Tuesday, June 2, 2020

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை - “மர நடுகையும், காடு மீளுருவாக்கமும்”

நேற்று, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில், அதன் தரநிர்ணய முகாமைத்துவப் பிரிவும் (Quality Control Unit), மரநடுகை, காடு மீளுருவாக்க சபையும் (Tree planting and Reforestation Committee) இணைந்து “மர நடுகையும், காடு மீளுருவாக்கமும்”என்னும் தொனிப் பொருளில் ஒரு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. நான் வளவாளராக பங்குபற்றியிருந்தேன். வைத்திய நிபுணர்கள், சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் மிகவும் ஆர்வத்துடனும், உயிர்ப்பாகவும் பங்குபற்றியிருந்தார்கள். வரவேற்புரையையும், அறிமுகவுரையையும் மரநடுகை, காடுகள் மீளுருவாக்க சபையைச் சேர்ந்த சிரேஸ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ரீ.எம். றியாஸ் அவர்களும், நன்றியுரையையும், முடிவுரையையும் தரநிர்ணய முகாமைத்துவ அலகின் பொறுப்பதிகாரி டொக்டர். எம்.ஜே. நௌபல் அவர்களும் ஆற்றியிருந்தார்கள். பின்னர் அந்த வைத்தியசாலையின் பசுமை, திண்ம கழிவு முகாமைத்துவ திட்டங்கள் பார்வையிடலும், கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில் பொது அறுவைச் சிகிச்சை நிபுணர் டொக்டர் பீ.கே. ரவீந்திரன், திண்மக் கழிவு முகாமைத்துவ சபையைச் சேர்ந்த டொக்டர். எம்.எம். றெமென்ஸ், சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள் டொக்டர் ரீ.எம். றியாஸ், டொக்டர் சியாத் இஸ்மாயில் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர். முழு இலங்கைக்குமே முன்னுதாரணமான ஒரு அரச நிறுவனத்தை அங்கு கண்டு கொள்ள முடிந்தது. அதுபற்றி விரிவாக பின்னர் எழுதுகிறேன். இயக்கவியலில் ஒரு விடயம் இருக்கிறது. ஒத்த திணிவுள்ள துணிக்கைகள் ஒரே இடத்தில் வீழ்படிவடையும். ஒன்றாக சேரும். எவ்வளவு வேகமாக பயணம் செய்தாலும், காலம் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்த மீடிறன் கொண்ட மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொண்டும், சேர்த்துக்கொண்டும் சென்றுகொண்டே இருக்கின்றது.













No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...