Saturday, June 19, 2021

கடல்களில் உருவாக்கப்படும் ”அமிழ்த்தப்படு வாகனச் சூழற்றொகுதி” சுற்றுச்சூழலுக்கு உகந்ததா?

-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை)

உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோடுகின்ற வாகனங்கள், ரயில் பெட்டிகள், கப்பல்கள், யுத்த தாங்கிகள், கடற் பகுதிக்கு கப்பல்களில் எடுத்துச் செல்லப்பட்டு, செயற்கையாக முருகைக் கற்பாறைகள் வளர்வதற்காகவும், மீன்களின் குடித்தொகையை அதிகரிப்பதற்காகவும் அமிழ்த்தப்படுகின்றன.

நியுயோர்க்கில் பாவித்து ஒதுக்கப்பட்ட2500 க்கும் மேற்பட்ட நிலக்கீழ் ரயில்பெட்டிகள், அத்திலாந்திக் சமுத்திரப் பகுதிகளில் அமிழ்த்தப்பட்டிருக்கின்றன. இது உலகம் முழுவதும் நெடுங்காலமாக செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். இதன் மூலம் மீன்கள், சிலந்திரேற்றாக்கள், முருகைக் கற்பாறைகள், அதனை நம்பிய உயிரினங்கள், மற்றும் கடற்தாவரங்கள் வளர்ந்து, நிலைத்துநிற்கக்கூடிய ஒரு சூழற்றொகுதியை உருவாக்குகின்றன.
நடத்தைச் சூழலியலின் (Behavioural Ecology), உணவு சூழலியலில் (Ecology of feeding) இந்த அமிழ்க்கப்பட்ட வாகனங்கள், முக்கியமான பங்கை வகிக்கின்றன. எப்படி ஒரு இரைகொல்லி விலங்கானது, இரைகளைக் கொல்வதற்கான திறன்களை அவைகளின் கூர்ப்புப் பொறிமுறைகளில் விருத்தி செய்துகொண்டிருக்கின்றனவோ அதே போன்று இரைகளும், இரைகொல்லிகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான ,அவைகளை அடையாளம் காண்பதில், பிடித்துக்கொள்வதில் கடினங்களை ஏற்படுத்தல் போன்ற திறன்களை சமாந்தரமாக விருத்திசெய்துகொண்டிருக்கின்றன. இதற்கு இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதி உதவுகின்றன. அவைகள் ஒழிந்து கொள்வதற்கும், தப்பித்துக்கொள்வதற்கும் பாரிய பங்காற்றுகின்றன. அதே வேளை, ஆழங்களைப் பொறுத்து சிறிய புற்கள், அல்காக்கள் பிளாந்தன்கள் சேரும்போது, தாவரவுண்ணி, ஊனுண்ணி, அனைத்துமுண்ணி போன்ற விலங்குகளின் உயிரியல் பன்மைத்துவம் அதிகரிக்கும்போது உணவுகளின் அளவும் அதிகரிக்கின்றன. ஒழிந்துகொண்டு மற்ற உயிரினங்களையும் வேட்டையாடுகின்றன. வேகமாக நீந்தி உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத, நீரோட்டத்தினால் இலகுவில் அடித்துச் செல்லப்படக்கூடிய உயிரினங்களுக்கும் இந்தச் சூழற்றொகுதி ஒரு வரப்பிரசாதமாகும். இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியினால் வளர்ச்சி வீதம் அதிகரித்து மீன்களின் குடித்தொகையும், மற்ற விலங்குகளின் குடித்தொகையும் அதிகரிக்கும்.
அதேபோன்று நடத்தைச் சூழலியலின், இனப்பெருப்பெருக்கச் சூழலியலிலும் (Ecology of reproduction), இடவாதிக்க சூழலியலிலும் (Ecology of space) முக்கிய பங்காற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. விலங்குகள் தங்களுக்கான ஆதிக்க இடங்களையும் (territories), வீட்டு வீச்சு இடங்களையும் (home range), அதிபாவனை இடங்களையும் (core area) உருவாக்கிக் கொள்ளுகின்றன. வளங்களுக்கான பங்கீடுகளில் (partitioning resources) ஆரோக்கியத்தன்மை ஏற்பட்டு போட்டியும் குறைக்கப்படுகின்றன. மேலும் பாதுகாப்பளிக்கக்கூடிய, உற்பத்திகூடிய மறைவிடங்களை உருவாக்குவதன் மூலம், இந்த அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகுதியானது, புணரும், இனப்பெருக்க, உணவு, பல்நோக்கு ஆதிக்க பரப்புக்களை ( mating, breeding, feeding, and multi-purpose territories) உருவாக்குகின்றன. அத்துடன் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படாது, மீன்களின் முட்டைகளை ஒட்டிவைத்து, முட்டைகள் குஞ்சுகளாய் விருத்தியாவதற்கும் உதவுகின்றன. அத்துடன் இந்த குஞ்சுகளுக்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இந்தச் சூழற்றொகுதியின் மறைவிடம் காரணமாக பெற்றார் கவனிப்புக்கு (parental care) சக்திச் செலவு குறைவாக செய்யப்படுகின்றன. மேலும் தங்களுடைய இணைகைளைத் தெரிவு (mate selection) செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. இதனால் விலங்குகளின் தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்புகளும், இனப்பெருக்க வெற்றியும் (Reproductive success), வளர்ச்சி வேகமும் (growth rate) அதிகரிக்கின்றன.
மன்னார் கடலில் இருபது பாவித்து, கழிக்கப்பட்ட பஸ்களை இலங்கை அரசாங்கம் கடலில் அமிழ்த்திய நடவடிக்கைக்கு எதிராக இந்திய, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவ சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நிறைய மீன்வளங்களை அமிழ்த்தப்பட்ட வாகனச் சூழற்றொகு கவர்ந்துவிடும். இதனால் இந்தியாவில் மீன்வளம் குறையும். இது சிறுபிள்ளைத்தனமான காரணமாக தெரிந்தாலும், அதற்குப் பின்னாலுள்ள காரணம் என்பது, இந்த பஸ்கள் அவர்களது கடல்அடித்தள இழுவை வலைகளை (bottom set trawler nets) சேதமாக்குவதுடன், இலங்கை மீன்வளங்களை கவர்ந்துகொள்வதிலும், அழிப்பதிலும் அந்தப் பிரதேசத்தில் அவர்களுக்கு பாரிய தடைகளாயிருக்கும் என்பது எல்லோராலும் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும்.


பொதுவாக, கழிக்கப்பட்ட பொருட்களை கடலில் வீசுவது நல்லதல்ல. குறிப்பாக உலோகப் பொருட்கள், இவை கடலில் கரையக்கூடியன. பாரமான உலோகங்கள், அவற்றின் நியம அளவைிவட கடற்சூழற்றொகுதியில் அதிகரிக்கும்போது, உணவுச் சங்கிலிகளின் மூலம், மனிதர்களையும், மற்றைய விலங்குகளையும் அடைந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். ஆனால் நன்மைகைளையும், தீமைகளையும் ஒப்பிடும்போது, இங்கே நன்மைகளின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், கடலில் வாகனங்கள் அமிழ்த்தப்படுவதற்கு முன், அந்த வாகனங்களிலுள்ள, பொலித்தீன், பிளாஸ்ரிக்கிலான சக்கரங்கள் (டயர்கள்), இருக்கைகள், மேலுறைகள், பட்டிகள் போன்றவை கவனமாக அகற்றப்பட வேண்டும். அத்துடன் தீங்கு செய்யக்கூடிய உலோகங்களும் அகற்றப்பட்டு, துப்பரவு செய்யப்பட்டு, கடல் சார் உயிரியல் காரணிகள் கவனத்திற்கொள்ளப்பட்ட பின்னர், உலோகக் கூடாகவே கடலில் போடப்படவேண்டும்.

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...