Showing posts with label நேர்காணல்கள். Show all posts
Showing posts with label நேர்காணல்கள். Show all posts

Monday, June 1, 2020

விதைப்பந்துகள்! - காடுகள் உருவாக்கப்படுகின்றன!!

ஜெர்மன் தலைநகர் பேர்லினைத் தளமாகக் கொண்டியங்கும் ஒத்துழைப்பு மற்றும் மாற்றுதலில் ஊடகம் (MiCT)என்கிற அமைப்பினால் இயக்கப்படும் ”த-கட்டுமரம்” என்ற இணைய சஞ்சிகையில் எனது விரிவான நேர்காணல் வெளிவந்துள்ளது. எங்களது செயற்பாடுகளின் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த நேர்காணலை ஏற்பாடு செய்த சஞ்சிகையின் தமிழ் பதிப்பாளர் எம்.எஸ். தேவகௌரி அவர்களுக்கும், நேர்காணல் ஆசிரியபகுதிச் செயற்பாடுகள் லதா துரைராஜாவிற்கும் ஒரு கடலளவு நன்றிகள்.

விதைப்பந்துகள்!
காடுகள் உருவாக்கப்படுகின்றன!!



வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. மாணவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்….


குடத்தனை பருத்தித்துறையிலிருந்து சுமார் 10 கிலோமீறறர் தூரத்திலுள்ள பசுமையும் வனப்பும் நிறைந்த கிராமமாகும்.அங்கு சிறுவர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஏ.எம்.றியாஸ் அஹமட்.
இலங்கையில், போருக்குப் பின்னர் பசுமையின்றி கிடக்கும் பூமியின் நிலை கண்டு வருந்தும் விலங்கியல்துறை விரிவுரையாளர் தாவரங்களையும், வனங்களையும் மீளுருவாக்க விதைப்பந்துகள் வீசுவதில் மும்முரம் காட்டி வருகிறார். இவரது இயற்பெயர் ஏ.எம்.றியாஸ் அகமட். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தில், உயிரியல் துறையில் விலங்கியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். விலங்கியல், தாவரவியல், இலக்கியம் ஆகியவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டவர். முக்கியமாக சுற்றுச்சூழல்மீது கொண்ட ஆர்வத்தினால், அது குறித்து வருங்கால சமுதாயத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விதைப்பந்துவீசலை விரும்பித் தேர்வு செய்துள்ளார். ‘அம்ரிதா ஏயெம்’ என்ற புனைபெயரில் இலக்கிய ஆக்கங்களையும் விரும்பி எழுதுகிறார். தனது எழுத்தாற்றல் காரணமாக, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்த எட்டு நூல்கள் உட்பட, 15 நூல்களை எழுதியுள்ளார். அம்பாறை மாவட்டம், மருதமுனையில் வசிக்கும் இவர், இன மத பேதமின்றி காடுகள் மீளுருவாக்கம் செய்யவேண்டிய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து தனியாளாக விதைப்பந்துகளுடன் நாடு முழுவதும் தொடர்ந்து பயணிக்கிறார். த கட்டுமரனுக்காக அவருடன் உரையாடியதில் இருந்து…

த கட்டுமரன்: இந்த ‘விதைப்பந்துகள்’ என்றால் என்ன?

றியாஸ் அகமட்: இலங்கையில் பல்வேறு நடவடிக்ககைகளாலும் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்படுகின்றன. சனத்தொகை பெருக்கமும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தேவைகளும், நுகர்வுகளும் அதிகரித்திருக்கின்றன. இதற்காக உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்களின் உற்பத்திக்குப் பின்னாலும் காடுகளும் அதன் பல்வேறு தாவர, உயிர் இனங்களும் பலிகொடுக்கப்படுகின்றன. அழிக்கப்படும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும். மரங்களையும், காடுகளையும் பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்த்தால் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏனைய உயிரினங்களுக்கும் அது அதிக பயனைக்கொடுக்கக்கூடியது. உயிர்பல்வகைமையையும் நாம் பாதுகாக்கவேண்டும்.

விதைப்பந்தாக்கலில் சிறுவர்களுடன்..

இதற்காக காடுகளை மீளுருவாக்கம் செய்யவேண்டும். எம்மால் சென்றடைய முடியாத மலைகள், புதர்கள், ஆறுகள் இடங்களில் கூட நாம் நிலத்தைப் பண்படுத்தாமலே மரங்களை வளர்த்துவிடலாம். பராமரிப்புகூட தேவைப்படாது. காடுகளை மீளுருவாக்கம் செய்வதற்கு வேகமான, இலகுவான, மலிவான முறைகளில் ஒன்று இந்த ‘விதைப்பந்து வீசல்’ அல்லது ‘விதைப்பந்தாக்கம்’. உலகிலுள்ள நாடுகள் பலவும் இன்று உபயோகித்துவரும் ஒரு இலகுவான முறையே இது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு எகிப்திலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானிலும் இந்த முறை பின்பற்றப்பட்டிருக்கிறது. ஏன் இந்தியாவில் இன்றுவரை நடைமுறையில் உள்ள ஒரு முறைதான் இது!

மூன்று பங்கு களிமண்ணும் ஒரு பங்கு சாணியும் கலந்து விதைப் பந்துகளைச் செய்வோம். அதற்குள் மரத்தின் விதைகளை வைத்து மூடி, காடுகள் தேவைப்படும் நிலப்பகுதியை நோக்கி வீசி எறியவேண்டும். இதுதான் ‘விதைப்பந்துவீசல்’.
(http://www.amrithaam.com/2018/08/blog-post.html)

த கட்டுமரன்: செய்யப்பட்ட இந்த விதைப்பந்துகளை உடனடியாக
 மரங்களை உருவாக்க பயன்படுத்தலாமா?

றியாஸ் அகமட் – இல்லை. விதைப்பந்துகளை ஒரு நாள் நிழலிலும் ஒரு நாள் வெய்யிலிலும் காயவைக்க வேண்டும். பின்னர் எங்கு எங்களுக்கு மரங்களும், காடுகளும் தேவையோ அங்கு நாம் இதை வீசலாம். மழை பெய்து, களி கரையும்போது, விதைப்பந்துக்குள் இருக்கும் விதை முளைத்து வளரத் தொடங்கும். காயவைத்த இந்த விதைப்பந்துகளை ஒரு வருடத்திற்குகூட நாம் பாதுகாத்துவைக்கலாம். அதற்குள் விதைகள் உயிர்ப்புடன் இருக்கும்.

தயாராக்கப்பட்ட விதைப்பந்துகள்.

த கட்டுமரன்: இந்த மாதிரியாக காடுகளை மீளுருவாக்கும் 
ஒரு எண்ணம் உங்கள் மனதில் தோன்றக் காரணம் என்ன?

றியாஸ் அகமட்: சிறு வயது முதல் இயற்கையை நேசிப்பவன் நான். இயற்கையை அதன் பல்வகைத்தன்மையுடன் ரசிப்பவன் நான். சுமார் 30 வருடகால யுத்தம் இந்தப் பூமியின் பசுமையை தன்னுடன் சுருட்டிச் சென்றுவிட்டதை ஏக்கத்துடன் பார்த்துக் கலங்கி நின்றேன். பசுமையை – அழிந்துபோன மரங்களை- காடுகளை மீளுருவாக்கம் செய்ய என்னால் என்ன செய்யமுடியும் என்று இரவு பகலாகச் சிந்தித்தேன். இணையவழி உட்பட, பல்வேறு வழித் தேடல் மூலம் பல வழிகள் தெரிந்தன. இருந்தாலும் மிக இலகுவாகவும் அதிக செலவின்றியும் மிக விரைவாகவும் மரங்களையும், காடுகளையும் உருவாக்குவதற்கு கண்டடைந்த முறைதான் இந்த ‘விதைப்பந்தாக்கம்’!

த கட்டுமரன்:இதை முதன் முதலில் எப்போது, எங்கே ஆரம்பித்தீர்கள்?
றியாஸ் அகமட்: இந்த முறையை பரீட்சித்து பார்ப்பதற்கு, நான் தற்போது பணியாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல்துறையின் தாவரவியல் தோட்டத்தில் முதன் முறையாக நூறு விதைப் பந்துகளை எறிந்தேன். 12.09.2018 இல் எறிந்த விதைப் பந்துகள் 28.09.2018 இல் முளைக்கத் தொடங்கின அவற்றில் 90 மரங்கள் முளைத்தன. இன்று 10 மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இன்றைய தேதியில் புளிய மரங்கள் இரண்டு அடிக்கும் மேல் வளர்ந்துவிட்டிருக்கின்றன.
சேகரிக்கப்பட்ட விதைகள் சில..

த கட்டுமரன்: நூறில்பத்து தான் வளரும் சாத்தியம் உள்ளதா?

றியாஸ் அகமட்: இல்லை. அதிகமாகவும் நாம் எதிர்பார்க்கலாம். மனிதர்கள் விலங்குகளிடம் இருந்தும், காலநிலைக் காரணிகளிலிருந்தும் அந்த விதைபந்திலிருந்து முளைத்த தாவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் 90 கூட வளரும் சாத்தியம் உண்டு. ஆனாலும் விதைப்பந்துகளை வீசும்போது ‘வளர்ந்தால் மரம் இல்லையேல் மண்ணிற்கு உரம்’ என்ற அடிப்படையில்தான் நாம் சிந்திக்கிறோம்.

த கட்டுமரன்: மரம் நடவேண்டிய மாவட்டங்களையும், 
இடங்களையும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? 
காடுகளுக்குள் இலகுவாகச் செல்லமுடியுமா என்ன?

றியாஸ் அகமட்: முகநூல் வழியாகவே இது அதிகம் சாத்தியமாகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவென மாவட்ட மட்டத்தில் இயங்கிவரும் அமைப்புகள் என்னைத் தொடர்புகொண்டு கேட்கிறார்கள். உதாரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ‘பசுமைச் சுவடுகள் அமைப்பு’ வவுனியாவில் ‘சுயாதீன தழிழ் இளைஞர்கள்’ அமைப்பு, மட்டக்களப்பில் ‘வேர்கள்” அமைப்பு என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட சில பாடசாலைகளும் மாணவர்களை இதில் ஈடுபடுத்த முன்வருகின்றன. இராணுவம், வைத்தியசாலைகள் என முக்கிய சேவையாளர்களும் ஆர்வம்காட்டி வருகின்றனர். காடுகளுக்குள் செல்லும்போது வனபரிபாலன திணைக்களத்தின் ஆலோசனையுடனும், அனுமதியுடனும்தான் செல்கிறோம்.

த கட்டுமரன்: இராணுவம். வைத்திய துறைசார்ந்தவர்களின் 
ஆர்வம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் அது பற்றி?

றியாஸ் அகமட்: ஆம், அண்மையில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் ‘காடுகளும் காலநிலை மாற்றமும் அதனை எதிர்கொள்வதில் மருத்துவத்துறையின் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதனைத்தொடந்த கலந்துரையாடலில் அந்த பிரதேச வனமாக்கலுமக்கு இராணுவத்தினரும் வைத்தியசேவையில் உள்ளோரும் மக்களும் அனைத்து விதங்களில் உதவுவதாக உற்சாகமளித்தனர். அங்கே வனங்களின் நேசனாக கேணல் சுதத் திசநயாக்க அறிமுகமானார். அவரும் அவரது வீரர்களும்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வன மீளுருவாக்கத்தில் நேரடியாக கால் பதித்த ‘விதைப்பந்து திருவிழா’
இந்தப்பணியை சிறப்பாக முன்னெடுக்கிறார்கள். அதைவிட ஏற்கனவே கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் வன மீளுருவாக்கத்தில் நேரடியாக கால் பதித்துள்ளது. ‘விதைப்பந்து திருவிழா’ ஒன்றை நடத்தினர். அத்துடன் அம்பாறையில் வண. சிப்தகுப்த தீரானந்த வனவாசி நாயக்க தேரர் பல விடயங்களைக் கலந்துரையாடியுள்ளார். இவை எல்லாம் எமக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களே.

த கட்டுமரன்: இதுவரையில் எந்தெந்த மாவட்டங்களில் 
விதைப்பந்துகளை வீசியிருக்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: வவுனியாவில் பாலமோட்டை மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடத்தனையிலும் மட்டக்களப்பு – புல்லுமலை,அலியா ஓடை, மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவை உட்பட பல பகுதிகளில் விதைப் பந்துகளை வீசியிருக்கிறோம். இதன்போது சமூகங்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். மழைபெய்யும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது முயற்சியை மேற்கொள்வோம்.

த கட்டுமரன்: அந்த மாவட்டங்களுக்குத் தேவையான 
மரங்கள் இன்னதென்று எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: விதைப்பந்துகள் வீசுவதற்கு அல்லது விதைப்பந்தாட்டத்திற்கு முன்னதாக நான் அங்கு ஒருமுறை சென்றுவிடுவேன். அங்கு வளரக்கூடிய மரங்களின் விபரங்களைச சேகரித்து அல்லது மற்றவர்கள் மூலம் சேகரித்து அதற்கேற்றாற்போல் விதைப்பந்துகளைத் தயாரிப்போம். பெரும்பாலும் அந்த இடங்களின் சுதேச மரங்களின் விதைகளையே தெரிவுசெய்கிறோம்.

த கட்டுமரன்: விதைகளைப் பெறுவது இலகுவாக உள்ளதா?

றியாஸ் அகமட்: மிக மிக எளிதாகவே உள்ளது. நான் என்னுடைய மாணவர்கள் மூலம்தான் அதிக விதைகளைப் பெறுகிறேன். அவர்கள் விடுமுறையில் அவர்களது ஊர்களுக்குச் செல்லும்போது அவர்களுடைய ஊரில் கிடைக்கும் சுதேசிய மரங்களின் விதைகளை எடுத்துவரச் சொல்வேன். ஒருமுறை 133 வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விதைகளை எனது மாணவர்கள் சேகரித்துவந்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இதை விட ஒரு ஆச்சரியம் உள்ளது. பிராண வாயுவை உண்டு, அதே பிராண வாயுவின் அளவை வளிமண்டலத்தில் மறைமுகமாக அதிகரிக்கும் ஒரு பிராணி உண்டு. ஒளித்தொகுப்புக் கூடம்! கானுருவாக்கி!

/
நடமாடும் வனம்! அதுதான் யானை! ஓமந்தை, பாலமோட்டை, பெண்கள்பனிக்க மகிழன்குளம் காட்டுக்குள் இருந்த குளத்தருகில் ஒரு யானை விட்டை (யானைக் கழிவு) போட்டிருந்தது. அதற்குள் சுமார் 15 பனங்கொட்டைகள் இருந்து முழைக்கத் தொடங்கியிருந்தன. ஒரு யானை ஒவ்வொரு நாளும் 300 முளைக்கும் விதைகளைத் தருகிறது. யானை தன் வாழ்நாளில் சுமார் இருபது இலட்சம் மரங்களை உருவாக்குகிறது. யானைகளைப் பாதுகாப்பது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும். எனவே யானைகளையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாத்து காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த யானைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.

த கட்டுமரன்: முக்கியமாக நீங்கள் விதைப்பந்துகளுக்காக 
உபயோகித்த விதைகள் எவை?
றியாஸ் அகமட்: அனேகமாக சுதேச மரங்களின் மரங்களின் விதைகளையே உபயோகிக்கிறோம். அனேக சுதேச சமரங்கள் அழிந்துபோயுள்ளன. அல்லது அருகிவிட்டன. எனவே புளி, நாவல், வேம்பு, தேத்தா, வாகை, இலுப்பை, திருக்கொன்றை, மஞ்சாடி, பாலை, வீரை, தேக்கு, ஆத்தி, காட்டுத்தேங்காய் என இந்தப் பட்டியல் மிக நீண்டு செல்லும்.

த கட்டுமரன்: இந்த மாத நடுப்பகுதியில் ஆயிரம் பனைமர 
விதைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக 
அறியக்கிடக்கிறது. அதுபற்றி?

றியாஸ் அகமட்: ஆம் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஆயிரம் பனைவிதைகளை நடவுள்ளோம். அதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. பனைவிதைகளைச் சேகரிப்பதில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக இலக்கியவாதியும் இயற்கை ஆர்வலருமான எஸ்.எல்.எம். ஹனீபா குறிப்பிடத்தக்கவர். அவர் ஏற்கனவே பனை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வளர்த்துவருபவர். வடபகுதியைப் பொறுத்தவரை பனை வளர்ப்பில் ஆரோக்கியமான சூழ்நிலை காணப்படுகிறது. ஏற்கனவே வவுனியாவைச் சேர்ந்த ‘சுயாதீன தமிழ் இளைஞர்கள்’ அமைப்பு ஒரு இலட்சம் பனை விதைப்பில் ஐம்பதாயிரம் பனைவிதைப்பை எட்டிவிட்டனர். இன்றும் அதற்கான பணிகள் தொடர்கின்றன. அத்துடன் பனைவள அபிவிருத்தி சபை மூலம், ஆண்டுதோறும் அனைத்து பகுதிகளிலும் பனம் விதைகள் நடப்படுகின்றன.

த கட்டுமரன்: இதுவரையில் மேற்கொண்ட விதப்பந்தாக்கத்தின்போது 
சிறுவர்களது ஆர்வம் எப்படியுள்ளது?
றியாஸ் அஹமட்: வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. சிறுவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் பயிற்சியிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். இதன்மூலம், அவர்களின்
/
மனோநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில நாட்கள் கழித்து முளை வரத்தொடங்கும் போது படம் எடுத்து எனக்கு அனுப்பும் அளவிற்கு அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இனி நானும் நீங்களும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களாகவே விதைப்பந்தைஉருவாக்கி வீசுவார்கள். பெற்றோரும் சளைக்காமல் உதவினார்கள். வீடு திரும்பும்போது என் மனம் என்றும் இல்லாமல் அன்று மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது.

த கட்டுமரன்: இந்த விதைப்பந்தாக்க முயற்சியில் சிறுவர்களை 
ஈடுபடுத்துவதன் மூலம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: பல்கலைக்கழக மாணவர்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் வரை இந்த விதைப்பந்து வீசலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விதைப்பந்தாட்ட முறையானது, சுற்றுச் சூழல் குறித்துமாணவர்களுக்கு மிகவும் அவசியமானதோர் கல்வி முறையாகவே நான் பார்க்கிறேன். பல்கலைக்கழகத்தில் இது உள்வாங்கப்பட்டுள்ளது. பாடசாலை கல்வியிலும் உள்வாங்கப்படவேண்டும். இன்று நான் அவர்களுக்குக் காட்டும் வழியில் நாளை நான் இல்லாமலேயே அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். வருங்காலம் முழுக்க இந்தப் பணியை அவர்கள் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

த கட்டுமரன்: பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான செயற்பாடுகள், 
இலக்கிய எழுத்து முயற்சிகள் என்று தொடரும் உங்கள் பல களப்பயணங்களுக்கு குடும்பத்தின் 
ஆதரவு எந்தளவாக உள்ளது?

றியாஸ் அகமட்: நூறு சதவீதம் என் மனைவியின் ஆதரவு உள்ளது. இல்லையேல் கண்டிப்பாக என்னால் எதுவும் சாத்தியமில்லை என்று வெளிப்படையாக உண்மை சொல்கிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். சுயமாக இயங்க முடியாத அவரை சக்கர நாற்காலியில் வைத்தே நாங்கள் பராமரித்து வருகிறோம். நான் இல்லாமல் மனைவியால் தனியாகச் சமாளிப்பது மிகவும் கடினம். ஆனாலும், என் பணியைத் தடுக்காமல் அவர் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார். வீட்டில் இருந்து இந்த விதைப்பந்துகளைத் தயாரிக்கும்போது மனைவி, மகள், அயலவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
/
த கட்டுமரன்: உங்களின் இந்த விதைப்பந்தாக்க முயற்சிக்கு யாரிடமிருந்தேனும் 
நிதி உதவி பெறுகிறீர்களா?

றியாஸ் அகமட்: யாருடைய உதவியையும் நான் பெறவும் இல்லை. கோரவும் இல்லை. என்னுடைய சொந்த முயற்சி மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே விதைப்பந்தாக்கத்தை மேற்கொண்டு வருகிறேன். உதவி கோரினால் அமைப்பாகச் செயல்படவேண்டும். அமைப்பாகச் செயல்பட்டால், பணம் புழங்கும், இவ்விரண்டும் எனது முயற்சியை முடக்கிவிடக்கூடும் என்பதால் தவிர்த்துவருகிறேன்.

த கட்டுமரன்: தொடர்ந்து சொந்தப் பணத்தில் உங்களால் இந்த முயற்சியைத் தொடரமுடியும் 
என்று நினைக்கிறீர்கள்?

றியாஸ் அஹமட்: ஆம். இந்த விதைப்பந்தாக்கத்திற்கான செலவு மிகவும் குறைவுதான். களி, சாணம், விதைகளை இலவசமாகப் பெற்றுவிடலாம். விதைகளை உலர்த்தவும் பாதுகாக்கவும் என்னிடம் வசதி குறைவாகத்தான் உள்ளது. எனினும், உதவி கோருவதில் பெரும் தயக்கம் உள்ளது. யாரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் எனது உதவியைக் கோரினால், நான் எனது உடம்பையும், என்னிடம் இருக்கும் திறனையும் எனது செலவில் சுமந்து செல்கின்றேன். இந்த முயற்சி முற்றிலும் எனது சுய ஆர்வத்துடனும், கொள்கையுடனும் சம்பந்தப்பட்டது. நான் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமல்ல, சமாதானச் செய்தியையும் சுமந்து செல்கின்றேன். இந்த விதைப்பந்தாட்டம் மூலம் நான் வெறுமனே விதைகளை மட்டும் மண்ணில் விதைத்துவிட்டு வரவில்லை. மாறாக, அப்பகுதி மக்களின் மனதில் அன்பையும் சமாதானத்தையும் சேர்த்தே விதைத்துவிட்டு வருவதாய் உணர்கிறேன்.


Friday, December 27, 2019

எங்கள் தேசம் - நேர்முகம்



நேர் கண்டவர் - இர்சாத் இமாமுத்தீன்:

அறிமுகம் :
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமைாற்றும் (ஏற்கனவே கிழக்குப் பல்கலைக்கழைகத்தின்  விஞ்ஞான பீடத்தின், விலங்கியற் பிரிவில் சிரேஸ்ட விரிவுரையாளராக பணியாற்றியவர்) ஏ.எம். றியாஸ் அகமட். விஞ்ஞானமானி விலங்கியல் சிறப்பு B.Sc. (Special in Zoo)(Hons) கிழக்குப் பல்கலைக்கழகத்திலும், விஞ்ஞான முதுமாணி MSc (by Research) - University of Wits, Johannesburg, South Africa யில் Behavioural Genetical Evolution துறையிலும், முது தத்துவமாணியை ( MPhil) Behavioural Ecology துறையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் கற்றுத் தேர்ந்துள்ளார். இயற்கை விஞ்ஞானத்திலும், சமூக விஞ்ஞானத்திலும் பொறுப்பு வாய்ந்த பல்முனைசார் ஆய்வுகளை தொடர்ந்தமானமாய் மேற்கொள்பவர். சூழலினதும் சமூகத்தினதும் உண்மையின் மனச்சாட்சியாய் செயற்படும் றியாஸ் அகமட் தனது ஆய்வுகளின் உள்கட்டுமான நேர்த்திக்காக கள வழி அலைவுகளை மேற்கொள்பவர். தமது சூழல்சார் சூத்திரங்களை, அக்கறைகளை, கவன ஈர்ப்புகளை, துயரங்களை, வலிகளை, திட்டங்களை தனது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி சூழல்-மனிதன் எனும் இரு கண்ணிகளிடையேயுள்ள முரண்பாடுகளை உடைத்து நேர் புள்ளியொன்றில் இணைத்து இயக்கப் பார்க்கிறார். அண்மைக் காலமாக விதைப்பந்துகள் மற்றும் இதர திட்டங்கள் மூலம் இலங்கையை பசுமையாக்கல என்னும் முயற்சியிலும் தீவிரமாகவும் ஈடுபட்டுவருகின்றார். பன்னிரண்டுக்கு மேற்பட்ட நுாற்களையும் எழுதியுள்ளார். தவிரவும், இலக்கிய உலகில் அம்ரிதா ஏயெம் எனும் புனைபெயரில் இயங்கும் றியாஸ் அகமட்; சிறுகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், கட்டுரை, இசை, விமர்சனம், சினிமா என பல்துறை இயங்குதளத்தில் ஆரோக்கியமாக இயங்கி எழுத்தின் நுண்கூறுகளில் பல்வேறு பரிசோதனை வகைகளை செய்தும் , இயங்கியும் வருகிறார்.


இர்சாத் இமாமுத்தீன்: விதைப்பந்துகளும், உங்களுடைய மீள்வனமாக்கல் நடிவடிக்கைகள் பற்றியும் கூறமுடியுமா?


நான்: விதைப்பந்துகள் என்பது மூன்று பங்கு களியும், ஒரு பங்கு பசுஞ்சாணமும் கலந்து ரொட்டிக்கு மாவு பிசைவதுபோலு உருண்டையாக்கி அதன் நடுவில் ஒரு விதையை வைத்து ஒரு நாள் நிழலிலும், பின்னொரு நாள் வெயிலிலும் காயவைத்து, அதனை சேமித்து, பின்னர் நாங்கள் வெளியே தூரப் பிரயாணங்கள் செல்லும்போது அதனை மரங்கள், காடுகள் தேவையான இடங்களில் வீசிவிட்டு செல்லவேண்டும். பின்னர் மழை பெய்ய, களி கரைந்து விதைகள் முழைக்கத் தொடங்கும். பந்துக்குள் விதைகள் ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இது புராதன எகிப்து முறையாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு ஜப்பானியர்கள் இந்த முறை மூலம் காடுகளை வளர்த்து வெற்றியடைந்திருந்தார்கள். இந்தியா போன்ற பல நாடுகளில் வெற்றிகரமான ஒரு முறையாக இது இருந்தாலும், இது இலங்கைக்கு பரிச்சயமற்ற முறையாக இருக்கின்றது. இந்த முறையை இங்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த வருடத்தின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு பாரம்பரிய மரங்களின் விதைகளைச் சேகரித்து, பின்னர் விதைப்பந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்களைச் சேகரித்து, விதைப்பந்துகளை உருவாக்கி, அதனது வெற்றித் தன்மையை பரிசோதிப்பதற்காக நான் தற்போத கடமையாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அதனைப் பரிசோதித்தேன். வியக்கத்தக்க வகையில் விதைப்பந்துகளிலிருந்து வேம்பு, புளி, நாவல், அன்னமுன்னா, ஆத்தி போன்ற மரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. இதன் வெற்றி வீதம் சுமார் 90 சதவீதமாகும். 2018.12.21ம் திகதி வரை புளிய மரங்கள் ஒரு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டிருந்தன. விதைப் பந்துகளின் பரீட்சார்த்த ஆய்வுகள் வெற்றிபெற்ற கையோடு எனது மாணவர்களின் பாடத் திட்டத்திற்குள் விதைப் பந்துகளைப் புகுத்தி அவர்களுக்கு இந்த திட்டத்தை புரியவைத்து பங்குதாரராக்கினேன். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதியையும் சேர்ந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று சுமார் 130 க்கு வகைகளுக்கு அதிகமான பல்லாயிரக்கணக்கான விதைகளைச் சேகரித்து வந்து மலைக்கவைத்தார்கள். அதன் பின்னர்; ஆயிரக் கணக்கில் விதைப்பந்துகள் செய்யும் திருவிழாவை எங்கள் பீடத்தில் வெற்றிகரமாக நடாத்தினோம். 


கடந்த டிசம்பர் (2018), ஜனவரி (2019) காலங்களில் அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவ பகுயில் 100 ஹெக்டேயர் காடுகளை மீள்வனமாக்குவதற்காக இரு தடவைகளில் 10000 விதைப்பந்துகளையும், 2000 விதைகள், முழைத்த விதைகள், கன்றுகள் போன்றவைகளை, அந்த மாவட்டத்தின் வனபரிபாலன திணைக்களத்தின் முகாமையின் கீழ் எனது மாணவர்களின் உதவியுடன் விதைத்தோம். நாட்டினோம். இதே போன்று கடந்த ஜனவரி (2019) காலப் பகுதியில் தேத்தாத்தீவைச் சேர்ந்த எனது முன்னை நாள் மாணவனும் தற்போதைய ஆசிரியருமான ரமேஸ் சிவஞானம் மற்றும் அவரின் மாணவர்கள் (பல்கலைக்கழக, பாடசாலை) மாணவர்களின் உதவியுடன், மட்டக்களப்பு வனபரிபாலன திணைக்களத்தின் முகாமையின் கீழ் புல்லுமலை, அலியாஓடை என்ற பகுதியில் 100 ஹெக்டேயர் காடுகளை 5000 விதைப்பந்துகளை வீசியும், 2000 விதைகளை, முழைத்த விதைகளை, கன்றுகளை விதைத்தும், நாட்டியும் மீளவனமாக்கலில் ஈடுபட்டோம். சில தனியார் பெரும் காணிகளிலும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டோம். பருத்தித்துறை பசுமைச் சுவடுகளின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்திலும், அதன் தீவகப் பகுதிகளிலும் இன்று சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு ஏற்கனவே இருந்து அழிந்துபோன பழைய பாரம்பரிய சூழற்றொகுதியை உருவாக்குவதற்கான வேலைகளையும் கடந்த 2019, பெப்ரவரியில் ஆரம்பித்திருக்கிறோம். அதை விடுத்து திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, அம்பாறை, பொலநறுவை போன்ற மாவட்டங்களிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வமுள்ள குழுக்களுடன் இணைந்து அந்தந்த பிரதேசங்களில்  அழிந்துபோன வனங்களை மீளுருவாக்கும் வேலைத்திட்டங்களிலும் ஈடுபட்டுவருகிறோம். அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கண்டற் சூழற்றொகுதியை மீளுருவாக்குதலில் சுற்றுச்சூழற் குழுக்களுடன் ஆர்வத்தை செலுத்தி வருகின்றோம். அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் கோணாவத்தை ஆற்றை சுற்றி கண்டல் சூழற்றொகுதியை மீளுருவாக்கும் வேலைத்திட்டங்டகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

விதைப்பந்துகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்த தமிழிலும், சிங்களத்திலும் வீதி நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் மும்மொழிகளிலும் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லூரியை சேர்ந்த எனது மாணவர்களும் இதற்கு கைகொடுத்திருப்பது இதற்கு இன்னுமொரு பலமாகும். கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மற்றும் பல சுற்றுச்சூழல் ஆர்வல குழுக்கள் உதவுவதற்கான கரிசனையை முன்வைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இ;ன்னொரு புறம் என்னிடம் கற்று தற்போது வேலைசெய்துகொண்டிருக்கும் மாணவர்களும், எனது ஆசிரியர்களும் இதற்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அதே நேரம் எனது இலக்கிய நண்பர்களும், எழுத்தாளர்களும் இதற்குத் தேவையான விதைகளை அனுப்புவதுடன், இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தி இலங்கையை பசுமையானதாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார்கள்.
மீள்வனமாக்கலுக்கு அப்பால் அதனுடன் சம்பந்தப்பட்ட வேறு எவ்வாறான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறீர்கள்?
ஈரவலயத்தை அடிப்படையாகக் கொண்ட (பெரும்பான்மையினரின்) பிரதேசங்களில் இன்சா அல்லாஹ் வருகின்ற தென்மேற்கு பருவ மழைக் காலத்தின் முன் எனது மாணவர்களைக் கொண்டு பல மீள்வனமாக்கல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மூன்று சரணாலயங்களில் (தென்னிலங்கையில் இரண்டு, கிழக்கில் ஒன்று) வனவிலங்குகள் உணவாகக் கொள்ளக்கூடிய தாவரங்களை உருவாக்கும் விதைப்பந்து வேலைத்திட்டத்தை அதே மழையுடன் தொடங்க இருக்கிறோம். அதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட திணைக்களத்திடமிருந்து பெற்றிருக்கின்றோம். இதற்கு மேலாக பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்கள், பாடசாலைகள், புதிதாக உருவாக்கப்பட்ட கிராமங்கள், வீதிகள் போன்றவைகளில் பசுமையாக்கல், பிரதேசங்களுக்குரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இனங்கண்டு அவைகளை நிவர்த்தித்தல் போன்றவைகளுக்கு பல்வேறு பிரதேச குழுக்களுடன் வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம். ஓவ்வொரு பிரதேசத்திலும் சுற்றுச்சூழல் அக்கறையுள்ள சுயசார்புள்ள தங்களை தாங்களே இயக்கக்கூடிய நிலைபேறான குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். நாங்கள் இல்லாத போதும் அடுத்தடுத்த காலங்களில் அவர்கள் சுயமாகவே இயங்க வேண்டும். இது எங்களுடைய நோக்கங்களில் ஒன்று.

இர்சாத் இமாமுத்தீன்: இந்த மீள்வனமாக்கல் நடிவடிக்கைகளில் எவ்வாறான முறைகளை கையாண்டு வருகின்றீர்கள்?

நான்: பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல நாங்கள் விதைப் பந்துகள் மட்டும் வீசுவதில்லை. அது மழை காலத்திற்கு முன்னர் மட்டுமே வீசப்பட வேண்டியது. அதற்கு மேலதிகமாக நாங்கள் சேகரித்த பாரம்பரிய விதைகளையும், அவ்வாறான முழைக்கச் செய்யப்பட்ட விதைகளையும், அந்த விதைகளிலிருந்து உருவாக்கிய கன்றுகளையும், இயற்கை சூழற்றொகுதியில் இருந்து பெற்ற கன்றுகளையும் நடுதல். சாத்தியமான ஓரளவு பெரிய மரங்களை மீள்நடுகை செய்தல், அந்நிய ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி முன்பிருந்த ஆரோக்கியமான சூழற்றொகுதியை உருவாக்கல்,  கண்டற் தாவரங்களை நடுதல், நகர, வீதி பசுமையாக்கம், பிரதேசங்களுக்குப் பொதுவான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான சாத்தியமான தீர்வுகளை முன்வைத்தல், பொதுமக்கள், பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு எற்படுத்தல் போன்ற பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

இர்சாத் இமாமுத்தீன்: இவ்வாறான நடவடிக்கைகளில் நீங்கள் சந்திக்கின்ற, சந்தித்த சவால்கள் எவை?

நான்: பெரிய சவால்கள் ஒன்றுமில்லை. ஆரம்ப காலங்களில் விதைப்பந்துகள் உருவாக்கலில்தான் பல சவால்களாக இருந்தன. ஏனெனில் இலங்கைக்கு அறிமுகமில்லாத முறை. அது சம்பந்தமான இலங்கைத் தரவுகளும், உருவாக்கும் முறையியலும் காணப்படவில்லை. விதைப்பந்துகளை முயன்று தவறிக் கற்றல் முறையில் அனுபவங்களைப் பெற்று உருவாக்கியிருக்கிறோம். நாங்கள் ஈடுபடுகின்ற இவ்வாறான நடிவக்கைகளுக்கு பொருளாதாரம், நிதி வசதிகளை பலர் பெரியதொரு பிரச்சினையாக பார்த்தார்கள். அதனை நாங்கள் பெரிய பிரச்சினையாக எடுக்கவில்லை. பெரும்பாலும் எங்களது சொந்த நிதியையும், வாகனங்களையும், மனித வளங்களையுமே பாவித்தோம். பாவிக்கிறோம். இருந்தும் எங்களது இந்த நடவடிக்கைகளை பெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளவுமில்லை. அதனைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. அதுவும் ஒரு வகையில் சந்தோசமே. ஏனெனில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றைமட்டும் நாடித்தான் இந்த திட்டங்கள் செய்யப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

இர்சாத் இமாமுத்தீன்: இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும்போது நீங்கள் அவதானித்த அல்லது உணர்ந்து கொண்ட ஏதாவது பிரச்சினை அல்லது விடயம் பற்றிக் கூற முடியுமா?

நான்: முஸ்லிம்கள் என்றால் மரத்தை வெட்டுபவர்கள். காடுகளை அழிப்பவர்கள். சுற்றுச்சூழல் அக்கறை இல்லாதவர்கள் என்ற கருத்து பெரும்பான்மையினர் மத்தியில் நிலவுவதை இந்த வேலைகளில் ஈடுபடும்போது அவதானிக்கவும், கவனத்திற்கொள்ளவும் முடிந்தது. அது வலிந்தும், புனைந்தும் உருவாக்கப்பட்ட கருத்துருவாக்கம் ஒன்றாகவும் இருக்கலாம். முஸ்லிம்கள் மீதான அந்தக் கருத்துருவாக்கத்தை அகற்றி,  மீண்டும் நல்ல கருத்துநிலையாக்கத்தை மீளுருவாக்கம் அல்லது மீள்கட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதும் எங்களது நோக்கமாக இருந்தது. இருக்கிறது. எங்களது பெரும்பாலான வேலைகளை முஸ்லிம் பிரதேசமல்லாத இடங்களிலேயே தற்போது செய்து வருகின்றோம். அவர்கள் அழைக்கிறார்கள் செல்கிறோம். மக்களை சந்திக்கிறோம்.  கலந்துரையாடுகிறோம். பிரச்சினைகளை அறிகிறோம். அவர்களுடன் உண்டு, தங்கி, மீள்வனமாக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். இது எங்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றது. முஸ்லிமாக இதனைச் செய்வதில் மிகுந்த “கர்வமும், பெருமையும்” கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

இர்சாத் இமாமுத்தீன்: முஸ்லிம்கள் பற்றிய இவ்வாறான எண்ணப்பாங்குக்கு என்ன காரணம்?

நான்: சுற்றுச்சூழல் வெப்பநிலை 42 பாகை செல்சியஸ் உள்ள ஒரு பிரதேசத்திதல், மரங்கள் குறைந்த, மரங்களின் பெறுமதி தெரிந்த, நீரின் அருமை உணர்ந்த, சுற்றுச்சூழலின் மீதான கரிசனையுள்ள நபி அவர்கள் போதித்த இறைவனின் மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள் நாங்கள். நாளை உலகம் அழியப் போகிறதென்றாலும் ஒரு மரக் கன்றையாவது நாட்டிவிடுங்கள் என்று சொல்கிற மார்க்கத்தை பின்பற்றுகிறவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட இறைவேதம், நபி வழிகாட்டல், இறை கட்டளை வழி வந்த எங்களுக்கு சுற்றுச்சூழல் அக்கறையும், விழிப்புணர்வும், கரிசனையும் அதி உச்சத்தில் இருக்க வேண்டும். குறைவாக அல்லது இல்லாமல் இருந்தால் எங்கோ தவறுகள் இருக்க வேண்டும். அவைகள் திருத்தப்பட வேண்டும். முற்றாக களையப்பட வேண்டும். ஒரு சுற்றுச்சூழல் அக்கறையுள்ள ஆரோக்கியமுள்ள சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இறுதியாக..
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனது பல கட்டுரைகளை எங்கள் தேசம் தொடர்ச்சியாக வெளியிட்டதன் மூலம் பல கதையாடல்களையும், மாற்றங்களையும் சமூகவெளிகளில் ஏற்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.  நாம் அவைகளை நேரடியாக ஒவ்வொரு நாளும் கண்கூடாக காண்கிறோம். அதற்கு எங்கள் தேசத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இன்சாஅல்லாஹ். வெற்றிகரமாக பயணிக்கிறோம். பயணிப்போம். அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, October 23, 2018

உரையாடல் தொடர்கிறது……



20.10.2018 தினகரனின் சாஜித்தின் முத்தாரம் பகுதிக்காக ”உரையாடல் தொடர்கிறது...” என்னும் பகுதிக்காக சாஜித் மூன்று கேள்விகளில் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருந்தார். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் ஆழமானதும், என்னை தோண்டியெடுத்து எனது முக்கியமான ஒரு பக்கத்தை வெளியுலகுக்கு காட்டச் செய்ததுமாய் இருந்தன கேள்விகள்.
மனமார்ந்த நன்றிகள் சாஜித்.

உரையாடல் தொடர்கிறது……

அம்ரிதா ஏயெம் என்னும் புனைப்பெயர் கொண்ட ஏ.எம் றியாஸ் அகமட் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையின் சிரேஸ்ட விரிவரையாளராக பணியாற்றுகிறார். இலக்கிய வடிவத்திலும் இயங்குதலின் செயற்பாட்டாளராகவும் இவரது பயணம் மிக நீண்டது. முத்தாரம் பகுதிக்காக மூன்று கேள்விகளைக் கேட்டேன்.

1) எழுத்துச் செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க, விதைகள் எறியும் பசுமைப் புரட்சி பற்றி சொல்லுங்கள்?

எழுத்திற்கும் வாழ்விற்கும் தொழிலுக்கும் பெரிய வித்தியாசத்தை வழமையாக நான் உணர்வதில்லை. விதைப்பந்துகள் என்பது மூன்று பங்கு களியும்> ஒரு பங்கு பசுஞ்சாணமும் கலந்து ரொட்டிக்கு மாவு பிவைசதுபோலு உருண்டையாக்கி அதன் நடுவில் ஒரு விதையை வதை;து ஒரு நாள் நிழலிலும்> பின்னொரு நாள் வெயிலிலும் காயவைத்து> அதனை சேமித்து> பின்னர் நாங்கள் வெளியே தூரப் பிரயாணங்கள் செல்லும்போது அதனை மரங்கள்> காடுகள் தேவையான இடங்களில் வீசிவிட்டு செல்லவேண்டும். பின்னர் மழை பெய்ய, களி கரைந்து விதைகள் முழைக்கத் தொடங்கும். பந்துக்குள் விதைகள் ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். இது புராதன எகிப்து முறையாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பிறகு ஜப்பானியர்கள் இந்த முறை மூலம் காடுகளை வளர்த்து வெற்றியடைந்திருந்தார்கள். ஆனால் இது இலங்கைக்கு பரிச்சயமற்ற முறை. இந்த முறையை இங்கு உருவாக்க வேண்டும் என்று கடந்த ஆறுமாத காலமாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பல்வேறு பாரம்பரிய மரங்களின் விதைகளைச் சேகரித்து, பின்னர் விதைப்பந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்களைச் சேகரித்து, விதைப்பந்துகளை உருவாக்கி> அதனது வெற்றித் தன்மையை பரிசோதிப்பதற்காக நான் தற்போத கடமையாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின், உயிரியல் விஞ்ஞான ஆய்வுகூடத்தில் அதனைப் பரிசோதித்தேன். வியக்கத்தக்க வகையில் விதைப்பந்துகளிலிருந்து வேம்பு, புளி, நாவல், அன்னமுன்னா, ஆத்தி போன்ற மரங்கள் வளரத் தொடங்கியிருந்தன. இந்த பரீட்சார்த்ததிட்டம் வெற்றிபெற்ற கையோடு எனது மாணவர்களின் பாடத்திட்டத்திற்குள் விதைப்பந்துகளைப் புகுத்தி அவர்களுக்கு இந்த திட்டத்தை புரியவைத்து பங்குதாரராக்கினேன். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதியையும் சேர்ந்தவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு சென்று சுமார் 130 க்கு வகைகளுக்கு அதிகமான பல்லாயிரக்கணக்கான விதைகளைச் சேகரித்து வந்து மலைக்கவைத்தார்கள். இந்த மாத முடிவில் ஆயிரக் கணக்கில் விதைப்பந்துகள் செய்யும் திருவிழா இங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த தமிழிலும், சிங்களத்திலும் வீதி நாடகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் மும்மொழிகளிலும் பிரசுரங்களும் மக்களுக்கு விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லூரியை சேர்ந்த எனது மாணவர்களும் இதற்கு கைகொடுக்க வந்திருப்பது ஒரு இன்னுமொரு பலமாகும். இ;னனொரு புறம் என்னிடம் கற்று தற்போது வேலைசெய்துகொண்டிருக்கும் மாணவர்களும், எனது ஆசிரியர்களும் இதற்கு உதவ முன்வந்திருக்கிறார்கள். அNது நேரம் எனது இலக்கிய நண்பர்களும் இதற்குத் தேவையான விதைகளை அனுப்புவதுடன், இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தி இலங்கையை பசுமையானதாக மாற்ற உறுதி பூண்டிருக்கிறார்கள்.

2) விலங்கியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவு எத்தகையது?

முன்னர் கூறியது போன்றுதான் எனது எழுத்தும், வாழ்க்கையும், தொழிலும் ஒரே நேர்கோட்டில்தான் உள்ளன. 2001ம் ஆண்டு “விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று” என்ற எனது சிறுகதைத் தொகுதிபற்றி அமரிக்க பல்கலைக்கழக மொழியில்துறை பேராசிரியர் சுரேஸ் கனராஜா Third Eye என்ற ஆங்கில சஞ்சிகையில் எழுதும்போது “மானிடவியலாளர் டென்னிஸ் ரெட்லொக் போன்றவர்கள் தங்களது ஆய்வுக்கட்டுரைகளையும், களப்புத்தகக் குறிப்புகளையும் நாவல் போன்ற இலக்கியமாக்கியிருக்கிறார்கள். அதுபோல அம்ரிதா ஏயெமும் (நானும்); எனது ஆய்வுக்கட்டுரைகளையும் களப்புத்தகக் குறிப்புக்களையும் இலக்கியமாக்கியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான். குரங்குகள், ஓணான்கள், ஆமைகள், பாம்புகள், எலிகள், யானைகள், மான்கள், மீன்கள், கோழிகள், பறவைகள், மரங்கள், காடுகள், விதைகள், கடல்கள், வாவிகள், ஆறுகள், குளங்கள் போன்றவற்றில் ஆய்வுகள் செய்து சர்வதேச சஞ்சிகையில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையே நான் சிறுகதைகளாக்கினேன். ஆனால் இது தமிழில் வித்தியாசமான ஒரு முயற்சியாக இருக்கலாம் என நினைக்கிறேன். இருபது வருட காலமாக பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. அதற்காக நான் அலட்டிக்கொள்ளவும் இல்லை.

3) அதிகமான உங்களது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். கதைகளின் நுட்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப் பகுதியில் பிரச்சினைகளை பெரும்பாலும் பிரச்சினையில்லாமல் சொல்லுவதற்கு குறியீடுகள் பயன்பட்டிருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. நிறைய இடங்களில் குறியீடும் குறிப்பானும் புகுந்து விளையாடியிருக்கும். எனது எந்தக் கதைகளும் நேர்கோடானது அல்ல. அதற்காக அவை முற்றுமுழுதாக இருண்மையானதும் அல்ல. வாசகன் அதனைக் கடப்பதற்கு போதுமான ஒளியை அதனுள் பரவவிட்டிருக்கின்றேன் என்று பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் எனது தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கின்றார். எனது விலங்குகளின் உலகம், சுற்றுச்சூழலாயும் அரசியலாயும் சமூகவியலாயும், தத்துவமாயும் வெவ்வேறு தளங்களில் விரியக்கூடியன என்று கருதுகின்றேன். சிலவேளை அதற்குள் எல்லோருக்கும் நுழைய முடியாது என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. அவ்வாறன்று. எல்லோரும் நுழையலாம். காலமும் இடமும் பொதுவாக எங்கும் குறிப்பிடப்படுவதுமில்லை. அதனால் அந்தக் கதைகள் எக்காலத்திற்கும் நின்று நிலைத்தாடக்கூடிய தன்மையையும் பெறுகின்றன. பொதுவான பெயர்களைக் கொண்ட கதை மாந்தர்களே உலாவுவார்கள். மேம்போக்காக அவர்களுக்கு அடையாளங்கள் தெரிந்தாலும், அவர்கள் இனம், மதம். மொழி, புவியியல் எல்லை கடந்தவர்கள். அங்கே இரண்டே இரண்டு அடையாளம்தான். நசுக்குவோன்- நசுக்கப்படுவோன், அடிப்போன் – அடிபடுவன், மிதிப்போன் - மிதிபடுபவன். இறுதியாக கூறப்போனால் விலங்கியலாய், சூழலியலாய், சமூகவியலாய், அரசியலாய், வானியலாய், பொருளியலாய், தத்துவவிசாரமாய் விரிந்து காலமும் இடமும் கடந்த, மதமும் இனமும் மொழியும் புவியியல் பரப்பும் கடந்த நேர்கோடற்ற, பல்வேறு இசங்களையும் மொழியின் பல்வேறு வகையான சாத்தியப்பாடுகளின் பரிசோதனை முயற்சிகளையும் குறியீடுகளையும் உள்வாங்கிய மானிடத்தின் எல்;லை கடந்த அன்பே என் கதைகளின் நுட்பமாயிருக்கலாம் என்பேன்.



கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...