Thursday, December 26, 2019

திக்குவல்லை கமால் - ஈழத்தின் புதுக்கவிதைச் செயற்பாடுகளின் முன்னோடிகளில் ஒருவர்.


- அம்ரிதா ஏயெம்

எனது பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் திக்குவல்லை கமால் அவர்களின் சிறுகதைத் தொகுதிகளை வாசித்தபோது அவைகள் என்னை மிகுந்த பிரமிப்புக்குள்ளாக்கின. எனது கதைகளில் எப்போதும் உரையாடல்கள் குறைவாக இருக்கும். பொதுவாக உரையாடல்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அது ஒரு வேளை எனது சுபாவமும், தன்னம்பிக்கையீனமுமாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை சிறப்பாக கையாளுவேனா? அந்தத் திறமை என்னுள் இருக்கிறதா என்ற கேள்விகள் எப்போதும் என்னுள் இருந்து கொண்டே இருக்கின்றன.
*
திக்குவல்லை கமால், 19550 மார்ச், 03ம் திகதி இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் திக்குவல்லை என்ற கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் முகம்மது ஜலால்தீன் முகம்மது கமால். கவிதைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் (ஆறு அல்லது அதனைவிட அதிகம்), நாடக எழுத்துரு தொகுதிகள் (நான்கு அல்லது அதனைவிட அதிகம்), சிறுவர் இலக்கியம் (இரண்டு அல்லது அதனைவிட அதிகம்), கட்டுரைத் தொகுதிகள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் (சிங்களத்திலிருந்து) (மூன்று அல்லது அதனைவிட அதிகம்) போன்ற நூற்களுக்கு சொந்தக்காரர். குருட்டுவெளிச்சம் (1993), விடை பிழைத்த கணக்கு (1996), புதியபாதை (1997) போன்ற இவரின் சிறுகதைத் தொகுதிகளிலுள்ள சிறுகதைகள், எங்களுக்கு பேச்சு வழக்கில் முற்றிலும் அந்நியப்பட்ட திக்குவல்லை கிராமத்து மக்களின் பேச்சு வழக்கில் சிறப்பாகக் கொண்டமைந்ததன் காரணமாக, அவைகளின் மீது எனக்கு அதீத வாசக ஈர்ப்பும், அதிர்வும் ஏற்பட்டது.
*
எனக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போது, எனது தந்தை யாழ்ப்பாணம், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரிய மாணவனாக இருந்தபோது, அக் காலாசலையின் இஸ்லாமிக் மஜ்லிசின் வெளியீடான யாழ்பிறை எங்களது வீடு வந்து சேர்ந்தது. அந்த வயதிலிருந்து அதனை கிழித்து, படித்து, படித்துக் கிழித்து, இன்றுவரை படித்து வருபவன் நான். அந்த சஞ்சிகைக்கு அட்டைப் படம் கலைவாதி கலீல், இதழாசிரியர் மூதூர் எம்.எஸ். அமானுல்லாஹ். சென்ற வருடம் நான் பெரும்பொருளாளராகவும், ஆலோசகராகவும் இருந்த எங்கள் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிசின் சஞ்சிகையின் மாதிரிக்காகவும், இந்த யாழ்பிறையையே பயன்படுத்திக் கொண்டேன். அந்த யாழ்பிறையின் கவியரங்கப் பகுதியில் இளம்பிறையே நீ இயம்புவாய் என்று ஒரு கவிதை 64ம் பக்கத்தில் அதனை யாத்தவர் திக்குவல்லை கமால். 1973களில் வெளிவந்த இவரின் எலிக்கூடு என்ற புதுக்கவிதைத் தொகுதி, ஈழத்தில் வெளிவந்த முன்னோடித் தொகுப்புக்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றமை மிக முக்கியமான ஒன்றாகும். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தெரிந்த பெயர்களில் திக்குவல்லை கமால் என்ற பெயரும் ஒன்று.
இளம் பிறையே நீ இயம்புவாய்
முகில்வானத் திரைநீக்கி
முகம்காட்டும் இளம்பிறையே!
ஏன்
இருட்டுக் குகைக்குள்ளே
சற்றே சுகம்பரவ..
விளக்காகக் கூடியேறி
ஒளிபரப்பு.
முடியாதா?
ஏக்கப் பெருமூச்சாய்
எரியும் என்இளமைச்
சோகப் புகைமூட்டம்
தொலைய என்கழுத்தில்
காதாலியாய் வந்து
சங்கமிப்பாய்.!
மாட்டாயா?
முற்றத்து மண்பிசைந்து
அப்பம் அவிப்பதிலே
சிந்தை மயங்குகின்ற
சின்னத் தங்கையவள்
பசிவயிற்றை
அப்பத்தின் விளிம்புடைவாய்த்
தொட்டு முத்தமிடு!
இத்தனைக்கும் பின்னாலும்
ஏனின்னும் அசைந்தசைந்து
மெல்ல மறைகின்றாய்?
இப்படியாய்
ஏழ்மை மைதொட்டு
காற்றுப் படிவத்தில்
எழுதும் விண்ணப்பம்
பலநூறாய்க் குவிகின்ற
தொல்லைதான் காரணமோ?
இயம்பிடுவாய்..!

-
திக்குவல்லை கமால் (யாழ்பிறை, 1975)
*
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராய் பணியைத் தொடங்கிய தி.. அவர்கள் கல்வி அதிகாரியாய் ஓய்வுநிலை அடைந்தார்கள். அவரின் பிறந்த நாள் மார்ச் 03 (கொஞ்சம் பிந்திவிட்டது). அவருக்கு எங்களின் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, மேலும் அவரின் ஆயுளை நீட்டி, சுகத்தையும் கொடுத்து, அவரின் இலக்கியப் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகின்றோம்.














No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...