Tuesday, June 2, 2020

#கதைவாசிப்பு_2020_7 ‘தறு'



#கதைவாசிப்பு_2020_7
கதை –  தறு
எழுத்து – அம்ரிதா ஏயெம்
புத்தகம் – விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் 
(சிறுகதை தொகுப்பு)


       இச்சிறுகதை தொகுப்பில் வந்திருக்கும் இரண்டாவது சிறுகதை. ‘தறு’. அப்படியென்றால் என்னவென்று கொஞ்ச நேரம் யோசிக்கலானேன். பொதுவாக சிறுகதைகளில் புலப்படாத  சொற்களை உடனே அர்த்தம் தேடுவதில்லை. கதையின் அடுத்தடுத்த பகுதிகளைப் படிக்கும் பொழுது, அது புரிந்துவிடும். அதற்கு முன்னதாக வாசிக்கையில் நாமே கூட சரியாக யூகித்துவிடலாம். ஆனால் நாவலில் அது அத்தனை தூரம் சாத்தியமில்லை. ஏனெனில் நமக்கு அர்த்தம் புரியாத வார்த்தை மீண்டும் நாவலில் வருமா? அந்த தேடல் நமக்கு தொடர்ந்து இருக்குமா அல்லது நாவலில் போக்கில் நமக்கு வேறு சில சந்தேகங்கள் எழுந்துவிடுமா என்பது யூகிக்க முடியாத விடயங்கள்.

      ‘தறு’ என்னும் தலைப்பு இக்கதைக்கு அத்தனை பொறுத்தம். அதனை இலகுவாக இன்னொரு சொல்லில் எல்லோர்க்கும் புரியவைக்கலாம். ஆனால் எழுத்தாளர் அதனை செய்யவில்லை. ஒருவேளை அது அவரது யுக்தியாக இருக்கலாம் அல்லது அது அவர் நிலத்தின் சொல்லாடலாகும் இருக்கலாம்.

      கதை தொடங்குவதில் நல்ல சுவாரஷ்யம் இருந்தது. புதிய களத்தையே இவர் கதைகள் வழி நாம் அறிந்துக்கொள்ள முடிகிறது. வழக்கமாக கடலில் மூழ்கி முத்தெடுப்பது குறித்து பரவலாக நாம் அறிந்திருப்போம். பார்த்திருப்போம். இக்கதையின் நாயகன் கடலில் மூழ்கி அட்டை எடுப்பதை தொழிலாக செய்பவர்.

கடல் அட்டை
       கடலில் மூழ்கி அட்டையெடுக்கும் வேலையின் நுணுக்கங்களை மிக நெருக்கமாக பார்ப்பது போலவே சொல்லப்பட்டிருக்கிறது. வார்த்தைகளை மீறி காட்சிகளாக அவை கண்முன் நகர்கின்றன.  கடலுக்குள் குதிப்பதற்கான ஆடை கவசங்களாகட்டும், குடலில் பின்பக்கமாக விழுவதாகட்டும் சிலிண்டரின் வாயுவையும் கவனித்து அதற்கேற்றார்போல ஆழம் இறங்குவதாகட்டும், கடல் அட்டையை பையில் சேகரித்து மேலே காத்திருக்கும் படகுகளுக்கு அனுப்புவதாகட்டும் என சொல்லப்படும் நுணுக்கங்கள் நிச்சயம் புதிய களத்தை நாம் வாசிக்கின்ற ஆவலை ஏற்படுத்தியது.


      கடலில் குதிப்பதற்கு முன்னதாக முதல் நாள் நடந்தவை நாயகனுக்கு நினைவிற்கு வருகிறது. ஆபத்தான தொழில் செய்வதை விரும்பாத மனைவி, அப்பா என்ன வேலை செய்கிறார் என புரிந்துக் கொள்ளாத எட்டு வயது மகள், ஆறுமாத ஆண் குழந்தை என சிறிய குடும்பம். இந்த அபாயத்தை சந்திப்பதுதான் இவர்களை கரை சேர்க்க நாயகனுக்கு உதவுகிறது. இவர்களுக்காக இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத வாக்குறுதிகளாக வாசிக்கையில் நம்மை நினைத்துக்கொள்ள வைப்பது கதையின் இன்னொரு தன்மை.

ஆக்ஸிஜன் சிலின்டருக்காக அடமானம் வைத்த குழந்தையின் சங்கிலி, மகளுக்கு வாங்கிக்கொடுப்பதாக சொல்லியிருந்த மிதிவண்டியும் நாயகன் நினைவிலேயே இருக்கிறது. அப்படி இருப்பதுதானே தந்தைக்கான அடையாளம்.  

      ‘உள்ளே போனால் பணம். வெளியே வந்தால் பிணம்’ என  சில இடங்களில் சொல்லப்படும்போதும், தன்னை தாக்க வந்த சுறாவை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போதும் இத்தொழிலில் அபாயம் புரிகிறது. ஆனால் கடல் மீது நாயகனுக்கு இருக்கும் அன்பும், தன்னைக் கடலின் மகனாக பார்ப்பதும், ஏதோ ஒரு ஆபத்தை நாயகன் கடந்து தன் குடும்பத்துடன் சேரப்போவதாக நம்பிக்கை கொடுக்கிறார். பின்னர் அவரே அந்த நம்பிக்கையையும் அழித்துவிடுகின்றார்.

       இம்முறை கடலுள் , பலமான நீரோட்டத்தில் நாயகன் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து அவரால் வெளிவர முடியவில்லை. இம்மாதிரி சமயத்தில் நிரோட்டத்துடன் சென்று அதன் வேகம் குறைந்த பின் அதிலிருந்து மீண்டுவிடலாம் என அவ்வாறே செய்கிறார். நீரோட்டம் ஒவ்வொரு முறையும் பெரிய கற்களை மோதும்போது வேகமெடுக்கவே செய்கிறது, அதிலிருந்து பெரும் முயற்சியில் தன்னை பாதுகாக்கிறார்.  தான் தாயாக நினைக்கும் கடலே தன்னை பலிகேட்பதாக தோன்றுகிறது. அந்த நீரோட்டம் எங்கே கொண்டு போகிறது என புலப்படவில்லை. ஆக்ஸிஜனும் எப்போது வேண்டுமானாலும் முடியலாம் என்கிற பீதி ஏற்படுகிறது. அந்த மீதி வாசகருக்குக்கும் கூட வரத்தொடங்குகிறது.

      அதிஸ்டவசமாக, நீரோட்டம் குறைய நாயகன் நீர் மட்டத்திற்கு வருகிறார்.  கரை கண்களுக்கு தெரிகிறது. நீந்த முயல்கிறார், காலில் தசை பிடிப்பு ஏற்படுக்கிறது. காலை அசைக்க முடியவில்லை. கடலில் இருக்கும் போது இப்படி தசைப்பிடிப்பு ஏற்படுது ஆபத்தானது. கால் அசைக்க முடியாமல் நீரில் மூழிப்போக நேரிடும்.

     இப்படி வாசகர்கள் மனதிலும் பதட்டத்தைக் கொடுத்து அதிலிருந்தும் மீண்டு வருகிறார் நாயகன்.

      கடைசியில் இராணுவ முகாமிற்க்கு அருகில் மயங்கி கிடக்கிறார்.  அவர் முகத்தில் பட்டு அவரை எழுப்பிய சூரிய ஒளிதான் அந்த இராணுவ முகாமில் இருக்கும் ராஜபக்சேவையும் சேவகபக்சேவையும் எழுப்பிவிடுகிறது. யோசிக்கையில் அந்த முகாமில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த பெயராக இதன் கோட்பாடாகதான் இருப்பார்களோ என தோன்றுகிறது. அவ்வொருவருக்கும் பதவி உயர்வு பெறுவதற்கு ‘தறு’ தேவைப்படுகிறது. ஆம் ‘தறு’. எங்கிருந்து அதனை பெறுவது என்பதுதான் அவர்களின் முழு யோசனை.

     ‘தறு’ என்பதற்கு அருகில் நட்சத்திரம் என எழுதுகிறார். தலைப்பிற்கான காரணம் வாசகருக்கு இப்போது புரிந்தால் போதும் என நினைத்துவிட்டார் போல. ஆனால் அதுதன கதையின் போக்கையே மாற்றப்போகிறது.

       கை கால்கள் அசைவின்றி மிகவும் சோர்ந்து போய் கிடந்தவனை நான்கு பேர், தூக்கிக்கொண்டு போகிறார்கள். அதற்கு முன்பாக நாயகன் உடலை  பரிசோதிக்கிறார்கள். முடிந்தவரை தான் யார் என்பதை விளக்குகிறார்.

      அப்போது அங்கு வரும் ராஜபக்சவும் சேவகபக்சவும் நாயகனை வந்து பார்க்கிறார்கள். நாயகனின் கதறல் அழுகை எதுவும் யார் காதிலும் விழவில்லை. ஏதோ பேசி முடிவு எடுக்கிறார்கள். மீண்டும் நாயகன் கிடந்த இடத்திலேயே போட்டுவிடுகிறார்கள்.

       இயற்கை காப்பாற்றிவிட்ட நாயகனின் உயிர் இப்போது இரண்டு பக்சவினது ‘தறி’க்களுக்காக பலி வாங்கப்படப்போகிறது. வயிற்றி ஒரு குண்டும் மார்பின் இரு குண்டுகளும் நாயகன் உடலை துளைக்கிறது.

       இது நாளை எப்படியெல்லாம் செய்திகளாக்கப்படும், தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என்ன பதில் , தன்னை கொன்றவர்களுக்கும் அவர்களுக்கு காத்திருக்கும் குடும்பம் இருக்குமா என்கிற கேள்விகளோடு உயிர் கொஞ்சம் கொஞ்சமாக் பிரிகிறது. இப்பகுதியை இன்னும் கூட விரிவாக சொல்லலாம். அப்படியாகத்தான் எழுதியிருக்கிறார். அதனை வாசகர்களே படித்து உணர்வதுதான் நாயகனின் பிரிந்துக் கொண்டிருக்கும் உயிருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக நான் உணர்கிறேன்.

#‘இராணுவ முகாமில் மாட்டிக்கொள்ளும் மனிதன்’ என்ற ஒற்றை வரியிலும் இக்கதையை சொல்லிவிடலாம், ஆனால் அதற்கு வழிவிடாமல் மிகவும் கவனமாக ஆசிரியர் கதையை நகர்த்திகொண்டு சென்றிருக்கிறார்.

-          - தயாஜி


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...