Amritha Ayem is with Thamayanthi Simon and 9 others.
December 11, 2019 ·
இன்று முன்னாள் பெருவெளி செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான ஏ.ஆர். பர்சான் அவர்களின் அழைப்பின் பெயரில் சிறுவர்களுடன் ”விதைப்பந்துகள் வீசுதல், மற்றும் சுற்றுச் சூழல் சம்பந்தமான கலந்துரையாடல்” என்ற நிகழ்வொன்றில் ஒலுவில் அஸ்ரப் நகர்-தீகவாபி வனத் தொகுதியில் கலந்துகொண்டிருந்தேன். கனத்த மழை, சீரற்ற காலநிலை போன்ற காரணங்களால் பல சிறுவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. இருந்தும் பல இடர்களையும் (மழை, போக்குவரத்து பாதை) தாண்டி வந்திருந்த சிறுவர்களைக் கொண்டு நிகழ்ச்சியை திட்டமிட்டபடி நடாத்தி முடித்தோம். காடுகளின் பயன்கள், மரங்களின் பயன்கள், இவைகளை அழித்தலினால் ஏற்படும் தீங்குகள், அங்கிருந்த மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள் போன்றவைகளின் பெயர்கள், பறவைகளின் ஓசைகள், விலங்குகள், யானைகள் போன்றவற்றைப் பற்றி கலந்துரையாடினோம். காடுருவாக்கத்தில் யானைகளின் பங்கு பற்றி உரையாடினோம். வழிநெடுக மரங்களின் கீழ் இருந்த முழைத்த விதைகளை (மருதம் விதைகள்) சேகரித்தோம். யானைகளின் விட்டைகளை கிளறி அதற்குள் பெரும்பாலாக இருந்த பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை வேறு பிரித்து அதன் தீமைகளைப் பேசினோம். அதற்குள் முழைத்திருந்த விதைகள் பற்றி பேசினோம். காடுகள் மீளுருவாக்கம், மரநடுகை, விதைப்பந்துகள் சம்பந்தமாக கலந்துரையாடினோம். பின்னர் நாங்கள் கொண்டு சென்றிருந்த விதைப்பந்துகளை வீசினோம், முழைத்த விதைகளையும், மரக்கன்றுகளையும் நடுகை செய்தோம். சீரற்ற காலநிலைக்குள்ளும், சற்றும் களைக்காமல், விளையாட்டாகவே சதுப்பு நிலங்களை தாண்டி, முள் பற்றைகளை குனிந்து கவனமாக கடந்து, மலைகளில் ஏறி, நீர் ஓடைகளை தாண்டி செவ்வனே தங்கள் பணிகளை செய்து முடித்திருந்தார்கள். சுமார் 500 மீற்றர் துாரத்திற்குள் யானைக்கூட்டமும் நின்று கொண்டிருந்தது பிறகுதான் தெரிந்தது. எனது மகளும் வந்திருந்தார் ஆனால் அவர் வீதியின் ஓரத்திலேயே சக்கர நாற்காலியுடன் நிற்கவேண்டியிருந்தது. மகளுடன் இரண்டு தாய்கள் துணையாக நின்றுகொண்ருந்தார்கள். கொஞ்சம்கூட மனங்கோணாது தங்கள் பிள்ளைகளை இங்கு பற்றச் செய்திருந்த ஏ.ஆர். பர்சான், றம்சீன், பர்சானின் சகோதரர் போன்றவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். காட்டுக்குள் 10-11 வயது சிறுவர்களை அழைத்து அலைந்து திரிவது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அடிக்கடி பலஸ்தீனிலிருந்து என்னை இம்மாதிரியான சிறுவர் சம்பந்தப்பட்ட விடயங்களை செய்யச்சொல்லி துாண்டிக்கொண்டே ஒரு ஒலி அல்லது ஆத்மா இருக்கும். சமயரீதியாக மிக நெருக்கமான பலஸ்தீனிலிருந்து என்னைத் துாண்டிய ஒலி நான் நிராகரிக்க முடியாதபடி மிக முக்கியமாக எனக்கு இருந்தது. சஞ்சயன் செல்வமாணிக்கத்திற்கு இதன் வெற்றியையும், எதிர்கால வெற்றிகளையும் சமர்ப்பணம் செய்கிறேன். ஐயாயிரம் மரங்களை விதைப்பதை விட, ஐந்து சிறுவர்களின் மனங்களை விதைப்பது மிகவும் நிலைபேறானது. ஏ.ஆர். பர்சான் மீண்டுமொருமுறை நன்றி – நீங்கள் ஒரு பெற்றோராக, ஒரு செயற்பாட்டாளாக ஏற்பாட்டாளராக இருந்ததற்கு.
No comments:
Post a Comment