Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 15 (மஸ்ஜுல்லாஹ் தொல்பொருள் கிராமம்):

ஏ.எம். றியாஸ் அகமட்

ஒரு சிறிய பரப்பில் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமம் அது. அந்த கிராமத்தின்ஆரம்பத்தில் ஒரு பள்ளிவாசல் இருந்தது. அதன் அருகில் வாகனத்தை நிறுத்தினோம். அந்தக் கிராமத்தில் ஏழு-எட்டு வீடுகள்தான் இருக்கும்போல இருந்தது. ஆண்களுக்கான, பெண்களுக்கான மலசலகூடம் என்று அறபியில் வெவ்வாறாக இருந்தன. பெண்களுக்கானது சற்றுத் தள்ளி கிராமத்திற்குள் இருந்தது. பெண்கள் சென்றார்கள். எங்கள் பெண்களை அந்த ஊர் பெண்கள் இன்முகத்துடன் வரவேற்று தங்களது வீடுகளுக்கு வந்து கஹ்வா என்னும் அறேபியன் கோப்பி அருந்த வருமாறு அழைத்தார்கள். அவர்களின் மனங்கோணாதபடி மறுத்தார்கள்.

இந்தக் கிராமத்தை சுற்றி இருந்த செங்குத்தான பாறைகளிலெல்லாம் நிறையக் குகைகள் இருந்தன. சில குகைகளை இரும்பு வலையினால் மூடி உள்நுழைவதை தடைசெய்திருந்தார்கள். இன்னும் சில குகைகளை மறைப்பு செய்திருந்தார்கள். மொத்தத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பல நூற்றாண்டுகால வரலாறு உள்ள இடமாக தெரிந்தது. செங்குத்து பாறைகளில் மலையாடுகள் மிக இலகுவாக, ஏறியும், இறங்கியும், பாய்ந்தும், தாவியும் திரிந்தன. கொஞ்சம் பிடிமானம் பிழைத்தாலும் ஆடுகளுக்கு சங்குதான் என்று புரிந்தது.

வாகனத்திற்குள் எனது மகள் ஆயிசா ஷஹ்றா, சகலன் மகள் றகத்இருந்தார்கள். இருவரும் சிறுவர்கள். அவர்களுக்கு கண்காணிப்பாக நான் வாகனம் அருகில் நிற்கவேண்டி ஏற்பட்டது. சுற்றிப் பார்க்க முடியவில்லை. இருந்தும் கொஞ்ச தூரம் நகர்ந்து பார்த்தேன். ஓரிடத்தில் ஆங்கிலத்தில் அரசாங்கத்தின் அறிவித்தல் இது தொல்பொருள் பிரதேசம். நடமாடக்கூடாது என்றிருந்தது. எனவே நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டேன்.

உண்மையில், அந்த நேரத்தில் அந்த ஊரின் பெயர். அதன் தொல் பொருள் முக்கியத்துவம், வரலாறு போன்றவைகள் என்ன என்று கூட அறிய வாய்ப்பில்லாமல் இருந்தது. இலங்கைக்கு நாங்கள் வந்து சேர்ந்து, இந்த தொடரை எழுதத் தொடங்கியபோது, அந்தக் கிராமத்தின் பெயர் தேவைப்பட, அந்தக் கிராமத்தின் புகைப்படத்தை சகலனுக்கு அனுப்ப, அவர் இந்த கிராமத்தி முன்னர் நாங்கள் போய்ச் சேர்ந்திருந்த அல் ஜாரு வல் அய்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த நாஸர் அல் வைசிக்கு (அவரின் தொலைபேசி இலக்கத்தை அவர் எங்களுக்கு தந்திருந்தார்) அனுப்ப, அவர் அந்த ஊரின் பெயரை அனுப்பியிருந்தார். அந்த ஊரின் பெயர் மஸ்ஜுல்லாஹ்.

தூரத்திலே அனலில் மேய்ந்துகொண்டிருந்த ஒட்டகம், எங்களையும், எங்களது வாகனத்தையும் கண்டவுடன் வேகமாக எங்களை நோக்கி ஓடி வந்தது. நான் கொஞ்சம் பதட்டமானேன். ஆனால் சரியாக அரைவாசித் தூரத்திலேயே அது வாயினால் எழுப்பிய பாரிய சத்தத்தை எழுப்பி பூமியில் கழுத்து அடிபட விழுந்தது. அது விழுந்ததாலும் பாரிய சத்தம் ஏற்பட்டது. விழுந்து அந்தக் கிறவல் பூமியில் புரண்டது. தூரத்தில் புழுதி பறக்கத் தொடங்கியது. இது என்ன வகையான விலங்கு நடத்தை? தனது ஆள்புல எல்லையைக் குறித்துக் காட்டுகிறதா? காமவெப்ப தகனச் சக்கர நடத்தையா? (அதற்குரிய காலமும்தான்), எங்களை வரவேற்கிறதா? அல்லது விளையாட்டுக் காட்டுகிறதா?

எங்களது பிரயாணம் நெடுக, ஒட்டகங்களும் பிரயாணம் செய்துகொண்டேஇருந்ததன. ஒட்டகத்தை நான் விலங்காகக் கொள்வதில்லை. அது சதையும் இரத்தமும் கலந்த ஒரு ஏலியன் மெசின். அல்லது இறைவனால் இந்தப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட இரத்தமும், சதையும் வைத்துப் போர்க்கப்பட்ட ஒரு இயந்திரம். அந்தளவுக்கு வித்தியாசமானதும், அபூர்வமானதுமான உடற்றொழிலியல் தொழிற்பாடுகளை கொண்டதுமான ஒரு இயந்திர விலங்கு. ஒட்டகம் பற்றி விரிவாக இன்னொரு இடத்தில் பேசலாம் என நினைக்கின்றேன்.

நானும் சகலனும், அவரின் மகன் யூனிஸ் உமரும் பள்வாசலுக்கு செல்கிறோம். பத்து-பதினைந்த பேர் தொழக்கூடிய சிறிய ஒற்றை அறைப் பள்ளிவாசல். தரைக்கு கம்பளம் விரித்திருந்தார்கள். அது சாயம்போயும், மங்கியுமிருந்தது. பின்பகுதியில் குடிப்பதற்கு கஹ்வாவும், பேரீச்சம் பழங்களும் வைத்திருந்தார்கள். நாங்கள் அதனை தொடவில்லை. சேர்த்தும், சுருக்கியும் தொழுதுகொண்டோம்.

அந்த ஊரில் மொத்தம் ஏழு குடும்பங்கள். அன்று விடுமுறை நாள். பிள்ளைகள் பாடசாலை செல்லவில்லை. சிறுவர்கள் எல்லோரும் (மொத்தமாக 15 பேருக்குள்தான் இருக்கும்), எங்களை புதினம்பார்க்க வந்திருந்தார்கள். சிறுமிகளும், வயது குறைந்த ஆண்பிள்ளைகளும் கொஞ்ச தூரத்தில் அந்நியத் தன்மையுடன் நின்று கொண்டு எங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரண்டு-பதின்மூன்று வயது பையன்கள் ஐந்து-ஆறு பேர் கொஞ்சம் அருகில் வந்து தங்களுக்குள் கதைத்தும், சிரித்தும் எங்களை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் செல்போன்கள் இருந்தன. சிலர் யுடியுபும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பாடசாலைக் காலங்களில், அரசாங்கம் ஒரு பஸ் வண்டியை அனுப்பி இந்த பகுதியின் மலைக்கிராமங்களிலுள்ள பிள்ளைகளை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள பாடசாலைக்கு கொண்டு விட்டு, பாடசாலை முடிந்தவுடன் மீண்டும் அழைத்து வருவதாகக் கூறினார்கள்.

ஏன் இந்த ஏழு குடும்பங்களும் இந்த மலைப் பாலையில் தனிமையில் கிடக்கவேண்டும். உண்மையில் இந்த மக்கள் அந்த மண்ணுடன் உள்ள பல நூற்றாண்டு கால தொன்மையை அறுக்க விரும்பாதவர்கள். அவர்களின் சொந்த உலகங்களில் மிகவும் திருப்தியாக அவர்களின் விவசாய நிலங்களுடனும், கால்நடைகளுடனும் வாழ்கிறார்கள். அவர்கள் நகரங்களுடன் பெரிதாக தொடர்பு வைக்காதவர்கள். அவர்களில் சில பேர் தங்கள் வாழ்நாளில் நகரத்தை எட்டிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அவர்களுக்கு அதைப்பற்றிய எண்ணமும் இல்லை. கவலையும் இல்லை. ஆனால் தங்கள் கிராமத்திற்குள் பிரவேசிக்கும் பிரயாணிகளை நன்றாக வரவேற்று விருந்தோம்புவார்கள்.

இவ்வாறான பல கிராமங்களை ஓமான் நெடுக அவதானிக்கலாம். பல கைவிடப்பட்ட கிராமங்களும் இருக்கின்றன. ஓமானின் பல கிராமங்கள் கைவிடப்பட்டும், மக்கள் தொகை மிகுந்த குறைவிலும் காணப்படுவது ஏன்? அதனைச் சுருக்கமாக சொல்ல முடியாது. ஏனெனில் அது அரை நூற்றாண்டு கால வரலாறு.பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...