Friday, July 30, 2021

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

-அம்ரிதா ஏயெம்

இருபதாம் நூற்றாண்டின் பின்னரான கவிதை வளர்ச்சியில்நுண்கதையாடல்களும் சொல்லல் முறை சார்ந்த செயல் நிகழ்த்துகைகளும் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே இங்கு அதிகம் பாவனைக்குட்படுத்தப்பட்டிருக்கின்ற கவிதை சொல்லல் முறைகளாலும் யதார்த்த மையவாதத்தாலும் பீடிக்கப்பட்டிருப்பவர்களுக்கு .நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் கண்களை கட்டிக் காட்டுக்குள் விட்டது போலவே இருக்கும். எனவே .நஸ்பபுள்ளாஹ்வின் பிரதிகளை வாசிப்புச் செய்ய நாம் ஏற்கனவே எங்களிடம் இருக்கின்ற மதிப்பீட்டுப் பெறுமானங்களையெல்லாம் தளர்த்த வேண்டியுள்ளது.

. நஸ்புஷீள்ளாஹ் தனது பிரதிகளில் பல அற்புதங்களை புனைவுச் செயல்களினூடாக நிகழ்த்திக் காட்டுகின்றார். படிமங்கள் மற்றும் குறியீடுகளால் வேயப்பட்ட இப்பிரதிகள் புதிய வாசிப்பு வெளியை அல்லது முறையை நோக்கி எம்மை அழைத்துச் செல்கின்றன. இவரின் கவிதைகளில் புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலுள்ள எல்லைக்கோடு தெளிவற்றது. அத்துடன் இவரது கவிதைகள் யதார்த்தத்தின் மீதான தீவிரமான விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.

நினைவு நகர்ந்து நகர்ந்து

கடலில் இறங்குகிறது

எனது படுக்கையறையிலிருந்து

நழுவிய நினைவு அது

பால்யம் தாழ்ப்பாள் இட்டுக் கொள்ள

பிரிந்து

ஒதுங்கிய நினைவு அது

இரவைக் கடப்பதைப் போல

அல்லது

ஒரு கடலைக் கடப்பதைப் போல

நினைவைக் கடக்க முடியவில்லை

நினைவு என்ற இக்கவிதை புனைவுக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தக்கவிதையில் .நஸ்புள்ளாஹ்வின் மொழி புனைவுகள் புரிந்து யதார்த்தங்களை கேள்விக் குள்ளாக்குகிறது. .நஸ்புள்ளாஹ்வின் அனைத்து புனைவுச் செயல்களும் விதந்து உரைக்கப்பட வேண்டியவைதான். இருந்தும் விரிவஞ்சி அவற்றில் சிலவற்றை மட்டும் நோக்குவோம்.

சவாரி யில் கவிதை சொல்லியின் மனம் குளம் ஒன்றின் ஓடமாய் மாறியதும் ஓடத்திற்கும் மனத்திற்கும் இடையிலான குழப்பத்தை நீக்க சில சொற்கள் மீன்களாக மாற்றப்படுகின்றன.

கவிதையில் இரவின் மேல் கவிதை சொல்லியின் நிழல் வைக்கப்பட்டதும் அந்நிழலைத் தாங்கிக் கொண்டு இரவு பறக்கின்றது. கடல் றெக்கைகள் கவிதையில் கடலானது அலைகளை இறக்கைகளாக கற்பனை செகது கொண்டு பறக்கின்றது. வளர்ப்புப் பூனை யில் சிகரெட்டுக்குப் பதிலாக நிலவைப் பிடித்து பற்ற வைத்ததும் வெளிவிட்ட புகையில் பூனை ஒன்று உயிர்த்தெழுகின்றது. சம்பவம் கவிதையில் கற்பனைக்குள் நாவல் பிரதியன்று புனைவுச் சம்பவங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க அக்கற்பனையினூடே தவளைபாகந்து சம்பவங்களை நிறைவுக்கு கொண்டு வருகின்றது.மீன் மனசு கவிதையில் மனம் மீனொன்றாக மாறி குளத்தில்

குதிக்கின்றது. இவ்வாறாக .நஸ்புள்ளாஹ்வின் பல புனைவுச் செயல்களை குறித்துரைக்கலாம்.

மகளுக்குப் பொழுது போகவில்லை, மின்மினிகளின் நகரம், கனவுக்குள் நுழைதல் போன்ற கவிதைகளில் குழந்தைகளுக்கான வெளியை வழங்கி அதில் அவர்களுக்கான அன்பையும் ஆதரவையும் விளையாட்டையும் காட்டி அதில் நீண்ட பிரயாணமே செய்து காட்டுகிறார். ரகசிய வலி, இடம்பெயர்வு, இலையின் கதை போன்ற கவிதைகளில் பறவைகளின் வாழ்விடங்கள் அழிப்பு போன்ற விடயங்களைக் கையிலெடுத்து தன்னைச் சுற்றி நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் மீது தனது கரிசனையையும் காட்டுகின்றார்.

சிற்பங்கள் போன்ற கவிதைகள் மனித மற்றமைகளுக்கு அச்சுறுத்தலான பிரபஞ்சவெளி குறித்த பிரக்ஞையை ஏற்படுத்தி பிரதிகளுக்குள் அந்நிலையினை மாற்றியமைப்பது சம்பந்தமாக பேசும்போது மலையைத் தின்று முடிப்பவர்கள் போன்ற கவிதைகள் ஆன்மவியலைப் பேசுகின்றன. என்னைப் பொறுத்தவரையில் .நஸ்புள்ளாஹ் அற்புதமான ஒரு கவிதை சொல்லி. எந்த நேரத்தில் எந்த விடயத்தை எடுத்து கவிதையை சொல்லத் தொடங்குபவர் என்பதை யூகிக்க முடியாதவர். கனவிற்குள் சம்பவங்களைப் புனைந்து கவிதை சொல்லுவார். நினைவிற்குள் கவிதை சொல்லுவார். ஓவியம் வரைந்து கவிதை சொல்லுவார். புத்தகம் வாசித்துக் கவிதை சொல்லுவார். எழுதிய எழுத்துக்களாக சேர்த்தும் அழித்தும் திருத்தியும் இடம் மாற்றியும் கவிதைகளைச் சொல்லுவார். சொற்கள் அனைத்தும் தாங்களே தங்களுக்குள் உரையாடத் தொடங்கி அவைகளாகவே கவிதைகளை சொல்லுவதாகவும் கவிதை சொல்லுவார். (சில உதாரணங்கள்: அத்துமீறல்,பட்டாம்பூச்சியால் எப்படி?, மீன் மனசு)

.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் இருண்மை நிறைந்தவை, உட்புக முடியாதவை என்ற கூச்சலுக்கு மத்தியிலும் அவர் ஆங்காங்கே கவிதைகளில் வாசகர்கள் பிரதிகளுடன் இடைவினை புரிவதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுத்திருக்கின்றார். அல்லது வாசகர்களுடன் கவிதைசொல்லி தொடர்பைப் பேசுகின்றார். தற்போது உலகின் பல எல்லைகளையும் மொழிகளையும் தாண்டி நிற்கும் .நஸ்புள்ளாஹ்வின் கவிதைகள் கொண்டாடப்பட வேண்டியவை என்பதோடு இந்தப் பிரதிகள் கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகளே எனலாம்.

அம்ரிதா ஏயெம்,

தென்கிழக்கு பல்கலைக்கழகம்,

இலங்கை.

 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...