Friday, December 27, 2019

பகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்ன விலை கொடுத்தும், தேவைப்பட்டால் இரும்புக் கரம் கொண்டும் அடக்கப்பட வேண்டும்.



- ஏ. எம். றியாஸ் அகமட்

நான் அடிப்படையிலேயே பகிடிவதைக்கு எதிரானவன். எனது பல்கலைக்கழக மாணவ காலத்தில் யாரையும் பகிடிவதை செய்ததுமில்லை. அதேவேளை சிரேஸ்ட மாணவர்கள் எவரையும் இரண்டாவது தடவை என்னை பகிடிவதை செய்ய அனுமதித்ததுமில்லை. அதன் காரணமாக உருவாகிய அத்தனை அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ள எனது இயல்பும், வாசிப்பும் போதிய ஆற்றலைத் தந்திருந்தன. நான் பணியாற்றிய முன்னைய பல்கலைக்கழகத்தில் மாணவ ஆலோசகராக ((Student Counselor), தலைமை மாணவ ஆலோசகராக ((Leading Student Counselor) சுமார் ஒன்பது வருடங்களுக்கு மேலாக மிக விருப்புடன் பணியாற்றியிருக்கிறேன். அதற்கு எவ்வித ஊதியமும் தரப்படுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் காவல் நிலையம், நீதிமன்றம் என்று விரும்பியோ அல்லது விரும்பாலமலோ அலைய வேண்டியுமிருந்திருக்கிறது.

தற்போது கடமையாற்றும் பல்கலைக்கழகத்திற்கு வந்து ஒரு வருடத்திற்கு பிறகு என்னை சிரேஸ்ட மாணவ ஆலோசகராக ((Senior Student Counselor) ஆக நியமித்திருந்தார்கள். எங்கள் பீடத்திற்கு, புதிய மாணவர்களின் வருகை தொடங்கி சுமார் ஒரு வார காலத்திற்குள் பெரும்பாலான மாணவர்களின் மீதானதும் (தமிழ் பேசுகின்ற), ஏனைய மாணவர்களின் மீதானதை சுமார் ஒரு மாத காலத்திற்குள்ளும் கட்டுக்குள் கொண்டுவந்து முடிவுறுத்த முடிந்தது. இந்த வதைகளுக்கும், அவைகளைக் கட்டுப்படுத்த காலம் எடுப்பதற்கும் மூல காரணம் ஒரு உள்ளுராட்சி சபையைத்தானும் வென்றெடுக்க முடியாத, எந்த நேரமும் தங்கள் இருப்பை வெளிப்படுத்த அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்களைச் சாட்டிவிடும் ஒரு அரசியல் கட்சியின் மடியில் பெரும்பான்மையின மாணவர்களின் பல்கலைக்கழக தாய்ச் சங்கம் தாலாட்டி வளர்க்கப்பட்டு, பகிடிவதை மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்ட ஒரு முறைமையியலாக வகுத்துக் கொடுக்கப்பட்டிருப்பது, காலம் நீண்டதற்கு ஒரு முக்கியமான காரணியாகும். நாம் அம்பைத்தான் நோகுகின்றோம். எய்த விற்கள் நிமிர்த்தப்பட வேண்டும். அல்லது உடைக்கப்பட வேண்டும்.

பகிடிவதையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குு பல பொறிமுறைகளையும், நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினோம். பல்வேறு தரப்பினரும் ஆதரவினை நல்கினார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை, நிறைய நேரங்களில் நேரத்திற்கு உணவு கூட எடுக்க மறந்த நிலையில் மிகக் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருந்தது. அடிப்படையில் மாணவர்களிடம் நல்ல நண்பனாகத்தான் வழமையாக இருப்பது வழக்கம். ஆனால் இவ்வாறான நேரங்களில் கொஞ்சம்கூட வளைந்து கொடுக்காத சமரசஞ் செய்யாத, இராணுவ கண்டிப்புடன் இருப்பது வழக்கம். தனது இருபத்தி நான்கு வருட கால அனுபவத்தில் பகிடிவதையை கட்டுப்படுத்துவதற்காக எங்களால் செய்யப்பட்ட இந்த நடவடிக்கைகள் யாரிடத்தும் காணாத மிகுந்த முன்னுதாரணமாக இருந்ததாக குறிப்பிட்ட ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தரின் நேர்மறையான கருத்தையும், உள்ளிருந்தே வேண்டுமென்றே எங்கள் நடவடிக்கைகளுக்கு பல்வேறு காரணங்கள் நிமித்தம் தடையை ஏற்படுத்தி பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு சேறுபூச முயன்ற எதிர்மறையான நடவடிக்கைகளையும் ஒரு புன்னகையுடன் மிக இலகுவாக எங்களால் கடக்க முடிந்திருந்தது.


என்னைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களுக்கு தெரியும், எனது நேரங்கள் எனது மகளுக்கும், மனைவிக்கும் எவ்வளவு தூரம் முக்கியம் என்பது பற்றியும், எனது உடல்நிலை பற்றியும் தெரியும். இருந்தும் அவர்கள் என்னை எந்தவித கேள்வியும் கேட்காமல், மனங்கோணாமல், பள்ளிவாசலுக்கு நேர்ச்சைக்கு விட்ட மாடுபோல், இந்தப் பணியில் என்னை இரவு, பகலாக முழுமையாக ஈடுபட அனுமதித்திருந்தார்கள். இந்தப் பணியில் உள்ளும், புறமும் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனது பீடத்திற்கு நான் புதியவனாகையால், தற்போது பெற்ற கற்றறிந்த பாடங்களை கவனத்திற் கொண்டு, இன்சா அல்லாஹ், அடுத்த வருடம், பகிடிவதை அறவே அற்ற ஒரு பீடமாக மாற்றலாம் என நினைக்கின்றேன். பகிடிவதை என்பது ஒரு பாவமும் குற்றமுமாகும். அது என்ன விலை கொடுத்தும், தேவைப்பட்டால் இரும்புக் கரம் கொண்டும் அடக்குப்பட வேண்டும். பகிடிவதையை அடக்குவதில் போர்க்குணத்துடனும், மிகுந்த கண்டிப்புடனும் ஏன் ஈடுபட வேண்டும் என சிலர் ஏளனமாக நோக்குவது புரியும் போதெல்லாம், பகிடிவதைக்குள்ளாவது எனது மகன்களும், மகள்களும்தான் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்பதை புரிந்துகொள்கிறேன்.


பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...