Thursday, December 26, 2019

கடந்த வாரம் கண்ணீரும் கம்பலையுமாகவே கரைந்திருந்தது. கடந்த வாரத்தின் (இந்த வாரம் அல்ல) புதன் கிழமை Human Anatomy and Physiology பாடத்தின் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ”இன்றோடு இந்த பாடம் நிறைவடைகிறது. இதுதான் நான் உங்களுக்கு நடாத்தும் இறுதி வகுப்பு. இன்றுடன் நான் உங்களை விட்டுப் பிரிகிறேன்”. என்று சொன்னதும்தான் தாமதம். கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. நிறையக் கதைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை.
அப்படியே போடியத்திற்குப் பின்னால் குனிந்து என்னை மறைத்து கதிரையில் இருந்து அழுகின்றேன். என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பத்து நிமிடங்களுக்குப் பிறகு என்னை கட்டுப்படுத்தி, எழும்புவதற்கு முன் போடியத்தின் மறைவாக மாணவர்களைப் பார்த்தேன். ஆண் மாணவர்கள் கண்களைக் கசக்கிக் கொண்டிருந்தார்கள். பெண் மாணவிகள் அழுது கொண்டிருந்தார்கள். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு எழுந்தேன். நினைத்திருந்ததையெல்லாம் பேச முடியாமல் இடைநடுவில் விடைபெற்றேன்.
அன்றிலிருந்து அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை வரை, நான்கு நான்காக, ஐந்து ஐந்தாக மாணவர்கள் வந்து காலில் விழுந்து காலைத் தொட்டு மரியாதை செலுத்திக் கொண்டே இருந்தார்கள். எங்கள் மதத்தில் இதற்கு அனுமதி இல்லை இருந்தும், சமாளிக்க முடியவில்லை. என்னிடம் படித்து தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் வௌ;வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், காலில் விழுந்து கொண்டே இருந்தார்கள். நான்கு வருட மாணவர்களில், இரண்டு வருட மாணவர்கள் விடுமுறையில் நிற்கின்றார்கள். இதற்குள் அது வேறு.
தங்களது அன்பை எனக்கு உடனடியாக காட்டத் தொடங்கினார்கள் வெவ்வேறு வகையான அன்பளிப்புக்களாக. என்னைப் பற்றி அவர்களிடம் நான் கூறியதுகூட கிடையாது. எனது ஊர், குடும்பம், நிலைமை எதுவுமே தெரியாது. நானும் கூறியது இல்லை. எழுதிக் கிழிப்பவன் என்று கூட தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்;லாம் கற்பிக்கும், ஆய்வுசெய்யும் நான்தான்.
”இன்னொரு இடத்தில் உங்களைப் போல உள்ளவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன். நான் அங்கு போகவேண்டும். அவர்களில் நான் உங்களைக் காண்பேன்” என்று இறுதி நாளன்று கூறினேன். அவர்களில் எங்களைக் காணலாம், நாங்கள் உங்களை இங்கே காண்போமா? என்றார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் அவர்களின் தந்தையை என்னில் காண்பதாக கூறினார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி என்ன செய்து விட்டேன் கற்பித்தலுக்கு அப்பால், அவர்களின் தங்குமிடம், உணவு, சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், தொழில் வழிகாட்டல் போன்றவைகளில் ஓரளவு தனிப்பட்ட அக்கறை எடுத்ததைத் தவிர.
நான் தந்தைதான்
ஓராயிரம்பேருக்கு தந்தைதான்
பெருமையாக இருக்கிறது.
இன்னும் அழுது கொண்டே இருக்கின்றேன்.
பிள்ளைகளைப் பிரிந்த வலிகளோடு.
இன்னும் அழுது கொண்டே இருக்கிறேன். ஏன் அழுது கொண்டு இருக்கிறேன். யோசிக்கிறேன். அப்போதுதூன் எனக்குப் புரிந்தது. எனது உலகம் கட்டப்பட்டிருப்பது எனது மாணவர்களால்தான். எங்கும் நீக்கமற அவர்களே நிறைந்திருக்கிறார்கள். எனது முழு உலகமும் அவர்களுக்கானதே. எனது பிள்ளைகள் ஓங்கி அறைந்து ஒரு விடயத்தை சொல்லிவிட்டு செல்கிறார்கள். ஆசிரியன் என்பவன் தந்தை என்று. 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...