மட்டக்களப்பு மாவட்ட மீள்வனமாக்கல் – வாகனேரி - பகுதி- 1
இன்றைய நாளும் இறைவன் உதவியால் அவன் தந்த ஒரு – அதிஷ்டமுள்ள நாளாக அமைந்தது. மழை ஓரளவு ஓய்ந்திருந்தது. என்னிடமிருந்த 2000 விதைப்பந்துகள், 1000 மரக் கன்றுகள், பல்லாயிரக்கணக்கான முழைத்த, முழைக்காத சுதேச மரங்களின் விதைகளை எடுத்துக்கொண்டு எனது வாகனத்தில் தேத்தாத்தீவு சென்று, அங்கு 4000 விதைப் பந்துகளையும், பல்லாயிரக்கணக்கான விதைகளையும், வேர்களின் அமைப்பின் செயற்பாட்டாளர்களையும் ஏற்றிக்கொண்டு, மட்டக்களப்பு மாவட்ட வனபரிபாலன அலுவலகத்தை அடைந்து, அந்த மாவட்டத்தின் மீள்வனமாக்கலின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான கலந்துரையாடலில் பங்கு கொண்டு (மாவட்ட வனபாரிபாலன அதிகாரி பிறனீத் பெரேரா, உதவி மாவட்ட வனபரிபாலன அதிகாரி எம்.ஏ. ஜாயா, வேர்கள் அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் றமேஸ் சிவஞானம், நான் உட்பட் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்), இறுதியில் மட்டக்களப்பின் வாகனேரியில் 50 ஹெக்டேயர் பிரதேசமும், புணானையில் 160 ஏக்கர் பிரதேசமும் மீள்வனமாக்கலுக்கு தெரிவு செய்து. நாங்கள் கொண்டு சென்ற பொருட்களையும், உபகரணங்களையும், எங்களையும் ( நான், வேர்கள் செயற்பாட்டாளர்கள் றமேஸ், பிருந்தாபன், சினோஜன், இனேகாந், சேருன் மற்றும் தவரஞ்சன்) வனபரிபாலன அலுகலகத்தின் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வாகனேரிக்கு செல்லும் இடைவழியில், வாழைச்சேனைக்கு இரு கிலோமீற்றர்களுக்கு முன்னால் கிண்ணையடி என்னுமிடத்திலுள்ள வட்டார வனபரிபாலன அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் போன்றவர்களிடம் விதைப்பந்து சம்பந்தமான கலந்துரையாடலை நடாத்திவிட்டு, சிற்றுண்டியும் அருந்திவிட்டு, திருக்கொண்டியாமடு- ஹபரணை ஏ11 வீதியில் வாகனேரியை அடைந்து, அங்கு இடது பக்கமாக வாகனேரி குள வீதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் பிரயாணம் செய்து, வாகனத்தை நிறுத்தி, வீதியிலிருந்து நீண்ட துாரம் பந்துகளையும், விதைகளையும், உபகரணங்களையும் தோழில் சுமந்து, சேறுகளையும், சகதிகளையும், கற்களையும், முற்களையும், சிறுசிறு நீர்க்குட்டைகளையும் தாண்டிக்கொண்டு வாகனேரியின் மீள்வனமாக்கல் பிரதேசத்தை அடைந்தோம். வீதியிலிருந்து துாரமான பிரதேசத்தை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், கால்நடைகளின் தாக்கத்தை மிகக்குறைந்தளவு இழிவளவாக்குவதற்காகும். எங்களது அனுபவத்தில் மீள்வனமாக்கலுக்கு பிரதான எதிரி இந்தக் கால்நடைகள்தான். பெரும்பாலும் சட்டவிரோதமாகவே வனப் பிரதேசங்களை கால்நடைகளுக்கான மேய்ச்சல் பிரதேசங்களாகப் பாவிக்கின்றனர்.
இதுவரை எங்களை சுமந்து வந்த வாகனத்தை திரு. சாந்தலிங்கம் செலுத்திவந்திருந்தார். வாழைச்சேனை வட்டார வனபரிபாலன அலுவலகத்தைச் (Range Forest Office) சேரந்த, வனவிரிவாக்கல் அதிகாரி திரு. தவரஞ்சன் எங்களை இந்த இடத்திற்கு வழிநடாத்தி வந்திருந்தார். வாகனேரியில் வைத்து, புணானைப் பகுதிக்கான வனபரிபாலன அலுவலகத்தைச் (Beat Forest Office) சேர்ந்த கே.பி.ஏ.ஐ. பத்திரண, வனவெளிக்கள உத்தியோகத்தர் எங்களோடு இணைந்து கொண்டார்.
நானும், றமேசும் கன்றுகளை, நடுவதிலும், விதைகளை விதைப்பதிலும் ஈடுபட்டோம். மற்றவர்கள் அவர்களுக்கு பிரித்துக்கொடுக்கப்பட்ட பகுதிகளில் சென்று விதைப்பந்துகளை வீசிக்கொண்டிருந்தார்கள். யானை, காட்டு விலங்குகள் போன்றவற்றின் அச்சங்கள், மழை போன்றவைகளுக்கு மத்தியில், காட்டுக்குள் தொலைந்துவிடாமல் எங்கள் இருப்பிடத்தை அறிவிப்பதற்காக சத்தத்தை இடைக்கிடையே எழுப்பிக் கொண்டும் இந்தப் பணியின் முதலாவது பாகத்தை செவ்வனே செய்து முடித்தோம். முட்கள் கிழித்த காயங்களினால் கொஞ்சம் உதிரமும், வலியும் இருந்தன. அவைகளை சேற்றுடன் மழை கழுவி குளிப்பாட்டி, குளிர்வித்து எங்கள் களைப்பை போக்கியிருந்தது.
இன்றைய நாளும் இறைவன் உதவியால் அவன் தந்த ஒரு - அதிஷ்டமுள்ள ஒரு நாள்தான். ஏனெனில் அவன் எங்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். யாருக்கும் இலகுவில் கிட்டாத மனிதமையைத் தந்திருந்தான்.
இரண்டாம் பாகத்திற்கு புணானை நோக்கி வாகனம் பயணமாகத் தொடங்குகின்றது.
இரண்டாம் பாகத்திற்கு புணானை நோக்கி வாகனம் பயணமாகத் தொடங்குகின்றது.
No comments:
Post a Comment