Thursday, December 26, 2019

நெடுங்கீற்று – மற்றெல்லா பிரதேச கலாச்சார பேரவைகளின் வெளியீடுளுக்கான முன்னுதாரணம்.


-அம்ரிதா ஏயெம்
ஒல்லாந்தரால் டெல்வ்ற் என்று அழைக்கப்பட்ட, இலங்கையின் வடபகுதியின் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு தென்மேற்கில் அமைந்துள்ள தீவுகளுள் ஒன்றுதான் நெடுந்தீவு. இந்தத் தீவானது பெருக்கு மரம், வளரும் கல், இராட்சதக் காலடி, ஆதாமின் காலடி அல்லது சிவனின் காலடி, 1 கி.மி நீளத்தில் அமைந்திருந்த குதிரை லாயங்களின் எச்சம், காலனித்துவ காலத்தில் அஞ்சல் தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட புறாக்களின் கோபுரம், பவளப்பாறை மதில்கள், இராணியின் கோபுரம் (குயிண்டாக் கோபுரம்), நெடுந்தீவுக் கோட்டை போன்ற விடயங்களால் மற்றவர்களை ஆகர்சித்திருந்தாலும், உலகத்திலே இயற்கையாய் குதிரைகள் காணப்படும் ஒரு இடமாக நெடுந்தீவு இருப்பதே என்னைக் கவரந்த விடயமாக இருந்தது.
இவ்வாறான சிறப்புக்கள் வாய்ந்த நெடுந்தீவு பிரதேச செயலக கலாசாரப் பேரவையின் மூன்றாவது வெளியீடாக என்ற 274 பக்கங்களைக் கொண்ட, பீ3 அளவில், நெடுங்கீற்று III, வெளிவந்துள்ளது. வழமையான பிரதேச செயலகங்களின் கலாசார பேரவைகளின் ”உப்புமா” பிரசுரங்களுக்கும் வெளியீடுகளுக்கும் மத்தியில் முன்னுதாரணமாய் என்னை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது இந்த வெளியீடு. இத்தனைக்கும் நெடுந்தீவுக்கு என்று ஒரு கலாச்சார உத்தியோகத்தர் இன்னும் இல்லை என்பது மேலதிக தகவல்.
நெடுந்தீவு பிரதேச செயலக கீதம், ஆட் பேப்பரில் அமையப்பெற்ற ஏழு பேரின் ஆசியுரைகளையும், அடுத்து வெளியீட்டுரையையும் தொடர்ந்து, நெடுங்கீற்று III கொஞ்சம் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. நெடுந்தீவும் மக்களின் எதிர்பார்ப்புக்களும் (எஸ்.ஆர். சர்வேந்திரன் (உதவிப் பணிப்பாளர், திட்டமிடல்), உல்லாச தளமாக வளர்ந்து வரும் நெடுந்தீவு (கே. ராஜேந்திரகுமார், விரிவுரையாளர் (சுற்றுலாத்துறை), புனித யுவானியார் – யுவானியார் நாட்டுக்கூத்தின் கதைச்சுருக்கம் (97 பக்கத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது), பாம்புக்கடி வைத்தியர் சத்தியாகு பத்திநாதர் அவர்களுடனான ஓர் கலந்துரையாடல், குமுதினிப் படுகொலை நிகழ்வுகள், வெடியரசன் வரலாறு (கிடைப்பதற்கரிய இந் நுாலை (57 பக்கங்கள் ஒதுக்கி பதிவு செய்து வரலாற்றை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்), அண்ணாவியார் சைமன் யேசுதாசன் அவர்களின் 78 வருட கலைப் பயணம்ஈ பெ. ஐங்கரன், பசுந்தீவு (கவிதை) – ஜென்ற்றா மரிய ஆனந்தராசா, அதிபர் சின்னையா எட்வேட் நவரத்தின சிங்கம், கடவுளரும் காளமமேகவும், கச்சதீவு ஒரு பார்வை, கடலோடி அங்கிள் – இ. அருள்நாயகம், பாரதிதாசனும் வால்ட்விட்மனும், கறுப்பு மழை (கவிதை), இந்து ஆலயங்களின் – தொன்மையும் வளர்ச்சியும் – நெடுந்தீவு, அண்ணாவியார் அந்ததோனி முத்துவின் கலைப்பயணம், பாத்தியும், தேச வழமையம், நெடுந்தீவு தொடர்பான கண்ணோட்டம், நெடுந்தீவின் வரலாற்றுப் பெருமையும் வரலாற்றுச் சின்னங்களும், உழைப்பவனுக்கே எங்கள் மண் போன்ற படைப்புக்கள் காணப்படுகின்றன.
பிரதேச செயலக கலாசாரப் பேரவை வெளியீடு என்ற பெயரில் உப்ப சப்பில்லாத விடயங்களை பிரசுரித்து போலி திருப்திப்பட்டுக்கொள்ளும் கூட்டத்தினரின் வெளியீடுகளிடையே, நெடுங்கீற்று III, மிகவும் கவனத்திற்குரியதும், கனதியானதுமாகும். மிக மிக கவனமாக கலையை, கலாச்சாரத்தை, வரலாற்றை, சுதேசிய அறிவை, அந்த அறிவை வளர்த்த கலைஞர்களை, சான்றோர்களை, வழிபாடுகளை, அதன் தலங்களை, தொன்மையை, தொன்மைச் சின்னங்களை, மக்களின் எதிர் பார்ப்புகளை, அது எதிர்கொண்டிருக்கும் நவீன சவால்களை, அதை விட கிடைப்பதற்கரிய நுால்களை கவனமாக பதிந்து வைத்திருக்கின்றது. இதன் காரணமாகவும், இந்த நுாலின் தளக்கோலம், அட்டை, அச்சுப் பதிவின் செய்நேர்த்திக்காகவும், வெளியீட்டுக் குழுவையும், அதற்கு ஆதரவு அளித்தோரையும் பாராட்டாமல் இருக்க முடியாது. நெடுந்தீவு பிரதேச செயலக கலாசார பேரவையின் நெடுங்கீற்று மற்றைய எல்லா அது போன்ற கலாசார பேரவைகளின் வெளியீடுகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்றால் அது மிகையாகாது


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...