Wednesday, August 24, 2016

”தறு”


-அம்ரிதா ஏயெம்-
கடல் வெள்ளைக் கரை போட்ட நீலச்சாரி உடுத்த என் தாய். கடல் ஆத்திரக்காரனுக்கும் அவசரக்காரனுக்கும்;, பெருமைபிடித்தவனுக்கும் ஒன்றும் கொடுத்ததில்லை. கொடுத்ததெல்லாம் என்னவோ குறைவுதான். கடல் பொறுமைக்காரனுக்குத்தான் கிள்ளிக்கேட்க அள்ளிக்கொடுத்தது. கடல் என்பது நீலம். நீலம் பொறுமையின் சின்னம். ஏன் எனக்கும் கடல் அள்ளித்தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உள்ளே போனால் பிணம், வெளியே வந்தால் பணம்;. இதுதான் எனக்கு கடல் சொன்ன மந்திரம். இந்தக் கடலில்தான் என்னையும், இன்னொருவனையும் ~ஓசன்பேட்| சுமந்து கொண்டு ஆடி ஆடி சென்று கொண்டிருக்கின்றது.

இன்னும் ஐநாறு மீற்றர் போனதும், படகு நிறுத்தப்படும்.. எனது வயிற்றில் 16 இறாத்தல் இரும்பும், முதுகில் இரு சிலிண்டர்களும் கட்டப்படும். முகத்திற்கு மூடியும், வாய்க்கு குழாயும், காலுக்கு துடுப்பும், கத்தியும், பிஸ்டலும், இடுப்பிலுள்ள சிறு வளையத்திற்கூடாக நைலோன் கயிறும் மாட்டப்பட்டு முதுகுப்பக்கமாக நீருக்குள் விழுந்து, மூச்சை அடக்கி, கடலடிக்குப் போய், கூடக்கொண்டு போகும் உரப்பைக்குள் கடல் அட்டையை நிரப்பிக் கட்டினால் பை தானாக மேலே வரும். அதை படகிலிருப்பவன் சேகரித்து படகுக்குள் போடுவான். ஏதாவது ஆபத்து என்றால் இடுப்பு வளையத்திலுள்ள கயிற்றை நான்கு, ஐந்து தடவை விரைவாக அசைக்க படகிலிருப்பவன் ஆபத்தென்று உணர்ந்து கயி;ற்றை வேகமாக மேலே தூக்கி என்னை ஆபத்திலிருந்து மீட்பான். கறுப்பு அட்டையை படகுச் சொந்தக்கார முதலாளிக்கு ஒரு விலைக்கு விற்க, அவன் அதனுடன் இருபது முப்பது ரூபாய் வைத்து வேறு வியாபாரிகளுக்கு விற்பான். வெள்ளை அட்டை என்றால் எங்களுக்கு சந்தோசம். நூற்றுக்கணக்கில் விலை போகும். எப்படியோ கூட்டிக் கழித்துப்பார்த்தாலும் மாதம் பதினைந்தாயிரத்திற்கு மேல் மி;ஞ்சும். உள்ளே போனால் பிணம்;;. வெளியே வந்தால் பணம் என்பது உண்மைதான். கடல் என்னும் வள்ளல்கார அம்மா பொறுமைக்காரர்களுக்கும் வீரர்களுக்கும்தான் அள்ளிக்கொடுப்பது வழக்கம். கடல் அன்னை வீரத்தின் உறைவிடம். எவ்வளவோ வீரக் கதைகளை தன்நெஞ்சிலே புதைத்து வைத்திருக்கிறாள்.

இப்போது ~ஓசன்பேட்| குறித்த இடத்தை அடைந்துவிட்டது. எனது பத்தாவது வயதில் பராக்கிரம சமுத்திரத்தின் வலது கரையின் நீர் பெருக்கெடுக்கும் அணைக்கட்டில் உயரத்தில் நான் புதினம் பார்த்துக்கொண்டிருந்தபோது, பக்கத்து கடையில் வேலை செய்யும் காமினி என்னை நீருக்குள் தள்ளி விட்டான். நீருக்குள் போன நான் மேலுக்கு வராதபோதுதான் எனக்கு நீச்சல் தெரியாது என்பதை தெரிந்து, பாய்ந்து என்னை மீட்டு, அன்றிலிருந்து நீச்சல் ஆசானான். பின்பக்கம், முன்பக்கம் நீந்துவது, சுழியோடுவது, நீருக்குள் எறிகிற கற்களை பொறுக்கி வருவது என்று நிறையவற்றை கற்றுத் தந்தான். பதினெட்டு வயதில் ஊர் திரும்பியபோது என் அட்டை பிடிக்கும் நண்பனொருவன் இடுப்பில் இரும்பைக் கட்டி கடலுக்குள் கொண்டு போனான். எனது கடற் தாயின் அழகைக் கண்டு வியந்து போனேன். அவன் எனக்கு நிறைய நுட்பங்களை கற்றுத் தந்தான். முதல் நாளே நான் எனது முகத்தையும், கண்ணாடியையும் தாக்க வந்த சுறாவை பிஸ்டலால் சுட்டு;க் கொன்றேன். தாயின் சேலையில் சிவப்புக் கறை.

அப்போதுதான் இந்த தொழில் எவ்வளவு அபாயம் என்பது புரிந்தது. அமிழ்வதும் ,மேலே வருவதும் உடனே செய்ய முடியாது. ஒவ்வொரு குறிப்பிட்ட ஆழத்திலும் குறிப்பிட்ட நேரத்தைக் கடத்திவிட்டுத்தான் மேலேயோ அல்லது கீPழேயோ வரலாம். இ;ப்படித்தான் புறாமலைக்கு அருகில் அட்டை பிடித்துக்கொண்டிருந்த சகோதரர்களுக்கு பென்ட் (நைட்ரஜன் நார்க்கோசிஸ்) வந்து கை கால் மடக்க முடியாமற்போய் நீருக்குள்ளே இறந்து போனார்கள். அவர்களின் உடலை நீரோட்டம் அடித்துச்சென்றுவிட்டது. ஒரு முறை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இருவர் கூட அதே பகுதியில் சிலிண்டர் அடைபட்டு செத்துப் போனார்கள். அவர்களின் உடல்களுக்கும் இதுதான் நடந்தது.

ஓசன்பேட்டிலிருந்து நங்கூரத்தை எறிந்துவிட்டு கடலைப் பார்க்கிறேன். கடல் அமைதியாகவிருந்தது. இந்தப் பெண்தானா சீறி எழுந்து உயிர்;களை துவம்சம் செய்கிறாள். நம்பமுடியவில்லை. அமைதியில்தான் ஆழமும் இருக்கின்றது. அபாயமும் இருக்கின்றது. படகுகூட ஒரு பக்கம் இழுபடுவது மாதிரி எனக்கு தோன்றுகின்றது. இது நீரோட்டத்தினாலோ அல்லது பிரமையினாலோ என்னவோ. ஆனால் கடல் அன்னைக்கு வீரனைத்தான் பிடிக்கும். ஆனால் என் மனைவிக்கோ இந்த தொழில் பிடிக்கவில்லை. என் எட்டு வயது மகளுக்கும், என் ஆறு மாத ஆண் பிள்ளைக்கும் நினைவு தெரிந்தால் பிடித்திருக்காமல்தான் இருந்திருக்கும்.

காலில் துடுப்பை மாட்டி, ஒக்சிசன் சிலிண்டர் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் கட்டி முகத்திற்கும், மூக்கிற்கும் கண்ணாடி மாட்டிவிட்டேன். இன்னும் சுவாசக் குழாயை வாய்க்குள் திணிப்பதும், முதுகுப் பக்கமாக கடலில் விழுந்து மூழ்குவதும்தான் பாக்கியிருக்கின்றது. இரவு நடந்ததை நினைத்து கொள்கின்றேன். இந்த கடலட்டைகளுக்காக கடலில் மூழ்குவதை விட்டுவிடு;வது சம்பந்தமான எனது மனைவியின் வழமையான நச்சரிப்பு ஞாபகம் வருகின்றது. பிள்ளைகளை வளர்க்க, பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக்கொடுக்க அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக்கொடுக்க பணம் தேவை. அது இந்த தொழிலில்தான் கிடைக்கின்றது. இதைவிட்டு உடனே செய்யக்கூடியவகையில் வேறு தொழிலும் தெரியாது. பிள்ளைகள் வளர்ந்த பின் விட்டு விடுவேன் என்றுதான் சொல்லுவது வழக்கம். அவளும் வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொள்வாள். கடந்த இரவும் இதுதான் நடந்தது. எனது எட்டு வயது மகள் கட்டிலிலே படுத்துக் கிடந்தாள். எனது ஆறு மாத மகனும் அவளுக்கருகில் தூங்கிக்கொண்டிருந்தான். அவனின் கழுத்தைப் பார்க்கிறேன.; அவனின் கழுத்து வெறுமையாக இருந்தது. புதிய ஒக்சிசன் சிலிண்டர் வாங்க அதை கொடுக்க வேண்டும். ஓசன்பேட் அலையில் ஆட சிந்தனை கலைய வாய்க்குள் குழாயைத் திணித்து கடலில் மூழ்கிவிடுகின்றேன்.

கீழே போகின்றேன். போகப் போக திடிரென கணப்பொழுதில் நீரின் வெப்பநிலை மாறுகின்றது. ஏதோ விபரீதம் நிகழப்போகின்றது என்பதை உணருவதற்கிடையில் இன்னும் கீழே எனது சக்திக்கு மீறி சென்றுவிட்டேன். நீரோட்டத்தில் மாட்டிக்கொண்டதை உணர்கின்றேன். மேலே வர முயற்சி செய்கிறேன் முடியவில்லை. வழமையாக நீரோட்டத்தில் மாட்டிக் கொண்டால் நீரோட்டத்துடன் சென்று ஒரு நிலையில் நீரோட்டத்தின் வேகம் பூரணமாக குறைந்தவுடன் அதிலிருந்து நாம் விடுபட்டுக்கொள்ளலாம். கையை காலை ஆட்டாமல் நானும் நீரோட்டத்துடன் செல்கின்றேன். நீரோட்டம் என்னை அடித்துக்கொண்டே செல்கி;ன்றது. மலைகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் நீரோட்டம் மலையில் மோதி நீரோட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே இருந்தது. நான் கைகளை தலைக்கு முன்னால் நீட்டி மலைகளில் முட்டாதவாறு என்னைப் பாதுகாக்கின்றேன்.

ஒருவேளை இதுதான் என் கடைசி நேரம் என்னவோ? எவ்வளவு நேரத்திற்கு இந்த நீரோட்டம்; அடித்துச் செல்லும்,? எப்போது விடும்? இரண்டு சிலிண்டர் ஒட்சிசன் முடிந்தால் என் நிலை என்ன? என்றெல்லாம் சிந்திக்கிறேன். ஒரு வேளை என் கதை முடியப் போகின்றதோ என்று நினைக்கின்றேன். மனைவியையும், மகளையும் மகனையும் நினைக்கின்றேன். அந்த மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்திருந்த சைக்கிளினதும், மகனின் சங்கிலியும் ஞாபகம் வருகின்றது. என் மனைவிக்கோ நான் வேண்டும். இதற்காகவேனும் நான் உயிர்பிழைக்க வேண்டும். கடவுளே என்னை உயிர் தப்ப வை என்று வேண்டிக் கொள்கின்றேன். நீரோட்டத்தின் வேகம் குறைவதாக உணர்ந்தேன். எனக்கு உள்ளுர சந்தோசம் வருகின்றது. கடவுளே உனக்கு எனது நன்றிகள். நீ பெரியவன். இ;ப்போது நீரோட்டத்தின் வேகம் அதிலிருந்து நான் நீங்கி மேலே வருவதற்குப் போதுமான அளவு குறைந்துவிட்டது. இப்போதும் மனைவியும், மகளும், மகனும,; அந்தச் சிவத்த நிற சின்ன சைக்கிளும், மாலையும் ஞாபகத்திற்கு வருகின்றன. நீர் மட்டத்திற்கு வந்து விட்டேன். மீண்டும் இ;ப்போதுதான் உயிர் பிறந்தது. ஒக்சிசன் சிலிண்டர்கள், துடுப்பு, இரும்பு எல்லாவற்றையும் உடம்பிலிருந்து கழற்றிவிட்டேன்.

மணிக்கட்டைப் பார்க்கின்றேன். இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக இழுத்துச் செல்லப்பட்டிருப்பதை உணர்கி;றேன். சூரியனை வைத்து கரையைத் தேடுகின்றேன். அலைகள் கரையை மறைக்கின்றன. கரை கறுப்புக் கோடடித்த விளிம்பு மாதிரி தெரிகின்றது. கரையை நோக்கி நீந்துகின்றேன். ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த எனக்கு, களைப்புப் பற்றிய பிரக்ஞை, கரையைக் கண்டதால் உணர்வுரீதிPயாக அற்றுப் போயிற்று. நீந்துகிறேன். நீந்துகிறேன், கையை காலை ஆட்டி, அடித்து நீந்துகின்றேன். மனைவி, மகள,; மகன,; சைக்கிள், மாலை இவைகளை நினைக்க நினைக்க புதுத் தெம்பு வர நீந்துகின்றேன். இப்போது நீந்த வலது காலை எடுக்கின்றேன். காலை நிமிர்த்தவே முடியவில்லலை. தசை பிடித்துக் கொண்டதை உணர்கின்றேன். பெரிய தசைநார்கள் சின்னத் தசைநார்களுக்குள் வழுக்க முடியாமல் பொறுத்துக் கொண்டது மாதிரி உணர்கின்றேன். நிலத்திலே தசைப் பிடிப்பு வந்தால் ஓய்வெடுத்துக்கொண்டு காலை அழுத்திவிடுவதால் தசைப்பிடிப்பிலிருந்து தப்பலாம். ஆனால் நீரில் அப்படிச்செய்ய முடியாது. கால் இயங்காமல் விட்டால் மூழு;கி இறப்பது திண்ணம். பல்லைக் கடித்து அலறிக் கொண்டு, அப்படி அலறுகையில் வாய்ககுள் கடல் நீர்; போகி;றது. காலை நிமிர்த்துகின்றேன். காலை கத்தியால் அரியும் வேதனையுடன் கால் பழைய நிலைக்கு வருகின்றது. உண்மையாக இந்தக் காலுக்குள் நிறையத் தசைகள் பிய்ந்திருக்கும் போல. இவை மீளப்பெற இரண்டு வாரத்திற்கு மேல் எடுக்கும். அதுவரை வேதனைதான். இப்போது கரையைப் பார்க்கின்றேன். கரை தெளிவாகத் தெரிகின்றது. கரை என்னிலிருந்து எப்படியும் ஒரு மைல் இருக்கும்போல் இருக்கின்றது. கரையை இடமிருந்து வலமாக நோக்குகின்றேன். சின்ன சின்னதாக மரங்கள். அவைகள் பனை மரங்களாகத்தான் இருக்கவேண்டும். அதற்கு சற்று அப்பால் வெள்ளையாய் அந்தக் கட்டடம் தெரிகின்றது. அது நிச்சயமாக அந்த ஜேர்மன்காரன் வருசத்தில் ஒரு தடவை தங்குவதற்காக கட்டிய ஜென்னா ஹோட்டல். இப்போது எந்தப் பகுதிக்கு என்னை நீரோட்டம் இழுத்து வந்திருக்கின்றது என்பதை உணர்கின்றறேன். கரைக்கு இன்னும்; அறுநூறு மீற்றர்தான் இருக்கும்போல. உற்சாகத்துடன் கரையை அடைய, மனைவிக்காக, மகளுக்காக, மகனுக்காக, சைக்கிளுக்காக, மாலைக்காக நீந்திக் கரையை அடைகிறேன். மிகவும் களைத்து மயங்கிய நிலை. அலை அடித்து மீண்டும் கடலுக்குள் போகாதிருக்க கொஞ்சம் மணலுக்குள் ஏற வேண்டும். அதற்கு கூட உடம்பில் பலமில்லை. உடம்பு இயங்க மறுக்கிறது. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மணலுக்குள் ஏறி தலையைத் தூக்கிப் பார்க்கி;றேன். முள்ளுக் கம்பி வேலிகளும,; மணல் மூடைகளும் கொஞ்ச தூரத்தில் தெரிகின்றன. இந்தக் கடற்கரை எது என்பதை உணர்கையில் மயங்கிப் போகிறேன்.

சூரியனின் கதிர்;பட்டு கண்விழித்துப் பார்க்கிறேன். உச்சி வெயில். அந்த முகாம் தெரிகின்றது. இதே சூரியனின் கதிர்தான் அந்த முகாமை முட்கம்பி வேலிகளுக்கூடாக ஊடறுத்து, ஜன்னலுக்கூடாகச் சென்று, கட்டிலிலே படுத்துக் கிடந்த ராஜவீரனதும் பாயிலே படுத்துக் கிடந்த போராளிவீரனதும்; முகத்திலே பட்டு, அவர்களை இன்று காலையில் துயிலெழுப்பியது. வழமையான காலைகள் போல் இந்தக் காலையிலும் அவர்கள் ~தறு|(நட்சத்திரம்)க்களைப் பற்றிச் சிந்தித்தார்கள். ராஜவீரன் இரண்டு தறுக்கள். உயர்ந்த ஸ்த்தானம். போராளிவீரன் ஒரு தறு. கீழ்ஸ்த்தானம். பதவியுயர்வுபெற்று மாற்றலாகி அந்த முகாமிலிருந்து நகரப்பகுதிக்கோ அல்லது தலை நகருக்கோ அல்லது பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ அல்லது அவர்களின் தாயகப் பகுதிக்கோ செல்வதற்கு ஆளுக்கொரு தறு தேவைப்பட்ட நிலையில் தான் இன்று உச்சிவெயில் பகலில் என்னை மயக்கத்திலிருந்து எழுப்பிய சூரியக் கதிர் அவர்கள் இருவரையும் காலையில் உறக்கத்திலிருந்து எழுப்பியது.

மயக்கம் தீர்ந்தாலும,; பசியும், தாகமும், களைப்பும் என்னை வாட்டியது. நான் அந்த முகாமுக்கு முன்னால் கரையொதுங்கியதை உணர முடிந்தது. மரத்தால விழுந்தவனை மாடு வெட்டுமா? இல்லாவிட்டால் தோணி கவிழ்ந்தவனுக்கு மரக்கட்டையா?. விதி எழுதியபடிதான் எல்லாம் நடக்கும் என்று நினைக்கி;றேன். கொஞ்ச நேரத்தில் நான்கு பேர் வந்தனர். என்னை உடம்பு பூராகத் தடவிவிட்டு முகாமுக்குள் இழுத்துக் கொண்டு போனார்கள். மிகுந்த சக்தியை வரவழைத்துக்கொண்டு மிக்க பிரயாசைப்பட்டு தண்ணீர் கேட்டேன். எப்படியோ அதைப் புரிந்து தண்ணீரை வாய்க்குள் ஊற்றினார்கள். இப்போது மனதுக்கு மட்டும் தெம்பு வந்தது. உடல் பலவீனமடைந்து இருந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் மனைவியையும் மக்களையும் நினைத்துக் கொண்டு பதில் சொன்னேன்.

இப்போது ராஜவீரனும், போராளிவீரனும்; வருகிறார்கள். அந்த நான்கு பேரும் அணிவகுத்து சல்யூட் பண்ணி அவர்களுக்கு மரியாதை செய்கிறார்கள்.இருவரிடமும் என்னைப் பற்றிச் சொல்கிறார்கள். இருவரும் கேட்டுவிட்டு என்னமோ கதைக்கிறார்கள். அது எனக்கு ஓரளவு தெளிவாக விளங்குகின்றது. அலற வேண்டும் போல் இருக்கின்றது. ஆனால் முடியவில்லை. மனம் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அவர்களின் காலைப் பிடித்து கையெடுத்து கும்பிட்டு யாசிக்க வேண்டும் போல் இருக்கிது. யாசிப்பது இழிவுதான் என்றாலும் என் மனைவிக்காகவும,; என் மகளுக்காகவும், என் மகனுக்காகவும், அந்தச் சைக்கிகளுக்காகவும், மாலைக்காகவும் செய்ய நினைக்கி;றேன். முடியவில்லை. அழுகி;றேன். கதறுகி;;றேன். ஆனால் வெளியே சத்தம் வரவில்லை. என் உடலும் அசையவேயில்லை. பலவீனம் என் உடலை இயங்கச் செய்யவிடவில்லை.
அந்த நான்கு பேரும் என்னை இழுத்துக் கொண்டு என்னைப் பொறுக்கிய இடத்தில் போட்டுவிட்டு வந்தார்கள். இப்போதும் அந்தச் சூரியக்கதிர் என்முகத்தில் படுகிறது. ஆனால் சுடவில்லை. என் கதை முடியப்போகி;றது என்பதை உணர்கி;றேன். என்னை நோக்கி ராஜவீரனும், போராளிவீரனும்; ஆளுக்கொரு துப்பாக்கியுடன் வருவதைக் காண்கிறேன். என்னை சுட்டுக் கொல்லப்போகிறார்கள் என்பதை உணர்கி;றேன். ஒரு வேளை இருவருக்கும் ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கலாம். சைக்கிளும,; மாலையும் வாங்கித் தருவதாக வாக்களித்தும் இருக்கலாம். என் கதையை முடிக்கப் போவதால் அவர்களின் சந்துகளில் ஏறப்போகிற ~தறு|க்கள் அல்லது நட்சத்திரங்கள் அவர்களுக்கு பதவியுயர்வுகளையும,; மாற்றல்களையும் கொடுத்து நகரப் பகுதிக்கோ அல்லது தலைநகர்ப் பகுதிக்கோ அல்லது பிரச்சினைகள் குறைந்த பகுதிக்கோ அல்லது அவர்களின் தாயகப் பகுதிக்கோ அனுப்பி வைக்கும். எனது மகளினதும், எனது மகனினதும் வாழ்க்கையையும் சைக்கிளையும,; மாலையையும் அழித்து அவர்களின் மகளுக்கும், மகனுக்கும், சைக்கிளும், மாலையும் கொடுக்கப்போகிறார்கள். ஒன்று ~பட்டால்| உண்டு வாழ்வு என்பது இதுதானாக்கும். சாம்பல் மேட்டில் கட்டிடம் கட்டி அவர்களது மக்களுக்கு கொடுக்கப் போகிறார்களாக்கும்.

இப்போது இருவரும் என்னை நெருங்கிவிட்டார்கள். முதலில் போராளிவீரன் துப்பாக்கியை நீட்டி என் வற்றிலே சுடுகி;றான். ஏதோ திரவமாக மெல்ல மெல்ல உடலிலிருந்து கசிவதை உணர்கிறேன். அதைப் பார்க்கக்கூட எனக்கு திராணி இல்லை. இப்போது ராஜவீரனின் முறை. எனது நெஞ்சிலே மூன்று முறை சுடுகி;றான். இப்போது என் நெஞ்சிலிருந்தும் திரவம் கசிந்து கொண்டிருக்கின்றது. நான் சாகப் போகிறேன் போல. வேறெங்கோ தேடுதலில் கிடைத்த அல்லது பதிவேட்டில் பதியப்படாத உருண்டையான குண்டோ அல்லது நீளமான துப்பாக்கியோ அதிசயமாய் தான் தோன்றியாய் எனதருகில் உதிக்க தலை நகருக்கும் மற்றும் உலகமெங்கும் செய்தி பறக்கும். உடனே போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ந்து பார்க்காது நாளை காலை குளக்கரை, இனதினவீரவாரகுரல்ஒளி ஏடுகளும், வலு,வாஹினி,ஆதவ ஊடகங்களும் இன்னும் என்னென்னவோ ஏற்கனவே அவர்களின் மண்டைகளுக்குள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பக்குவமாய் அடுக்கி வைக்கப்பட்ட அந்த ஒரு சொல்லை வைத்து பலி| என கொட்டை எழுத்துக்களில் போடும். இப்போது எனது வலது கண்ணில் எனது மனைவியும், என் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகளும், என் ஆறுமாத மகனும், என் இடது கண்ணில் மகளுக்கு வாங்கித் தருவதாக வாக்களித்த சைக்கிளும், ஒக்சிசன் சிலிண்டர் வாங்குவதற்காக கடலின் நீலமும் ராஜவீரனினதும், போராளிவீரனினதும்; சந்துகளை அலங்கரிக்கப் போகின்ற அந்த பச்சையும் நீலமும் கலந்த தறுக்கள் மாதிரி மின்னி மின்னி தெரிகின்றபோது என் காலிலிருந்து உயிர்; நெஞ்சுக்கூடாக தொண்டைக்குள் வந்து, எனது இறுதி மூச்சோடு கலந்து இரு கண்களுக்கூடாகவும் வெளியேறத் தயாராகி நின்றது.

*தறு (சிங்கள சொல்லின் கருத்து நட்சத்திரம்) 
(நவம்பர் - டிசம்பர் 1999) சரிநிகர்




Friday, August 19, 2016

விலங்கு நடத்தைகள்..


-அம்ரிதா ஏயெம்-


அந்தக் கப்பல் ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. கப்பலில் ரெண்டாவது தளத்தில் நிண்டு கடலைப் பார்க்கிறேன். எங்கும் பரந்திருக்கிற நீலம். எங்கும் நீலம். எதிலும் நீலம். நீலம் என்பது நிறம் மட்டுமில்ல. அது தூய்மை. ஞானம். தியானம் செய்யிற ரைம்ல நெத்திப் பொட்டில உண்டாகி முள்ளந்தண்டுக்கூடாகப் போய் குண்டலினி சக்தியை தூண்டி பேரின்பத்தை உணரச் செய்யிற அந்தச் சுடர்கூட நீலந்தான். நீலக் கடல் தாய்மையின் வடிவம். ஏனென்றால் எங்களச் சமந்து எங்கள் பிள்ளைகளுக்கு ஊட்டுவதால். இந்தக் கடல், இதே கடல்தான் எனது தாய், தந்தையால என்ர ரெண்டு வயதில அறிமுகம் செய்யப்பட்ட கடல். கடல் மேலே கப்பல். கப்பல் மேலே நான். கப்பல் அலைந்து போற மாதிரி என்ர மனமும் அலையத் தொடங்குது.

என்ர பட்டப் படிப்ப நிறைவு செய்ய குரங்குகளில் நான் ஒரு ஆய்வை செய்ய வேணும். அந்தக் குரங்குகள் இப்ப நான் போகப் போற இடத்தில தான் மிகவும் கூட இருக்கிறதாம். எப்படி அந்த ஊரை கப்பல விட்டு இறங்கி கண்டுபிடிக்கப் போறேனோ என்ட பயம் எனக்கில்ல. நான் சின்ன வயதில குடும்பமா இருந்த நகரப் பகுதியைச் சார்ந்த கிராமப் புறம்தான் அந்த ஊர் என்பதால எப்படியோ கண்டுபிடிச்சிடலாம் எண்டு மனதில ஒரு தன்னம்பிக்கை இருக்குது. கப்பல் ஆடி அசைந்து போய்க்; கொண்டிருக்குது. நிமிர்ந்து என்ர தெற்குப் புறம் நோக்கிப் பார்க்கிறன். கடல் நடுவே சற்றுத் தொலைவில அமைந்திருக்கிற கோதுமைத் தொழி;ற்சாலை புகைகக்கி சூழலையும் மாசாக்கிறதையும் பாhக்கிறன். இப்ப அந்த ஏழு மாடித் தொழிற்சாலைக்குப் பக்கத்தில கப்பல் போகுது. அங்கே நெறைய மீனெல்லாம் செத்துக் கிடக்குது. கடற்படையினரால் அரைமணிக்கொரு தரம் நீருக்கடியில செய்யிற கிரனேட் சார்ஜினால் சாக்கொல்லப்பட்டவைதானாம் அந்த மீனெல்லாம். கொல்லப்பட்டவை தங்கட முகாமுக்கு அள்ளுப்பட்டுப் போக மீதப்பட்டவையெல்லாம் செத்துமிதக்குது. கப்பல் இப்ப அடிக்கடி உயிர்களைக் காவெடுக்கும் அந்த மலைப் பக்கமாக போகுது. அந்த மலைப் பகுதி கழியுமட்டும் இந்தப் பிரயாணிகளுக்கு கடவுள் மேலெ எவ்வளவு பக்தி. கப்பல் இப்ப இறங்கு துறையை அடைஞ்சிட்டுது போல. பாதுகாப்பு சோதனைகள் முடிஞ்சவுடன் என்ர பெயர், முகவரி போன்ற விபரங்களையெல்லாம் பொலிசில் பதிஞ்சிட்டு இறங்குதுறையை விட்டு வெளியே வாறன். பஸ் ஒண்டு அந்தக் குரங்குகள் இருக்கிற ஊர்ப்பக்கம் தாண்டி போகத் தயாரான நிலையில் நிக்குது. அதில ஏறுறன். இப்ப பஸ் என்னச் சுமந்து போய்க் கொண்டிருக்கிது. ஓரு பதினஞ்சு வருசங்களுக்குள்ள எவ்வளவு மாற்றங்கள். வீதி மருங்கில இருந்த காடுகள் அழிக்கப்பட்டிருக்குது. வீடுகள் நிறைய இடங்களில தரைமட்டமாக்கப்பட்டிருக்குது.

நான் இறங்க வேண்டிய நாற் சந்தியில இறங்குறன். சந்திக்கு மேற்குப் பக்கமா ரெண்டு மைல் போனா நான் சின்ன வயதில இருந்த அந்தப் பச்சை மாடிவீடு வரும் என மனதில பழைய நினைவுகள் ஓடுது. ஆனா நான் என்ர குரங்ககள் இருக்கிற ஊருக்கு சந்திக்கு கிழக்குப் பக்கமா நாலு மைல் நடந்து போக வேணும்.

நடக்கிறன். வீதி எவ்வளவோ மாறியிருக்குது. பள்ளமும் படுகுழியமாய். வீதி ஓரத்திலிருந்த கண்டல் காடுகள் கண்டபடி அழிக்கப்பட்டிருக்குது. வீதியோட சேர்ந்தாப்போல ஒரு ஓடையும் வீதிக்குப் போட்டியாய் ஒடிக் கொண்டிருக்கிது. இங்க வீதியின்ற ரெண்டு ஓரத்தில இருக்கிற வீடெல்லாம் ஓட்டையும் உடைசலுமாய் காணப்படுகுது. நிறைய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டும் இருக்குது. குண்டுகள் சன்னங்களினது வேலையாக்கும் இதெல்லாம் என நினைச்சுக் கொள்ளுறன். கூரையில்லாத வீடுகளில் ஜன்னல், கதவு நிலைகள் பிடுங்கப்பட்டு இருக்குது.

திடிரென நிறையச் சப்பாத்துச் சத்தங்கள் கேட்கத் தொடங்குது. சீருடை அணிஞ்ச ஆக்கள் வந்து கொண்டிருக்காங்க. ஏதோ தாக்குதல் ஒண்ட நடத்தி முடிச்சிட்டு வாறாங்கள் போல்தான் தென்படுகுது? அதில அவங்களுக்கு வெற்றியோ? தோல்வியோ? எத்தனை பேர் செத்தாங்களோ தெரியாது?. அவங்க என்ன நோக்கி வர வர எனக்கு பயம் வரப் பார்க்குது. ஓரு வேளை அவங்க வாற எதிர்ப்பக்கம் நான் போறேனோ? அல்லது நான் போற எதிர்ப்பக்கமா அவங்க வாறாங்களோ தெரியாது? இதில என்ன பயம் வேண்டிக் கிடக்குது. நான் என்ன பயங்கரவாதி மாதிரியா இருக்கிறன். அப்ப வீதிய திரும்பிப் பார்க்கிறன். வீதியில ஒருத்தரும் என்னத் தவிர இல்ல. ஒரு சீருடைக்காரன் எனக்கிட்ட வந்து அவன்ர மொழியில விசாரிச்சு சந்தேகம் தீர்க்கிறான். இந்த சீருடைக்காரனிடம் கொள்ளையா ஆண்மையும், ஆணவமும் இருக்குது. முகத்திலே அகங்காரம் நெரம்பி வழியுது. ஓரு வேளை அவன்ர வீடு ஆளுயரமேயில்லாத ஒத்த அறைக் குடிலோ என்னவோ? இவனுக்கு கலியாணம் கட்டாத ரெண்டு அக்காக்களும், தங்கைகளும் வயல்ல வேல செய்யிற ரெண்டு தம்பிமாரும் பத்தாம் வகுப்பை மூணு தடவை படிக்கிற ரெண்டு தம்பிமாரும் இருக்கலாம். இல்லாட்டி ரெண்டு தம்பிமாரும். வேறெ எங்கோ சீருடைக்காரனா வேலயும் செய்யலாம்.
இவைகள நெனச்சிக் கொண்டு அந்தப் பாலத்தை தாண்டுறன். ஒரு பதினஞ்சு வருசங்களுக்கு முந்தி ஒரு மாலைப் பொழுதில நானும் என்ர சொந்தக்காரப் பெண்ணும் ஆளுக்கொரு சைக்கிளில் இந்தப் பாலம் வரைக்கும் வந்து திரும்பியிருக்கம். இந்தப் பாலத்திற்கும் அந்தப் பாலத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குது. இங்க நிறையத் தூண்கள் உடைஞ்சி காணப்படுகுது.

பாலத்த தாண்டி வந்து கொண்டிருக்கன். இந்த உச்சி வெயிலுக்கு வீதியில ரெண்டு சைற்றிலயும் மரங்கள் குடை போல அமைஞ்சி குளிர்மை குடுத்துக் கொண்டிருக்குது. அப்ப எனக்கு முன்னால தூரத்தில அஞ்சாறு பொடியன்கள் நின்று கொண்டிருக்கிறத பார்க்கிறன். அவங்கள யாரென மதிச்சிட்டன். அவங்கள் முகத்தில சிரிப்பும் இல்ல, ஆனா கவலயும் இல்ல. செருப்பு போட்டிருக்காங்க. அவர்களிடம் இயல்புக்கு மீறிய அழுத்தம் இருந்தது. உண்மையில இயல்புக்கு மீறிய அழுத்தம் வாறத்திற்கு அவங்களின் கடந்த காலம் கசப்பான மாதிரி இருக்க வேணும். வாழ்க்கையில நிறைய அடிகள் பட்டிருக்க வேணும். அந்தத் திடகாத்திரமான உடம்புள்ள பொடியன்கள் என்னப் பார்க்கிறாங்க. நான் புன்னகைக்கிறன். அவங்க பதிலுக்கு புன்னகைப்பதா அல்லாட்டி வேண்டாமா என்று யோசிச்சிட்டு கஸ்டப்பட்டு புன்னகைக்கிறாங்க. அவங்கள தாண்டிப் போறன். என்னையே பார்த்துக் கொண்டிருக்காங்க.

விடிகாலைச் சூரியக் கிரணத்தின் வெம்மை என்னைத் தட்டியெழுப்புது. கட்டிலில படுத்தபடி ஜன்னலுக்கூடாக பார்க்கிறன். அந்த நாற்சந்தி, நீரோடையின் வளைவு எல்லாம் தெளிவாகத் தெரியுது. தூரத்தில விவசாயம் செய்யாம பல வருசங்களா கைவிட்ட தரிசு நிலத்தில புல்லு முளைச்சு அது பச்சைக் கம்பளம் மாதிரி காட்சியளிக்குது.  இக்கரைக்கு அக்கரை பச்சை அது மாதிரி என்னவோ?

"குய்.. குய்.. குய்.." என்று சத்தம் கேட்குது. திரும்பிப் பார்க்கிறன். பெரிய குரங்கு ஒண்டு ஜன்னலுக்கு வெளியில இருந்து எனக்கு பயம் காட்டுது. நானும் பதிலுக்கு அது மாதிரிக் கத்துறன். பின்ன அந்தக் குரங்கு போயிட்டுது. ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கிற இந்த ரெண்டு அறை வீட்டுக்கு வந்து ஒரு வாரமாயிட்டுது. மெல்ல மெல்ல ஊரும், இந்த வீடும், குரங்குகளும் பழக்கமாயிட்டுது என்ர அறைக்குப் பக்கத்தில இருக்கிற பெரிய ஆல மரத்திலதான் குரங்குகள் தங்குது. பகல் நேரத்தில பன்ரெண்டர மணியிலிருந்து ஒண்ணரை மணிவரையம் சிறு தூக்கம் செய்யுது. பின்ன குறூப் குறூப்பா பிரிஞ்சி விளையாடுவதும், சாப்பிடுவதும், சேர்க்கை செய்து ஓடிப் பிடிச்சும் விளையாடுது.

திடிரென அலறலுடன் சேர்ந்த மாதிரி குரங்கொன்றின் சத்தம் கேட்குது. அது அசாதாரணமான சத்தம் என்று உணர்ந்து கொள்ளுறன். வெளிய வந்து பார்க்குறன். குரங்கொன்று மண்டை வெடிச்சி ரெத்தம் வழிஞ்சி நான் பார்ப்பதற்கு இடையில். அஞ்சாறு முறை மூச்செடுக்க கஸ்டப்பட்டு செத்துப் போட்டுது. மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாதாம். இது எப்பவும் உண்மையில்ல எண்டு எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாது. என்ர யுனிவர்சிட்டி வளவுக்குள்ளேயே கூட மூண்டு குரங்குகள் பிடி பிழைச்சி செத்திருக்குது. அவை விழுந்து கிடந்தாலும், உடனே முதலுதவிக்கு குரங்குக்கு கிட்ட போகவேலாது. அது தற்கொலை முயற்சி மாதிரி. நாம் சத்துருவா மித்திரனா எண்டு மற்றக் குரங்குகளுக்கு தெரியாது. எல்லாம் சேர்ந்து நாலு வேட்டைப் பல்லாலும், இருபது நகத்தாலும் தாக்கத் தொடங்கினால் அதோ கதிதான். இப்போ செத்த குரங்கைச் சுற்றி பதினைஞ்சுக்கு மேலே குரங்குகள் நிற்கிது. ஒரு குட்டிக் குரங்கு செத்த குரங்கைச் சுற்றி கட்டிப் பிடிச்சி அழுது கொண்டிருக்கிது. சின்ன கறுத்த முலைக் காம்பு அதற்கு இருந்தது. "ஜெனி" என்று பெயர் வைக்கிறன். அதற்கு அருகிலே முலைக்காம்பு நீண்டு தொங்கும் பெரிய குரங்கு செத்த குரங்கை தட்டிப் தட்டிப் பார்த்து தன்ர தலையில் கைவைச்சி எதையோ தொலைச்சிவிட்டது மாதிரி சோகமாக கண்ணில் நீருடன் நிலத்தையும் மரத்தையம் மாறி மாறி அண்ணாந்து பார்க்குது. செத்த குரங்கை ஜெனி கட்டிப் பிடிச்சி அழுது கொண்டிருந்ததைப் பார்க்கையில மனசுக்கு கஸ்டமாக இருக்குது.

இந்த பெரிய பெட்டைக் குரங்கு ஜெனியின் தாயாக இருக்கணும் போல. தாய்க்கு வீணா என்று பெயர் வைக்கிறன். செத்துக் கிடக்கும் குரங்கு ஜெனியின் தகப்பனாக இருக்கணும் போல. அதற்கு விக்கி எண்டு பெயர் வைக்கிறன். விக்கி எண்ட பேர் வச்சா வகுப்பில அடிக்கடி என்ன கிண்டல் பண்ணும் அந்த தாடிக்காரனை பழிவாங்கியது போல் கூட இருக்கும்.

விக்கியை கட்டிப் பிடிச்சி அழுதுக்கிட்டிருந்த ஜெனியை வீணா தகப்பனாக்கிப் போட்டுது. அப்பவும் ஜெனி திமிறிக்கொண்டிருக்குது. தன் தகப்பனில்லாத எதிர்காலத்தப் பத்தியா? அல்லது சாப்பாட்டப் பத்தியா? தூங்குகின்ற மரக்கிளையைப் பத்தியா? தகப்பனின் அன்பின் பிரிவைப் பத்தியா? ஆனா ஏதோ ஒண்டு ஜெனிக்கும் வீணாவுக்கும் ஏதொவொரு வகையில் இழப்பாத்தான் இருக்கணும் போல. எப்படி விக்கி செத்திருக்கும்? சாப்பாட்டுக்கும், பெண்ணுரிமைக்கும் போட்டி போட்ட மத்தக் குரங்குகள் ஒரு வேளை ஒரு மரத்திலிருந்து மத்த மரத்திற்கு தாவற ரைம்ல தட்டியும் விட்டிருக்கலாம். இங்கே எல்லாம் விரவிக் கிடப்பது போட்டியும் பொறாமையும்தானே. அடக்குதலும், அடங்குதலும்தானே.

ரெண்டு கிழமைக்கு பிறகு இண்டைக்குத்தான் ஜெனியும், வீணாவும் விளயாடுவதப் பார்க்கிறன். காரணம் மூணாவது குரங்கு. ஆண் குரங்கு. அதற்கு பரா என்று பெயர் வைக்கிறன். மூணும் ஓடிப்பிடிச்சி விளையாடிக் கொண்டிருக்கிது. அதற்குப் பின்ன மூணு நாளுக்கு தொடர்ச்சியா மூணும் ஒருமிக்கத்தான் இருக்கிது. வீணா பராவை துணையாக்கிக் கொண்டுவிட்டது போல. ஜெனிக்கு புதுசா ஒரு அப்பா கிடைச்சிருக்கார் போல. வாழ்க்கை என்பதில் பரம்பிக் கிடப்பது வளைத்தலும், வளைதலும், மயங்குதலும், மயக்குதலும், துணையாதலும், துணையாக்குதலும்தானே.
முக்கிப் பிடிச்சி ஒடையில முங்கி முங்கி குளிச்சிக் கொண்டிருக்கிறன். ஒரு தரம் முங்கி எழுந்து நிமிர்ந்து பார்க்கிறன். ஓரு தோணி என்ர தலைக்கு நேரே தெரியுது. அதில ஒருவன் தன்னந் தனியே வலை வீசிக் கொண்டிருக்கிறான். அவன் வலை வீசுவதையே பார்த்;துக் கொண்டிருக்கன். பதினஞ்சு வருசத்துக்கு முன்னால ஒரு வலைப்பாட்டில எவ்வளவு மீன்கள் படும். ஏன் இப்ப குறஞ்சு போச்சு? ஒரு வேளை யுத்தம் காரணமாக்கும். அந்த மெல்லிய கறுத்த வலை வீசுற தோணிக்காறன் தோணியுடன் என்னை நெருங்குகிறான். ஏதாவது கதைக்கணும் என்பதற்காக மீனப்பத்தி விசாரிக்கிறன். நான் அவனோட கதைச்சது அவனுக்குச் சந்தோசம் எண்டு அவனது முகத்தைப் பார்த்ததும் புரிஞ்சி போச்சி.

தோணி, இப்ப எனக்குப் பக்கத்திலிருந்த துறையடிக்கு போய்க்கொண்டிருக்கிது. பொதுவாக ரெண்டு துறையடிகள் இருக்கிது. ஒண்டு குளிக்கவும், மத்தது தோணி தள்ளி வைக்கவும். இப்ப இரண்டு பெண்களும் நெருங்கி வருகினம். ஒரு பெண் நடுத்தர வயது. மற்றது இள வயது. ரெண்டு பேரும் அம்மாவும் மகளுமாக இருக்கணும் போல. குளிச்சி வெளியேறிய நான் கரையாலேயே நடந்து அந்த தோணித் துறைக்குப் போறன். இப்ப தோணி தரை தட்டிட்டுது. அந்த ரெண்டு பெண்களும் தோணியைப் பிடிச்சி தோணிக்காரனுடன் சேர்ந்து தோணியை கரைக்கு இழுக்கினம். நானும் உதவி செய்ய நெனச்சி தோணியில கை வைக்க அவர்கள் அதை மறுக்கினம். ஓரு வேளை எனக்கு கஸ்டம் தரக்கூடாதாக்கும் எண்டு நெனக்கிறாங்களோ தெரியாது.

தோணிக்குள் கிடந்த மீன்களை அந்த ரெண்டு பெண்களும் கோர்வையாக்கினம். கோர்வையாக்கின கொஞ்ச நேரத்தில அடி மாட்டு விலைக்கு மீன்கள் வில போகுது. மீன்கள் போன பின் முகத்தில் அவங்களுக்கு திருப்தி இல்ல போல. மீன் வித்த காசு இன்றைய நாளை ஒரு வேளை ஒப்பேற்ற போதுமோ என்னவோ? தெரியாது. நான் இந்த நடுத்தர வயதுப் பெண்ணிடம் கதை கொடுக்கிறன். இளவயதுப் பெண் தனது மகளென்றும், முதலாவது திருமணத்தில் பிறந்தவளென்றும், தோணிக்காரன் கணவனென்றும: தனது முதற் கணவனை பத்து வருடத்திற்கு முன்னால் சீருடைக்காரர்கள் கூட்டிச் சென்று கொண்டு போட்டார்கள் என்றும் சொல்லுகிறாள்.

பெரிய முள்ளை சின்ன முள் துரத்த, அது நிமிசத்தை துரத்த, பின் மணியை, நாளை, மாதத்தை துரத்திச் சென்று விட்டன. நான் இந்த ஊருக்கு வந்து ஆறு மாதமாயிட்டுது. எனது புறஜக்ட் இன்னும் முடிய ஆறு மாதம் இருக்குது. துரத்தல்கள் மாதங்களுக்கிடையே நடந்து கொண்டிருந்த பிரக்ஞையிலிருந்து விடுபட்ட நேரம் எனது அறைக்குப் பக்கத்து ஆல மரத்தில் குரங்குகள் ஒன்றை யொன்று துரத்திக் கொண்டிருந்தன. அதில பத்தொன்பது பேர். எல்லோருக்கம் பேர் வச்சிருக்கன். எல்லாம் என்ர வகுப்புத் தோழர்களின் பெயர்களின் சுருக்கம்தான். தெரிந்தால் கொன்றுபோட்டு விடுவானுகளாக்கும்.

கிழக்குப் பக்கமாக இருந்த கிளை பலமாக ஆடிக்கொண்டிருக்குது. என்னெண்டு பார்க்கிறன். அங்கே பராவும், ஜெனியும் இருக்காங்க. ஜெனி முனகிக் கொண்டிருந்தது. வர வர பராவின் நடத்தை காட்டுமிராண்டித் தனமாகி வருவதை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறன். ஓரு முறை ஜெனிக்கு முதுகுப் பக்கமாக கடிச்சிவிட்டது. அதற்கு நான்தான் மருந்த போட்டு விட்டன். இப்ப ஜெனியை பரா புணருவதற்கு முயல்கிறது. நாலு காலில் ஜெனியை நிற்க வைச்சி பரா பகீரதப் பிரயத்தனம் எடுக்கிறது. ஆனா ஜெனி ஒத்துக் கொள்கிறாப் பொல இல்லையே. பரிதாபமாக பின்னால் திரும்பிப் பார்க்குது. உடனே பரா ஜெனியின் கழுத்தின் பின் பகுதியைக் கடித்துவிடுகிறது. அப்ப ரெத்தம் கசியத் தொடங்க வலியினால் ஜெனி அலறுகிறது. பின் ஜெனிய நாலு காலில் நிற்க பரா அதன் முழங்கால் சில்லுக்கு பின்னால மேலே தன்ர ரெண்டு பெரிய கால வச்சி ஏற, ஜெனி துவண்டு கீழே விழுகுது. பின் ஏறி ஜெனியின் பிற்பக்கத்தில் தன் முன்பக்கத்தினால் புணருது. ஜெனி மீண்டும் துவளத் தொடங்குது. ஒரு வேளை ஜெனியின் தாய் வீணா இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமோ தெரியாது. இந்தப் பாலியல் வல்லுறவு வீணா இல்லாத நேரங்களில்தான் நடக்கின்றன என்று நான் இரு மாதங்களுக்கு பின்தான் உறுதி செய்து கொள்ளுறன். வாழ்க்கை என்பது நம்புதலும், நம்ப வைத்தலும்தானே. பலதார திருமணம் இல்லாத இந்த குரங்கினத்தில் (மொனோகெமி) ஜெனி கர்ப்பமானால் இந்தக் கர்ப்பத்திற்கு காரணம் பரா என்றால் அது மிகவும் முறைகேடான ஒன்றாகத்ததான் இருக்கும். பராவின் அட்டகாசம் அந்த "பன்யன் ட்ரூப்பில்" (ஆலமர குறூப்) அளவுக்கு மீறிப் போயிட்டுது. இது "மேல் ஓவர்ரேக்கிங்"காகத்தான் இருக்குமாக்கும்.

கட்டிலில புரண்டு புரண்டு படுக்கிறன். நித்திரை இன்னும் வரவில்லை. இன்றையுடன் இந்த ஊருக்கு வந்து ஒரு வருசம். இன்றுடன் என்ர புறஜக்ட் முடிஞ்சிட்டுது. நாளைக்கி என்ர யுனிவர்சிட்டிக்கு நான் போக வேணும். புறஜக்ட் றிப்போர்ட், பத்தகங்கள், உடுப்புக்கள் வைக்கப்பட்ட பையை தூக்கிக் கெதாண்டு மேற்குப் பக்கமாக நாலு மைல் நடந்து, அந்த நாற்சந்தியை அடைஞ்சி, பஸ்ஸோ அல்லது வேனோ அல்லது வேறு என்னத்தையோ பிடிச்சி ஜெற்றிக்குப் போய், பத்தரை மணிக் கப்பலைப் பிடிக்கணும். ஒரு வருசத்திற்குப் பின்ன இந்த ஊரை விட்டுப் போறது சந்தோசமென்றாலும், இந்த ஊர், இந்த வீடு, இந்;த ஓடை, இந்த ஆல மரம், இந்தக் குரங்குகள் இவைகள பிரிஞ்சு போறத நினைக்கிற நேரத்தில கொஞ்சம் துக்கமாத்தான் இருக்கிது. இந்தக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம். ரெண்டு வயது குழந்தையும், ரெண்டு வயது குரங்கும் எனக்கு ஒரே மாதிரித்தான் இருக்கினம். அறிவிலும் சமம்தான். எனக்கு இவைகள் மாமாட, சித்தப்பாட பிள்ளைகள் மாதிரி. அவைகள் என்னிடம் கேள்வி கேட்கும். நூனும் பதில் சொல்வன். நானும் கேட்பன். அவையும் மறுமொழி சொல்லும். இந்தக் குரங்குகளின்ர இன்பத்திலும், துன்பத்திலும், சாவிலும், பிறப்பிலும் கலந்து கொண்டிருக்கன். இந்த ஆலமரம் இவைகளின் அரண்மனை மாதிரி. அதில் அரசோச்சிய அரசனும், அரசியும், அரசிளங்குமாரர்களையம், சேவகர்களையும் எனக்குத் தெரியும். மற்றவர்களின் கண்ணுக்கு வாயில்லாத வாலுள்ள வானரங்களாத் தெரியும். எனக்கோ அவற்றின் ஒவ்வொருவரின் கதை கூட நன்றாக இந்த ஒரு வருடத்தில் தெரியும். என்ன, மனிதனும் குரங்கும் எவ்வளவு செயல்களிலும் நடத்தைகளிலும் ஒண்டுதான். ஆனால் மனிதன் வாலில்லாத வானரம்.

வையகத்தை
சுருக்கிவிட்டவைகளின்
துணையோடு
தொலைந்துவிட்ட
வாலைத்தேடி...
என மனசு கவிதை சொல்லத் தொடங்க தூக்கம் கண்களைச் சொருக தூங்கிப் போகிறன்.

சூரியன் பரவி, பறவைகள் வெளிக்கிழம்பி, பொழுது விடிஞ்சி காலை நேரமாகி விட்டிருந்தது. நான் யுனிவர்சிட்டி திரும்ப தயாராகி நிற்கிறன். எனது பேக்கை தோளில் போடுகிறன். அப்போ, மக்களின் கத்தல் ஆரவாரச் சத்தம் மெல்ல மெல்ல கேட்கத் தொடங்குது. அப்போ தெளிவாக கேட்கத் தொடங்குது. ஒரு ஆள் அடிபட்டு அலறும் சத்தமும், சவுக்கடியும் கேட்குது. அப்போ அலறுபவனுக்குத்தான் அடி விழுதாக்கும் என்று நான் நினைக்கையில இப்ப ஆல மரத்திலயும் பாயும் சத்தமும், அரளும் சத்தமும் கேட்கத் தொடங்குது. பல குரங்குகள் ஒண்டாகச் சேர்ந்து ஒரு குரங்கை தாக்கத் தொடங்குது என்று புரிஞ்சு கொள்ள எனக்கு கன நேரம் எடுக்கல்ல.

இப்போ ஜன்னலுக்கூடாக எனக்கு தெளிவாக தெரிகிற தூரத்தில் சனங்கள் வந்து கொண்டிருக்காங்க. சனக் கூட்டத்தில் அந்த திடகாத்திரமுள்ள பொடியன்கள் ஒருத்தனை தலையை மொட்டை அடிச்சி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, சவுக்கால் அடிச்சி, நடத்திக்கிட்டு அவன்ர மேலெல்லாம் ரெத்தம் வழிஞ்சி கொண்டிருக்க வந்து கொண்டிருக்கினம். என்ன தவறு செஞ்சானோ தெரியாது. இவன ஏன் இப்படி அவனைத் தண்டிக்காங்களோ? அவன் கழுத்தில ஏதோ போட் மாட்டி அதில் ஏதோ எழுதப்பட்டிருக்குது. தூரத்தில எண்டதால என்னால வாசிக்க முடியல்ல. இப்ப என் ஜன்னலுக்கு நேரேயுள்ள முச்சந்திக்கு கொண்டு வந்து அங்கு இருக்கிற புளியமரத்தில பொடியன்கள் அவனைக் கட்டுகினம். ஆ! அவன் நமக்குத் தெரிஞ்வன். அந்தத் தோணிக்காரன். கழுத்தில் கிடந்த போட்டை வாசிக்கிறன். "எனது மகளைக் கற்பழித்தவன் நான்".

இப்ப ஆல மரத்திலுள்ள கிளைகளெல்லாம் உடையற மாதிரி சத்தமும், அலறல்களும் கேட்கத் தொடங்குது. முச்சந்தியைப் பார்க்கப் பிடிக்காமல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறன். மரத்திலிருந்து ஒரு குரங்கு தலை அடிபட விழுந்து, அஞ்சாறு முறை மூச்செடுக்க கஸ்டப்பட்டு மூச்சுக்கு ஏங்கி மேலெல்லாம் பல்லும் நகமும் பட்டு சதை கிழிஞ்சி ரத்தம் ஒடி செத்துப் போய்விட்டிருந்தது. கிட்டப் போய்ப் பார்த்தன் அது பரா. சத்தம் இல்லாமல் தனது கடைசி மூச்சையும் விட்டுட்டுது. அப்போது புளியமர முச்சந்தியிலிருந்து டுமீல்.. என்று மூண்டு சத்தங்களும், யாரோ தன்ர தாயை அலறிக் கூப்பிடுகிற சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கிறது...

(செப்டம்பர்-ஒக்டோபர், 1999, சரிநிகர்)


Wednesday, August 17, 2016

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே தந்தைகளுக்கும் மகள்களுக்குமான என்றென்றைக்கும் சாசுவதமான உயிரை உருக்கும் ரசவாதப் பாடல்.

- அம்ரிதா ஏயெம்

“தேவலோக வாசிகளான தேவதைகள் பல யுகங்களுக்கு ஒருதடவை தான் பூமிக்கு வந்து போவார்கள். அப்படி வந்துபோன ஒரு தேவதை தான் ஷோபா. ஷோபா ஒரு எரிநட்சத்திரம். வானின் ஒரு கோடியிலிருந்து, மறு கோடிக்கு மிகுந்த பிரகாசத்தோடு பாய்ந்து சென்று தனது இருக்கையைத் தெரிவித்துவிட்டு மறைவையும் உணர்த்திவிட்டு இருளில் கலந்து போன ஒரு எரிநட்சத்திரம்.அந்தத் தேவதையின் வரவையும் மறைவையும், அவருக்கும் எனக்குமான உறவையும் அவர் மறைந்த அடுத்த வருடமே உங்களுக்கு சொல்லியிருந்தேன். 

“மூன்றாம் பிறை” படம் மூலமாக. மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் என் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் என் துக்கத்தை எனது சினிமா மூலம் கொட்டித் தீர்த்துக்கொண்டேன். அப்படித் தீர்த்துக்கொண்டதால் இன்று உங்களுடன் இருக்கிறேன்.
ஷோபா மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகின்றன. இது உங்களுக்கு........
எனக்கு......
எல்லா இன்னல்களிலிருந்தும் என்னைக் காத்துவரும் எனது காவல் தெய்வமாக அவள் இன்றும் என் அருகிலேயே இருக்கிறாள்...!”
                                                                                                  - பாலுமகேந்திரா
                                                                       **
எனது மகள் பிறந்தவுடன் மகளைத் தூங்க வைக்க நிலா நிலா ஓடி வா, ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் களுடனான பயணத்தின் அலுத்துக் களைத்துப் போன ஒரு சந்தர்ப்பத்தில் Lullaby of tamil child என்று google பண்ணினேன். அதிலே ஒரு பதிவு பீ. சுசிலா பாடிய எல்லா பாட்டுக்களுமே தாலாட்டுக்கள்தான் என்று கூறியது. அன்றிலிருந்து மகளின் பணயம் தொடங்கியது. ஏனெனில் வலிகளும், தனிமைகளும், அலைச்சல்களும் நிறைந்த துண்பக் கடலை தாண்டுவதற்கு ஒரு தோணி தேவைப்பட்டது. துன்பக் கடலை தாண்டும் போது தோணியாவது கீதம்.
                                                                             **

அமைதியான நதியினிலே ஓடம், அத்தை மடி மெத்தையடி, அத்திக்காய் காய் காய், சின்ன சின்ன கண்ணனுக்கு, எங்கிருந்த போதும் உன்னை, என்னாளும் வாழ்விலே, இதய வீணை தூங்கும் போது. காகித ஒடம், காதல் சிறகை, காலமென்னும் நதியினிலே,, கண்ணனின் சந்நிதியில், காவேரி ஓரம், மாலை பொழுதின் மயக்கத்திலே, மலர்ந்தும் மலாராத பாதி மலர், நானே வருவேன், நெஞ்சம் மறப்பதில்லை, பார்த்த ஞாபகம் இல்லையோ, பூந்தேனில் கலந்து, பொழுதும் விடியும், லவ்பேட்ஸ் லவ்பேட்ஸ், சிட்டுக்குரவி முத்தம் கொடுத்து, அழகே வா, அருகே வா, சொந்தமில்லை பந்தமில்லை, தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே, ஊர் உறங்குது பொழுதும் உறங்குது, தன்ணிலவு தேனிறைக்க, சொன்னது நீதானா?, உனது மலர் கொடியிலே, உன்னை ஒன்று கேட்பேன், பதினாறு வயதினிலே, செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம், பக்கத்து வீட்டு பருவ மச்சான், தேடினேன் வந்தது, உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன், பார்த்தால் பசி தீரும், தங்கத்திலே ஒரு குறை, தென்றல் வரும், ஆடாமல் ஆடுகிறேன், உன்னை நான் சந்தித்தேன், இரவுக்கு ஆயிரம் கண்கள், பச்சை மரம் ஒன்று, காலமென்னும் நதியினிலே. கண்ணா கருமை நிற கண்ணா போன்றவை இந்த தாயுள்ள பிள்ளைக்கு இன்னொரு மடியாயின.
ஆசையே அலைபோல, அதிசய ராகம், அன்னக்கிளி, சின்ன கண்ணனுக்கு, சின்னக் கண்ணன் அழைக்கிறான், தெய்வம் தந்த வீடு, என் இனிய பொன்னிலாவே, உன்னைவிட்டால் யாருமில்லை, இலக்கணம் மாறுதோ, இளமை என்னும் பூங்காற்று, இந்த மன்றத்தில் ஓடி வரும், இரவும் நிலவும், காலையும் நீயே மாலையும் நீயே, காலங்களில் அவள் வசந்தம், மாமன் வச்சான், மயக்கமா கலக்கமா, மௌனமான நேரம், சிங்காரவேலனே தேவா, ஒரு வானவில் போலே, மோகன புன்னகை, போய் வா நதியலையே, தேனே தென்பாண்டி மீனே, சம்சாரம் என்பது வீணை, சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தில் நல்ல உள்ளம், உள்ளம் என்பது ஆமை, நந்தா என் நிலா, வான் நிலா நிலா, காதலின் பொன் வீதியில், வசந்த கால கோலங்கள் போன்றவைகளும், இந்த சீசனுக்கான பஞ்சுஅருணாசலத்தின் முதற்பாடலாகிய பொன்னெழில் பூத்தது புதுவானில் வரை இன்னொரு மடியாய் இருக்கின்றன.
                                                                                       **

இந்தப் பயணத்தின் தோணி கொண்டு தாண்டும் போது ஓரிடத்தில் தரைதட்டி கண்டடைந்ததுதான், மூன்றானம் பிறையின் கண்ணே கலைமானே. அன்றிலிருந்து எங்கே பயணம் செய்து விட்டு வந்தாலும், அலைந்துவிட்டு வந்தாலும், கண்ணே கலைமானே தவிர்க்க முடியாத தாய்வீடாகியது. தரிப்பிடமாகியது. யூடியுப்பில் கண்ணே கலைமானே 802896 வியுக்களில் ஆகக் குறைந்தது 5வீதமாவது மகளால் நிகழ்த்தப்பட்டிருக்கும். ஐபேட்டும், ரெப்பும், லெப்டொப்பும், ஸ்மார்ட் போன்களும் இந்த பணயத்தில் தேய்ந்துவிட்டிருந்தன.

பின்னொருநாளில் மகள் கண்ணே கலைமானேயின் அடுத்த கட்டத்துக்குள் தாவி விட்டிருந்தது. சுருமை அக்கியொன் மெய்ன், (சத்மா (ஹிந்தி), ஜேசுதாஸ்), கதாகெ கல்பனாகெ. (வசந்த கோகிலா (தெலுங்கு), எஸ். பி. பாலசுப்ரமணியம்), அதற்குப் பின்னர் எஸ்.பி. பாடாத பாடல்களில் கண்ணே கலைமானே, பின்னர் வயலின், பல வகையான கிட்டார்கள், புல்லாங்குழல், வீணை, பியானோ, பல்வேறு தனித்த இழை இசைக் கருவிகள், மேலும் மேடை நிகழ்ச்சிகள், பல சுப்பர், சீனியர், ஜீனியர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஆண்களும் பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், இளைஞர்களும், இளைஞிகளும், கிழவர்களும், கிழவிகளுமாகவும், கரோக்கிகளாகவும் சாத்தியமான மொழிகளிலும் புகுந்து விளையாடியிருந்தனர். இதன் காரணமாக கண்ணே கலைமானே இசையின் எல்லா சாத்தியப்பாடுகளையும் சாத்தியப்படுத்தியது. அந்தளவுக்கு கண்ணே கலைமானேயில் என்ன இருக்கிறது?.
                                                                  **

கமலஹாசன், பாலுமகேந்திரா ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகளைப் பெற்றுக் கொடுத்து காலங்களையும் மீறி, ரசனை மாற்றங்களையும் மீறி, மனதையும் பாதித்து, அதில் என்றும் நிற்கின்ற செவ்வியல்தன்மை கொண்ட, அற்புதமான திரைப்படம்தான் மூன்றாம் பிறை. 1981 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசன் தனது நோய்க்கு சிகிச்சை பெற  அமெரிக்கா செல்லும்போது தி.நகரிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் வழியில் இயக்குனர் பாலு மகேந்திரா காரில் உடன் செல்கையில் இரண்டே நிமிடங்களில் எழுதிய வரையறுக்க முடியாத ஆயுளைக் கொண்ட பாடல்தான் கண்ணே கலைமானே. ஜேசுதாசும், இளையராஜாவும், பாலு மகேந்திராவும் கண்ணதாசனின் பாடல்களுக்கு அற்புதமாக உயிர் கொடுத்திருப்பார்கள்.


விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படு;ம் விஜி (சிறிதேவி) மருத்துவ பரிசோதனைக்கு செல்லும் வழியில் தவறிவிடுகிறார். பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்பட, அங்கு அவரைச் சந்திக்கும் சுப்ரமணி (கமலஹாசன்) என்னும் ஆசிரியர் அவளைக் காப்பாற்றி அவரின் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றான். விஜியின் நிலைகண்டு பரிதவிக்கும் சுப்ரமணி ஒரு கட்டத்தில் அவள் மேல் அவனை அறியாமலேயே காதல் கொண்டு அவளை பாதுகாக்கிறான். அந்தச் சூழலில் இடம்பெறும் பாடல்தான் இது. கண்ணே கலைமானே பாடலில் மூன்றாம் பிறை திரைப்படத்தின் மொத்தக் கதையும் சொல்லப்பட்டிருக்கும். இதுதான் கண்ணதாசன்.

இப் பாடல் இளையராஜாவுக்கு மிகவும் சவாலான பாடலாகும். காதலிக்கு உடம்பில் பிரச்சினையில்லை. மனதில்தான் பிரச்சினை. மனதளவில் குழந்தையாய் இருப்பவளிடம் பாடும் தாலாட்டு. அதில் அதிகம் தாய்மையும் இருக்க வேண்டும். ஆழ்ந்த சோகமும் இருக்க வேண்டும். எனவே இரண்டையும் கலந்து காபி ராகத்தில், ஜேசுதாசின் மனத்தின் அடித்தளத்திலிருந்து சோகமாய் ஊற்றெடுக்கும் மெலன்ஜொலிக்கல் குரலில் வரும் அற்புதமான பாடலாக அமைந்துவிட்டிருக்கும். இந்தப் பாடலில் ராஜாவின் புலாங்குழல் பல்லவிக்கு இடையில் புகுந்து ஒரு ராஜாங்கமே நடாத்தியிருக்கும்.

கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி
கண்ணே கலைமானே….
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோஓராரிராரோராரிராரோஓராரிராரோ

ஜனனி தினகரன் என்பவர் மொழிபெயர்த்த இந்தப் பாடலின் உயிரை உருக்கும் ஆங்கில வரிகளும் எங்களின் உயிரைப் பிழிகிறது.
Dear beautiful deer, I found you like a young peacock
I see you in the mornings and evenings (implying all day)
I’m asking god for this
(lullaby syllables)
(lullaby syllables)
If you were a mute, it is peaceful in a way
If you were poor, there is a peace in that too
You are a parrot’s little one or a cuckoo’s little one singing about the earth
For some reason, god has deceived you, fate has made you mentally ill
I felt love, I have dreamed and nurtured the love
Sweet one, I have filled my thoughts with you
I became your life, don’t ever forget me
Without you, what is peace? You are my sacred sanctuary
(By Janani Dhinakaran, The Outsider's Journey)

கண்ணதாசன் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்துவிட்டு அமெரிக்கா சென்றவர், அமெரிக்காவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கவிஞரின் பூத உடல் சென்னைக்கு திரும்பி வந்த போது அப்போது ஆறு வயதான கவிஞரின் மகளான விசாலியும், இளம் வயதிலேயே மறைந்துபோன கவிஞரின் மகனான கலைவாணனும் கண்ணே கலைமானே பாடலை தங்கள் தந்தை தங்களுக்கு பாடி வைத்து விட்டுச் சென்ற தாலாட்டாகவே நினைப்பதாகப் கூறினார்கள்

கன்னியின் காதலி படத்தில்கலங்காதிரு மனமேஎன்று தொடங்கிய அவரது சினிமா வரிகள் மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலைமானேஎன்ற வரிகளோடு அமரத்துவம் பெற்றது. ‘கண்ணே கலைமானே.. ‘ என்ற பாடலைப் போல், மீண்டுமொரு ரசவாதப் பாடல் திரையில் தோன்ற வாய்ப்பேயில்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

கண்ணே கலைமானே ஏன் எனக்கும் மகளுக்கும் இன்னும் பிடித்துப் போகிறது? வரிகளுக்காகவா? இராகத்திற்காகவா? இசைக்கோர்வைக்காகவா? அடிமனத்திலிருந்து பீறிட்டெழும் சோகத்தைப் பிழியும் குரலுக்காகவா? ஊட்டியின் ஊசிப்பனியின் துவாரங்களுக்குள் நுழைந்து வெளிவரும் நுண்ணனு ணர்வுகளைக் காட்டிநிற்கின்ற ஒளிப்பதிவுக்காகவா? விஜிக்காகவா? சுப்ரமணிக்காகவா?

துன்பக் கேணியிலிருந்து தாண்டும் நிச்சயமற்றிருக்கும் குழந்தையுள்ளம் கொண்ட காதலிக்கும், காதலனுக்குமானது இந்தப் பாடல் என்று யாரு சொன்னது?
ஆங்கே இருக்கும் சுப்ரமணியும், விஜியும் நானும் மகளும்தான்.


கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி…”

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...