Thursday, December 26, 2019

ஆயிஸா சஹ்றா – நெடிய பயணத்தின் தடையை நடந்து கடப்பவள். அவருக்கு இன்று பிறந்த நாள்.



- அம்ரிதா ஏயெம்

“அப்பா! ஏன் அப்பா அஞ்சலி இப்படி இருக்கா?”, “காரணம் இருக்கும்மா”, “அஞ்சலி பாப்பா பிறக்குறதுக்கு முன்னால, மேலே வானத்துல தேவதைகள் ஒன்று சேர்ந்து கடவுளட்ட போய், பூமியில அடுத்த குழந்தை பிறக்குறதுக்கு நேரம் வந்தாச்சு என்று சொன்னாங்க. அதற்கு கடவுள் சொன்னாரு, இந்தக் குழந்தை, சின்னக் குழந்தை. மற்றக் குழந்தைகள் மாதிரி ஓடியாட முடியாது. அது எல்லாத்துக்கும் ஒரு வீடு வேணும். நல்ல அம்மா வேணும். நல்ல அப்பா வேணும். நல்ல அண்ணன் வேணும். நல்ல அக்கா வேணும். அதுக்கப்புறம்தான் அஞ்சலி பாப்பா உங்களுக்கு தங்கச்சியா பொறந்துச்சும்மா. அஞ்சலி பாப்பா கடவுளுடைய சின்னக் குழந்தை. அத நம்மட உயிர் மாதிரி பார்த்துக்கணும். கடைசிவரை நம்மட உயிர் மாதிரி பார்த்துக்கணும்.
-(அஞ்சலி, இயக்குனர் மணிரத்தினம் (03.12.1990)

திருமணமாகி ஐந்து வருடங்களுக்கு பிறகு, அதுவும் இரு வருடகாலமாக தலைநகரில் எடுத்துக்கொண்ட தீவிர மருத்துவ முயற்சியின் பின்னர் இரட்டை ஆண் குழந்தைகள் உருவானார்கள். அதுவும் தீவிர வலிகளுக்கும் இழப்புகளுக்கும் பின்னர். பிள்ளைகள் உருவான மகிழ்ச்சியில் மிகுதி மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் எங்களது பகுதியிலேயே (கல்முனை) பெறத் தீர்மானித்து அவ்வாறே செய்தும் வந்தோம். ஆறாவது மாதத்தில் ஒரு பிரச்சினை உருவாகத் தொடங்கியது. நிபுணரிடம் (தனியார் நிலையத்திற்கு) சென்று கூறினோம். அதனை ஈடுபாட்டுடன் உள்வாங்கவும் இல்லை. விளங்கி புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை. மீண்டும் பிரச்சினை. இன்னொரு முறை சென்றோம். அப்போதும் அதே நிலைதான். பின்னர் பிரச்சினை தீவிரமாக, நான் இன்ரெநெட்டில் தெரிந்துகொண்டு அவரிடம் சென்றபோது, பிள்ளைகள் இப்போதே பிறக்கப்போவதாக சொன்னார். பிள்ளைகள் பிறந்து ஒரு மணித்தியாலம் அளவிலேயே உயிருடன் இருந்தார்கள். இருந்தும் பிள்ளைகள் இறந்தே பிறந்தன என்றே கடிதத்தை வாங்கிக்கொண்டார்கள். அரசாங்க மருத்துவமனையாதலால் மிகவும் விரும்பத்தகாத முறையிலேயே நடந்து கொண்டார்கள்.
அடுத்த ஒரு வருடத்திற்குள் இயல்பாகவே மகள் உண்டானாள். தற்போது கல்முனையிலிருந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளுக்காக மட்டக்களப்பை தேர்ந்தெடுத்தோம். கடந்த முறை நடந்த பிசரச்சினைகள் மீண்டும் உருவாகாமல் இருக்க சில மருத்துவ முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. மட்டக்களப்புக்கு சென்று வருவதற்காகவே காரும் வாங்கப்பட்டது. பிரசவ நாள் நெருங்க நெருங்க மூன்றாம் ஈழப்போரும் கிழக்கில் உக்கிரமடையத் தொடங்கியிருந்தது. அவசரமான ஒரு முக்கிய சிகிச்சைக்காக ஒரு நாள் செல்லும்போது மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டோம். காரில் சாரதி, நான், மனைவி, எனது சகோதரி (எங்களது வாகனம் மட்டுமே மாட்டிக்கொண்டது). எங்களது நிலையினைப் புரிந்து கொண்ட படையினர் நீண்ட நேரமாக மிகத் தீவரமான முயற்சியெடுத்து எங்களை பாதுகாத்து மீண்டும் எங்கள் ஊர்ப்பக்கமாகவே பாதுகாப்பாக கொண்டு விட்டார்கள். இந்தக் காலப் பகுதியிலேயெ நான் கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலையில் விரிவுரையாளராகவும் இணைந்துகொண்டேன். மூன்றாம் ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் அதனைத் திசை திருப்ப, மட்டக்களப்பில் பணியாற்றிய மருத்துவர் எஸ்.டபிள்யு. பாலித பத்மகுமார இதே காலப் பகுதியில் சுட்டுக்கொல்லப்படுகிறார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து மருத்துவர்கள் வெளியேறவும், பலர் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவும் தொடங்கியிருந்தனர். இந்தக் காலப் பகுதிலேயே பிரசவத் திகதியும் வந்தது. தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தோம். ஆனால் வைத்தியர்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர், நீண்ட பிரயத்தனங்களின் பின்னர், வைத்திய நிபுணர் தற்றுணிவுடன் உதவ முன்வந்தார்.

இரண்டாயிரத்தி எட்டின் ஒரு நவம்பரின் இருபத்தி ஐந்தின் ஒரு குளிர்ந்த அதிகாலையின், மெல்லிய நீலப்பச்சை வெளிச்சத்தில் பொபுபொசுத்த முயல்குட்டியாய் மகள் பிறந்தார். கொண்டாடினோம். ஓன்றரை வயது வரை நடக்கவில்லை. தலைநகரில் பேராசிரியரான சிறந்த குழந்தை மருத்துவரிடம் சென்றோம். அவர் பல பரிசோதனைகளைச் செய்தார். எல்லாமே சாதாரணமாக இருந்தன. பிரச்சினை ஒன்றுமே இல்லை என்றனர். வயது செல்ல, செல்ல பிள்ளையின் நடையை கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும், தெற்கிலும் தேடினோம். தேடிக்கொண்டே இருக்கிறோம். வலிகள் மிகுந்த நீண்ட பயணம் இது.
மகளைப் பற்றி வெளியுலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். சமூக நிகழ்வுகளுக்கும், வெளிநிகழ்வுகளுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும். சமூகமயமாக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும் நண்பர்களும் ஆலோசனை கூறியிருந்தார்கள். கடந்த பிறந்த நாளுக்கு தெரியப்படுத்த இருந்தேன். துரதிருஸ்டவசமாக நான் தலைநகரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நாங்கள் வாழும் நாடு போன்ற ஒரு நாட்டில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கல்வியும், சிகிச்சையும், சமூக மதிப்பும் பாரிய ஒரு சவாலான விடயமாகும். அதற்கான வெளிகளும் நாம் வாழும் சமூக அமைப்பில் மிகவும் குறைவாகவும் காணப்படுகின்றன. நாங்கள் இன்னும் நிறையத் தூரம் போகவேண்டி இருக்கின்றது.
நேர்மறையாக எதனையும் இயல்பாகவே எடுத்துக்கொள்ளும்> நமக்கு விதிக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்தால் சரி என்ற மனஅமைப்பு இயல்பாகவே என்னில் அமைந்திருக்கின்று நினைக்கின்றேன். எங்களிடம் ஒன்றுமே இல்லை. இறைவன் எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். வாழ்க்கை அதன் வழியில் தன்னை எழுதிச் செல்லுகிறது. அதனை மகிழ்ச்சியாக பின்தொடருகின்றோம். அபார ஞாபக சக்தியும்> கற்றலில் மீத்திறனும் கொண்ட மாணவியான எனது மகளுக்கு இன்று (25.11.2018) பிறந்த நாள். வாழ்த்துகிறோம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...