Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 12 (சப்லா அல்லது மஜ்லிஸ்):

  - ஏ.எம். றியாஸ் அகமட்

எங்களுடைய கதைகள் எதனையும் கேட்காமல், அந்தக் கட்டடத்திற்குள்வருமாறு கூறுகிறார்கள். நானும், சகலனும், அவரின் மகன் யூனுஸ் உமர் (13 வயது), மூவருமே ஆண்கள், வாகனத்திலிருந்து இறங்குகிறோம். உள்ளே வருமாறு கொஞ்சம் அதட்டலான, கொஞ்சம் தடிமனான அறபு மொழி போலவும் இருக்கிறது அது. நான் யோசிக்கத் தொடங்கினேன். இவர்களுடைய பேச்சுப் பாணியே இதுதான். இவர்கள் நல்லவர்கள். உள்ளே போவோம் என்றார் சகலன். நாங்கள் அந்தக் கட்டடத்துக்குள் நுழைகிறோம். அது அண்ணளவாக 10 அடிக்கு 10 அடி கட்டடம். கூரை இல்லை. ஐந்து ஆறு காய்ந்த பேரீச்சை ஓலைகள் கட்டடத்தின் மேலே கூரைக்குப் பதிலாக கிடந்தன.

சப்லா அல்லது மஜ்லிஸ்:

ஒவ்வொரு கிராமத்தின் முன் பகுதியிலும், கிராமத்திற்கு வரும் விருந்தினர்களை வரவேற்பதற்கும், விருந்தோம்புவதற்கும், சில பொதுத் தேவைகளுக்குமாக சப்லா அல்லது மஜ்லிஸ் என்ற கட்டடம் அமைக்கப்பட்டிருக்கும். இது ஓமானின் பொதுவான அம்சம். மலைக்கிராமங்களிலேயோ மிகவும் சிறப்பானது. இந்த மஜ்லிஸ் என்று சொல்லப்படுகின்ற விருந்தினர் அறை அல்லது வாழும் அறை தற்போது ஒவ்வொரு ஓமானியின் நவீன அல்லது பாரம்பரிய வீடுகளிலும் சேர்த்துக் கட்டப்படுகின்றது.

இந்த சப்லா அல்லது மஜ்லிஸ் ஊருக்குள் நுழைகின்ற விருந்தினர்களும், மக்களும், குடும்ப அங்கத்தவர்களும் இருந்து சுவையான உணவுகளை உண்பதற்கும். கதைகளைப் பரிமாறுவதற்கும் பயன்படுகின்றன.

ஒரு கிராமத்திற்குள் யாரும் உள்நுழைந்தால் அவர்களை விருந்தினர்களாக கருதுவார்கள். அவர்களை முதன் முதலாக நல்லபடியாக வரவேற்பார்கள்.

காலை, மதிய, இரவு சாப்பாடுகளை, அந்த நேரத்திற்கமைய, ஏற்பாடுசெய்வார்கள். இந்த ஏற்பாட்டில் பல குடும்பங்கள் பங்கெடுக்கும். பொறுப்புக்களை பகிர்ந்துகொள்ளும். ஏனெனில் செலவும், பாரமும் தனியொருவரிலோ அல்லது தனியொரு குடும்பத்தின் மேலோ விழாமல் இருப்பதற்காக.

ஓமானின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் நெடுக அவர்கள் வாழ்வுடன் பின்னிப் பிணைந்து காணப்படும் கஹ்வா என்னும் தூய்மையான அறேபியன் கோப்பியும், பலவகை பேரீச்சம் பழங்களும், பல பழவகைகளும், ஹல்வா எனப்படும் அவர்களின் பாரம்பரிய சிற்றுண்டியும் சப்லாவில் அவைகளுக்குரிய பாத்திரங்களில் அழகாக வைக்கப்பட்டு காணப்படும்.

அதேவேளை ஓமானின் நான்காயிரம் வருடங்கள்; பழமையான, பைபிள் காலத்துக்கு மிகவும் முந்திய வழக்கமான சாம்பிராணியும் அதனுடன் சேர்த்து சந்தனக் குச்சிகளும் அதற்குரிய பாத்திரத்தில் எரிந்துகொண்டிருக்கும். சப்லாவிற்கு சுகந்தத்தைக் கொடுக்கும். உலகத்திலே மிகச் சிறந்த சாம்பிராணி ஓமானிலேயே சாம்பிராணி மரத்திலிருந்து பெறப்படுகின்றது. இயேசு நாதரின் சிறுவயதில் அவருக்கு பரிசாகக் கொடுத்த சாம்பிராணி இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த நாட்டுக்கு சாம்பிராணியின் தேசம் என்ற பெயரும் இருக்கிறது. சாம்பிராணி புகைப்போடும் பாத்திரம் வரலாறு நெடுக ஓமானின் பாரம்பரியத்தில்; முக்கிய பங்கை வகித்திருக்கின்றது. சாம்பிராணி விருந்தினர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் பயன்படுகின்றது.

விருந்தினர்களை எதிர்பார்த்த வண்ணம் நாள்முழுவதும் அவர்களுக்காகஆயத்தப்படுத்தப்பட்ட நிலையிலேயே சப்லா அல்லது மஜ்லிஸ் காணப்படும். விருந்தினர்கள் விரும்பினால், கிராமத்தவர்கள் ஆகக் குறைந்தது மூன்று நாட்கள் அவர்களை விருந்தினர்களாக வைத்திருப்பார்கள்.

இவ்வாறு அந்தக் கிராமமோ, அங்குள்ள ஒரு குடும்பமோ அல்லது ஒரு தனி நபரோ தங்களது விருந்தோம்பலைக் காண்பிக்கத் தவறினால் அது தெய்வக் குற்றமும் மனிதாமானம் அற்ற செயல் என்பதும் அவர்களது நம்பிக்கை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிகவும் நீண்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்திற்கு வந்து நுழைந்த வெளிநாட்டைச் சேர்ந்த, மிகமிக அலைந்துழல்வுக்குட்பட்டுமிருந்த விருந்தினர்களான எங்களைக் கண்டால் அவர்கள் சும்மா விடுவார்களா?


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...