Monday, June 4, 2018

கடவுளின் ஆசீர்வதிக்கப்பட்ட யாருக்கும் கிட்டாத குழந்தைமை


-அம்ரிதா ஏயெம்
விளாதிமிர் கொரலென்கோவின் கண்தெரியாத இசைஞனில் பார்வை இழந்த பியோத்தருக்கு அவனது அற்புதத் தாய் தனது புத்திக்கூர்மையால் இந்த உலகை இசைப் பேரலைகளால் நிரப்பி, பியானோவின் விரல்களுக்கூடாக இந்த உலகத்தை பார்க்கச் செய்கிறாள். நானும் எனது விரல்களுக்கூடாகத்தான் இந்த உலகையும், அதனைச் சுற்றியிருப்பவைகளையும் அறியவும் பார்க்கவும் தொடங்கியிருப்பேன் என்றே எண்ணுகிறேன்..

எனக்கு 11 அல்லது 12 வயதாக இருக்கும் போது, வாப்பா தலைநகரிலிருந்து ஹெல்டா, தமிழ் தட்டச்சு இயந்திரம் ஒன்றை வாங்கி வந்தார். எனது வாழ்க்ககையின் திசையை மாற்;றப் போகும் இயந்திரம்தான் அது என்று அப்போது எனக்கு புரியவில்லை.
எனது இரு விரல்களால் அதனைக் குத்தி தட்ட ஆரம்பித்திருந்தபோது, வாப்பா அதனைத் தடுத்து, நடு ஊருக்குள், எனது வீட்டுக்கு சற்று அருகாமையிலிருந்த பொது நூலகத்தின் நூலகருக்கு தட்டச்சு பயிற்சி சம்பந்தமான நூல் ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு, அதனை எனக்குக் கொடுக்கும்படி ஒரு கடிதம் தந்தார். (வாப்பாவின் அங்கத்துவ இலக்கம் 333).
மிகவும் நீண்ட, அகலமான, தடித்த, கனமான தட்டச்சு பயிற்சி புத்தகம் அது. வீட்டுக்கு கொண்டு வந்து அதனை விரித்து, எனது பயிற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். இரு கட்டை விரல்கள் தவிர்த்து, எட்டு விரல்களும் யளனபக ட்மதாத என்ற வரிகளுக்கே சொந்தம். மேலெயிருந்து ஙறநசவச ிழரைலர வரிக்கு போவதென்றாலோ அல்லது கீழேயுள்ள ணஒஉஎடிஎ .இஅஅ என்ற வரிக்கு போவதென்றாலோ தாய் வீட்டில் எட்டுப் பேரும் இருந்து கொண்டு, தேவையானவர்கள் மட்டும், மேலுக்கும், கீழுக்கும் அவ்வப்போது போய் வந்துகொண்டு இருக்க வேண்டும். உடனே தாய் வீட்டுக்க திரும்பி விடவும் வேண்டும்.

இரு சின்னி விரல்களும் சிப்ற் கட்டைகளோடு இடைக்கிடை உறவு கொண்டாடும்போது, இரு பெரு விரல்களும் ஸ்பேஸ் பார் கட்டைகளோடு நிரந்தர சொந்தம் கொண்டாடத் தொடங்கின. ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நாளாக நாளாக இலகுவாகத் தொடங்கியது. ஒரு தாளின் ஒரு பக்கம் பூராக இலகுவான ஈரெழுத்துச் சொற்களிலிருந்து பயிற்சிகள் தொடங்கின. ஒவ்வொரு பக்கங்கமும்; மூன்றெழுத்து, நான்கெழுத்து சொற்களாலும், இலகுவான வசனங்களாலும் நிரம்பி வழியத் தொடங்கின. விரல்களும் திருந்தத் தொடங்க, விரல்கள் வேகமாக நடனமாடத் தொடங்கியது.
இப்போதுள்ள கம்பியூட்டரிலுள்ள வசதிகள் எதுவும் அப்போதைய தட்டச்சில் இருக்கவில்லை. தட்டச்சு ஒரு கலைதான். பிழை விடக்கூடாது. இன்டென்ட் வருவதற்கு வரி முடிவதற்கு முன்னேயே கணித்து சொற்கள் முறியாமல் தட்டச்சு செய்ய வேண்டும். ஒன்றிரண்டு சொற்கள் பிழை விட்டாலோ மீண்டும் புதியதொரு தாளில் தட்டச்சு செய்யத் தொடங்க வேண்டும். இவ்வாறு பல பிரச்சினைகள்,
வேகம் கூடக் கூட காதுக்கு சுதந்திரம் கிடைத்தது. வானொலியில் பாட்டுக் கேட்டுக் கொண்டும், கதைத்துக் கொண்டும், தட்டச்சு தொடங்கியது. ஒரு கட்டத்தில் கீபொட் பார்த்தால் தட்டச்சின் வேகம் குறையத் தொடங்குகிறது என்று மனம் எண்ணியது. கீ போட் பார்ப்பதிலிருந்து கண் விடுபட்டு, தொலைக் காட்சிகளை பார்த்துக் கொண்டு விரல்கள் வேகமாக நடனமாடத் தொடங்கியது. நான் சும்மாவே வேகம் என்ற ஒரு கருத்தும் இருந்து கொண்டு தானிருந்தது. எனவே கண் மண் தெரியாமல் எனது வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. சில நேரங்கள் அதீத வேகம் காரணமாக கீயைத் தாக்குவதிலிருந்து தவறி நடுவிரல் இரு கீகளைத் தாங்கியிருக்கின்ற ஈய உருக்கு தகட்டின் தவறுதலாக பட்டு இரத்தம் வருவதும் உண்டு.
விளாதிமிர் கொரலென்கோவின் கண்தெரியாத இசைஞனி;ல் பார்வை இழந்த பியோத்தருக்கு அவனது அற்புதத் தாய் தனது புத்திக்கூர்மையால் இந்த உலகை இசைப் பேரலைகளால் நிரப்பி, பியானோவின் விரல்களுக்கூடாக இந்த உலகத்தை பார்க்கச் செய்கிறாள். நானும் எனது விரல்களுக்கூடாகத்தான் இந்த உலகையும், அதனைச் சுற்றியிருப்பவைகளையும் அறிந்து கொண்டேன்.
தாவரவியல் தட்டச்சு வேலைகளை ஏஆர்எம். உவைஸ் சேர், ஏஎல்எம். பளீல் சேர், எம்எஸ்ஏ. கலீஸ் சேர், சுபா ரீச்சர் போன்றவர்களுக்காகவும்,
விலங்கியல் வேலைகளை எம்கேஎம். மன்சூர் சேர், கே. தங்கராஜா சேர், எஸ்வி. பரமேஸ்வரன் சேர், எம்ஐஎம். ஹமீம் சேர் ஆகியோர்களுக்காகவும்
இரசாயனவியல் வேலைகளை கே. மகாலிங்கசிவம் சேர், நடேசமூர்த்தி சேர், எம்எஸ். பைலுல் றஹ்மான் சேர், சுதாகரி ரீச்சர், பஞ்சலிங்கம் சேர் போன்றவர்களுக்காகவும்,
பௌதிகவியல் வேலைகளை கே. பாக்கியராஜா சேர், எஸ். ஜெயானந்தசாமி சேர், கே. ராஜேந்திரம் சேர், கே. சுந்தரலிங்கம் சேர் (1990 ல் இராணுவ கைதுக்குப் பின் காணாமல் போனவர்), இஸ்மாயில் சேர், ரீ.எல். கலீல் றஹ்மான் சேர் போன்றவர்களுக்காகவும்,
தூய, பிரயோக கணித வேலைகளை கே. ஞானம் சேர், புள்ளநாயகம் சேர், பஞ்சலிங்கம் சேர், அருளானந்தம் சேர் போன்றவர்களுக்காகவும்,
தமிழ்: நல்லரெத்தினம் சேர், கலாநிதி பிர்தௌஸ் சேர் போன்றோருக்காகவும், கலீல் சேர்
பொருளியல் வேலைகளை எம்எஸ்ஏ. ஜெலீல் சேர், எஸ்எம். அமீர் சேர், கலாநிதி ஹாபிஸ் அகமட் லெப்பை சேர், எம்ஐஎம். ஜபார் சேர் (ஆகவே ஜபார்) ஆகியோர்களுக்காகவும்,
கணக்கியல் வேலைகளை எம்எஸ். சபறுல்லா சேர், இல்யாஸ் சேர், ஐஎல்எ. சலாம் சேர்; வை. ஹபீபுல்லா சேர் போன்றவர்களுக்காகவும்,
வணிகவியல் வேலைகளை எஸ். பாஸ்கரன் சேர், எம்எஸ்ஏ. ஹஸீப் சேர், கே. அரஸ் சேர் போன்றவர்களுக்காகவும்,
அளவையியலும் விஞ்ஞானமுறையும்: சுகிர்தராஜன் சேர், பாலசுப்ரமணியம் சேர் போன்றவர்களுக்காகவும்,
அரசியல் விஞ்ஞான வேலைகளை கே. சங்கரலிங்கம் சேர், சலாம் சேர் போன்றவர்களுக்காகவும், செய்திருக்கின்றேன்.
இந்து நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம் சம்பந்தப்பட்ட தட்டச்சு வேலைகளையும் செய்திருக்கிறேன் அதை விடுத்து நிறைய கீழ் வகுப்புகளில் கற்பித்த ஆசிரியர்களுக்கும் தட்டச்சு செய்ய வேண்டியிருந்தது. கணித வேலைகளை நவசிவாயம் சேர், முசாதிக் சேர் போன்றவர்களுக்காகவும், விஞ்ஞான வேலைகளை களுகாசலம் சேர், கபீர் சேர் போன்றவர்களுக்காகவும் செய்ய வேண்டியிருந்தது.
எனது பதின்பருவத்தின் நடுப் பகுதியில் என்னோடு தொடர்புபட்டிருந்த எனது ஞாபகத்திலிருந்த சேர்மார்களினதும், ரீச்சர்மாரினதும் பெயர்களையே குறிப்பிட்டிருக்கிறேன். சில பேர் அல்லது நிறையப் பேர் தவறவிடப்பட்டிருக்கலாம். என்றாலும் இன்றும் பெரும்பாலானோரை அவர்களின் முதலெழுத்துக்களுடன் ஞாபகத்தில் வைத்திருப்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. இவர்களில் நிறையப் பேர் புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிலர் யுத்தத்தில் இறந்திருக்கிறார்கள். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் உயர் பதவிகளுக்கு சென்றிருக்கிறார்கள். சிலர் இன்றும் கொடி கட்டிப் பறக்கிறார்கள். எவ்வாறிருந்தாலும், எனக்கு முன்னும், பின்னும் மூன்று தசாப்தங்களுக்குள் படித்தவர்கள் இவர்களில் ஒருவரையாவது நிச்சயம் கடந்து சென்றிருப்பீர்கள். இவர்களில் ஒருவராவது உங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஏணிப்படியாக ஒரு வேளை இருந்திருப்பார்கள்.
இவ்வாறான தட்டச்சு, கல்லச்சு வாழ்க்கையில் நிறைய பரீட்சை வேலைகளிலும் ஈடுபட வேண்டியிருந்தது. நானே சில வேளைகளில் இந்து சமயத்திற்கும், கிறிஸ்தவ சமயத்திற்கும் பழைய வினாப் பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு வினாப்பத்திரங்களை தயாரிக்க வேண்டியிருந்தது.
கோயில்களுக்கான தேவாரங்கள், பாசுரங்கள், தேவாலயங்களுக்கான அல்லது வைஎம்சீஏ க்களுக்கான நள்ளிரவு ஆராதனை, ஞாயிற்றுக்கிழமை ஆராதனைப் பாடல்கள் போன்றவைகளையும் பண்ண வேண்டியிருந்ததது.
சிறு சஞ்சிகைகள் வேலைகளும் வந்தன. நிறைய பாடநூல்கள், பொது நூல்கள் போன்றவைகளையும் பண்ணி கொடுக்க வேண்டியிருந்தது. இந்தப் பிரதேசத்தின் கலாநிதிகள், பேராசியர்கள் போன்றவர்களின் ஆரம்பகால ஆய்வுப் புத்தகங்கள் என்விரல்களுக்கூடாகத்தான் சென்றன. உமா வரதராஜனின் கள்ளிச் சொட்டு நான் தட்டச்சு செய்து கொடுத்தது இன்னும் பசுமையாக இருக்கிறது.
1980 களின் ஆரம்ப நடுப்பகுதிகள் மிகவும் பொல்லாத காலப் பகுதிகளாகும். போராட்டக் குழுக்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, அவர்கள் பாடசாலைகளில் இருந்த தட்டச்சு, கல்லச்சு இயந்திரங்களையும், விஞ்ஞான ஆய்வுகூடங்களிலிருந்த இரசாயனப் பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு போகத் தொடங்கியிருந்தார்கள். இதன் காரணமாக தட்டச்சு வேலைகளுக்கு பெரிய தேவை இருந்தது. அதனை தமிழர் பகுதிகளில் யாராவது செய்வது பல்வேறு காரணங்களினால் தற்கொலை முயற்சிக்கு ஒப்பானதாகவே இருந்தது. ஆகவே ஒரு பெரும் நிலப்பரப்பின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருந்தது.
எனது விரல்களுக்கூடாக எனக்கு உலகம் தெரியத் தொடங்கியபோது நான் ஊஞ்சல் கட்டி மகிழ்ந்து ஆடத் தொடங்கிய ஆனந்த அனுபவம் நன்மையாக இருந்தாலும், இன்னொரு வகையில் பிரச்சினைகளும் என்னை வந்தடையத் தொடங்கின. எனக்கு சிறுவயதில் இருந்த தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த கூட்டிச் செல்ல ஒரு தரப்பு என்னை முயன்றபோது உம்மா பெருமுயற்சியெடுத்துஅவன் சின்ன புள்ள அவனுக்கு ஒண்டும் தெரியாதுஎன்று சொல்லித் தடுத்தார்.
தமிழ் தட்டச்சு வந்து சேர்ந்த சிறிது காலத்தில் ஆங்கிலமும் வந்த சேர்ந்தது. அது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை. கிற்றார் வாசிக்கத் தெரிந்த ஒருவன்; இலகுவாக கீபோட் வாசிப்பது போல, ஆங்கிலமும் வாலாயப்படத் தொடங்கியது. சிறிது காலத்தில் சிங்களமும் வாலாயப்பட்டது. பின்னையதன் பாபவனை குறைந்த காரணத்தால் நினைவிலிருந்து அழியத் தொடங்கியது.
விழியில் விழுந்து விரலுள் நுழைந்து மூளைக்குள் சென்ற நிறைய விடயங்கள் அப்படியே ஓரளவு தங்கிவிட்டன என்றே நினைக்கின்றேன். கணக்கியல், பொருளியல், வர்த்தகவியல் போன்றவைகளை வாசிக்கும் போது எவ்விதமான தொழிநுட்பச் சொற்கள் அல்லது கலைச் சொற்கள் சிக்கல் ஏற்படுவதில்லை இன்றுகூட ஏற்படுவதில்லை. இன்றும் எனது கதைகளையும், விமர்சனங்களையும், பதிவுகளையும் நேரடியாகத்தான் குறிப்புக்களில்லாமல் வேகமாக தட்டச்சு செய்கிறேன். இந்த எல்லா எழுத்து கீககளையும் ஒரு பெரிய பேனாவாகத்தான் கருதுகிறேன்.
யளனபகப ட்மதாத, asdfg ‘;lkjhj போன்றவை எல்லாம் ஒரே வீடுதான். தமிழோ, சிங்களமோ, ஆங்கிலமோ எல்லாம் ஒரு வீட்டில்தான் குடியிருக்கின்றன. அது சந்தோசம் பொங்குகின்ற இன்பமான அறிவைத்தருகின்ற வீடா அல்லது ஏழாவது வீடா என்பது நமது கையில்தான் பெரும்பாலும் உள்ளது.

நான் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானபோது எனக்கு வேகமாகத் தட்டச்சு செய்யத் தெரியும், அது சார்ந்த வேலைகள் (சோட்டிங், கௌன்டிங், கட்டிங், பைன்டிங் போன்றன) தெரியும் என்று யாரிடமும் சொல்லக்கூடாது என்று உம்மா ஒரு சத்தியம் வாங்கினார். உம்மாவுக்காக எம்எஸ் வேர்ட், எக்ஸெல், பவர்பொயின்ட், SAS, SPSS, Minitap உடன் நிறுத்திக் கொண்டேன். என்றாலும் மற்றைய pmd, PS வேலைகளும் ஓரளவு செய்யத் தெரிந்து கொண்டதை காட்டிக்கொள்ளவில்லை.
தட்டச்சிலிருந்து, கம்பியூட்டருக்கு மாறியபோது பாமினியில் சிறிய வித்தியாசம் இரண்டுக்கும் இருந்தது. தட்டச்சில் விசிறியை அடித்துவிட்டுத்தான் எழுத்து அடிக்க வேண்டும். கம்பியூட்டரில் எழுத்தை அடித்துவிட்டுத்தான் விசிறி அடிக்க வேண்டும். இரண்டிலும் மாறி மாறி வேலை செய்யும் போது இது எனது விசிறியுள்ள எழுத்துக்கள் பிழையாகி, வேகத்தை குறைத்து, பொறுமையை சோதித்தன. எனவே நான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டி இருந்தது. ஏதாவது ஒன்றை விட வேண்டும். மிகவும் கஸ்டப்பட்டு தட்டச்சு இயந்திரத்தைக் கைவிட்டேன். அத்துடன் தொழில் முறை ரீதியான தட்டச்சு வேலைகளை பல்கலைக்கழக இறுதி வருடத்தில் முற்றாக கைவிட்டேன்.

இப்போதும் இரண்டு தட்டச்சு இயந்திரங்கள், இரண்டு றோணியோ இயந்திரங்கள்; தாய் வீட்டின் சேமிப்பறையில் புழுதிபடிந்து கிடக்கின்றன. நான் எப்போதாவது அந்த அறைக்குள் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்து கதைகள் பல பேசி சிரிக்கின்றன. “இவைகளை உனது வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் ஞாபகமாக வைத்திருஎன்று வாப்பா சொல்லுவதும், “அதனைச் செய்கிறேன்நான் பதில் சொல்வதும் பழக்கமாகிவிட்டது. விரைவில் அவைகளைக் கொண்டு சென்று புழுதிநீக்கி துடைத்து பத்திரப்படுத்த வேண்டும். ஏனெனில் நான் கடவுளின் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை. யாருக்கும் கிட்டாத குழந்தைமையை தட்டச்சு வடிவில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எனக்கு அவர் அருளியிருந்தார்.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...