Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 02

- ஏ.எம். றியாஸ் அகமட்

என்னதான் வில்லங்கத்தின் அறிகுறி என்றிருந்தாலும், முன் வைத்த காலை பின்வைக்கக்கூடாது, ஏனெனில் அது நேர, சக்தி விரயம் எனக் கருதி, ஏதோ ஒரு நம்பிக்கையில் முன்னகர்ந்தோம். தொலை தூரத்தில் ஒரு வெள்ளைப் புள்ளி எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. வெள்ளைப் புள்ளி, வெள்ளை நிற கொல்ப் பந்தாகி பின்னர் ரென்னிஸ், புட்போல் பந்துகளாகி சற்றுத் தொலைவே இரண்டுக்கு இரண்டு (ரூ பை ரூ) ரொயோட்டா வாகனாமாகி எங்களை நோக்கி எங்கள் நம்பிக்கைகளைச் சுமந்து கரும்பொட்டற் பாலைவன தூசுக்கிடையே பறந்து வந்துகொண்டிருந்தது. சகலன்தான் (மனைவியின் சகோதரியின் கணவர்) வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். வண்டி சுமந்துகொண்டு வந்திருந்த எங்கள் நம்பிக்கைகளை மீளப்பெறுவதற்கு வாகனத்தில் இருந்தவாறே பெரிய வெள்ளைப் பந்தை நிறுத்தச் சொன்னோம். நிறுத்தினார்கள். வாகனத்திற்குள் வயது முதிர்ந்த ஆணும், இளம் வயது பெண்ணும் இருந்தார்கள். அவர்கள் தந்தையும் மகளுமாக இருக்கலாம். அல்லது வணவனும் மனைவியுமாக இருக்கலாம். வயது வித்தியாசம் இருந்தது. இரண்டாவதுதான் சரியென நான் நம்பினேன்.

அவர்களிடம், சகலன் நாங்கள் போகவேண்டிய பாதை பற்றியும் அல்லது தலைநகர் மஸ்கட்டிற்கு எவ்வாறு செல்வது என்பது பற்றியும் அறபியில் கேட்கிறார் என்பது புரிந்தது. வெள்ளைப் பந்திலிருந்த ஆண்தான் முதலில் கதைக்கத் தொடங்கி சுருக்கமாக நிறுத்திக் கொண்டார். ஆணைவிட அந்த அறபி தேவதைப் பெண், எங்களுக்கு வழிகாட்டிவிட, ஒளிகாட்டிவிட மிகவும் ஆர்வமாய் இருந்தது தெரிந்தது. அதற்கு ஆணிடத்திலிருந்து விருப்பமின்மைக்கான எந்த அறிகுறியும் வரவில்லை. வாகனத்திலிருந்தவாறே, வழியையும், ஒளியையும் அழகாகவும், தெளிவாகவும் சொன்னாள். அந்தத் தேவதை மிகவும் ஒரு அழகான ஓமானி அறபுப் பெண்ணாக இருந்தாள். அந்த பாலைவனத் தேசம் இது போன்ற இலட்சக்கணக்கான தேவதைகளால் இன்னும் பசுமையாகவும், ஈரமாகவும் இருக்கிறது.

ஓமானி ஆண்களும், பெண்களும் தங்களை சுத்தமாகவும், அழகாகவும்வைத்துக்கொள்வதில் மிகுந்த ஆர்வமும், செலவும் செய்பவர்கள். ஓமானி என்பதில் அவர்களிடம் பெருக்கெடுத்து அடக்கமுடியாத பெருமிதம் இருக்கின்றது. ஆண்கள் விலையுயர்ந்த தூய்மையான வெண்ணிற ஆடை அணிந்து, முடி, புருவம், ட்ரிம் செய்யப்பட்ட சிறிய தாடிகளுடன் மிகவும் கவர்ச்சியாக காணப்படுவார்கள். பெண்கள் மிகவும் அழகானவர்கள். முகத்தை மூடாதவர்கள். கண்ணுக்கு மையெழுதி, அதரத்திற்கு சிவப்பெழுதி தங்களை தூய்மையாக்குவதிலும், கவனங்கொள்ளச் செய்வதிலும் அதிக சிரத்தை எடுப்பார்கள். அது அங்கே பொது விதி என்னவோ?. வாகனங்கள் ஓடுவதும் அவர்களுக்கு தடையில்லை. எல்லாவிதமான வாகனத்தையும் இலகுவாக ஓட்டிக்கொண்டே இருப்பார்கள். ஒன்றிரண்டு பிற்போக்குத்தனமான அறபுநாடுகளின் பெண்களின் நிலைபற்றி அளவையியலின் லொஜிக்கல் பெல்லாசியில் ஒரு வகையான சமுதாயப் போலியான தப்பான கணிப்புக்கும் வருவதுண்டு.

ஓமானின் சனத்தொகைக் கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கொருமுறை நடைபெறுவதுண்ட. இறுதியாக 2010ம் ஆண்டு நடைபெற்றிருக்கின்றது. அதன்படி அந்நாட்டு பெண்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் 10 சதவீதமாக இருந்துள்ளது. உயர்கல்வி, சுற்றுலாத்துறை, சமூகமேம்பாட்டு அபிவிருத்தி அமைச்சர்களாகவும், அமரிக்க உயர்ஸ்த்தானிகராகவும், மற்றும் அரசின் பல்வேறு முக்கிய பதவிகளிலும் பெண்கள் இருந்திருந்திருக்கின்றார்கள். கற்கின்ற மாணவர் படையில் 50 சதவீதத்திற்கு மேல் பெண் மாணவர்களும். கற்பிக்கின்ற ஆசிரியர் படையில் 56 சதவீதம் பெண் ஆசிரியர்களும் பங்கு வகிக்கின்றார்கள். பிராந்தியத்திலும் பெண்கள் விளையாட்டுக்கு முக்கியத்தவம் கொடுக்கப்படுகின்ற நாடுகளில் இதுவும் ஒன்றாகும். மத்திய கிழக்கினதும், மத்திய ஆசியாவினதும் முக்கியமான பெண்கள் உதைபந்து, கிறிக்கட் அணிகள் இங்கு காணப்படுகின்றன. பாத்திமா அல் நப்ஹானி (ரென்னிஸ்), துரியா அல் அப்தாலி (ரெக்கொவெண்டொ கராத்தே) போன்ற பல பிரபலமான வீராங்கனைகளும் இங்கு தோன்றியிருக்கிறார்கள். சபியா அல் பஹ்லானி (ஒரு கையில்லாத விசேட தேவையுடைய, புகழ்பெற்ற ஓவியர்), பஸ்மா அல் சய்ட் (பிராந்தியத்தின் புகழ்பெற்ற மனநலவியலாளர், ஹிப்னாட்டிசவியலாளர்), மகா அல் பலூச்சி (முதல் பெண் விமானி), இப்திசாம் அல் சல்மி (முதல் பெண் மாலுமி), பாதிமா பஹ்வான் (புகழ்பெற்ற தொழில்முனைவர்), றய்ம் ஒடியொ (வானொலிக் கலைஞர்), நஸ்றா அல் அதாவி (எழுத்தாளர், கவிஞர்), லம்யா அல் ஹஜ் (மூலக்கூற்று உயிரியல் விஞ்ஞானி) போன்றோர் முன்னிலையிலுள்ள அந்நாட்டு பெண்களுக்கு சில உதாரணங்களாகும். பெண்கள் தாராளமாக விரும்பிய வாகனங்களை ஓட்டலாம். ஓட்டுகிறார்கள். முகத்தை மூட வேண்டும் என்று சட்ட ஏற்பாடுகளின்; எந்த ஒரு இடத்திலும் காணப்படுவதும் இல்லை.

அந்த வழியில் ஏற்றமுடைய அந்த அறபிப் பெண், அந்த ஆணை விடகவனமாகவும், பொறுப்பாகவும், எங்களின் நிலைமையைப் புரிந்துகொண்டு வழியைக் காட்டினார். அவர்களுக்கு நன்றியும், பிரார்த்தனையும் அவர்கள் பாணியிலே செய்துவிட்டு பயணம் தொடர்ந்தது. பாலைவனத்தின் அக்கினிக் காட்டுக்குள் திக்குத் தெரியாமல் அவதிப்படும் போது, நல்லவர்களுக்கு கடவுள், வெண்புரவியையும் கொடுத்து, தேவதைகளை அதன் மேல் ஏற்றி, ஒளியையும் கொடுத்து அனுப்பிவிடுவான். அந்தத் தேவதை மிகவும் அழகான ஒரு ஓமானி அறபுப் பெண்ணாக இருந்தாள். அந்த பாலைவனத் தேசம் இது போன்ற இலட்சக்கணக்கான தேவதைகளால் இன்றும் பசுமையாகவும், ஈரமாகவும் இருக்கிறது.

சிறிது நேரம் ஒளி காட்டிய பாதையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, வாகனத்தின் பின்னாலிருந்த பிள்ளைகளின் (அவர்களினது மூன்று. எங்களினது ஒன்று) சிறிதும், பெரிதுமான குரலெடுத்து அழுகின்ற சத்தங்கள் கேட்கத் தொடங்கின. இருக்கும் பிரச்சினை போதாதென்று ஒரு புதுப் பிரச்சினை. மூளை இன்னும் சுறுசுறுப்பாக இயங்கப் பார்க்கிறது. கரும்பொட்டற் பாலையில் எங்கள் வாகனமும் நிற்கிறது.













 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...