ஏ.எம். றியாஸ் அகமட்,
சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்.
பொலித்தீன் பாவனையை அரசாங்கம் தடைசெய்யத் தீர்மானம் எடுத்தது சிறந்த ஒரு முடிவாக இருந்தாலும் மக்களுக்கு பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனைகளால் ஏற்படும் தீங்குகள்பற்றியும், அவற்றுக்கான மாற்றுக்கள் பற்றியும் இன்னும் போதிய தௌவின்மையும், விழிப்பூட்டலின்மையும் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவாலாகவே காணப்படும். மக்களைக் கவராத திட்டங்கள் பொதுவாக தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. எனினும் மக்களின் நன்மை கருதியே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது, மக்கள் அதற்கு ஒத்துழைத்தலும், ஆதரவு வழங்கலும் அவர்களின் தலையாய கடமையாகும்.


ஆனாலும் மீள்பாவனையால் சில நன்மைகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மீள் பாவனையின் காரணமாக பொலித்தீன் உற்பத்தி குறையும். அதன் காரணமாக பெற்றோலியத்தில் தங்கி நிற்பதுவும், பெற்றோலியப் பாவனையும் குறையும். பொலித்தீன், பிளாஸ்ரிக் காரணமாக வருடாந்தம் இறக்கும் மில்லியன் கணக்கான கடல் வாழ் உயிரினங்களையும் பறவைகளையும் பாதுகாக்கலாம். மீள்பாவனையானது கடதாசி பாவனையை குறைக்கின்றது. அமெரிக்காவிற்கு வருடாந்தம் ஒரு பில்லியனிற்கு அதிகமான கடதாசி பைகள் தேவைப்படுகின்றன. இதற்காக 14 மில்லியன் மரங்கள் வெட்டப்படுகின்றன. அத்துடன் கடதாசி உற்பத்தி;க்கு அதிக நீரும் தேவை. மீள்பாவனையானது நீரையும் பாதுகாக்கின்றது.

பொலித்தீன், பிளாஸ்ரிக்கினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக உயிரியல்ரீதியாக உக்கக்கூடிய பிளாஸ்ரிக்வகைகள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. 2008, மே மாதம் கனடாவைச் சேர்ந்த 16 வயதான டேனியல் பர்ட் என்பவர், சூடோமோனஸ் புளோறொசென்ஸ் என்ற பக்டீரியாiவை ஸ்பிக்கோமொனஸ் என்ற பக்டீரியாவின் உதவியுடன் கண்டுபிடித்து, மூன்று மாதத்திற்குள் 40 சதவீதமான பிளாஸ்ரிக்கை உக்கச் செய்தார். இதே போன்று பிறேவிவில்லஸ் பொஸ்ற்றொலொன்சிஸ் (707 வகை) பக்டீரியாவும், அசற்றோபக்டர் 351 பக்டீரியாவும் போன்று உக்கச் செய்கின்றன. 2014ல் சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர், இந்திய மீல்மொத் குடம்பிப் புழுவைப் பயன்படுத்தி, பொலித்தீனை சமிபாடடையச் செய்தார். அதற்குக் காரணம் அதன் சமிபாட்டுத் தொகுதியிலுள்ள பக்டீரியாவாகும். 2017ம் ஆண்டு, கலேரியா மெலெனெல்லாவின் அணங்குப் புழு, பொலித்தீன், பிளாஸ்ரிக் குப்பைகளை உண்ணுகின்றது என்று கண்டுபிடித்தார். 2010ம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த அகினொரி இற்றோ எ;னபவர், பொலித்தீனிலிருந்து எண்ணெய் உற்பத்தி செய்யும் இயந்திரமொன்றைக் கண்டுபிடித்தார்.
பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை எரிப்பது சிறந்த கழிவகற்றல் முறையல்ல. இவற்றை எரிக்கும்போது உருவாகும் நூற்றுக்கணக்கான நச்சுப் பொருட்கள் எவ்வாறு தனி மனித வாழ்விற்கும், உயிரிகளிற்கும், அதன் சூழலிற்கும், மற்றும் முழு உலகிற்கும் தீங்கானவைகளாக இருந்தன என்பதுபற்றி சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
எனவே பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனைகளை நாளாந்த வாழ்க்கையில் குறைப்பதும், அதற்கு மாற்று வழிகளைப் பாவிப்பதும், முற்றாக பாவிக்காமல் விடுவதும் மிகவும் சவாலான ஒன்றாகும். இவற்றின் பாவனைகளை நாளாந்த வீட்டு, அலுவலக, சமூக கலாச்சார நடவடிக்கைகளில் எவ்வாறு இழிவளவாக்கி நடைமுறைப்படுத்தலாம் என்று பார்ப்போம்,
வீட்டு நடவடிக்கைகள்:
சுற்றுச்சூழலுக்குப பாதிப்பை ஏற்படுத்தாத துணியிலான, கடதாசிகளிலான பைகளைப்பாவிப்பதில் அக்கறை செலுத்தல்;, வீட்டில் நடக்கின்ற பல்வேறு வகையான நிகழ்வுகளின்போதும் பிளாஸ்ரிக் போத்தலில் அடைத்த குளிர்பானங்களையும், அதற்குரிய உறிஞ்சு குழாய்களையும் பாவிப்பதைத் தவிர்த்தல், அதே போன்று தூக்கி எறியக்கூடிய பிளாஸ்ரிக் கப், கோப்பைகள் பாவிப்பதையும் தவிர்த்தல், வீட்டில் உருவாகும் பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகளை மீள்சுழற்சிக்கு கொடுப்பதில் முனைப்புடனும், சோம்பலின்றியும் இருத்தல்.
அலுவலக நடவடிக்கைகள்:
உணவு எடுத்துச் செல்வதற்கு லன்ச் சீற்களை தவிர்த்து, சாப்பாட்டு பெட்டிகளை பயன்படுத்தல். அலுவலகங்களுக்கும், பொது இடங்களுக்கும் வருகின்றவர்கள் பொலித்தீன், பாவனைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறு அறிவுறுத்தலும் வேண்டுதலும், அரச, தனியார் நிறுவனங்களில் நிகழும் வைபவங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக் பாவனையை தவிர்தலும், தடுத்தலும், அலுவலக சிற்றுண்டிச் சாலைகளில் பிளாஸ்ரிக் கோப்பை, பிளாஸ்ரிக் தட்டுக்களில் உணவு வழங்குவதை தவிர்த்தல், தென்னை நார்களிலான தயாரிப்பிலான கால்துடைப்பான்கள், துடைப்பங்கள் போன்றவற்றை அலுவலகங்களில் பயன்படுத்தல். பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் இவ்வகை கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகளை மக்களுக்கு இலகுவில் தெரியும்வண்ணம் அமைத்தல் மற்றும் சேகரிக்கப்படும் இக் கழிவுகளை முறையாக அகற்றல்.
சமூக கலாச்சார நடவடிக்கைகள்:

இவ்வகையான
ஒழுக்கங்களை நாளாந்த வாழ்க்கையில் நாங்களும் கடைப்பிடித்து மற்றவர்களையும் அவ்வாறு
ஒழுகச் செய்தலின் மூலமே பொலித்தீன், பிளாஸ்ரிக் காரணமாக உருவாகும் பிரச்சினைகளை இழிவளவாக்கலாம்.
இதுதான் பொலித்தீன் வரமாக அல்லது சாபமாக மாறுவதற்கான அடிப்படையுமாகும். அப்போதுதுதான்
திட்டங்கள் வெற்றியும் பெறும். அத்துடன் நீண்டகால தாக்கங்களிலிருந்து எம் எதிர்கால
சந்ததியை காப்பாற்றி, அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்பிக் கொடுக்கவும்
முடியும்.
No comments:
Post a Comment