Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 08 (பசுமையின் நிறம் கறுப்பு: பெரிடொரைற் என்னும் கறுப்பு பச்சையம்)


-            ஏ.எம். றியாஸ் அகமட்

மரங்களைப்போன்று மலைகளும் வளிமண்டலத்திலள்ளகாபனீரொட்சைட்டை உறிஞ்சுகின்றன என்றால் வியப்பாகத்தான் இருக்கும். அதுவும் உலகில் மிகச் சில இடங்களிலேயே இவ்வாறான மலைகள் காணப்படுகின்றன. ஓமான் அல்ஹாஜர் மலைகள் அவ்வாறான மலைகளில் பெரியதும், முக்கியமானதுமாகும் என்றால் மேலும் வியப்பாகத்தான் இருக்கும். அதற்கு அந்த கறுப்புத்தான் காரணமாகும். அந்தக் கறுப்பிலுள்ள இரசாயனப் பொருள்தான் காரணமாகும்.

வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு வாயுவை, பெரிடொரைற் என்ற பாறை உறிஞ்சி, அதனைத் திண்மமாக்குகின்றது. இது காபன் கனியமாக்கல் (காபன் மினறலைசேசன்) எனப்படும். வளியிலுள்ள காபனீரொட்சைட்டு வாயுவை கைப்பற்றல், அதனை உறிஞ்சல், பின்னர் அதனை நடுநிலையாக்கல் போன்ற படிமுறைகளுக்கூடாக இந்தக் கனிப்பொருளாக்கம் அல்லது கல்லாக்கம் நடைபெறுகின்றது. இந்த திண்மக் காபன்கள் எங்கும் செல்லவும் முடியாது அல்லது அசையவும் முடியாது. ஓரிடத்திலேயே இருப்பவையாகும்.

காபனை உறிஞ்சும் இவ்வகையான பெரிடொரைற் பாறைகள் உலகில் வட கலிபோர்னியா. பபுவா நியுகினியா, அல்பேனியா போன்ற நாடுகளில்தான் காணப்படுகின்றன. ஆனால் அங்கு சிறியளவிலேதான்; காணப்படுகின்றன. அனால் உலகில் ஓமானிலேயே பாரியளவிலும் நாடு பூராகவும் காணப்படுகின்றன.

காபனீரொட்சைட்டை உறிஞ்சி, காபனை கல்லாக்கும் பெரிடொரைற் பாறைகள் வழமையாக புவியோட்டின் கிழே பல கிலோமீற்றர்கள் ஆழத்தில் படையாகக் காணப்படும். ஆனால் ஓமானின் அல்ஹாஜர் பகுதிகளில், புவியின் கவசத் தகடுகளினால் உருவாக்கப்பட்ட விசையின் காரணமாக, இந்த பெரிடொரைற்ற படை 100 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே புவிக்கு மேலே உயர்த்தப்படத் தொடங்கின. ஓமானின் வட பகுதியில் 322 கிலோமீற்றர் நீளமும். 38 கிலோமீற்றர் அகலமும், பல கிலோமீற்றர்கள் ஆழமும் கொண்ட வளிமண்;டலத்திற்கு வெளிவிடப்படுகின்ற காபனீரொட்சைட்டை உறிஞ்சி கல்லாக்குகின்ற கறுப்பு நிறமான பெரிடொரைற் மலைகள் காணப்படுகின்றன. மேலும் இப்றாவின் சுற்றயற் பகுதிகளிலும், மஸ்கட் பகுதிகளிலம் இந்தக் கரிய பாறைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

இயற்கையாக பூமியின் அதிக ஆழத்தில் காணப்படும் இப் பாறைகள்.பூமியின் மேற்பரப்பில் உயர்த்தப்பட்டு வளியுடனும், நீருடனும் தொடகையுறும்போது, அதிக இரசாயன அழுத்தம் கொண்ட பாரிய மினகலமாக தொழிற்படத் தொடங்கி, அவைகளில் காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சி அவைகளை காபன் கனிப்பொருள் அல்லது காபன் கற்களாக்குகின்றன.

இதன் காரணமாக ஓமானின் இந்த மலைகள் ஒரு வருடத்திற்கு ஒரு பில்லியன் தொன் (ஒரு இலட்சம் கோடி) கிலோகிராம் அளவுள்ள வளிமண்டல காபனீரொட்சைட்டு வாயுக்களை கல்லாக்குகின்றன. ஒரு வருடத்திற்கான உலகின் மொத்த காபனீரொட்சைட்டு வாயு வெளிவிடுகை 40 பில்லியன் தொன் கிலோகிராமாகும். ஓமானின் அல்ஹாஜர் மலைகள் வெளிவிடப்படும் உலகின் மொத்த காபனீரொட்சைட் அளவில் 2.5 சதவீதத்தினை உறிஞ்சுகின்றன. இது 50 கோடி வளர்ந்த, பெரிய மரங்கள் ஒரு வருடத்தின் காபனீரொடசைட்டை உறுஞ்சுவதற்கு சமனானது.

இதன் காரணமாகவே 1990 களிலிருந்து ஓமானானது, பல்வேறு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற, புவி பொறியியல், புவியியல், இரசாயன பொறியியல் ஆய்வாளர்களை ஈர்த்து வருகின்றது. இந்த இயற்கையான பொறிமுறையை, செயற்கையாக, பாரியளவில், செலவு குறைத்து எவ்வாறு வினைத்திறனாக செய்யலாம் என்பதில் உலகில் இருபதுக்கு மேற்பட்ட ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகளும், பல்வேறு பெரிய நிறுவனங்களும் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளன. கொலம்பிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீற்றர் கெலமென், டேவிட் கோல்ட் பெக், அலிஸ்ஸா பாக் போன்றோரும், மற்றும் நோஹ் டிச் (காபன் அகற்றும் ஆய்வுநிலையம், பெர்க்லி. கலிபோர்னியா), றொஜர் ஐன்ஸ் (கலிபோர்னியா) போன்றோர் இந்த ஆய்வுகளில் முன்னிலை வகிக்கும் சிலருக்கு உதாரணங்களாகும். இயற்கையில் இந்த மலைகள் வேகமாக வளிமண்டல காபனிரொட்சைட்டு வாயுவை கல்லாக்குகின்றன.

செயற்கையான முறையில் இயற்கையான காபன் கல்லாக்கும் அல்லதுகனிப்பொருளாக்கும் வேகத்தை எட்டுவது என்பதுதான் இதில் அவர்கள் எதிர்கொள்ளும் சவாலாகும். அதேவேளை ஓமானின் அல்ஹாஜர் பகுதி கொண்டிருக்கும் பல்வேறு நீரூற்றுக்களும், சுடுநீரூற்றுக்களும் காபனீரொட்சைட்டைக் கல்லாக்குகின்றன என அறியப்பட்டுள்ளன.

காபனீரொட்சைட்டு போன்ற, பசுமைவீட்டு வாயுக்கள், பூமியின் வளிமண்டலத்திலள்ள மெல்லிய போர்வையாகி, இப் பூமியின் வெப்பத்தை ஒரே சீராக பேணி, பாதுகாத்து உயிர்களையும், உலகத்தையும் இயங்க வைக்கின்றன. வளிமண்டலத்தின்

காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிக்கும்போது, போர்வை அதிக வெப்பத்தை தக்கவைத்து பூமி வெப்பமுறலுக்கு வழிவகுக்கும். 1800 களின் கைத்தொழிற் புரட்சியின்போது வளிமண்டலத்தின் காபனீரொட்சைட்டு வாயுவின் செறிவு 280 பீபீஎம் (பார்ட்ஸ் பெ மில்லியன்). இந்த அள 2019ம் ஆண்டு, 415 பீபீஎம் ஆக மாறியுள்ளது. மேலதிகமான காபனிரொட்சைட்டை வேகமாகவும், வினைத்திறனாகவும் அகற்றி இந்த உலகத்தை காக்க வேண்டிய தேவையும் எமக்குள்ளது.

ஓமானின் மிகப் பரந்த கறுத்த நிற பெடொரைற் மலைகள் இன்றும் அதிசயமாக இருக்கிறன. இறைவனின் அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.

ஓமானின் மஸ்கட் பிராந்தியத்தின், றுவி என்னும் இடத்திற்கு அருகிலுள்ளவாதி அல்கபீர் என்னும் இடத்தில், அல்ஹாஜர் மலையடிவாரத்திலுள்ள மனைவியின் சகோதரியின் வீட்டில்தான் தங்கியிருந்தோம். அந்த வீடு ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடத் தொகுதி. நாங்கள் இரண்டாவது தளத்தில். வீட்டிற்கும் மலைக்கும் சுமார 30 அடிகளே இடைவெளி இருக்கும். எங்களது அறையில் தூங்கும் போதும், விழிக்கும் பொதெல்லாம் அல்ஹாஜர்தான் தரிசனம் கொடுக்கும். எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த அல்ஹாஜருடன் நேரங்களை செலவிட்டேன். ஏனெனில் இலட்சக்கணக்கில் நடப்பட்ட பசுமையான நெடிதுயர்ந்த மரங்கள், அரூபமாய் கருமையாய் அந்த மலைகளில் தெரிந்துகொண்டிருந்தன.


















 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...