Sunday, August 14, 2016

சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:


சகிலா, சுயசரிதை: கவர்ச்சி நடிகையின் கதையல்ல. ஒரு பெண்ணுடைய வாழ்க்கையின் பச்சையான எதார்த்தங்கள்:
(1)
இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்லை. 
கிளர்ந்தெழுதலும் இல்லை.
ஒரு பெண்மையின் சதைகளைத் தாண்டிய
துயர் கவிந்த இதயத்தின் வலிகளைத் தவிர.

(2)
“இந்த நூல் சுயசரிதையல்ல. போராடும் ஒவ்வொரு மனிதனதும் ஒப்புதல் வாக்குமூலம் இது. நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுகிறேன். மிக அதிகமாக போராடிய ஒரு மனிதனின் - வாழ்க்கையின் பெருமளவு கசப்புக்களை விழுங்கும் நிலைக்கு ஆளானவனின் - பெருமளவு எதிர்பார்ப்புக்களை கொண்டிருந்த மனிதனொருவனின் கடமை இது”.
- நிக்கொலஸ் கஸான்த்சாக்கீஸ்

(3)
பெற்றோருடன் சேர்த்து 9 பேருள்ள குடும்பத்தில் பிறந்து (தகப்பனின் முன்னைய தாரத்துக்கு இரு பிள்ளைகள், பின்னைய தாரத்துக்கு சகிலா உட்பட ஐந்து பிள்ளைகள்), கற்பதற்கு கஸ்டப்பட்டு, பாடசாலைகளில் நிலவிய பல்வேறு வடிவமான வன்முறைகளின் (உடலியல், பாலியல் போன்ற துஸ்பிரயோகங்கள்) காரணமாக பல்வேறு பாடசாலைகளுக்கு மாறி, கல்வியில் தோல்வியடைந்து, சிறு வயதில் தந்தையால் மதுப்பழக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தாயினால் பதின்மவயதில் பணத்திற்காக பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்பட்டு, மீண்டும் அதே பெற்றோராலும், குடும்பத்தவராலும், தமிழ் சினிமாவுக்கு நடிக்க அனுப்பப்பட்டு, அங்கு நடந்த கொடுமைகள் காரணமாக சினிமாவை புறந்தள்ளி ஒதுங்கி சாதாரண கனவுகளைக் கொண்ட வாழ்க்கை வாழலாம் என்று வந்த பெண்ணை, மீண்டும் மலையாள சினிமாவுக்கு அனுப்பி, அங்கு எதிர்பாராத வெற்றிகளை பெற்று, முடிசூடா ராணியாக்கி, இரவு பகலாக கஸ்டப்பட்டு உழைத்து, சேர்த்த பணத்தையும், சொத்துகளையும், வாழ்க்கையையும் ஏமாற்றி அபகரித்து, சினிமாக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, மீண்டும் பல ஆண்களால் எமாற்றப்பட்டு, சக்கையாக உறுஞ்சப்பட்டு, அநாதரவாக நடுத்தெருவில் வீசப்பட்ட ஒரு பெண்ணின் இரத்தமும் சதையுமான, கண்ணீரும் கம்பலையுமான சாட்சியம்தான் இந்த சுயசரிதை. மலையாளத்திலிருந்து சிறிபதி பத்மனாபா தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். உயிர்மை பதிப்பக வெளியீடு (224 பக்கங்கள்).

தான் ஏன் கல்வியில் தோல்வியுற்றேன் என்று பாடசாலைக் கல்வி மேல் வைக்கும் விமர்சனம் இன்றைய கல்விமுறை மீது வைக்கப்படுகின்ற சாட்டையடி. “பணம் பெரிதென்று நான் நினைப்பதேயில்லை. என்னைப் பொறத்தவரை பணம் ஒரு வெறும் காகிதம் மட்டுமே. அதன் மதிப்பு அவ்வளவுதான். எனக்கு விருப்பங்கள் குறைவு. அதனாலேயெ பணத்தால் என் வாழ்க்கையை நிர்ணயிக்க முடியாது” என்பதில் பாசாங்குகளை காணமுடியாதுள்ளது. இந்த இருவிடயங்களுமே இந்தப் பெண்ணின் தனித்துவத்திற்கு போதுமான சாட்சிகளாகும். பரந்த ஞாபகசக்தியுள்ள. ஆளுமையுள்ள, உருது, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அத்துடன் ஆங்கிலத்தையும் மிக சரளமாக பேசத் தெரிந்த பெண்ணின் கதை. இங்கே எந்த கிளுகிளுப்பும் இல்லை. கிளர்ந்தெழுதலும் இல்லை. தன் வாழ்க்கையின் பக்கங்களைச் சொல்கிறார். தனது வாழ்க்கையின் இனிப்பும் கசப்புமான பெண்மையை சொல்கிறார். வேதனையை சொல்கிறார். முடிந்த அளவுக்கு உண்மையாக இருக்கப் பார்க்கிறார். இவரது வானொலி, தொலைக்காட்சி பேட்டிகளிலும் இந்த நேர்மையின் ஒத்த தன்மையை காணமுடியும்.
“தென்னிந்தியர்களின் மதியங்களையும், இரவுகளையும் ரதிபாவங்களாக மாற்றிய புகழ்பெற்ற நடிகை சகிலாவின் சுயசரிதம் இது. சினிமாவுக்கும் வாழ்க்கைக்குமிடையில் சகிலாவின் துயரம் நிறைந்த பக்கங்கள் நம்மை சஞ்சலமடையச் செய்பவை. ஒரு பெண்ணுடலாகவே மட்டும் பார்க்கப்படும் சகிலாவின் பிம்பத்தை கடந்த ஒரு துயர்மிகுந்த இதயத்தை, காமத்தின் வேட்டை நிலங்களை கடந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை இந்நூல் பேசுகிறது. சகிலா தன்னுடைய வாழ்வை எந்தப் பாசாங்குமில்லாமல் தன்மேல் விழும் வெளிச்சத்திற்கு அடியில் இருக்கும் கனத்த இருளை நேரடியாக வெளிப்படுத்துகிறார்”.
மொத்தத்தில் வலிகளினதும், ஏமாற்றல்களினதும், கண்ணீர்களினதும் காவியம்.
- அம்ரிதா ஏயெம்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...