Wednesday, August 9, 2017

தனித்துவமான புலமைப்புலம் கொண்ட மகா கலைஞன்: பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுடனான சில மனப் பதிவுகள்.-               .எம். றியாஸ் அகமட்
   (சிரேஸ்ட விரிவரையாளர், விஞ்ஞானபீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)

நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவனாக நுழைந்தபோது. எங்களுக்கான அறிமுக அல்லது தயார்படுத்தல் நிகழ்ச்சி வகுப்புக்கள் எங்களுடைய வழமையான பாடங்களுடன் ஆறு மாதங்களுக்கு மேலாக நடக்கும். ஆனால் இப்போது அப்படி அல்ல. அவ்வாறான வகுப்புக்களுக்கு பல்கலைக்கழகத்தின் எல்லாப் பீடங்களிலிருந்தும் விரிவுரையாளர்கள் வருகை தந்து விரிவுரைகளை ஆற்றிச் செல்வார்கள் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயதானங்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள். அவ்வாறு ஒரு நாள் எங்கள் விஞ்ஞான பீடத்திற்கு வந்தவர்தான் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள். அன்றிலிருந்து இன்று வரை அவருடனான எனது பயணம் தொடருகின்றது. அன்று வந்த அவர், விஞ்ஞானபீட மாணவர்களுக்கு, எங்களது கல்விக்கு அப்பால், வாழ்க்கையை அனுபவிக்கின்ற இன்பமான, அமைதியான, சந்தோசம் தரக்கூடிய நிறைய விடயங்கள் இருக்கின்றதென்றும், அவைகளை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நிறைய விடயங்களை சொல்லித் தந்ததோடு, சர்வதேச, உள்ளுர் கலைஞர்களையும், மேதைகளையும் அவர்களின் ஆற்றுகைகளையும் எங்களுக்கு காணொளி மூலம் அறிமுகப்படுத்தினார்.

நான் மூன்றாவது ஆண்டு படிக்கும்போது, பேராசிரியருக்கு இருதய சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு எனது குரங்கு ஆராய்ச்சிகள் சம்பந்தமாக யாரோ சொல்லியிருக்கிறார்கள் அல்லது கேள்விப்பட்டிருக்கிறார். பின்னர் பல்லைக்கழகம் வந்தபோது மறக்காமல் என்னைத் தேடிவந்து சந்தித்து, எனது ஆய்வுகளைக் கேட்டுத் தெரிந்து, சந்தோசப்பட்டு, வாழ்த்திச் சென்றார். இந்த சமயத்தில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் நுண்கலைத்துறையில் பேராசிரியர் சி. மௌனகுரு, கலாநிதி சி. ஜெயசங்கர், மொழித்துறையில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, பேராசிரியர் எஸ். யோகராஜா போன்றவர்களுடன் காணப்பட்ட இறுக்கமான பிணைப்பு காரணமாக எனது வாசிப்பும், அனுபவமும் அகன்றது. நான் ஒரு நுண்கலைத்துறை மாணவனோ என்று மற்றவர்கள் நினைக்கும் அளவுக்கு பேராசிரியர் காரணமாக இருந்தது.

1964ல் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தயாரித்த இராவணேவன் நாடகத்தை, இன்னொரு தளத்தில் பேராசிரியர் சி. மௌனகுரு 2001 ல் அளித்தபோது, அதற்கு என்னை, அதாவது விஞ்ஞான பீடத்தில் விலங்கியலை சிறப்பு பாடமாக கற்றுக்கொண்டிருந்த என்னை, மேடை முகாமையாளராக போட்டிருந்தார். நாடகத்திற்கான ஒத்திகைக்கான இடம், தங்குவதற்கான இடம், உணவு, சிற்றுண்டி, போக்குவரத்து. அலங்கார, ஒப்பனைப் பொருட்கள், மேடைக்கான செட்கள், இசைக் கருவிகள், நிதி போன்றவற்றுக்கு பொறுப்பாயிருந்து செய்ய வேண்டியிருந்தது அலதியான அனுபவமாயிருந்தது. இராவணேசன் என்ற கருப்பொருள், அதிகாரத்துவம் கட்டமைத்துச் சென்ற விடயங்களை எவ்வாறு அணுகுவது, அல்லது மீள்வாசிப்புச் செய்வது அவைகளை எவ்வாறு மீள் கட்டமைப்புச் செய்வது என்ற அகன்ற அனுபவத்தை எனக்குத் தந்தது. அத எனது சிறுகதைகளிலும், எழுத்துக்களிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. “மாயமான்என்ற எனது சிறுகதை அவ்வாறு தாக்கத்திற்குள்ளானதுதான். இராவணேசனில் பணியாற்றியதன் மூலம், ஒரு அரங்கிற்கு அல்லது நாடகத்திற்கு இருக்கின்ற சக்தியையும் வலுவையும் நேரடியாக கண்டுகொண்டேன். இராணணேசனை நிறுத்த அப்போது அதிகாரத்திலிருந்த காட்டிலுள்ளவர்களும், நாட்டிலுள்ளவர்களும் பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். உயிருக்கு அச்சுறத்தலான சூழலும் நிலவியது. இவ்வாறு பல பிரச்சினைகள் நிலவியபோதும், பேராசிரியர் அவர்கள் கிஞ்சித்தும் கவலைகொள்ளாமல், அச்சப்படாமல், பதட்டப்படாமல் நிதானமாக இருந்தது, அவரின் துணிசலையும், இயல்பையும் எனக்குக் காட்டியது. இராவணேசன் எதிர்நோக்கிய பிரச்சினைகளை எனதுசெருப்புஎன்ற சிறுகதையில் ஒரு இடத்தில் கவனமாக பதிவு செய்திருக்கின்றேன். பேராசரியருடன் இராவணேசனில் எனக்கு பணியாற்றக் கிடைத்தது ஒரு கொடுப்பினையே. இராவணேசன் அனுபவங்களும், நாடக முகாமைத்துவமும் என்ற தலைப்பு பின்னர் விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று என நான் நினைக்கின்றேன். நாடகம் என்றால் ஆட்டமும் பாட்டும் என்றிருந்த எனக்கு அது பங்குகொள் கற்கையாக மாறி அது எனது அனுபவத்தை இன்னும் விரிக்கச் செய்தது. நாடகச் செயன்முறை என்பது ஒரு கற்றல் முறை என்பதற்கு நான் ஒரு சாட்சியாக இன்னும் இருக்கிறேன் என நினைக்கிறேன்.


நாம் வாழுகின்ற சூழலில் நமக்கு முன்மாதிரிகளைப் (Role Model) பார்ப்பது அரிது. எனக்கு பேராசிரியர் முன்மாதிரியாகவே தெரிந்தார். அவருடைய விரிவுரைகளிலும், பட்டறைகளிலும் இருந்திருக்கிறேன். பல்லைக்கழக ஆசிரியர் விருத்தி நிகழ்ச்சி (Staff Development Programme) கற்கை நெறியில் எனக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அவர் கற்பித்தல் கலை கைவரப்பெற்றவர். தான் என்ன பாடம் படிப்பிக்கப் போகிறேன். என்ன தலையங்கம், உப தலையங்கங்களை தொடப் போகிறேன். ஏவ்வளவு நேரம் ஒவ்வொரு விடயத்திற்கும் எடுக்கப் போகின்றேன் என்று சொல்லவிட்டு, தெளிந்த ஆற்றோட்டம் போல சொன்ன மாதிரியே செய்து முடித்துவிடுவார். எனது மாணவர்களும் என்னை அப்படி இன்று சொல்வார்களானால் அது அவரிடமிருந்து கற்றுக்கொண்டதாகவே இருக்கலாம். நல்ல ஆசிரியரான அவரிடமிருந்தே நேரமுகாமைத்துவத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆய்வுகள் எழதுபவன். தமிழில் அலுப்பில்லாமல் படிக்கக்கூடிய கட்டுரை வகைமாதிரிகளை அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தேவையில்லாத சொற்களை, வரிகளையும் தவிர்த்து எளிமையான சொற்கள் கொண்டு, சிக்கனமாக விடயத்திற்குள் வந்துவிடும் வித்தை அவரின் கட்டுரைகளுக்குள் இருக்கிறது. அவர் நூல்களுக்கு கொடுக்கும் முன்னுரைகளும் ஒரு ஆய்வுக் கட்டுரைகள் போல்தான் இருக்கும். அவைகளையும் நான் படித்து மகிழ்ந்து பின்பற்றியிருக்கிறேன். அத்துடன் அவர் நல்ல கதைஞர், கவிஞர், இசைஞர். அவரின் சில கதைகளை வாசித்து பிரமித்திருக்கிறேன். ஆனால் அவர் தொடர்ச்சியாக அவைகளுக்காக இயங்குவதை தவிர்த்துவந்திருக்கிறார். பேராசிரியர் நல்ல ஆய்வாளர், கவர்ச்சியான உருவம், எந்த நேரமும் தன்னையும், தனது ஆடைகளையும் தூய்மையாக பேணிக்கொள்ளும் தன்மை, எளிமை, எல்லாத் திறத்தினருடனும் நட்பாக இருக்க முயற்சித்தல், மாணவர்களை ஊக்கப்படுத்தி தூக்கிவிடல், தன்னுடைய சக இளம் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி தூக்கிவிடல், அவர்களுக்கு வழிகாட்டுதல் போன்றவைகளை நான் அவரிடம் கண்டிருக்கிறேன்.
பேராசிரியரின் அகன்ற வாசிப்பு, அனுபவம், வரித்துக்கொண்ட கொள்கை காரணமாக, அவரிடம் இனம், மதம், மொழி கடந்த மானிட நேயம் இருந்தது. இதனையும் நான் நேரடியாக கண்டிருக்கிறேன். பல நூறு சிங்கள கலைஞர்களுடனும், மற்றவர்களுடனும், வெளிநாட்டவர்களுடனும் அவருக்கிருந்த தொடர்புகளும் பழக்கங்களும், இதனை உறுதிப்படுத்தும். எனது திருமணத்திற்கு வந்தபோது அவரை எனது உறவினர்கள் உட்பட பலபேர் அவரை மொய்த்துக் கொண்டது (கல்முனை சாஹிரா கல்லூரியில் கற்பித்ததன் காரணமாக) இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறதுசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஆரம்ப காலங்களில் முஸ்லிம் மாணவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவதற்கும் தங்களது கற்கைகளை பூரத்தி செய்து வெளியேறுவதற்கும் பேராசிரியரின் உளப்பூர்வமான பங்கு இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கின்றது. பேராசிரியரைப்பற்றிச் சொல்வதற்கு இவ்வாறு நிறைய விடயங்கள் இருக்கின்றன.

மாணவனாக, ஆசிரியனாக, ஆய்வாளனாக, கட்டுரையாளனாக, திறனாய்வாளனாக,நடிகனாக, நெறியாளனாக, தயாரிப்பாளனாக, கதைஞனாக, கவிஞனனாக, இசைஞனாக, மரபின் வேர்களிலிருந்து தோன்றி நவீனத்துக்குள் ஊடுபாவி, பரவி, வியாபித்து, புதிது புனைந்து, அதிலே புதிய சந்ததிகளுக்கு வழிகாட்டி, ஈழத்தின் அரங்கியலை, ஆய்வியலாக்கி, அதற்கு வெளியுலகின் வெளிச்சம்படச் செய்து, அதற்கு அங்கீகாரம் பெற்றுக்கொடுத்து, கலைக்காக வாழ்ந்து, கலைப் பாரம்பரியத்தை உருவாக்கி, பொதுவுடமையையும், மானிடத்தையும் தன்னுள் வரித்து தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மகா கலைஞன் பேராசிரியர் சி. மௌனகுரு என்றால் அது மிகையாகாது.

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...