ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை).
உலகின் பலநாடுகளில் பாதிப்பினை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்களுள் வெள்ளப்பபெருக்கும் ஒன்றாகும். நதிகளில் நீர் நிரம்பி வழிந்து வெள்ளச் சமவெளிகளுக்கு மேலாக பாய்ந்து செல்லுதலை வெள்ளப்பெருக்கு எனக் கருத முடியும்.தொடர்ச்சியாக மழை பலநாட்களுக்கு பொழிந்து நீரேந்து பகுதிகளிலிருந்து அதிகரித்த நீர் ஆறுகளில் சேர்ந்து ஆற்று நீர் அதிகரித்து சூழவுள்ள தாழ் பிரதேசங்களினூடாக பாய்ந்து செல்லும்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.
வெள்ளப்பெருக்கு என்பது சாதாரணமாக நீரால் மூடப்படாத நிலப் பிரதேசங்கள் பல்வேறு காரணிகளினால்; நீரினால் மூடப்படுதல் என ஓரளவு வரையறுக்கலாம். இன்னொரு வகையில் ஒரு நிலப் பரப்பில் அளவுக்கதிகமாக அல்லது வழமைக்கு மாறான முறையில் நீர் நிறைந்து நில மட்டத்திலிருந்து நீர் வழியாமல் உயர்ந்த மட்டத்தினை கொண்ட நிலைமை என்றும் வரையறுக்கலாம்.
வெள்ளப் பெருக்கானது மழைவீழ்ச்சி, ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து அது தாழ்நிலங்களை நோக்கி செல்லுதல், பலமான காற்று, தாழமுக்கம், கடற் கொந்தளிப்பு போன்றவைகளினால் கடல்நீர் தரைக்குள் செல்லுதல், நிலநடுக்கம், எரிமலை, பனிக்கட்டி உருகுதல் காலநிலை மாற்றங்களினால் அதிக மழை ஏற்படல், காடுகள் அழிவடைதல், சட்ட விரோதக் கட்டிடங்கள் நீர்வழிப்பாதையைத் தடைப்படுத்துதல், தாழ்நிலங்களை நிரப்புதல், புவிவெப்பம் அதிகரித்தல், நீர்த்தேக்கங்கள் சேதமாக்கப்படுதல், ஒழுங்காகதிட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை காரணமாக ஏற்படுகின்றது.
இலங்கையும் அடிக்கடி வெள்ள அனர்த்தத்திற்கு உட்பட்டு வரும் ஒரு நாடாக காணப்படுகின்றது. கொழும்பு, கேகாலை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை உட்பட இலங்கையின் பல பகுதிகள் அடிக்கடி வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகின்றன. இலங்கையில் பருவகாற்று நிகழும் காலங்களில்; வெள்ள அனர்த்தம் இடம்பெறுவது வழமையான நிகழ்வொன்றாக மாற்றம் பெற்றுள்ளது. வெள்ள அனர்த்தத்திற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. வெள்ள அனர்த்தம் இலங்கைக்கு மட்டும் பொதுவானது அல்ல முழு உலகிற்கும் தற்போது பொதுவானதாக மாறிவருகின்றது.
அண்மையில் அமரிக்காவின் ஹியுஸ்டனிலும், பிரான்ஸிலும், இந்தியாவின் மும்பையிலும், பீகாரிலும், 2015ல் சென்னையிலும் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தமானது காலநிலை மாற்றம், முறையற்ற திட்டமிடல், முறையற்ற நிலப்பயன்பாடு என்பனவற்றின் மொத்த விளைவாகும். உலகின் இனிவரும் எதிர்காலமும் இவ்வாறுதான் இருக்கும் என்பதற்கு கட்டியம் கூறிய நிகழ்வுகளாகவும் கருதப்படுகின்றது.
இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டதும், சுற்றுச் சூழலைப் பற்றிய அக்கறை சிறிதும் இல்லாததுமான உற்பத்தி, பொருளாதார முறைகளும், கட்டுப்பாடற்ற வளர்ச்சியும், நகரமயமாக்கலும் இந்த அனர்த்தங்களுக்கு பெரிதும் வழி கோலின என்றும் கருதப்படுகின்றது.
பெருகி வரும் மக்கள் தொகையால் ஹியுஸ்டன் நகரில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 2000 ம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டு மில்லியனாக அதிகரித்துள்ளது. ஹி;யுஸ்டன் நகரின் கடற்கரையைச் சுற்றி மழை நீரை உறிஞ்சக்கூடிய புல்வெளி பறந்து விரிந்திருந்ததாக 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகை கூறுகிறது. அங்குள்ள ஹேரிஸ் கவுண்ட்டியில் இருக்கும் வெள்ள நீர் வடிகால் பகுதிகளில் மட்டும் 2010 ம் ஆண்டிற்குப் பிறகு 8600 கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு, அரைகுறையான அபிவிருத்தித் திட்டங்கள் மேலும் அதீத பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதற்கு சமீபத்தைய சென்னை வெள்ளம் ஒரு உதாரணமாகும். 2015 ம் ஆண்டு; பருவமழையால் சென்னை நகரமே நிலைகுலைந்து போனபோதும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட புயலினால் வெள்ளம் ஏற்பட்டபோதும் அதிலிருந்து எந்த முன்னேற்றத்தையும் அவர்கள் கற்றுக்கொள்ளவும் இல்லை. இழப்புக்களை குறைக்க முயற்சிகள் எடுக்கவும் இல்லை.
ஹியுஸ்டனைப் போலவே சென்னையும் கடலோர வெள்ள வடிகால் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை நகரில் இருக்கும் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களான நதிகள், ஓடைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட சதுப்பு நிலங்களில் இருந்த நீர்நிலைகளே மழை மற்றும் புயல் வெள்ளங்களுக்கு எதிரான அரணாக உள்ளன. 1980 இல் 47 சதுர கிலோமீற்றராக இருந்த, சென்னை நகரில் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டிருந்த இடத்தின் பரப்பளவு, 2012 இல் 402 சதுர கிலோமீற்றராக இருந்ததாகவும், அதே காலகட்டத்தில் சென்னையின் சதுப்பு நிலத்தின் பரப்பளவு 186 சதுர கிலோமீற்றரில் இருந்து, 71 சதுர கிலோமீற்றராக குறைந்துள்ளதாகவும், கெயார் ஏர்த் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஏரிகளும் குளங்களும் ஆற்றுப்படுகைகளும் ஆக்கிரமிக்கப்பட்டமை சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கியக் காரணம் என்று 2015 இல் அமைக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற நிலைக்குழு அதன் அறிக்கையில் கூறியுள்ளது. இது மற்ற நகரங்களுக்கு எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்க வேண்டிய தருணம் என்றும் கட்டுமானத் தொழிலுக்காக சட்டவிரோதமாக நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் கும்பல்களை அரசு தடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தும் சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள எண்ணூர் கழிமுகம் பகுதி 8,000 ஏக்கர் பறந்து விரிந்திருக்கும் சதுப்பு நிலமாகும். சென்னையில் பாயும் மூன்று நதிகளில் ஒன்றான கொசஸ்தலை நதியின் வெள்ளநீரை அது உறிஞ்சுகிறது. 1996 முதல் 2000 வரை, ஒரு பெரிய துறைமுகம், பல நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் தேவைகளுக்காகவே அந்த சதுப்பு நிலப்பரப்பில் 1,000 ஏக்கருக்கு மேலாக விதிகளுக்குப் புறம்பாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஜூலை 2017 இல், தமிழக அரசின் காமராசர் துறைமுகத்தின் சார்பில் 1,000 ஏக்கர் பரப்பளவுள்ள கடலை ஒட்டிய நிலப்பரப்பில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வதற்காக, போலியான வரைபடங்களை வைத்து ஒப்புதல் வழங்கி விதிமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருக்கும் தொழிலாளர்கள், கொசஸ்தலை நதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும், எண்ணூர் சிற்றோடையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிக்கின்றனர். ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளாலும், இனிமேல் நடக்கவுள்ள ஆக்கிரமிப்புகளாலும் அவர்கள் வெள்ள அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். சென்னையில் உள்ள மணலி பகுதியில் ஒரு பெட்ரோலிய சுத்திகரிப்புத் தொழிற்சாலையும், டஜன் கணக்கில் பெட்ரோலிய வேதிப்பொருள் தொழிற்சாலைகளும் உள்ளன. அவை அனைத்தும் கொசஸ்தலை நதியின் வெல்ல வடிகால் பகுதியில் அமைந்துள்ளன.
கடந்த மாதமும், இந்த மாதமும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தென்னாசியாவெங்கும் 1.6 கோடிப் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நேபாளம், வங்காளதேசம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் 500 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஒரு அறிக்கை கூறுகின்றது.
இலங்கையும் வெள்ளப்பெருக்கும்:
இலங்கையில் வெள்ளப்பெருக்கு தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று மழை ஆரம்பிக்கும் காலப் பகுதியிலும், அயனச் சூறாவளி ஏற்படும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் இடம்பெறுகின்றது. அதிக மழை வீழ்ச்சி பெறப்படுவதே அதற்கான காரணமாகம். இலங்கையின் ஈரவலயத்திலுள்ள களனிகங்ககை. களுகங்ககை. நில்வளகங்கை, கின் கங்கை, வளவை கங்கை ஆகிய நதிகளில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. ஈரவலயத்தில் உற்பத்தியாகி உலர்வலயத்தில் நீண்டதூரம் பயணிக்கும் மகாவலி கங்கையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கிடையில் வட்டச் செயன்முறையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது விசேட அம்சமாகும். ஈரவலய ஆறுகள் பருவத்துக்கு பருவம் பெருக்கெடுத்தோடும் போதும், உலர்வலய சமவெளிகள் வெள்ள அனர்த்தத்துக்கு பொதுவாக உள்ளாவதில்லை. தாழமுக்கம் அல்லது பருவம் தப்பிய மழைகளால் உலர் வலயங்களில் ஏற்படும் வழமைக்கு மாறான வெள்ளப்பெருக்கானது ஈரவலயத்தில் ஏற்படும் பாதிப்பைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி 1940,
1957, 1963, 1978, 1989, 1992, 2003 களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளினால் அதிகளவான பாதிப்புகள் ஏற்பட்டன.
கடந்த காலங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படும் நாடாக இலங்கை மாறிவருகின்றது. அதாவது சமீபகாலமாக அதிக மழைவீழ்ச்சியும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுதலும் ஒரு சாதாரண விடயமாக இலங்கையில் மாறிவருகின்றது. மற்றைய நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் போல் இலங்கையில் காணப்படாவிட்டாலும், அவ்வப்போது உதிரியாக சில ஆய்வு முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
அண்மையில் இலங்கையின் ஒரு நகரத்தில் வெள்ளப்பெருக்கு சம்பந்தமாக செய்யப்பட்ட ஆய்வின் மூலம், வெள்ளப்பெருக்குக்கு பௌதிக காரணிகளும் (7 %), மானிடக் காரணிகளும் (93 %) காரணமாக இருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது. நகரமயமாக்கம் (60 %), அபிவிருத்தித் திட்டங்கள் (12 %), குப்பைகள் மற்றும் கழிவுகளைக் கொட்டுதல் (21 %) போன்ற காரணிகள் மானிடக் காரணிகளுக்கு காரணமாகின்றன. இந்த வெள்ள அனர்த்தத்தினால் சமூக பிரச்சினைகள் (49%), பொருளாதார பிரச்சினைகள் (34 %), சூழல் பிரச்சினைகள் (17 %) போன்ற சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த ஆய்வானது, பின்வரும் தீர்வுகளையும் வெள்ள அனர்த்தத்தினை குறைப்பதற்காக முன்வைக்கின்றது. நதியின் மாசாக்கத்தினைக் குறைப்பதற்காக முறையான திண்மக்கழிவு அகற்றல் முறைமையினை பின்பற்றல், நதியின் அகலத்தை அதிகப்படுத்தல், கட்டுமான நடவடிக்கைகளினை முகாமை செய்தல், நதியில் முறையான சாய்வுப்பாதுகாப்பு முறையினை உருவாக்கல், பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி நதியின் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பழித்தல், மாணவர்களுக்கு குறிப்பிட்ட நதி தொடர்பான செயற்திட்டங்கள் செய்ய ஊக்குவித்தல் போன்ற முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக வெள்ள அனர்த்தம் ஏற்படுவதனை தடுத்து மக்களின் வாழ்வு நிலையினை எழில் மிகுந்ததாக மாற்றலாம்.
இலங்கையைப் பொறுத்த வரையில், மேலே குறிப்பிட்ட காரணிகளுள் திட்டமிடப்படாத வகையில் நடைமுறைப்படத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களே முக்கியமான காரணியாக மற்றைய துணைக் காரணிகளுடன் சேர்ந்து இருக்கலாமென்று நினைக்கின்றேன்.
சுனாமிக்குப் பிறகு திட்டமிடப்படாத வகையில் கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட உள் வீதிகளைக் குறிப்பிடலாம். பல்வேறு காரணங்களால், அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரே வீதியை பல தடவைகள் திட்டமிடாத வகைகளில் நிர்மாணித்தன. இதன் காரணமாக உள் வீதிகளின் உயரம் உயர, குடியிருப்பு வளவுகள் மேலும் தாழ்ந்து போயின. இதனால் பல ஆண்டுகளாக இயற்கை நீர் வடிகால் அமைப்பைக் கொண்டிருந்த பிரதேசங்களின் புவியியல் அமிசங்கள் மாற்றத்துக்குள்ளாகி உயர்த்தப்பட்ட வீதிகளினால் நீர் வடிந்தோடுவது தடுக்கப்பட்டு குடியிருப்புக்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. தாழ்த்தப்பட்ட வளவுகளை நிரப்புவதற்கு வசதியுள்ளவர்கள் வேறு இடங்களிலிருந்து மண்அகழ்ந்து கொண்டுவர வேண்டியிருந்தது. இதன் காரணமாக அகழப்பட்ட பிரதேசங்களும் வெள்ளப்பெருக்குக்குள்ளாகின. இதுபோல மண் அகழப்படும் ஆயிரக்கணக்கான இடங்கள் சட்டவரைமுறைகளுக்கு உட்படுகின்றனவா என்பதும் கேள்விக்குறியே. இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளும் மேலும் நிலைமைகளை மோசமாக்குகின்றன.
சமீபத்தில் உயரமாக அமைக்கப்பட்ட பெருந்தெருக்களும், விரைவு வீதிகளும், நீர்வடிந்தோடாமல் தடுத்து வெள்ளப்பெருக்கிற்கு பாரியபங்களிப்பினை வளங்கிக் கொண்டிருப்பதனை, ஒவ்வொருவருடமும் அவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் முயன்று தவறிகற்று புதிது புதிதாக மதகுகள், கான்கள் வைத்து திருத்தம் செய்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக அதற்கு ஒரு அல்லது இதற்கு ஒரு (உதாரணம்: கிராமத்திற்கொரு அபிவிருத்தித் திட்டம்) அபிவிருத்தித ;திட்டம் என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகளை குறிப்பிடலாம். இந்தக் கொங்கிறீட் வீதிகள் இலங்கைக் காலநிலைக்கு உகந்தவையா என்று பேசாத அல்லது பேச அச்சப்பட்ட ஒரு பக்கமும் உண்டு. ஒரு வளவுக்குள் இருந்து இன்னொரு வளவுக்குள்ளும், ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கும் நீரை வடிந்தோடவிடாமல் ஒவ்வொரு வளவையும் சிறு குளங்களாக்கிய பெருமையும் இக் கொங்கிறீட் வீதிகளையேசாரும்.
அதீத பொலித்தீன் பாவனையும், அவை வெள்ளநீரை நிலத்தடி நீருடன்; சேரவிடாமல் தடுக்கின்ற தன்மையும் நிலைமையை இன்னும் மோசமாக மாற்றுகின்றது.
ஓவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்திற்கு இலங்கை உட்பட்டாலும், அது தருகின்ற கற்றுக் கொண்ட பாடங்களை சரியான முறையில் கவனத்திலெடுக்கத் தவறுவதால், மீண்டும் மீண்டும் அந்த அனர்த்தத்திற்கு ஆட்படுகிறோம்.
பேரழிவை உண்டாக்கும் வெள்ளத்தை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதிக் கையாளப்படுவதைத் தவிர வேறு பாடங்களை யாரும் கற்றுக்கொண்டதாகத் தோன்றவில்லை. இந்தப் பேரழிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ள இயலாமல் இருப்பதைவிடவும், அவ்வாறு கற்றுக்கொள்ளாமல் இருப்பதால் யாருக்கு பயன், யாருக்கு பாதிப்பு என்பதே முக்கியம். ஏனெனில் பாடங்களை கற்றுக்கொள்ளாத தன்மையும் இன, வர்க்க வேறுபாடுகளுடன் சம்பந்தப்பட்டவையாகவே சமூகவியல் அடிப்படையில் கருதப்படுகின்றது. ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து, பணம் படைத்த மேல் தட்டு வர்கத்தினர் பழைய வாழ்க்கைக்கு உடனடியாக திரும்புகின்ற அதே வேளை, ஏழைகள் தாங்கள் பல தசாப்தங்களாக பெற்ற நம்பிக்கையை ஒரே நாளில் ஒரே பேரழிவில் இழந்துவிட்டு, தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கவோ, பாதிப்புகளில் இருந்து மீண்டு வரவோ முடியாமல் தவிக்கின்றனர்.
இறுதியாக கூறப்போனால், இந்தக் காரணிகள் எல்லாம் புதிய உலக ஒழுங்கு என்ற ஒருகாரணியுடன் சங்கிலித் தொடர்பு உள்ளவை போன்று தெரிகின்றன. இலாப நோக்கைக் கொண்ட உற்பத்தி முறைமைகள் எவ்வாறு உலகின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனர்த்தங்களுக்கு வழிகோலுகின்றதோ, அவைகளுடன்; சேர்த்து இலாப நோக்கைக் கொண்ட திட்;டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவகையிலும் துரதிருஸ்டமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு அனர்த்;தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், வெள்ளப்பெருக்கின் கற்றுக்கொண்ட பாடங்களிலிருந்து பாடங்களைக் கற்று அதனை பிரயோகிப்பதற்கு நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கின்றது என்றும் நினைக்கின்றேன்.