Tuesday, June 2, 2020

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகள் முழு இலங்கைக்கும் முன்மாதிரியான ஒன்றாகும்.


ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
அறிமுகம்:
சனத்தொகைப் பெருக்கம், அதன் காரணமாக ஏற்பட்ட கைத்தொழில் மயமாக்கம், நகரமயமாதல், வணிகமய விவசாயம். தொழில்நுட்பங்கள், விஞ்ஞான கைத்தொழில் வளர்ச்சி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, தொலைத் தொடர்புகள், ஆயுத உற்பத்தி போன்றவைகளின் காரணமாக இந்தப் பூமியானது பாரிய சவால்களை எதிர் நோக்கியுள்ளது. இதன் காரணமாக அமிலமழை, பூகோள வெப்பமாதல், ஓசோன்படை வறிதாக்கல், ஒளி இரசாயன தூமம், உயிர்ச் செறிவடைதல், நற்போசணையாக்கம், கதிர்வீசல் மட்டம் உயர்வு, வாழிடங்கள் அழிதல், பாலைவனமாதல், தாவரங்களின் விளைச்சல் குறைதல், இயற்கைச் சூழல் அழிவடைதல், சுகாதார சீர்கேடுகள், உயிர்ப்பல்வகைமை இழப்பு, அந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் தோன்றுதல் போன்ற பிரச்சினைகள்; தோன்றி இந்த பூமியின் நித்திய நிலவுகைக்கு சவால்விடுபவைகளாக உள்ளன.
இவைகளை நிவர்த்திக்கவும், புவியின் நிலைபேறான தன்மைக்கும் உதவக்கூடிய சில விடயங்களை குறிப்பிடச் சொன்னால், நான் முதல் இரு விடயங்களாக குறிப்பிடுவது, முதலாவது மரம் வளர்த்தல், இரண்டாவது திண்மக்கழிவு முகாமைத்துவம்.
வெளியீட்டின் மூலம் அல்லது ஒரு உற்பத்திமுறையின் அல்லது ஒரு நிகழ்ச்சியின் பின் பெறப்படும் பொருட்களை பொதுவாக கழிவுகள் எனலாம். இவை பொதுவாக பயனற்ற பொருட்களாகவே கருதப்படுகின்றன. உண்மையில் கழிவுகள் பிரயோசனமற்ற பொருட்கள் அல்ல. தற்போதைய நவீன நோக்கில் கழிவுகள் எனப்படுவது, பெறுமதியான பொருட்கள் பொருத்தமற்ற இடங்களில் காணப்படுவது என வரையறுக்கலாம். இரும்பு, செம்பு, பிளாஸ்ரிக், கண்ணாடி, கடதாசி, காட்போட், துணி, விபத்தில் அப்போதுதான் இறந்த ஆடு, மாடு, கோழி போன்றவைகள் காணப்படும் இடத்தைப் பொறுத்து அதன் பெறுமதிகள் வேறுபடும். எனவே திண்மக் கழிவானது நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு, தொழிற்சாலைக்கு தொழிற்சாலை வேறுபடும். ஒரு இடத்தில் கழிவாக கருதப்படுபவை இன்னொரு இடத்தில் பொருளாதார முக்கியத்துவமிக்கவையாக கருதப்படும்.
கழிவுப் பொருட்களை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றுதல், மீள்சுழற்சிக்கு உட்படுத்தல், அல்லது நீக்குதல் மற்றும் கழிவுப் பொருட்களைக் கண்காணித்தல் போன்றவைகளைக் கொண்ட செயற்பாடு என திண்மக்கழிவு முகாமைத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தலாம். இதன் காரணமாக தாவர, விலங்கு, மனித, சுற்றுச்சூழல் நலன்களைப் பேணுவதோடு சூழலின் அழகிய தன்மையையும் பாதுகாக்கலாம் என்று கருதப்படுகின்றது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையின் திண்மக்கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகள்:
2019ம் ஆண்டிற்கான இலங்கையின் தேசிய பசுமைச் சுற்றாடலுக்கான ஜனாதிபதி தங்கப் பதக்கத்தினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை தனதாக்கிக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் நான் கூறிய புவியின் நிலைபேறான தன்மைக்கும் உதவக்கூடிய சில விடயங்களில் முக்கியமான முதல் இரு விடயங்களை சிறப்பாகவும், மிகவும் வினைத்திறனாக செய்ததற்குமாகும். நான் அங்கு சென்று அவதானித்த விடயங்களில் முதலாவதாக அவர்களின் வினைத்திறனான முழு இலங்கைக்கும் முன்மாதிரியான திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
1) வைத்தியசாலையில் உருவாக்கப்படும் கழிவுகள் ஆபத்தில்லாத கழிவுகள், ஆபத்தில்லாத கழிவுகள் என இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. ஆபத்தில்லாத கழிவுகள் - உணவுக் கழிவுகள், தோட்டக் கழிவகள், காகிதக் கழிவுகள், அட்டைக் கழிவுகள், பிளாஸ்ரிக் கழிவுகள், பொலித்தீன் கழிவுகள், கபில நிற கண்ணாடிக் கழிவுகள், நிறமற்ற கண்ணாடிக் கழிவுகள், உலோகக் கழிவுகள், துணிக் கழிவுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அதேவேளை ஆபத்தான கழிவுகள் தொற்றுள்ளது, விசேட கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள் என வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் விசேட கவனம் செலுத்த வேண்டிய கழிவுகள் மருந்துக் கழிவுகள், கூர்மையான கழிவுகள் (அவற்றில் தொற்றற்றது, தொற்றுள்ளது என இருவகையுண்டு) என வகைப்படுத்தப்படுகின்றன.
2) உணவுக் கழிவுகளாக ஒரு நாளைக்கு 100 கிலோ கிராம் உருவாகின்றது. அவற்றில் மீன் பண்ணையிலுள்ள ரம்லர் முறை கூட்டுப் பசளையுருவாகத்திற்கு ஒரு நாளைக்கு 5 கிலோ கிராமும், உயிர்வாயு உற்பத்திக்கு 2 – 3 கிலோ கிராமும், பண்ணைக்கு சுமார் 40 – 50 கிலோ கிராமும் பாவிக்கப்படுகின்றன. எஞ்சிய 50 கிலோ கிராம் உணவுக் கழிவுகள் ஒரு கிலோ கிராம் இரண்டு ரூபா வீதம் வெளியாருக்கு (அவர்களின் விலங்குப் பண்ணைகளுக்கு) விற்கப்படுகின்றன. இந்த உணவுக் கழிவுகளில் பழுதடைந்த கழிவுகள், பழுதடையாத கழிவுகள் என மேலும் இரு வகையுண்டு. பழுதடைந்ததை உயிர் வாயு உற்பத்திக்கும், பழுதடையாததை பண்ணைப் பாவனைகளுக்கும் உபயோகிக்கின்றார்கள்.
3) தோட்டக் கழிவுகளை திறந்த கூடு முறையில் (Open cage composting) கூட்டெரு உற்பத்திக்கு உபயோகிக்கின்றார்கள். இங்கு வருடத்திற்கு இரண்டு முறை முடிவுப் பொருளைப் பெறுகின்றார்கள். ஒரு கிலோ கிராம் எட்டு ரூபா வீதம் இதனை விற்பனை செய்கின்றார்கள். கூட்டெருவை பாரியளவில் வினைத்திறனாக அரித்து எடுப்பதற்கு அவர்களாகவே ஒரு உபகரணத்தை கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு உருவாக்கியிருக்கின்றார்கள்.
4) காகிதக் கழிவுகள் தரத்தை அடிப்படையாகக் கொண்டு 1 கிலோ கிராம் 10 – 20 ரூபாவிற்கு விற்பனை போகின்றன. நனையாத காகிதக் கழிவுகள்தான் பெரிதும் விரும்பப்படுகின்றன.
5) ஆட்டைக் கழிவுகளில் பொலித்தீன் அற்றது 20 – 30 ரூபாவிற்கும், காட்போட் அட்டைகள் 25 – 30 ரூபாவிற்கும் விலை போகின்றன.
6) பிளாஸ்ரிக் கழிவுகளை மேலும் 7 வகைகளாகப் பிரிக்கின்றார்கள். பெற் போத்தல்கள் எனப்படும் பெரிய போத்தல்கள் பச்சை, நீலம், நிறம் போன்ற வகைகளாக தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒரு கிலோ கிராம் 40 – 60 ரூபா விலை போகின்றன. சேலைன் போத்தல்கள் 70 – 80 ரூபாவுக்கு விற்கப்படுகின்றன. மற்றைய போத்தல்கள் பயிர்கள் நடவும், வைத்தியசாலையை அழகுபடுத்தவும், நோயாளிகளின் விடுதித் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளை, பரசிற்றமோல் போன்ற மருந்து மாத்திரைகள் வரும் பிளாஸ்ரிக் பாத்திரங்கள், மீள் பாவனைக்காக ஒன்று 70 ரூபாவிற்கு விற்கப்படுகின்றன.
7) பொலித்தீன் கழிவுகள், வெளியார் பொலித்தீன் உள்கொண்டு வருவதைத் தடைசெய்ததன் மூலம் பாரியளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றைய பொலித்தீன்; கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. பாரியளவு சேமிக்கப்பட்டவுடன் விற்பனை செய்யப்படப் போகின்றன.
8) கபில நிற, நிறமற்ற கண்ணாடிக் கழிவுகள் கலப்பு ஒரூ கிலோகிராம் 7.50 ரூபாவிற்கும், தனியானது 20 ரூபாவிற்கும் விற்கப்படுகின்றன.
9) உலோகக் கழிவுகள் பழைய இரும்புகள் வாங்கும் கடைகளுக்கு கொடுக்கப்படுகின்றன.
10) துணிக் கழிவுகளில் தொற்றுள்ளது எரிக்கப்படுகின்றன. சத்திர சிகிச்சை கூடங்களில் பயன்படுத்தப்படும் தொப்பிகள், அங்கிககள் தொற்று நீக்கப்பட்டு, தலையணைகளாக மாற்றப்பட்டு வைத்தியசாலைப் பாவனைகளுக்கு உபயோகிக்கப்படுகின்றன.
11) ஆபத்தான கழிவுகளில் தொற்றுள்ளது எரிக்கப்படுகின்றன.
12) விசேட கவனம் செலுத்த வேண்டிய கழிவுகளில் தொற்றுள்ள மருந்துகள் திருப்பி அனுப்பப்படுகின்றன. கூர்மையான கழிவுகளில் தொற்றுள்ளது எரிக்கப்படுகின்றன. தொற்றற்றது (பின்கள், ஊக்குகள், கவ்விகள் போன்றவை) விற்பனைக்கான உரிய அளவு வரும்வரை சேமிக்கப்படுகின்றன.
13) இலத்திரனியல் கழிவுகள், விற்பனைக்காக கவனமாக சேமிக்கப்டுகின்றன.
14) கழிவு நீர் பக்டீரியா வளர்ப்பூடகத்தினூடாக பரிகரிக்கப்பட்டு, ஒர நாளைக்கு இரு தடவை காற்றூட்டப்படுகின்றது (Aeration). பின்னர் சூரிய வெளிச்சம் படச் செய்யப்படுகின்றது. அதன் பின்னர் அந்ந நீர் படிவடையச் செய்யும் பகுதியில் அனுப்பப்பட்டு, புவியீர்ப்பு விசையின் காரணமாக மாசடையச் செய்யும் பல பொருட்கள் அந்தப் பகுதியில் வீழ்படிவாகின்றன. பின்னர் இன்னொரு பகுதிக்கு செலுத்தப்பட்டு அந்த நீரில் உள்ள நோயாக்கிகளை அழிப்பதற்காக குளோரினேற்றம் (Chlorination) செய்யப்படுகின்றது. இறுதியாக இந்தப் பரிகரிக்கப்பட்ட கழிவு நீர் மரங்களிற்கும், கூட்டெருவாக்கத்துக்குட்பட்ட கூட்டெருவை நனைப்பதற்கும் பயன்படுகின்றன.
15) நீரியல் மீன் வளர்ப்பிற்காக (Aquaculture) ஆரம்பத்தில் 2000 மீன் குஞ்சுகளை விட்டிருக்கின்றார்கள். அந்த மீன் பண்ணையின் குளங்களுக்கு மேல் 4 ரம்லர் (Tumbler composting) முறையிலான கூட்டெருவாக்கிகளை வைத்திருக்கின்றார்கள். அவைகளிலிருந்து சிறு புழுக்கள் உருவாகி மீன தொட்டிகளுக்குள் விழுகின்றன. அவற்றை மீன்கள் உண்ணுகின்றன. அதே நேரம் மீன்தொட்டியை சுற்றி வேலி அமைத்து சுமார் 100 கோழிகளும் வளர்க்கிறார்கள். கோழிகளும் அந்த புழுக்களை உண்ணுகின்றன. அந்தப் புழுக்கள் புரதச் சத்து மிகுதியானது. கோழிகள் ஒரு நாளைக்கு சுமார் 15 நாட்டு முட்டைகளைத் தருகின்றன. அவை ஒன்று 25 ரூபாவிற்கு விலை போகின்றன. மீன்களையும் காலத்திற்கு காலம் அறுவடை செய்கின்றார்கள். இது வினைத்திறனான ஒருங்கிணைக்கப்பட்ட மீன் வளர்ப்பு முறைமைக்கு (Integrated fish farming) ஒரு உதாரணமாகும்.
16) இவர்களின் இந்த வினைத்திறனான திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் கவரப்பட்டதன் காரணமாக, சுகாதார அமைச்சு இவர்களுக்கு ஆபத்தான, தொற்றுக் கழிவுகளை அழிப்பதற்கு மெற்றாமைசர், இன்சினரேற்றர் போன்ற பெறுமதியான உபகரணங்களைக் கொடுத்திருந்தது. அக்கரைப்பற்ற ஆதார வைத்தியசாலையினர் தங்களது கழிவுகளையும் இதனைக் கொண்டு அழிப்பதோடல்லாமல், இப் பிரதேசங்களிலுள்ள தனியார் வைத்தியசாலைகளின் கழிவுகளையும் (ஒரு கிலோ கிராம் 150 ரூபா வீதம்) அழிக்கின்ற சேவைகளைச் செய்து வருகின்றது. இதன் காரணமாக இந்தச் செயன்முறையை எல்லா வைத்தியசாலைகளும் கடைப்பிடிக்கும்படி சுகாதார அமைச்சு மற்ற வைத்தியசாலைகளுக்கு ஆலோசனையும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
17) ஓவ்வொரு கழிவும் கவனமாக அதற்குரிய அறைகளில் சேமிக்கப்பட்டு, அதற்குரிய காலம் வந்ததும் விற்பனைக்காக உரிய இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. சேமிப்பதில் அவர்களாகவே சில முறைகளை பரீட்சித்துப்பார்த்து மிகவும் வினைத்திறனாக செய்து கொண்டிருக்கின்றார்கள்.
18) திண்மக் கழிவு முகாமைத்துவத்தில் அவர்கள் உருவாக்கியிருக்கின்ற முறைமையியலும், முகாமைத்துவமும் நிலைபேறான தன்மையைக் கொண்டு காணப்படுவதாகத் தெரிகின்றது.
19) இந்த வெற்றிக்குப் பின்னால் அக்கரைப்பற்ற ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாகிர், தரநிர்ணய முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.ஜே. நௌபல், பொது சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் பீ.கே. ரவீந்திரன் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் சபைகளின் அங்கத்தவர்களான வைத்திய நிபுணர்கள், சிரேஸ்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், தாதிய, வைத்திய தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், மற்றும் அவற்றை பராமரிக்கும், காக்கும் அரச, தனியார் ஊழியர்கள் போன்றவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பான சேவையுடன், திண்மக் கழிவு முகாமைத்துவ சபையின் பொறுப்பதிகாரி டொக்டர் றெமென்ஸ் மைக்கல் அவர்களின் இரத்தமும், சதையுமான, கால, நேரம் கடந்த தியாகமும்தான் இந்த உயரத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றிருக்கின்றது என்றால் அது மிகையல்ல. இவை எல்லாம் சேர்ந்துதான் இந்தக் கட்டுரையின் தலைப்பினை மீளவலியுறுத்தியும் நிற்கின்றன.













No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...