Thursday, June 21, 2018

சோசலிச சூழலியல் சிக்கல்:


.எம். றியாஸ் அகமட், சிரேஸ்ட விரிவுரையாளர்தென்கிழக்கு பல்கலைக்கழகம்

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரண்பாடுகள் அண்மைக்காலமாக அதன்தீவிரத் தன்மையை அடைந்திருக்கின்றன. மேலும் பூகோளமயமாதல், தாராளமயமாக்கல், தனியார்மயமாதல் போன்றவைகள் இவைகளைச் இன்னும் சிக்கலாக்கியுள்ளன. இந்தச் சிக்கல் அதிகரித்ததன் காரணமாக காடழிப்பு, உயிரினப் பல்வகைமை அழிதல், காலநிலை மாற்றம், நீர், வளி, நிலம் மாசுபடுதல், விவசாய உற்பத்தி குறைதல், அணுஉலைக் கசிவு ஆபத்து போன்ற பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவந்துள்ளது. இதன் காரணமாக சூழலியல் அரசியல் மீதான விவாதம் ஒரு புதுப்போக்காக அண்மைக்காலமாக உருவாகி வந்துள்ளது.
இலாபத்தை மையநோக்காகக் கொண்ட உற்பத்திமுறையே சுற்றுச்சூழல் பிரச்சிசனைகளுக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டே அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும், ; இதனை முதலாளித்துவவாதிகள் மறுக்கிறார்கள். ஏனெனில் இந்த உற்பத்தி முறைதான் காரணமெனில் முன்னாள் சோவியத் ஒன்றியம், சீனா, கியுபா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்ற சோசலிச, கம்யுனிச நாடுகளில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அறவே இருந்திருக்கக் கூடாது. கசப்பான உண்மை என்னவெனில், உலகில் அதிகம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்; நாடுகளாக காணப்படுவது  இந்த சோசலிச, கம்யூனிச நாடுகள்தான்.
ஏரல் கடலை காணாமற் செய்தது, பைக்கால் எரி மாசுபட்டு சீரழிந்தது, செர்னோபில்அணுஉலை விபத்து போன்றன ரஸ்யாவின் மார்க்சிய சூழலியற்சிக்கலுக்கு சிறந்த உதாரணங்களாகும். 2007 இல் ஒரு ஆய்வின்படி உலகின் மாசடைதந்த முதல் பத்து நகரங்களில் அஸர்பைஜான், சீனா (2 நகரங்கள்), பெரு, ரஸ்யா (2 நகரங்கள்), உக்ரைன், இந்தியா (2 நகரங்கள்), சம்பியா போன்ற நாடுகளில் காணப்படுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் சோசலிச நாடுகளில் சொத்தானது சமூக அல்லது அரசு உடமையாகவும், இலவச வளமாகவும் பாவிக்கப்படுவதனால், அந்த வளங்களானது தவிர்க்கமுடியாதபடி எதிர்காலத்தைப் பற்றிய சிறிய பிரக்ஞைகூட இல்லாமல் மிகவும் அதிகமாக துஸ்பிரயோகம் பண்ணப்படுகின்றன என்று குறிப்பிடப்படுகின்றது.

1930 – 50
கால கட்டத்தில் ஸ்டாலின் அரசு தீவிர கைத்தொழில்வாதத்தை ஆதரித்து ஊக்குவித்தது. “தொழில்நுட்பமும் துரிதவளர்ச்சியும்என்பதே அப்போதைய தாரக மந்திரமாக இருந்தது. பாரிய கைத்தொழில் துறைக்கு கொடுத்த முக்கியத்துவம் கிராமிய விவசாயத்தை பின்னுக்கு தள்ளியது. இதன் காரணமாக செபோவெட்னிக் இயற்கை பாதுகாப்புத் திட்டங்கள் குறைக்கப்பட்டடன. இதன் காரணமாக புகாரின், வாவிலோவ் போன்றவர்கள் ஸ்டாலினுடன் முரண்பட, அவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். இவர்களின் படுகொலைகளுடன் இயற்கை, சுற்றுச்சுழல் மீதான சோசலிசத்தின் அக்கறை இன்னும் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது. 1950களில் ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகு வனபரிபாலன அமைச்சு மூடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டன. மலன்கேவ், குருசேவ் காலகட்டங்களில் துரித பொருளாதார வளர்ச்சி நோக்கிய இலக்கு, இந்த சூழலியற் சிக்கலை இன்னும் மோசமான நிலைமைக்கு தள்ளியது.ஆரம்ப
காலங்களில் இறுக்கமான சுற்றாடல் சட்டங்கள் பலவற்றைக் கொண்டிருந்தசோவியத் ரஸ்யாவில் மிகத்தீவிரரமான சுற்றுச்சூழல் பிர்சினைகள் காணப்பட்டதற்கு, அமரிக்காவுடனான போட்டியின் நிமித்தம், சோவியத் ரஸ்யா கட்டாயமான, அவசரமான பொருளாதார வளர்ச்சிக்காக உற்பத்தி மேற்கொண்டதே காரணம் எனக் கூறப்படுகின்றது.

ஐந்து வருட துரித வீடமைப்பு திட்டத்திற்காக, கருங்கடலைச் சுற்றியிருந்த அரசுடமையாக அல்லது சமூகவுடமையாக இருந்த கிறவல், மண், கடற்கரையைச் மரங்கள் போன்றன பல தசாப்தங்களாக பாவிக்கப்பட்டதனால் ஏற்பட்ட கடலரிப்பின் காரணமாக 1920-1960 காலப் பகுதிகளில் கருங்கடலின் கரையோரம் 50 சதவீதத்தினால் சுருங்கிவிட்டிருந்தது. இதன் காரணமாக ஹோட்டல், சுகாதார, இராணுவ, மக்கள் துறைகள் கடுமையாக பாதிக்கபட்டதுடன், வரலாறு காணாத மண்சரிவுகளும் ஏற்பட்டன.
மேலும் நீர் மாசடைதல் ரஸ்யாவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இரசாயனத்தொழிற்சாலைகளிலிருந்து கொட்டப்பட்ட கழிவுகள் காரணமாக, 1965ம் ஆண்டு ஓகா நதியின் பெருமளவான மீன்கள் கொல்லப்பட்டன. அதே போன்ற நிகழ்வுகள் வொல்கா, ஒப், யெனசி, ஊரல், வட டிவினா நதிகளிலும் அவதானிக்கப்பட்டன. ரஸ்யாவின் பெரும்பான்மையான தொழிற்சாலைகள், சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள், கப்பல்கள் தங்களது கழிவுகளை சுத்தம் செய்யாதும், பரிகரிக்காதும் நேரடியாக நீரநிலைகளில் கொட்டின.
ஏரல் கடல், கஸ்பியன் கடல் போன்றவைகளின் பெருமளவான நீர் நீர்ப்பாசனத்திற்காக திசைதிருப்பப்பட்டதனால் அவை படிப்படியாக மறையத் தொடங்கின. இந்தக் கடல்களில் பரிகரிக்காத கழிவுகளும் தொடர்ச்சியாக கொட்டப்பட்டுக்கொண்டிருந்தன. உலகின்நான்காவது பெரிய ஏரியான, ஏரல் கடல் தற்போது அதன் முன்னைய அளவில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகின்றது. ஏரல் கடலானது 2020ம் ஆண்டு, முற்றாக இல்லாமற் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பல துருப்பிடித்த கப்பல்கள் தரை தட்டி நிற்கும் பாவலைவனமாகவும், உப்பளங்களாகவும் மாறியுள்ளதைக் காணலாம். பல ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கப்பால் காற்று உப்புக்களை அள்ளி படியவைப்பதையும், இதனை அண்டிய பிரதேங்களின் சிசு மரணவீதம் மிக அதிகம் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதே போன்ற கஸ்பியன் கடலும்பாதிக்கப்பட்டுள்ளது. கஸ்பியன் கடலில்சென்று விழும் வொல்கா ஆறானது கடுமையான பெற்றோலிய, இரசானய கழிவுகளால் மாசுபடுத்தப்பட்டதன் காரணமாக வீசியெறியப்படடும் சிகரட் துண்டினால் எளிதில் தீப்பற்றக்கூடிய நிலைமைக்கு மாறியுள்ளது. இதேவகையான மாசுபடுத்தல்களினால் உலகின் மிகப் பழமையான நன்நீர் நிலையான பைகால் ஏரியும் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது. இங்கு 50 சதவிதத்திறகு மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே அழிந்தும்விட்டிருந்தன. இதற்கெல்லாம் காரணம், என்னவிலை கொடுத்தென்றாலும் அடைய நினைத்த பொருளாதார அபிவிருத்தியே.
பொதுவுடமை நாடான சீனாவை எடுத்துக்கொண்டால், அதற்கும் ரஸ்யாவிற்கும் பெரியவித்தியாசம் இல்லை.  சீனாவில் மாவோ காலம்தான் சுற்றுச்சூழலுக்கான பொற்காலம் என்ற கருத்தை ஒரு சாரார் முன்வைக்கின்றனர். பின்னைய மாவோ காலங்கள், பச்சைவீட்டு வாயுக்களை அதிகம் வெளியேற்ற வைத்து. சீனாவின் நகரங்களின் காற்றை சுவாசிக்க முடியாதபடிக்கு மாற்றியுள்ளன. அமில மழை, வளி மாசடைதல், நீர் நிலைகளில் மீன் குடித்தொகை குறைதல், போன்ற பிரச்சினைககளால் சீனா கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. வளி மாசடைதல் காரணமாக சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள பொரும்பாலான, 90 சதவீதத்திற்கு மேற்பட்ட பைன் மரக்காடுகள் இறந்து போயுள்ளன. அத்துடன் அமிலமழை பயிர்களின் விளைச்சலையும் பெருமளவ பாதித்துள்ளது. மண்நிரப்பல், அணைகட்டல் போன்றவை காரணமாக மீன்களும் பெருமளவில் பாதகிக்பட்டுள்ளன.


இதேபோல கியுபாவின் சுற்றுச்சூழல் நிலைமைகளும் கவலையளிப்பனவாகவே இருக்கின்றன. விவசாயத்துறைiயும் கைத்தொழிற்துறையும் ஒருங்கேசேர தீவிர விருத்தி செய்ய வேண்டி ஏற்பட்டதன் காரணமாக, பாரியளவில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் அதிகரித்தன.


சோசலிச சமூகத்தின் வளங்களின் முறையற்றமுகாமைத்துவம் காரணமாக போலந்தும் அமிலமழை, மீன் குடித்தொகை குறைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தது. ஆறுகளில் கழிவுகள் கொட்டப்படுவதன் காரணமாக 95 சதவீதத்திற்கு அதிகமான நீர்நிலைகள் மனித பாவனைக்கு உகந்ததல்லாமல் மாறிப்போயின.. போலந்தின் 33 சதவீதமான மக்கள் சூழலியல் அனர்தத்திற்கு முகம்கொடுத்ததாக போலந்து விஞ்ஞான முன்னேற்றக் கழகம் அறிக்கையிட்டுள்ளது. மேலும் பெரும்பாலான கைத்தொழில் நகரகங்களில் 15 %க்கு மேல், இருதய நோயாலும்;, 30% க்கு மேல் புற்றுநோயாலும், 47 %க்கு மேல் சுவாச நோயாலும் பாதிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகின்றது. இதே போன்ற சமமானதும், சமாந்தரமானதுமான சுற்றுச்சூழற் பபிரச்சினைகள் செக்கோசெலாவாக்கியா, கிழக்கு ஜேர்மனி, பல்கேரியா, ஹங்கேரி, ரோமேனியா போன்ற நாடுகளிலும் சோசலிசக் காலப் பகுதயில் அவதானிக்கப்பட்டன. இவைகளுக்கு காரணம்சோசலிச சுற்றுச்சூழல் மாசாடைதலாகும்.
தற்போது எதிர்நோக்கும் சூழலியற் சிக்கலுக்கு சனத்தொகைப் பெருக்கமும், தனிநபர் ஒழுக்கமின்மை போன்ற காரணமென்ற ஒரு சாராரும், சுற்றுச்சூழல் சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படாமைதான் காரணமென்று இன்னொரு சாராரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகிறார்கள்.முதலாளித்துவச் சூழலியல் மோசமானது எனமார்க்சியர்கள் கூறினாலும், மார்க்சியச் சூழலியலும் அதைவிட மோசமானது என முதலாளித்துவவாதிகளும் குற்றம்சாட்டுகின்றனர். மார்க்சியம் தனது சுற்றுச்சூழல் தோற்றுப் போனதற்கு இரு காரணங்களை கூறலாம். முதலாளித்துவம் மட்டுமே சூழலியற் சிக்கலுக்க காரணம் என்று கருதியதும், மார்க்சிய பொருள்முதல்வாதம் உள்வாங்கிக் கொண்ட சூழலியல் அளவின் போதாமையம் ஆகும்.
சோசலிசம் ஏதோவொரு வகையில் சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்வதாக கருதினாலும், எப்போது ஒரு பொருளாதார கட்டமைப்பு இயற்கையை மனிதன் ஆளுகை செய்ய, அடிபணியவைக்க விரும்புகிறதோ, அந்தப் பொருளாதாரத்தோடு சூழலியற்சிக்கலும் தொடங்கிவிடுகின்றது. இதிலே நடைமுறையிலுள்ள எந்த அமைப்புகளுமே சிறந்தவை அல்ல. இந்த அளவிலேதான் முதலாளித்துவச் சூழலியற் சிக்கலையும், சோசலிச அல்லது கம்யுனிச சூழலியற் சிக்கலையும் சமாந்தரமாக நோக்க வேண்டியுள்ளது.பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...