சாதனமாகப் பார்க்கிறது. இத்தகைய உள்ளார்ந்த இயல்புதான் இந்தப் பொருளாதார அமைப்பின் சாராம்சமான இயக்கு விசையாக இருந்து இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளப்பாதுகாப்பு தொடர்பான கம்யுனிச நாடுகளின் கரிசனையை முதலாளித்துவ ஊடகங்கள் வரலாற்று நெடுக கண்டுகொண்டதுமில்லை, அதற்கு முக்கியம் கொடுத்ததுமில்லை என்றும் வெளியுலகிற்கு தெரியாமல் மழுங்கடித்தே வந்திருக்கின்றார்கள் என்று கம்யுனிசவாதிகள். முதலாளித்துவத்தின்மீது குற்றம்சாட்டி வந்திருக்கின்றார்கள். உதாரணமாக முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பகால இயற்கைவளப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாகவே அறியப்பட்டுள்ளன. பொருளாதாரம், தொழில், அரசியல் தளங்களில் புரட்சிக்குப்பின் ஏற்படுத்தப்பட மாற்றங்கள் அறியப்பட்ட அளவில் இயற்கையைப் பாதுகாக்க அவர்கள் கொண்டுவந்த பசுமைத் திட்டங்கள் கவனிக்கப்படவில்லை என்றே கூறலாம். விஞ்ஞானரீதியில் இயற்கையை அணுகி சுற்றுச்சூழல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், இயற்கையான நிலைமையை பாதுகாத்தல், இயற்கையின் சமநிலையை உறுதிப்படுத்;தல், உயிரினப் பல்வகைமையை அதிகரித்தல் போன்றவைகளுக்காக “இயற்கை பாதுகாப்பு” பிரதேசங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்று உணவுப்பயிர்ஃதாவரப்பயிர் வல்லுனரான பாடியல்போல்ஸ்கி என்பவர் சபோவெட்னிக் (Zapovedniki) (இயற்கை பாதுகாப்பு) திட்டத்தை லெனினிடம் பரிந்துரை செயதார்;. 1918 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி, நிலம் குறித்து ஓர் ஆணையை பிறப்பித்தது. அதில் சோவியத் ஒன்றியத்தின் அனைத்துக் காடுகள், நீர் மற்றும் கனிம வளங்கள் தேசத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டில், காடுகள் குறித்து லெனின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காடுகளானது
பாதுக்காக்கப்பட்ட காடுகள் மற்றும் உபயோகப்படுத்துவதற்குரிய காடுகள் எனவும் பிரிக்கப்பட்டு, பாதுக்காக்கப்பட்ட காடுகளில் காடழிப்பு, நீர் வளஅழிப்பு, வேட்டையாடல் போன்றன 1919ம் ஆண்டு லெனினால் தடைசெய்யப்பட்டன.
இத்திட்டமானது இன்று சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பெரும்பாலான சூழலியல் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் அதிகம் அறிந்திராத இத்திட்டமானது, இன்றுவரையிலும் இலட்சக்கணக்கான ஹெக்டேயர் பரப்பளவுள்ள (உ-ம்: 1933ம் ஆண்டு, 2.7 மில்லியன் ஹெக்டேயர் பரப்பளவுள்ள 33 செபொவெட்னிக் திட்டங்கள்) .பல காடுகளையும், அவைகளின் உயிரியல் பலவமையையும் பாதுகாத்து வருகின்றது.
கியூபாவில் மேற்கொள்ளப்பட்ட இயற்கை விவசாயபுரட்சி அடுத்தஉதாரணமாகும். 1959 ஆம் ஆண்டில் பிடல் கஸ்ட்ரோவும் சேகுவேராவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழித்துக் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். இன்று உலகமே போற்றுகிற இயற்கை விவசாயத்திற்கான அடித்தளம் அப்போதே அமைக்கப்பட்டது. காஸ்ட்ரோ அரசு இயற்கை விவசாய பண்ணைகளை உருவாக்கியும், இயற்கை விவசாயத்தில்; ஈடுபடுவோருக்கு ஊக்கமளித்தும் வந்தது. ஒரு கட்டத்தில் நகர்ப்புற விவசாயத்தில் மனிதனுக்கும் உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரசாயன உரப்பயன்பாட்டை முற்றாக தடை செய்கின்ற சட்டத்தை காஸ்ட்ரோ அரசு கொண்டுவந்தது. இதன் காரணமாக “இயற்கைமுறை விவசாயத்தை சட்டமாக்கிய உலகின் முதல் நகரம் ஹவானா” என்ற பெருமையைப் பெற்றது. இவ்வாறு மார்க்சியர்கள் முன்னைய சீனாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல உதாரணங்களை காட்டுகிறார்கள்.
எனவே முதலாளிய உற்பத்திமுறையானது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையில் பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளதால், உயிர்களின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்துப் பேணுவது என்பது இந்த உற்பத்திமுறை இருக்கும்வரை மாற்றமுடியாததாகவே இருக்கும். எனவே அனைத்துப் பொருளாதார உற்பத்தியும் சோசலிச அடிப்படையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரும் தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் நகரங்களை மையமாகக் கொண்ட, முதலாளிகளின் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும் முதலாளித்துவ உற்பத்திமுறைக்குப் பதிலாக, நேரடி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பின் கீழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்ட, நாடு முழுவதும் ஒரே சீராக மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் வகையில் விவசாயத்துடன்; இணைந்த கைத்தொழிற்துறை உற்பத்தி இருக்க வேண்டும். அது ஜனநாயகரீதியாகத் திட்டமிடலுடன் இணைந்திருக்க வேண்டும். நிலம் சமூக உடைமை ஆக்கப்பட்டு அனைவருக்கும் சொந்தமாக்கப்படும்போது மட்டுமே மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிளவு நீங்கும். மனிதன்
இயற்கையிடமிருந்தும், தனது உழைப்பிலிருந்தும் அந்நியமாதல் ஒழிக்கப்படும். இயற்கைக்கும்
மனிதனுக்கும் அப்பாற்பட்ட சக்திகளின் தலையீடு
எதுவுமின்றி இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில்
இயல்பான உறவு ஏற்படும். இயற்கையின் படிமுறை வளர்ச்சியின் ஒரு வடிவமே மனிதன் என்பதையும், இயற்கையின் ஒரு பகுதியே மனிதன் என்பதையும், இயற்கை மனிதனது நீட்டிக்கப்பட்ட உடலின் ஒரு பகுதியே என்பதையும், இயற்கையினால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான் என்பதையும்
மனிதன் உணர்வான். அங்கு மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இயல்பான உயிர்ப் பொருளாக்கச் செயற்பாடு நிலைநாட்டப்படும். மண்ணின் வளமும், சுற்றுச் சூழலும் பாதுகாக்கப்படும். அப்போதுதான் உற்பத்தியின் காரணமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் குறைக்கலாம் என மார்க்சியம் கூறுகின்றது.
மார்க்ஸ், எங்கெல்ஸ் முன்வைத்த “இயற்கையிலிருந்து மனிதன் அந்நியமாதல் முரண்பாட்டை நிவர்த்தித்தல்”
என்ற சூழலியல் மையவாதமே முதலாளித்துவ சமூகத்தின் காட்டுமிராண்டித்தனமான சுரண்டலிலிருந்து இப் பூமியின் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் (இயற்கையையும்) பாதுகாத்து சேவிக்க வந்த இரட்சகம் அல்லது கருத்தியல் ஆயுதம் என்று இன்றுவரை மார்க்சியர்கள் கருதுவதில் உண்மைகள் இல்லாமலில்லை.