Monday, June 1, 2020

விதைப்பந்துகள்! - காடுகள் உருவாக்கப்படுகின்றன!!

ஜெர்மன் தலைநகர் பேர்லினைத் தளமாகக் கொண்டியங்கும் ஒத்துழைப்பு மற்றும் மாற்றுதலில் ஊடகம் (MiCT)என்கிற அமைப்பினால் இயக்கப்படும் ”த-கட்டுமரம்” என்ற இணைய சஞ்சிகையில் எனது விரிவான நேர்காணல் வெளிவந்துள்ளது. எங்களது செயற்பாடுகளின் இன்னொரு கோணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. இந்த நேர்காணலை ஏற்பாடு செய்த சஞ்சிகையின் தமிழ் பதிப்பாளர் எம்.எஸ். தேவகௌரி அவர்களுக்கும், நேர்காணல் ஆசிரியபகுதிச் செயற்பாடுகள் லதா துரைராஜாவிற்கும் ஒரு கடலளவு நன்றிகள்.

விதைப்பந்துகள்!
காடுகள் உருவாக்கப்படுகின்றன!!வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. மாணவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள்.


குடத்தனை பருத்தித்துறையிலிருந்து சுமார் 10 கிலோமீறறர் தூரத்திலுள்ள பசுமையும் வனப்பும் நிறைந்த கிராமமாகும்.அங்கு சிறுவர்களுக்கு பயிற்சியளிப்பதில் ஏ.எம்.றியாஸ் அஹமட்.
இலங்கையில், போருக்குப் பின்னர் பசுமையின்றி கிடக்கும் பூமியின் நிலை கண்டு வருந்தும் விலங்கியல்துறை விரிவுரையாளர் தாவரங்களையும், வனங்களையும் மீளுருவாக்க விதைப்பந்துகள் வீசுவதில் மும்முரம் காட்டி வருகிறார். இவரது இயற்பெயர் ஏ.எம்.றியாஸ் அகமட். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின், பிரயோக விஞ்ஞான பீடத்தில், உயிரியல் துறையில் விலங்கியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். விலங்கியல், தாவரவியல், இலக்கியம் ஆகியவற்றிலும் அதிக ஆர்வம் கொண்டவர். முக்கியமாக சுற்றுச்சூழல்மீது கொண்ட ஆர்வத்தினால், அது குறித்து வருங்கால சமுதாயத்தினிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த விதைப்பந்துவீசலை விரும்பித் தேர்வு செய்துள்ளார். ‘அம்ரிதா ஏயெம்’ என்ற புனைபெயரில் இலக்கிய ஆக்கங்களையும் விரும்பி எழுதுகிறார். தனது எழுத்தாற்றல் காரணமாக, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்த எட்டு நூல்கள் உட்பட, 15 நூல்களை எழுதியுள்ளார். அம்பாறை மாவட்டம், மருதமுனையில் வசிக்கும் இவர், இன மத பேதமின்றி காடுகள் மீளுருவாக்கம் செய்யவேண்டிய மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து தனியாளாக விதைப்பந்துகளுடன் நாடு முழுவதும் தொடர்ந்து பயணிக்கிறார். த கட்டுமரனுக்காக அவருடன் உரையாடியதில் இருந்து…

த கட்டுமரன்: இந்த ‘விதைப்பந்துகள்’ என்றால் என்ன?

றியாஸ் அகமட்: இலங்கையில் பல்வேறு நடவடிக்ககைகளாலும் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்படுகின்றன. சனத்தொகை பெருக்கமும் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக தேவைகளும், நுகர்வுகளும் அதிகரித்திருக்கின்றன. இதற்காக உற்பத்தி செய்யப்பட்ட ஒவ்வொரு பொருட்களின் உற்பத்திக்குப் பின்னாலும் காடுகளும் அதன் பல்வேறு தாவர, உயிர் இனங்களும் பலிகொடுக்கப்படுகின்றன. அழிக்கப்படும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்கவேண்டும். மரங்களையும், காடுகளையும் பாதுகாக்க வேண்டும். மரங்களை வளர்த்தால் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏனைய உயிரினங்களுக்கும் அது அதிக பயனைக்கொடுக்கக்கூடியது. உயிர்பல்வகைமையையும் நாம் பாதுகாக்கவேண்டும்.

விதைப்பந்தாக்கலில் சிறுவர்களுடன்..

இதற்காக காடுகளை மீளுருவாக்கம் செய்யவேண்டும். எம்மால் சென்றடைய முடியாத மலைகள், புதர்கள், ஆறுகள் இடங்களில் கூட நாம் நிலத்தைப் பண்படுத்தாமலே மரங்களை வளர்த்துவிடலாம். பராமரிப்புகூட தேவைப்படாது. காடுகளை மீளுருவாக்கம் செய்வதற்கு வேகமான, இலகுவான, மலிவான முறைகளில் ஒன்று இந்த ‘விதைப்பந்து வீசல்’ அல்லது ‘விதைப்பந்தாக்கம்’. உலகிலுள்ள நாடுகள் பலவும் இன்று உபயோகித்துவரும் ஒரு இலகுவான முறையே இது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன்பு எகிப்திலும், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜப்பானிலும் இந்த முறை பின்பற்றப்பட்டிருக்கிறது. ஏன் இந்தியாவில் இன்றுவரை நடைமுறையில் உள்ள ஒரு முறைதான் இது!

மூன்று பங்கு களிமண்ணும் ஒரு பங்கு சாணியும் கலந்து விதைப் பந்துகளைச் செய்வோம். அதற்குள் மரத்தின் விதைகளை வைத்து மூடி, காடுகள் தேவைப்படும் நிலப்பகுதியை நோக்கி வீசி எறியவேண்டும். இதுதான் ‘விதைப்பந்துவீசல்’.
(http://www.amrithaam.com/2018/08/blog-post.html)

த கட்டுமரன்: செய்யப்பட்ட இந்த விதைப்பந்துகளை உடனடியாக
 மரங்களை உருவாக்க பயன்படுத்தலாமா?

றியாஸ் அகமட் – இல்லை. விதைப்பந்துகளை ஒரு நாள் நிழலிலும் ஒரு நாள் வெய்யிலிலும் காயவைக்க வேண்டும். பின்னர் எங்கு எங்களுக்கு மரங்களும், காடுகளும் தேவையோ அங்கு நாம் இதை வீசலாம். மழை பெய்து, களி கரையும்போது, விதைப்பந்துக்குள் இருக்கும் விதை முளைத்து வளரத் தொடங்கும். காயவைத்த இந்த விதைப்பந்துகளை ஒரு வருடத்திற்குகூட நாம் பாதுகாத்துவைக்கலாம். அதற்குள் விதைகள் உயிர்ப்புடன் இருக்கும்.

தயாராக்கப்பட்ட விதைப்பந்துகள்.

த கட்டுமரன்: இந்த மாதிரியாக காடுகளை மீளுருவாக்கும் 
ஒரு எண்ணம் உங்கள் மனதில் தோன்றக் காரணம் என்ன?

றியாஸ் அகமட்: சிறு வயது முதல் இயற்கையை நேசிப்பவன் நான். இயற்கையை அதன் பல்வகைத்தன்மையுடன் ரசிப்பவன் நான். சுமார் 30 வருடகால யுத்தம் இந்தப் பூமியின் பசுமையை தன்னுடன் சுருட்டிச் சென்றுவிட்டதை ஏக்கத்துடன் பார்த்துக் கலங்கி நின்றேன். பசுமையை – அழிந்துபோன மரங்களை- காடுகளை மீளுருவாக்கம் செய்ய என்னால் என்ன செய்யமுடியும் என்று இரவு பகலாகச் சிந்தித்தேன். இணையவழி உட்பட, பல்வேறு வழித் தேடல் மூலம் பல வழிகள் தெரிந்தன. இருந்தாலும் மிக இலகுவாகவும் அதிக செலவின்றியும் மிக விரைவாகவும் மரங்களையும், காடுகளையும் உருவாக்குவதற்கு கண்டடைந்த முறைதான் இந்த ‘விதைப்பந்தாக்கம்’!

த கட்டுமரன்:இதை முதன் முதலில் எப்போது, எங்கே ஆரம்பித்தீர்கள்?
றியாஸ் அகமட்: இந்த முறையை பரீட்சித்து பார்ப்பதற்கு, நான் தற்போது பணியாற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிரியல்துறையின் தாவரவியல் தோட்டத்தில் முதன் முறையாக நூறு விதைப் பந்துகளை எறிந்தேன். 12.09.2018 இல் எறிந்த விதைப் பந்துகள் 28.09.2018 இல் முளைக்கத் தொடங்கின அவற்றில் 90 மரங்கள் முளைத்தன. இன்று 10 மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. இன்றைய தேதியில் புளிய மரங்கள் இரண்டு அடிக்கும் மேல் வளர்ந்துவிட்டிருக்கின்றன.
சேகரிக்கப்பட்ட விதைகள் சில..

த கட்டுமரன்: நூறில்பத்து தான் வளரும் சாத்தியம் உள்ளதா?

றியாஸ் அகமட்: இல்லை. அதிகமாகவும் நாம் எதிர்பார்க்கலாம். மனிதர்கள் விலங்குகளிடம் இருந்தும், காலநிலைக் காரணிகளிலிருந்தும் அந்த விதைபந்திலிருந்து முளைத்த தாவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் 90 கூட வளரும் சாத்தியம் உண்டு. ஆனாலும் விதைப்பந்துகளை வீசும்போது ‘வளர்ந்தால் மரம் இல்லையேல் மண்ணிற்கு உரம்’ என்ற அடிப்படையில்தான் நாம் சிந்திக்கிறோம்.

த கட்டுமரன்: மரம் நடவேண்டிய மாவட்டங்களையும், 
இடங்களையும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்? 
காடுகளுக்குள் இலகுவாகச் செல்லமுடியுமா என்ன?

றியாஸ் அகமட்: முகநூல் வழியாகவே இது அதிகம் சாத்தியமாகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவென மாவட்ட மட்டத்தில் இயங்கிவரும் அமைப்புகள் என்னைத் தொடர்புகொண்டு கேட்கிறார்கள். உதாரணமாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ‘பசுமைச் சுவடுகள் அமைப்பு’ வவுனியாவில் ‘சுயாதீன தழிழ் இளைஞர்கள்’ அமைப்பு, மட்டக்களப்பில் ‘வேர்கள்” அமைப்பு என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றைவிட சில பாடசாலைகளும் மாணவர்களை இதில் ஈடுபடுத்த முன்வருகின்றன. இராணுவம், வைத்தியசாலைகள் என முக்கிய சேவையாளர்களும் ஆர்வம்காட்டி வருகின்றனர். காடுகளுக்குள் செல்லும்போது வனபரிபாலன திணைக்களத்தின் ஆலோசனையுடனும், அனுமதியுடனும்தான் செல்கிறோம்.

த கட்டுமரன்: இராணுவம். வைத்திய துறைசார்ந்தவர்களின் 
ஆர்வம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் அது பற்றி?

றியாஸ் அகமட்: ஆம், அண்மையில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் ‘காடுகளும் காலநிலை மாற்றமும் அதனை எதிர்கொள்வதில் மருத்துவத்துறையின் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். அதனைத்தொடந்த கலந்துரையாடலில் அந்த பிரதேச வனமாக்கலுமக்கு இராணுவத்தினரும் வைத்தியசேவையில் உள்ளோரும் மக்களும் அனைத்து விதங்களில் உதவுவதாக உற்சாகமளித்தனர். அங்கே வனங்களின் நேசனாக கேணல் சுதத் திசநயாக்க அறிமுகமானார். அவரும் அவரது வீரர்களும்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வன மீளுருவாக்கத்தில் நேரடியாக கால் பதித்த ‘விதைப்பந்து திருவிழா’
இந்தப்பணியை சிறப்பாக முன்னெடுக்கிறார்கள். அதைவிட ஏற்கனவே கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையும் வன மீளுருவாக்கத்தில் நேரடியாக கால் பதித்துள்ளது. ‘விதைப்பந்து திருவிழா’ ஒன்றை நடத்தினர். அத்துடன் அம்பாறையில் வண. சிப்தகுப்த தீரானந்த வனவாசி நாயக்க தேரர் பல விடயங்களைக் கலந்துரையாடியுள்ளார். இவை எல்லாம் எமக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்களே.

த கட்டுமரன்: இதுவரையில் எந்தெந்த மாவட்டங்களில் 
விதைப்பந்துகளை வீசியிருக்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: வவுனியாவில் பாலமோட்டை மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளிலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் குடத்தனையிலும் மட்டக்களப்பு – புல்லுமலை,அலியா ஓடை, மற்றும் அம்பாறை மாவட்டத்தின் அரந்தலாவை உட்பட பல பகுதிகளில் விதைப் பந்துகளை வீசியிருக்கிறோம். இதன்போது சமூகங்கள் மட்டுமின்றி அப்பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும் பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். மழைபெய்யும் சந்தர்ப்பங்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் எங்களது முயற்சியை மேற்கொள்வோம்.

த கட்டுமரன்: அந்த மாவட்டங்களுக்குத் தேவையான 
மரங்கள் இன்னதென்று எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: விதைப்பந்துகள் வீசுவதற்கு அல்லது விதைப்பந்தாட்டத்திற்கு முன்னதாக நான் அங்கு ஒருமுறை சென்றுவிடுவேன். அங்கு வளரக்கூடிய மரங்களின் விபரங்களைச சேகரித்து அல்லது மற்றவர்கள் மூலம் சேகரித்து அதற்கேற்றாற்போல் விதைப்பந்துகளைத் தயாரிப்போம். பெரும்பாலும் அந்த இடங்களின் சுதேச மரங்களின் விதைகளையே தெரிவுசெய்கிறோம்.

த கட்டுமரன்: விதைகளைப் பெறுவது இலகுவாக உள்ளதா?

றியாஸ் அகமட்: மிக மிக எளிதாகவே உள்ளது. நான் என்னுடைய மாணவர்கள் மூலம்தான் அதிக விதைகளைப் பெறுகிறேன். அவர்கள் விடுமுறையில் அவர்களது ஊர்களுக்குச் செல்லும்போது அவர்களுடைய ஊரில் கிடைக்கும் சுதேசிய மரங்களின் விதைகளை எடுத்துவரச் சொல்வேன். ஒருமுறை 133 வகையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விதைகளை எனது மாணவர்கள் சேகரித்துவந்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இதை விட ஒரு ஆச்சரியம் உள்ளது. பிராண வாயுவை உண்டு, அதே பிராண வாயுவின் அளவை வளிமண்டலத்தில் மறைமுகமாக அதிகரிக்கும் ஒரு பிராணி உண்டு. ஒளித்தொகுப்புக் கூடம்! கானுருவாக்கி!

/
நடமாடும் வனம்! அதுதான் யானை! ஓமந்தை, பாலமோட்டை, பெண்கள்பனிக்க மகிழன்குளம் காட்டுக்குள் இருந்த குளத்தருகில் ஒரு யானை விட்டை (யானைக் கழிவு) போட்டிருந்தது. அதற்குள் சுமார் 15 பனங்கொட்டைகள் இருந்து முழைக்கத் தொடங்கியிருந்தன. ஒரு யானை ஒவ்வொரு நாளும் 300 முளைக்கும் விதைகளைத் தருகிறது. யானை தன் வாழ்நாளில் சுமார் இருபது இலட்சம் மரங்களை உருவாக்குகிறது. யானைகளைப் பாதுகாப்பது காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும். எனவே யானைகளையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். காடுகளைப் பாதுகாத்து காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த யானைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.

த கட்டுமரன்: முக்கியமாக நீங்கள் விதைப்பந்துகளுக்காக 
உபயோகித்த விதைகள் எவை?
றியாஸ் அகமட்: அனேகமாக சுதேச மரங்களின் மரங்களின் விதைகளையே உபயோகிக்கிறோம். அனேக சுதேச சமரங்கள் அழிந்துபோயுள்ளன. அல்லது அருகிவிட்டன. எனவே புளி, நாவல், வேம்பு, தேத்தா, வாகை, இலுப்பை, திருக்கொன்றை, மஞ்சாடி, பாலை, வீரை, தேக்கு, ஆத்தி, காட்டுத்தேங்காய் என இந்தப் பட்டியல் மிக நீண்டு செல்லும்.

த கட்டுமரன்: இந்த மாத நடுப்பகுதியில் ஆயிரம் பனைமர 
விதைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக 
அறியக்கிடக்கிறது. அதுபற்றி?

றியாஸ் அகமட்: ஆம் ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஆயிரம் பனைவிதைகளை நடவுள்ளோம். அதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. பனைவிதைகளைச் சேகரிப்பதில் பலர் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக இலக்கியவாதியும் இயற்கை ஆர்வலருமான எஸ்.எல்.எம். ஹனீபா குறிப்பிடத்தக்கவர். அவர் ஏற்கனவே பனை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வளர்த்துவருபவர். வடபகுதியைப் பொறுத்தவரை பனை வளர்ப்பில் ஆரோக்கியமான சூழ்நிலை காணப்படுகிறது. ஏற்கனவே வவுனியாவைச் சேர்ந்த ‘சுயாதீன தமிழ் இளைஞர்கள்’ அமைப்பு ஒரு இலட்சம் பனை விதைப்பில் ஐம்பதாயிரம் பனைவிதைப்பை எட்டிவிட்டனர். இன்றும் அதற்கான பணிகள் தொடர்கின்றன. அத்துடன் பனைவள அபிவிருத்தி சபை மூலம், ஆண்டுதோறும் அனைத்து பகுதிகளிலும் பனம் விதைகள் நடப்படுகின்றன.

த கட்டுமரன்: இதுவரையில் மேற்கொண்ட விதப்பந்தாக்கத்தின்போது 
சிறுவர்களது ஆர்வம் எப்படியுள்ளது?
றியாஸ் அஹமட்: வவுனியா, ஓமந்தைப் பகுதியில் விதைப் பந்துகள் செய்யும் நிகழ்வுக்காக சென்றிருந்தபோது கனமழை கொட்டியது. சிறுவர்கள் மழையில் நனைந்தவாறே மிகவும் உற்சாகமாக ஈடுபாடு காட்டினார்கள். குடத்தனைப் பகுதியில் சிறுவர்கள் தாமாகவே குழுக்களாகப் பிரிந்து கூடி விளையாடுவதைப் போன்று மகிழ்ச்சியுடன் அவர்கள் விதைப் பந்துகளை உருவாக்கினார்கள். அதன் பின்னர் நடைபெற்ற கருத்தரங்கு மற்றும் பயிற்சியிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். இதன்மூலம், அவர்களின்
/
மனோநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில நாட்கள் கழித்து முளை வரத்தொடங்கும் போது படம் எடுத்து எனக்கு அனுப்பும் அளவிற்கு அவர்கள் ஆர்வமாக உள்ளனர். இனி நானும் நீங்களும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களாகவே விதைப்பந்தைஉருவாக்கி வீசுவார்கள். பெற்றோரும் சளைக்காமல் உதவினார்கள். வீடு திரும்பும்போது என் மனம் என்றும் இல்லாமல் அன்று மகிழ்ச்சியினால் நிறைந்திருந்தது.

த கட்டுமரன்: இந்த விதைப்பந்தாக்க முயற்சியில் சிறுவர்களை 
ஈடுபடுத்துவதன் மூலம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

றியாஸ் அகமட்: பல்கலைக்கழக மாணவர்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் வரை இந்த விதைப்பந்து வீசலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விதைப்பந்தாட்ட முறையானது, சுற்றுச் சூழல் குறித்துமாணவர்களுக்கு மிகவும் அவசியமானதோர் கல்வி முறையாகவே நான் பார்க்கிறேன். பல்கலைக்கழகத்தில் இது உள்வாங்கப்பட்டுள்ளது. பாடசாலை கல்வியிலும் உள்வாங்கப்படவேண்டும். இன்று நான் அவர்களுக்குக் காட்டும் வழியில் நாளை நான் இல்லாமலேயே அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். வருங்காலம் முழுக்க இந்தப் பணியை அவர்கள் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

த கட்டுமரன்: பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான செயற்பாடுகள், 
இலக்கிய எழுத்து முயற்சிகள் என்று தொடரும் உங்கள் பல களப்பயணங்களுக்கு குடும்பத்தின் 
ஆதரவு எந்தளவாக உள்ளது?

றியாஸ் அகமட்: நூறு சதவீதம் என் மனைவியின் ஆதரவு உள்ளது. இல்லையேல் கண்டிப்பாக என்னால் எதுவும் சாத்தியமில்லை என்று வெளிப்படையாக உண்மை சொல்கிறேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறார். சுயமாக இயங்க முடியாத அவரை சக்கர நாற்காலியில் வைத்தே நாங்கள் பராமரித்து வருகிறோம். நான் இல்லாமல் மனைவியால் தனியாகச் சமாளிப்பது மிகவும் கடினம். ஆனாலும், என் பணியைத் தடுக்காமல் அவர் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறார். வீட்டில் இருந்து இந்த விதைப்பந்துகளைத் தயாரிக்கும்போது மனைவி, மகள், அயலவர்கள் பெரிதும் உதவுகின்றனர்.
/
த கட்டுமரன்: உங்களின் இந்த விதைப்பந்தாக்க முயற்சிக்கு யாரிடமிருந்தேனும் 
நிதி உதவி பெறுகிறீர்களா?

றியாஸ் அகமட்: யாருடைய உதவியையும் நான் பெறவும் இல்லை. கோரவும் இல்லை. என்னுடைய சொந்த முயற்சி மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே விதைப்பந்தாக்கத்தை மேற்கொண்டு வருகிறேன். உதவி கோரினால் அமைப்பாகச் செயல்படவேண்டும். அமைப்பாகச் செயல்பட்டால், பணம் புழங்கும், இவ்விரண்டும் எனது முயற்சியை முடக்கிவிடக்கூடும் என்பதால் தவிர்த்துவருகிறேன்.

த கட்டுமரன்: தொடர்ந்து சொந்தப் பணத்தில் உங்களால் இந்த முயற்சியைத் தொடரமுடியும் 
என்று நினைக்கிறீர்கள்?

றியாஸ் அஹமட்: ஆம். இந்த விதைப்பந்தாக்கத்திற்கான செலவு மிகவும் குறைவுதான். களி, சாணம், விதைகளை இலவசமாகப் பெற்றுவிடலாம். விதைகளை உலர்த்தவும் பாதுகாக்கவும் என்னிடம் வசதி குறைவாகத்தான் உள்ளது. எனினும், உதவி கோருவதில் பெரும் தயக்கம் உள்ளது. யாரும் இலங்கையின் எந்தப் பகுதியிலும் எனது உதவியைக் கோரினால், நான் எனது உடம்பையும், என்னிடம் இருக்கும் திறனையும் எனது செலவில் சுமந்து செல்கின்றேன். இந்த முயற்சி முற்றிலும் எனது சுய ஆர்வத்துடனும், கொள்கையுடனும் சம்பந்தப்பட்டது. நான் சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமல்ல, சமாதானச் செய்தியையும் சுமந்து செல்கின்றேன். இந்த விதைப்பந்தாட்டம் மூலம் நான் வெறுமனே விதைகளை மட்டும் மண்ணில் விதைத்துவிட்டு வரவில்லை. மாறாக, அப்பகுதி மக்களின் மனதில் அன்பையும் சமாதானத்தையும் சேர்த்தே விதைத்துவிட்டு வருவதாய் உணர்கிறேன்.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...