ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்தப் பிரதேசத்தின் மயான அமைதியும், அமானுஸ்யத் தன்மையும், பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் விரவிக் கிடந்த சிறு கற்களும், சமச்சீரில்லாத நிலங்களும், துாரத்தே தெரிந்த கறுத்த மலைகளும் (பின்னர் அது அல் ஹாஜர் மலைத் தொடர்களின் ஒரு பகுதி எனத் தெரிந்து கொண்டேன்) என்னை வெகுவாகக் கவர்ந்தன. அந்த இடம் றுஸ்தாக். இறங்கி துார நடக்கின்றேன். (தனிமையில் ஏதோவொன்றால் அவதானிக்கப்படுகின்றோம் என்ற மெல்லிய அச்சமும் இருந்தது). என்ன ஆச்சரியம் நிறைய பாறைக் கற்களில் உறைந்து போன உயிர்ச்சுவடுகளைக் (fossils) காண்கின்றேன்.
அம்ரிதா ஏயெம் பக்கங்கள்
எனக்கு இரண்டு வகை மனிதர்கள்தான். தன்னை முன்னிலைப்படுத்துபவனும் முன்னிலைப்படுத்தாதவனும்
Tuesday, October 25, 2022
பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்
Tuesday, August 3, 2021
தொலைதலின் இனிமை – 43 (இனிமையின் இறுதிப் பகுதி):
- ஏ.எம். றியாஸ் அகமட்
ஒரு சூரியன் உதித்த அதிகாலையில் வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ளவித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா அல்லது வஹிபா பாலைவனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து மஸ்கட் மாகாணத்திலுள்ள பிம்மாவிலுள்ள ஹவியத் நஜீம் எரிநட்சத்திரத்தின் கிணற்றுக்கு கூகிள் மெப் காட்டிய வழியில் ஒரு வாகனத்தில் இரண்டு தாய்கள், இரண்;டு தந்தையர்கள் அவர்களின் பிள்ளைகள் (17, 12, 7 வயதுகளயுடைய மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை (வயது 13), இதில் ஒரு பிள்ளை நடக்க முடியாதவர். சக்கர நாற்காலி பாவிப்பவர்). இவர்கள் எல்லோரும் வழி தவறி, தொலைந்துவிடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் எவ்வாறு தொலைதலிருந்து மீண்டார்கள்? தொலைதலின் கசப்பு எவ்வாறு இனிமையானது? என்பதுதான் இந்த தொலைதலின் இனிமை தொடர்கள்.
எனக்குத் தொலைதல்கள் ஒன்றும் புதிதல்ல. தொலைதல்களை நான் விரும்புகின்றேன். அவை கற்றல் தரும். அறிவு தரும். அனுபவம் தரும். எம்மைப் புடம் போடும். ஆகவே தொலைதல்களை விரும்புகின்றேன்.
1980ம் ஆண்டு எனக்கு 7 வயது. பெற்றோருடன் பாடசாலையால் அம்பாறையில் நடந்த கம்முதாவ கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அது இலங்கையில் நடந்த முதலாவது கம்முதாவ (கிராமத்தின் உதயம்) கண்காட்சி. அங்கே நிறைய விடயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெற்றோருடைய கைகளைப் பிடித்துக்கொண்டே எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே வந்தேன். காட்டுன்கள் எனக்கு புதிதாக இருந்தன. பறவைகளும், விலங்குகளும் பேசின. ஒரு கட்டத்தில் ஆர்வமிகுதியால் அவர்களின் கையை உதறிவிட்டு, தனியே சென்று எல்லாவற்றையும் பார்த்து, முடித்து, திரும்பினேன். எல்லோரையும் தொலைத்துவிட்டு, நானும் தொலைந்திருந்தேன். அழுகை, அழுகையாய் வரப் பார்த்தது, வெள்ளைச் சேட், சாரன் போட்டவர் என்னைப் பார்த்தார். என்னைக் கூட்டிச் சென்று ஒரு மாடிக் கட்டடத்தின் என்னை கொண்டு ஒப்படைத்தார். அங்கே ஒருவர் (பின்னாளில் அது பீ.எச். அப்தல் ஹமீத் என தெரிந்து கொண்டேன்) இருந்தார். தெளிவாக உம்மா, வாப்பா, வீதி, ஊர் பெயர்களை கூறினேன். அவரும் அறிவித்தார். பின்னர் வாப்பா வந்து கூட்டிச் சென்றார்.
எனது மாமா பொறியியல் உதவியாளராக, பெருந்தெருக்கள்திணைக்களத்தில் மின்னேரியாவில், வேலை செய்தார். அவரின் அரசாங்க தங்கு விடுதி கதுருவெலயில் இருந்தது. 1990ன், ஆரம்பத்தில் நான் க.பொ.த. (சாதாரணதர) பரீட்சை எடுத்த பிறகு, இருந்த லீவு காலத்தில் அவருடன் தங்கியிருந்தேன். கதுறுவெலியிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்கப்பாலுள்ள பொலநறுவையில் இலங்கையின் பழைய இராதானி கட்டடங்கள் இருந்தன. அது அழிவடைந்த சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான இலங்கையின் தலைநகர். பெரும்பாலான எனது பின்நேரங்கள் அந்த பழைய இராசதானியின், கல்விகாரை இடிபாடுகளுடனேயே கழிந்தன. (சைக்கிளிலேயே சென்றேன்). அந்தக் கல்விகாரைக்கு அருகிலுள்ள காடுகளுக்குள் அலைந்திருக்கிறேன். தொலைந்திருக்கிறேன். அங்கு குரங்குகளில் வெளிநாட்டுப் பெண் ஆய்வாளர் செய்த ஆய்வுகளை அருகிலிருந்தே அவதானித்திரக்கிறேன். அந்த ஆய்வுகளும், அவதானிப்புகளும் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டிருந்தன. இந்த அவதானிப்புகள் பின்னொரு காலத்தில் பட்டப்படிப்புக்காக குரங்குகளில் ஆய்வுகளைக் செய்வதற்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கின்றது. இந்த அனுபவங்களை எனது பதினேழாவது வயதில், 'எனது குரங்குத் தோப்பு அனுபவங்கள்' என எழுதிப் பார்த்திருக்கின்றேன். நன்றாக வந்திருந்தது. எழுதியது தொலைந்துவிட்டது என்றாலும் இப்போதைய எழுத்திற்கும், அப்போதைய எழுத்திற்கும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லைபோல் இப்போதும் தோன்றுகின்றது. விலங்கு நடத்தைகள், குரங்குகளின் இராச்சியத்தில், குளங்கள் போன்ற கதைகளுக்கு அடிப்படையாகவிருந்த தொலைதல்.
1993களில் பொதுவெளிகளில் பகிரமடியாத தொடர் தொலைதல்கள் இருந்தன. எனது தந்தையும், சாச்சாவும் (சித்தப்பா) என்னைக் கண்டுபிடித்து, மீட்டுக்கொண்டே இருந்த தொலைதல்.
1995களில் பல்கலைக்கழக முதலாவது வருடத்தில், ஹோட்டன் சமவெளிக்கு பிரயாணம் போனோம். பெரிய பேருந்துவண்டியில் வந்த நாங்கள், அதற்கப்பால் பெரிய வண்டி செல்ல முடியாததாகையால், அந்த இடத்திலிருந்து பத்து, பதினைந்துபேர்களாக குழுக்களாக சிறிய வாகனங்களில் சென்றோம். முதலாவது குழுவில், 10 பெண்களுடன் சென்ற நான், உலக முடிவு பார்க்கப் போய், அதனைப் பார்த்து, பார்த்தும் அதுதானென்று தெரியாமல், அதனை காட்டுக்குள் தேடி, வழி தவறி, தொலைந்து, அந்தப் பெண்களுடன் அடர்ந்த காட்டுக்குள் வழிதெரியாமல் அலைந்து திரிந்து, பின்னர் வந்த குழுவிலுள்ளவர்கள் எங்களை காணாது தேடி, ஆற்றின் நீரேட்டத்தை தொடர்ந்து வந்து மீட்ட தொலைதல்.
1998களில் கந்தளாய், பேராறு, கோமரன்கடவெல, ஹொரவப்பொத்தானகாட்டுத் தொகுதிகளில் எனது பல்கலைக்கழ இறுதி வருட ஆய்வுக்காக அங்குள்ளவர்களுடன் சேர்ந்து சுற்றியபோது, 'மாயமான்' என்னும் கதையாக வந்த தொலைதல்.
கண்டி மாநகரின் நடுவில் ஒரு அடர் காடு என்றால் யாரும் நம்பப் போவதில்லை. ஹந்தானையில், 2003ல், ஒரு இரவில், வழி தவறி நான் மீட்கப்பட்ட தொலைதல்.
2005களில், தென்னாபிரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்தபோது, அதற்கான ஆய்விற்காகவும், கள வேலைகளுக்காகவும் அருகிலுள்ள புமாலங்கா மாகாணத்திலுள்ள (பல்கலைக்கழகம் இருப்பது கௌடங் மாநிலம்) சவானா காடொன்றிற்கு என்னைக் கொண்டு சென்று விடுவது வழக்கம். அது மிகப் பெரிய காடு. அந்தக் காட்டிற்கு நடுவில், ஒப்பன்ஹைமர் என்ற தனவந்த கொடை வள்ளல் மரத்தினாலும், களிமண் சுவர்களினாலும், ஒருவகை கோரைப் புற்களினால் வேயப்பட்ட கூரைகளினாலான வசதிகள் நிறைந்த ஒரு விடுதியைக் கட்டி ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் இலவசமாக கொடுத்திருந்தார். மாலை 6.00 மணிக்கெல்லாம் விடுதியில் உள்ளடங்கிய எங்களுக்கு வரவேற்பறையின் முன்பகுதியில் கண்ணாடியாலான பகுதி எங்களைச் சுற்றியுள்ள விலங்குகளின் இராச்சியத்தைக் காட்டும். ஒரு நாளும் எந்தக் கெடுதியும் செய்ததில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எவ்வித மனித சஞ்சாரமும் இல்லாத, தொடர்பிற்கு நோக்கியா 3310 மட்டுமேயுள்ள, நான் ஆய்வுகள் செய்ய வேண்டிய இடத்திற்கு என்னை பல்கலைக்கழக வாகனம் காலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிடும். எல்லாவகையான விலங்குகளும் சுற்றியிருக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கலக்கும். பின் பழகிவிடும். தொலைவில் மனித
ஊசலாட்டத்தை உணர மனம் பதறும். நானும், சவானாவும் இறண்டறக் கலந்திருந்த, ஆளுயர
புற்களுக்கிடையில் திரும்பிவரும் பொழுதுகளில் தொலைதலும், கண்டுபிடித்துச்
சேர்தலுமாகி அற்புத வாழ்வு கலந்த தொலைதல்.
இப்போதைய காலங்களிலெல்லாம் அவ்வளவு இலகுவாக நாம்விரும்பினாலும், தொலைய முடியாது. ஒரு இடத்திற்கு செல்லும்போது, அந்த இடத்தின் வரைபடத்தை (map) இன்னுமொரு தொடர்பிலக்கத்திற்கு அனுப்பிவிட்டு, தொலையக்கூடிய சாத்தியங்கள் ஏற்படும்போது நாங்கள் ஏற்கனவே அனுப்பிய மெப்பை பயன்படுத்தி எங்களை சரியான வழியில் தொலையாமல் இட்டுச் செல்லலாம். அதற்கு நெற்வேர்க்கும் தொலையாமல் இருக்க வேண்டும். மலேசியாவின் கெபொங், செலாங் டாருல்இசான் அயனமண்டல மழைக்காட்டில் ஒரு நாள் இந்த ஏற்கனவே சேமிக்கப்பட்ட மெப் ஒன்று மீட்ட தொலைதல்.
நான் காடுகளில் பசுமையாக்கம், மரநடுகை, விதைப்பந்து வீசுதல் என்று சென்றபொழுதெல்லாம் தொலைந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்களும், சாத்தியங்களும் இருந்திருக்கின்றன. கூடவருகின்றவர்கள், உத்தியோகத்தர்கள் யாராவது ஒருவர் எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றார்கள். யாராவது ஒருவர் எப்போதாவது தொலையாமலிருக்க குரல்களைத் தந்து கொண்டே இருக்கின்றார்கள்.
இப்போது 17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெரு எங்களுக்கு நேரெதிரே சுமார் 3 கிலோமிற்றர் தூரத்தில் வந்துவிட்டது. நல்ல பாதை தொடங்கியது. வாகனம் வேகமாகியது. இப்போது கட்டடங்களும், மரங்களும் (பேரீச்சை) முளைக்கத் தொடங்கின. மனிதர்களும் பிறக்கத் தொடங்கினர்.
17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெருவை பின்ஸ் இடத்தில் எங்கள்வாகனம் சந்தித்தது. பெருந்தெருவின் நாற் சந்தியை சந்தித்தது. 400 மீற்றர் தொலைவில் நேரே இந்தியப் பெருங்கடல் ஆர்ப்பரித்து ஓசையுடன் எங்களை வரவேற்பது போலிருந்தது. இதுதான் உங்கள் இறுதிப் போக்கிடம் இதற்கப்பால் நீங்கள் செல்ல முடியாது என்று சொல்வதைப் போலிருந்தது.
இடது பக்கம் திரும்பி 150 கிலோமீற்றர் தூரம், ஒன்றரை மணித்தியாலம் சென்றால் மஸ்கட், வாதி அல் கபீர் வீட்டை இலகுவாக அடைந்துவிடலாம். பெற்றோர்கள் மனநிலை அப்படியே இருந்தது. அவர்களின் மனங்கள் மிகவும் களைத்தும்;, அலுத்தும் போயிருந்தன. ஒரு பக்கம் பசியாகவும், தாகமாகவும் இருந்தன. வீடு திரும்பவே பெற்றோர்கள் ஆவலாக இருந்தனர்.
அதே இடது பக்கம் செல்லும்போது, பின்ஸ் சந்தியிலிருந்து 5, 6 கிலோமீற்றர் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் வாதி அல் சாப், ஹாவியத் நஜீம் (70 மீற்றர்கள் உயரமும், 50 மீற்றர்கள் அகலமும், 20 மீற்றர்கள் ஆழமும் கொண்ட எரிநட்சத்திரத்தின் ஆழ் கிணறு) போன்றவைகளும் இருந்தன.
பெற்றோர்கள் வீடு என்றபோது (வலதா? இடதா? என்றபோது), பின்னாலிருந்த பிள்ளைகள் 'இல்லை, வலது பக்கம் பிம்மாவின் ஹாவியத் நஜீம் (எரிநட்சத்திரத்தின் ஆழ் கிணறு)' என்றார்கள். யாருமே பார்த்திராத களைத்துப் போயிருந்த கணத்தில் பிள்ளைகளுடன் புன்னகைகளைப் பரிமாறிக்கொண்டேன். இடது பக்கமாக சென்றுகொண்டிருந்த வாகனம் ஹாவியத் நஜீம் நோக்கி வலது பக்கம் திரும்புகின்றது. பயணங்களும் முடிவதில்லை. தொலைதல்களும் முடிவதில்லை. தொலைதல்களும் தொடரப் போகின்றன. அதன் இனிமைகளும் தொடரப் போகின்றன.
'தொலைதல் என்பது அறிவு, அனுபவம், கற்றல், கற்பித்தல், திறமை, நுட்பம், புதுமை, தைரியம்'
-முற்றும்
பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்
ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...
-
ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். அறிமுகம்: மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆக...
-
- ஏ.எம். றியாஸ் அகமட் (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) Mimosa pigra (Giant sensitive plant) (giant mimosa), இ...
-
-ஏ.எம். றியாஸ் அகமட், (சிரேஸ்ட விரிவுரையாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை) உலகெங்கும் பாவித்து, ஒதுக்கப்பட்ட அல்ல கழிக்கப்பட்ட தரையிலோட...