Thursday, June 2, 2016

அண்மைய வெள்ள அனர்த்தம்: சில குறிப்புகள்


அண்மைய வெள்ள அனர்த்தம்: சில குறிப்புகள்
.எம்.     றியாஸ் அகமட்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.
.
 

   

 "நீங்கள் உங்கள் படுக்கையை  அசுத்தப்படுத்தினால்  அந்தக் கழிவுப் பொருட்களாலேயே  மூச்சுத் திணறி முடிவடைவீர்கள். மனிதன் பூமியை எச்சில்படுத்தினால் அவன் தன் மேலேயே எச்சில் படுத்திக் கொள்கிறான். பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன். இது எங்களுக்குத் தெரியும். இங்கு எல்லாமமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிந்ணைதிருக்கின்றதுபூமிக்கு என்ன நேர்கிறதோ அதேதான் மண்ணின் மைந்தர்களுக்கும் நேரிடுகிறது. உயிர்களின் வாழ்க்கை வலையை மனிதன் பின்னவில்லை. அதில் அவன் ஒரு இழைதான். எனவே அந்த வலைக்கு என்ன செய்கிறானோ  அதை மனிதன் தனக்குத்தான் செய்து கொள்கிறான்."



'சீத்தல்' என்ற சிவப்பிந்தியத்  தலைவன் அமரிக்க அரசுக்கு எழுதிய கடிதத்திலிருந்து.
                       
                       
வெள்ளப்பெருக்கு என்பது சாதாரண நிலைகளில் நீரால் மூடப்படாத நிலப் பிரதேசங்களினால் பல் வேறு காரணங்களினால் நீரினால் மூடப்படுதல் என ஓரளவு வரையறுக்கலாம்.

வெள்ளப்பெருக்கானது மழைவீழ்ச்சி காரணமாகவும், ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து அது தாழ்நிலங்களை நோக்கி செல்வதன் காரணமாகவும், பலமான காற்று, தாழமுக்கம், கடற்கொந்தளிப்பு போன்றவைகளினால் கடல்நீர் தரைக்குள் செல்வதன் காரணமாகவும், நிலநடுக்கம், எரிமலை போன்றவைகளினால் நீர்த்தேக்கங்கள் சேதமாக்கப்படுவதன் காரணமாகவும், ஒழுங்காக திட்டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவை காரணமாகவும் ஏற்படுகின்றது.
 
இந்தக் காரணிகள் எல்லாம் புதிய உலக ஒழுங்கு என்ற ஒரு காரணியுடன் சங்கிலித் தொடர்பு உள்ளவை போன்று தெரிகின்றன. இலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டு, சூழலைப் புறக்கணித்த உற்பத்தி முறையினால் காலநிலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் மற்றைய காரணிகளுடன் சேர்ந்து பாரிய அனர்த்தங்களாக உருவெடுக்கின்றன.

சமீபகாலமாக அதிக மழைவீழ்ச்சியும், அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுதலும் ஒரு சாதாரண விடயமாக மாறிவருகின்றது. இது பற்றிய சில குறிப்புகளை பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். மேலே குறிப்பிட்ட காரணிகளுள் திட்டமிடப்படாத வகையில் நடைமுறைப்படத்தப்பட்ட, நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களே முக்கியமான காரணியாக மற்றைய துணைக் காரணிகளுடன் சேர்ந்து இருக்கலாமென்று நினைக்கின்றேன்.

சுனாமிக்குப் பிறகு திட்டமிடப்படாத வகையில் கிராமத்திற்குள் நிர்மாணிக்கப்பட்ட உள் வீதிகளைக் குறிப்பிடலாம். பல் வேறு காரணங்கள் காரணமாக, அரசும், அரச சார்பற்ற நிறுவனங்களும் பல தடவைகள் ஒரே வீதியை திட்டமிடாத வகைகளில் நிர்மாணித்தன. இதன் காரணமாக உள் வீதிகளின் உயரம் உயர, குடியிருப்பு வளவுகள் மேலும் தாழ்ந்து போயின. இதனால் பல ஆண்டுகளாக இயற்கை நீர் வடிகால் அமைப்பைக் கொண்டிருந்த பிரதேசங்களின்  புவியியல் அமிசங்கள் மாற்றத்துக்குள்ளாகி உயர்த்தப்பட்ட வீதிகளினால் நீர் வடிந்தோடுவது தடுக்கப்பட்டு குடியிருப்புக்களில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. தாழ்த்தப்பட்ட வளவுகளை நிரப்புவதற்கு வசதியுள்ளவர்கள் வேறு இடங்களிலிருந்து மண் அகழ்ந்து கொண்டுவர வேண்டியிருந்தது. இதன் காரணமாக அகழப்பட்ட பிரதேசங்களும் வெள்ளப்பெருக்குக்குள்ளாகின. இது போல மண் அகழப்படும் ஆயிரக்கணக்கான இடங்கள் சட்ட வரைமுறைகளுக்கு உட்படகின்றனவா என்பதும் கேள்விக்குறியே. இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளும் மேலும் நிலைமைகளை மோசமாக்குகின்றன.




சமீபத்தில் உயரமாக அமைக்கப்பட்ட பெருந்தெருக்களும், நீர் வடிந்தோடாமல் தடுத்து வெள்ளப்பெருக்கிற்கு பாரிய பங்களிப்பினை வளங்கிக் கொண்டிருப்பதனை, ஒவ்வொரு வருடமும் அவர்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் முயன்று தவறி கற்று புதிது புதிதாக மதகுகள், கான்கள் வைத்து திருத்தம் செய்வதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக அதற்கு ஒரு அல்லது இதற்கு ஒரு அபிவிருத்தித் திட்டம் என்ற அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகளை குறிப்பிடலாம். இந்தக் கொங்கிறீட் வீதிகள் இலங்கைக் காலநிலைக்கு உகந்தவையா என்ற பேசாத அல்லது பேச அச்சப்பட்ட ஒரு பக்கமும் உண்டு. ஒரு வளவுக்குள் இருந்து இன்னொரு வளவுக்குள்ளும், ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெருவிற்கும் நீரை வடிந்தோடவிடாமல் ஒவ்வொரு வளவையும் சிறு குளங்களாக்கிய பெருமையும் இக் கொங்கிறீட் வீதிகளையே சாரும்.

இறுதியாக கூறப்போனால், இலாப நோக்கைக் கொண்ட உற்பத்தி முறைமை எவ்வாறு உலகின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி அனர்த்தங்களுக்கு வழிகோலுகின்றதோ அதனுடன் சேர்த்து இலாப நோக்கைக் கொண்ட திட்;டமிடப்படாத அபிவிருத்தித் திட்டங்களும் அதிர்ச்சி அளிக்கக் கூடியவகையிலும் துரதிருஸ்டமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு அனர்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கின்றேன்.







பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...