Thursday, June 2, 2016

சிவப்பு மற்றும் மஞ்சள், பச்சை, கறுப்பு நிற மழைகள்-.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்

red1பறக்கும் தட்டுக்கள், வானில் ஒளிப் பிழம்புகள் தோன்றுதல், காரணமறியா அதிர்வுகள், சத்தங்கள், நிறமழை, தரை நோக்கி மீனினங்கள், பாம்புகளின் படையெடுப்புக்கள் என்றும், அதனுடன் சேர்ந்து கற்பனை, புராணம், புனைவு, யதார்த்தம் போன்றவைகளுடன் சேர்ந்து மாந்திரிகத்தன்மையாக எப்போதும் இலங்கையானது தன்னை நோக்கி ஒரு கவனஈர்ப்பை குவித்து வந்திருக்கின்றது. இதற்கு இலங்கையின் அமைவிடம், முதல் மனிதன், மொழி தோன்றியமை போன்றவைளும் காரணமாக இருக்கலாம். அந்த வகையில் இலங்கையின் நிறமழைகள் பற்றி கவனம் செலுத்தலாம் என நினைக்கின்றேன்.

கடந்த காலங்களில்  வெல்லவாய, ஹந்தபன்கல, புபுதுவௌ, மன்னம்பிட்டிய,

செவனகல, பதியதலாவ, பொலநறுவ, ஹிங்குராகொட, மொனராகல, அலுத்வெல (அம்பலாங்கொட), பாணமுற (கொலன்னா), ரத்னபுர, உடதும்பர, தம்புல்ல (மீறஹான, கலுந்தெவ, அதாபெடிவௌ), மெதிரிகிரிய, பதுளை, கிரிந்தை (திக்வெல்லை), மாத்தறை போன்ற இலங்கையின் பல பகுதிகளில் மழை சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் பெய்து வந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கதைகளும், ஊகங்களும் உலாவத் தொடங்கியுள்ளன. எனவே நிறமழைகள் பற்றி எனக்குத் தெரிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

1.         அறிமுகம்:
மழை சிவப்பாக மட்டுமல்ல, மஞ்சளாக, கறுப்பாக பெய்துள்ளதாக பல நூற்றுக்கணக்கான வருடங்களாக அறிக்கையிடப்பட்டு வந்துள்ளது. சிவப்பு மழையானது இந்தியாவின் கேரளாவின் மாநிலத்தில் 1896 முதல் இந்த வருடம் செப்ரம்பர் வரை பல தடவைகள் பெய்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஜூலை 25, செப்ரம்பர் 23, 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிவப்பு மழை அதிக கவனஈர்ப்பை பெற்ற ஒன்றாக இருந்துள்ளது. இந்த சிவப்பு மழை இரத்த மழை என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்த மழை ஆடைகளில் படும்போது ஆடைகள் இளஞ் சிவப்பு நிறமாக சாயமேற்றப்படுகின்றது.

 2.         காரணங்கள்:
இதற்கு பல்வேறு காரணங்களை பல்வேறு கருத்துப் பள்ளிகள் கற்பித்துக் கொண்டிருக்கின்றன. எனினும் பிரதான கருத்துப் பள்ளிகளாக உயிரியல், வானியல்-உயிரியல்-பௌதீவியல், வானிலையியல், சமய-கலாச்சார-நம்பிக்கை இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு திறத்தாரும் அவரவர் சார்ந்த பள்ளிகளுக்குரிய கருத்துக்களையும் ஆதாரங்களையும் தெரிவித்து இயங்கிவருகின்றார்கள்.

நுண்ணுயிர்களின் வித்திகள் பூமியிலிருந்து ஆகாயத்திற்கு சென்று பின்னர் மழையுடன் பூமிக்கு வருகின்றன. இந்த நுண்ணுயிர்களே இந்த மழைக்கு பல்வேறு நிறங்களைக் கொடுக்கின்றன என்று உயிரியல் கருத்துப் பள்ளி தெரிவிக்கின்றது.

வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த துகள்கள், விண்கற்கள் போன்றவற்றிலிருந்த இரசாயனப் பொருட்கள், மூலகங்கள் அல்லது பறக்கும் பொருட்களிலிருந்த அல்லது ஏதோவொரு வகையில் நமது பூமிக்கிரகத்தின் வளிமண்டலத்தில் பிரவேசித்த வேற்றுக் கிரக நுண்ணங்கிகள் மழைக்கு இவ்வாறான நிறங்களைக் கொடுக்கின்றன என்று வானியல்-உயிரியல்-பௌதீகவியல் கருத்துப் பள்ளி தெரிவிக்கின்றது.

ஏனைய பிரதேசங்களிலிருந்து அல்லது பாலைவனப் பிரதேசங்களிலிருந்து காற்று மூலம் வானிற்கு கடத்தப்படுகின்ற தூசுகள், பின்னர் மழையுடன் வரும்போது மழைக்கு நிறத்தைக் கொடுக்கின்றன என்கின்றனர் வானியியல் கருத்துப் பள்ளியினர்.

நிறமழையானது உலக முடிவுடனும், மனித குல அறச் செயற்பாடுகளுடனும், தீமைக்கு எதிரான முன்னறிவிப்புகளுடனும் தொடர்புபட்டதென்கின்றனர் சமய-கலாச்சார-நம்பிக்கை கருத்துப் பள்ளியினர்.
red-2

3.         நிறமழையின்இயல்புகள்:
பல்வேறு பிரதேசங்களில் பெய்த நிற மழைகளை அடிப்படையாகக் கொண்டு நிற மழையின் இயல்புகளாக பின்வருவனவற்றை அடக்கலாம்.
1)         நிற மழைகள் சிவப்பு நிறத்தில் மட்டமல்லாது மஞ்சள், பச்கை, கறுப்பு மழைகளாகவும் இருக்கலாம். ஆனால் அதிகமாக சிவப்பு நிறத்திலே மழைகள் இருக்கும்.
2)         ஆரம்பத்திலிருந்ததைவிட சில மாதங்களுக்குப் பிறகு நிற மழை வீழ்ச்சி குறைய  ஆரம்பிக்கும்.
3)         பொதுவாக நிற மழை பலத்த சத்தத்துடனான இடியுடனும், மின்னலுடனும் பெய்ய ஆரம்பிக்கும்.
4)         சிலவேளை தோப்புகளிலிருந்த மரங்களின் இலைகள் உதிர்ந்து விழலாம்.
5)         சில இடங்களில் கிணறுகள் தோன்றி மறையலாம்.
6)    குறிப்பிட்ட பகுதிகளின் குறிப்பிட்ட பரப்பிலேயே (சில சதுர கிலோமீற்றர்கள்) பெய்யும். சில வேளை சாதாரண மழைபெய்கின்ற இடத்திலிருந்து சில மீற்றர்கள் தூரங்களுக்கு அப்பாலும் பெய்யும்.
7)         குறுகிய நேரத்திற்கே (பொதுவாக 10- 30 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்திலேயே) பெய்யும்.
8)   பொதுவாக ஒரு மில்லி லீற்றர் மழை நீரானது ஒன்பது மில்லியன் சிவப்பு துணிக்கைகளையும், ஒரு லீற்றர் மழையானது 100 மில்லிகிராம் திண்மப் பொருளையும் கொண்டு காணப்படும்.

4.         பல்வேறு கருத்துப் பள்ளிகளின் கோட்பாடுகள்:
 இந்த நிறமழைகளிற்குரிய விளக்கங்கள் காலத்திற்குக் காலம் மேற்குறிப்பிடப்பட்டது போன்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளால் தெரிவிக்கப்பட்டு வருகின்றபோதும், அவை ஒவ்வொன்றும் பல்வேறு காரணங்களால் பல்வேறு பள்ளிகளால் நிராகரிக்கப்படுகின்றன. எனவே சற்று சுருக்கமாக பல்வேறு கருத்துப் பள்ளிகளின் விளக்கங்களையும், அதற்கு எதிராக நிலவுகின்ற சர்ச்சைகளையும் நோக்குவோம்.

 வானியல்உயிரியல்பௌதீகவியல்
இலங்கை, இந்திய நிற மழைகளைப் பொறுத்த வரையில், இது சார்ந்த கருத்துக்களை மில்டன் வெய்ன்றைற், சந்திரா விக்கிரமசிங்க, கொட்பிறி லுர்யிஸ், சந்தோஷ் குமார் போன்றவர்கள் முன்வைத்து வருகின்றார்கள்.

இவர்கள் அண்டவெளியில் உயிர்கள் எங்கும் காணப்படுகின்றன. அண்டவெளியில் பரம்பியிருக்கின்ற உயிர்கள், அண்டவெளியில் இருந்த பாறைகள், துண்டுகள், துகள்கள் போன்றவற்றின் மூலம் விண்ணிலிருந்து பூமிக்கு வந்து உயிரினங்களை தோற்றுவித்தது என்ற பன்ஸ்பேமியா உயிர்த் தோற்றக் கொள்கையை ஆதரிக்கின்றவர்கள். அதாவது அண்டவெளியிலுள்ள கிரகங்களிலிருந்து பிரிந்து வந்த விண் துகள்களுடன் வந்த வித்திகளே அல்லது துகள்களே மழையுடன் சேர்ந்து நிற மழைகளாகப் பொழிகின்றன என்கின்றனர்.

இதற்கு அவர்கள் ஆதாரங்களாக, விண்துகள்களிலுள்ள இரசாயன மூலகங்கள் பலவும் இந்த வித்திகளில் காணப்படுவதாகவும், அத்துடன் 300 பாகை செல்சியஸ் (572 பாகை பரனைட்) வெப்பத்திலும் இந்த வித்திகள் வளர்ச்சியைக் காட்டினவென்றும் கூறுகின்றனர். அத்துடன் கலக்சிகளிலுள்ள தூசு மேகங்கள் வெளிவிடும் ஒளியையும் வெளிவிட்டன என்றும் கூறுகின்றனர். எனவே பிரபஞ்சத்தில் மற்ற கிரகங்களிலும் உயிர்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

 இலங்கையைப் பொறுத்தவரையில், இலங்கையின் சிவப்பு மழையில் காணப்பட்ட றெகலோமோனஸ் என்ற பச்சை அல்காவானது உலகில் அரிதாக காணப்படும் ஒரு அல்கா என்றும், அது அண்டவெளியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் அண்டவெளி உயிரியலாளர்களும், பௌதீகவியலாளர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதற்கு எதிரான சர்ச்சைகள்:
ஆனால் மற்றைய வகுப்பார்களோ, இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துக்கள் யாவும் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் (உதாரணமாக: இலங்கையில் சிவப்பு மழையில் காணப்பட்ட றெகலேமோனஸ் என்ற பச்சை அல்கா அபூர்வமானது அல்ல எனவும், உலகில் எங்கும் பரவிக் காணப்படும் அல்கா இனம் என்றும், இந்த அல்காவில் 1738 இனங்கள் காணப்படுகின்றன என்றும் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்), இதனைத் தெரிவிக்கின்ற வகுப்பார் பலர் பௌதீகவியலாளராக இருப்பதால் உயிரியல் அறிவு குறைவு என்றும், ஊடகப் பிரபல்ய விரும்பிகளாக இருக்கலாம் என்றும் கூறி அதனை ஏற்பதில் தயக்கம் தெரிவிக்கின்றார்கள்.

 )     வானிலையியல்
வரலாறானது வானிலிருந்து பல்வேறு பொருட்கள் மழையுடன் பொழிந்துள்ளதாக பதிந்து வைத்துள்ளது. மீன் பொழிந்துள்ளது. பறவை பொழிந்துள்ளது. தவளை பொழிந்துள்ளது. இறால் பொழிந்துள்ளது. முருகைக் கல் பொழிந்துள்ளது. இவைகள் நீர்ப் பரப்பிலிருந்து (பறவைகள் தவிர) உறிஞ்சப்பட்டு தூரப் பிரதேசங்களில் விடுவிக்கப்படுகின்றன. அப்போது விலங்குப் பொழிவுகள் நடைபெறுகின்றன. இந்த வகையிலேயே வானியல் பள்ளிப் பிரிவினர் சிவப்பு மழைக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

பாலைவனத்திலிருந்து அல்லது உலர் பிரதேசங்களிலிருந்து காற்று மூலம் வளிமண்டலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட தூசுகள், மழையுடன் சேர்ந்து நிறமழைகளாக பொழிகின்றன. சமீபகாலமாக சிவப்பு மழை சம்பந்தமான நிகழ்வுகள் கிழக்கு ஐரோப்பாவில் அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது. 1903ம் ஆண்டு இங்கிலாந்தில் பெய்த சிவப்பு மழைக்கு சஹாரா பாலைவனத்திலிருந்து வளிமூலம் கடத்தப்பட்ட தூசுகள் காரணமெனக் கூறப்பட்டது. அது போல கேரளாவில் இடம்பெற்றதற்கு அராபிய பாலைவனங்களிலிருந்து பெற்ற துர்சுகள் காரணமெனக் கூறப்பட்டது. இதற்கு வலுச் சேர்ப்பதற்காக பல்வேறு ஆய்வுகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டன. இலங்கையில் இடம்பெற்ற நிறமழைகளுக்கும் இந்தியாவின் திசையிலிருந்து வந்த காற்றின் மூலம் கொண்ட வரப்பட்ட பொருட்களே காரணமெனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்குஎதிரான சர்ச்சைகள்:
எனினும், காற்றின் திசைகளுக்கும், தூசுப் பொருட்கள் பாலைவனங்களிலிருந்து குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு பயணம் செய்ய எடுக்கும் நேரங்களுக்கும் இடையில் இருக்கின்ற பொருந்தாத தன்மை காரணமாக மற்றைய கருத்துப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பள்ளியை நிராகரிக்கின்றார்கள்.

 உயிரியல்
இந்தியாவில் இடம்பெற்ற சிவப்பு மழைக்கு ஆரம்பத்தில் அண்டவெளியிலிருந்து வந்த துகள்கள் காரணமாயிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், பின்னர் இந்திய அரசாங்கம் இதற்கு ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி ஆய்வுகளை செய்து, உள்நாட்டுப் தரைப் பிரதேசங்களில் காணப்பட்ட அல்காக்களின் வித்திகள்தான் வானுக்குப் போய் மழையுடன் சிவப்பு மழையாக பெய்தது என்ற முடிவை வெளியிட்டது.

இந்த சிவப்பு மழையில் காணப்படும் திண்மப் பொருள்களில் 90 சதவீதமானவை வட்டமான சிவப்பு துணிக்கைகளாகவும், 10 சதவீதமானவை துகள்களாகவும் காணப்பட்டன. இவைகளே மழையின் சிவப்பு நிறத்திற்கு காரணமானவையாக கருதப்பட்டன. மேலும் சிறியளவில் வெள்ளை, இளமஞ்சள், நரைநிற நீல, இளம் பச்சை துணிக்கைளும் காணப்பட்டன. இந்த துணிக்கைகள் 4 தொடக்கம் 10 மைக்ரோமீற்றர் நீளமான முட்டை அல்லது நீள்கோள வடிவினதாக காணப்பட்டது. பின்னர் இது உயிர்க் கலம் என்றும், அதற்குள் பல்வேறு அமினோவமிலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

பின்னர் வளர்ப்பூடகங்களில், வளர்க்கப்பட்டு லைகனிலிருந்து வெளிவரும் வித்தி என்று கண்டுபிடிக்கப்பட்டது. (லைகன்: பங்கசுவும், அல்காவும் உருவாக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் கூட்டணி. இது ஒன்றியவாழி எனப்புடும்). இந்த வித்திகள் லைகனை உருவாக்கும் அல்காக்களைச் சேர்ந்த ஒரு இனமான றென்ரபோலியா இனத்தைச் சேர்ந்ததெனக்  கண்டுபிடித்தனர். சிவப்பு மழை பொழிந்த பகுதி முழுவதும் அபரிமிதமாக இந்த அல்காக்கள் மரங்களின் பட்டைகளிலும், மண்ணிலும், பாறைகளிலும் காணப்பட்டன. இந்த வித்திகள் வளிமண்டலத்திற்கு உயர்த்தப்பட்ட பின்னர், மழையுடன் கலந்து சிவப்பாக பெய்தன. இந்த பிரதேசங்களில் காணப்பட்ட லைக்கன் (பங்கசும், அல்காவும் சேர்ந்து உருவாக்கும் கூட்டு உயிரிஒன்றியவாழி உயிர்) இந்த பிரதேசங்களில் போதுமான அளவு சிவப்பு மழையைத் தருவதற்கான சிவப்பு வித்திகளை உருவாக்கக்வுடிய அளவுக்கு அபரிமதமாகக் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை இலங்கையில் பெய்த சிவப்பு மழையில் றெகலோமோனஸ் என்ற பச்சை அல்கா காணப்பட்டதாக இலங்கை மருத்துவ ஆய்வு நிலையம் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கின்றது.

இதற்கு எதிரான சர்ச்சைகள்:
ஒரே நேரத்தில் எல்லா அல்காக்களும் வித்திகளை விடுவிக்கக்கூடிய அளவு எவ்வாறு இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன? அதிசயிக்கத்தக்கவாறு எவ்வாறு எல்லா வித்திகளும் வளிக்கு பரவச் செய்யப்படுகின்றன? உண்மையில் எவ்வாறு வித்திகள் எல்லாம் மேகத்திற்குள் உள்வாங்கப்படுகின்றன? என்ற கேள்விகளை மற்றைய கருத்துப் பள்ளிகளைச் சேர்ந்தோர் எழுப்பும் போது, அதற்கு விடைகளைக் காண்பது சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.

5.         முடிவுரை:

இறுதியாகப் கூறப் போனால்,

1)  வானியல்-உயிரியல்-பௌதீவியல் பள்ளிகளின் கருத்துக்களினில் உண்மையின் ஒளி சிறிய கீற்றுக்களாய் காணப்படுவதாய் தோன்றினாலும். அதனை முழு வெளிச்சமாய் தரிசிப்பதற்கு நீண்ட தூரம் இன்னும் பயணிக்க வேண்டியிருக்கின்றது. விஞ்ஞானத்தின் வியாபகம் மட்டுப்படுத்தப்பட்டதின் காரணம் அவதானிக்க முடியாததை ஆராய முடியாததாகும். அவதானிக்க முடியாததென்றால் மெய்யில்லை என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை.

 2)      வானிலையியல் கருத்துப் பள்ளிகளின் கருத்துக்களிலும் உண்மையின் கீற்றுக்கள் தெரிகின்றன. அதற்காக நீண்ட தூரம் போக வேண்டியதில்லை. நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அதிலுள்ள உண்மைகளையும், தேவையற்றவைகளையும் பிரித்தறியலாம்.

 3)       இதனை விளக்குவதற்கு, வசதியானதாக உயிரியல் பள்ளி கருத்துக்களே உகந்தது என நினைக்கின்றேன். இந்த நிற மழையானது (சிவப்பு மழையானது) 1818, 1846, 1872, 1880, 1896, 1950 களில் அறிக்கையிடப்பட்டுள்ளது. (இதில் ஒன்று சாள்ஸ் டாவினினால் அறிக்கையிடப்பட்டது). சமீப காலங்களில் 2001, 2006, 2007, 2008, 2012 களில் கேரளாவில் அறிக்கையிடப்பட்டுள்ளது. கேரளாவில் இடம்பெற்ற ஒவ்வொரு நிகழ்வின் போதும் ஆய்வுகள் செய்யப்பட்டன. எல்லா ஆய்வுகளும் றென்ரெபோலியா அல்காவின் வித்திகள்தான் சிவப்பு மழைக்கு காரணம் என்ற முடிவுகளைத் கொடுத்தன. அவதானம், கருதுகோள், பரிசோதனை, கொள்கை, விதி என்ற படிகளின் இயங்கியலில்; ஒரே மாதிரியான முடிவுகள் கொள்கை என்ற படிக்கு முக்கியமானதாகும்.

4.   எனவே இந்த நிறமழையை பூமிக் கிரகமானது தற்போது மட்டுமல்லாமல் பல நூறு ஆண்டுகளாக பெற்று வந்திருக்கின்றது. எனவே அந்தந்த காலங்களில் சுற்றுச்சூழலிருந்து விடப்படும் நுண்ணுயிரிகளின் (உதாரணம்: அல்காக்கள்) வித்திகள்தான், வேற்றுக்கிரக விண்துகள்களிலிருந்த வித்திகளைவிட நிற மழைக்கு சிறந்த காரணமாக இருக்கலாம், அதுதான் சங்கடங்கள் இல்லா உலக இயக்கத்திற்கும், மானிடர்களின் உள ஆரோக்கியத்திற்கும் அவசியமானது என்ற எனது புரிதலில் உண்மையின் ஒளி ஒருவேளை இருக்கலாம்.No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...