Tuesday, July 27, 2021

எஸ்எல்எம் ஹனிபா- தாவரங்கள், விலங்குகள், இயற்கை, சுற்றுச்சூழல், உணவு, வேளாண்மை துறைகளில் தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட நமது காலத்தின் மிக மகத்தான அறிஞர்: அவரது முகநூல் பதிவுகளை முன்வைத்து.


- ஏ.எம். றியாஸ் அகமட்

(சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

எனது பாடசாலைப் பருவத்திலேயே எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்கள்கேள்விப்பட்ட இலக்கியவாதியாகவே இருந்தார். பின்னர் 1990களின் ஆரம்பங்களில் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுழைகின்றறேன். அங்கு அவர் அடிக்கடி கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்பவர். அங்கே அவரைச் சந்திக்கின்றேன். அவரின் தொடர்பு கிடைக்கின்றது. அன்றிலிருந்து அவருடனான தொடர்பு இன்றுவரை எந்தத் தொய்வும் இல்லாமல் தொடருகின்றது.

எனது எழுத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. நான் கண்டுகொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. எங்கும், என்னையும், எனது எனது எழுத்தையும் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தார். ஏன் எனக்குள் அவரால் மற்றவர்களை விட இலகுவாக உள்நுழைய முடிந்தது என்பதற்கு பல காரணங்கள் இருந்தன.

எனக்கு விலங்குகளிலும், வனஜீவராசிகளிலும்ஆர்வம் இருந்தது. அவருக்கும் இருந்தது. மரங்களிலும், செடி, கொடிகளிலும் ஆர்வம் இருந்தது. அவருக்கும் இருந்தது. இயற்கையிலும், சுற்றுச் சூழலிலும் அக்கறையும் ஆர்வமும் இருந்தது. அவருக்கும் இருந்தது. பிரயாணங்களிலும், கலாச்சாரங்களிலும், மனிதர்களிலும், மற்றமைகளிலும் ஆர்வம் இருந்தது. அவருக்கும் இருந்தது. இதன் காரணமாக எனக்குள் உள்நுழைந்தார். அவர் தூக்கிப் பிடித்தார். கொண்டாடினார். கிடைத்த சந்தர்ப்பங்களிளெல்லாம் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும், மாநாடுகளிலும், கூட்டங்களிலும் என்னை அறிமுகப்படுத்தினார். நான் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

எஸ்எல்எம் மசனோபு புக்காக்கோ, நம்மாழ்வார் போன்றவர்களின் தொடர்ச்சி என்பேன். இவர்கள் எல்லோரும் ஒரே நேர்கோட்டில்தான் சிறு சிறு வித்தியாசங்களுடன் இயங்குகிறவர்கள். இயற்கை மீதான ஆர்வம், விவசாயம், விலங்குகள், கல்வி, அதன் பிரயோகம், விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் செயற்பாடு என்ற தளங்களில் வெவ்வேறு வித்தியாசங்களுடன்தான் இயங்குகிறவர்கள்.


2012ம் ஆண்ட தொடக்கம் 2020ம் ஆண்டுதற்போதையகாலம் வரையான அவருடைய முகநூல்களிலிருந்து அவருடைய இன்னொரு குறுக்குவெட்டு முகத்தை வெளிக்கொணருவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அவருடைய முகநூல் பக்கங்களை ஆராய்ந்தபொழுது அவர் தொடாத விடயங்களே இல்லை என்னும் அளவிற்கு அவர் பல விடயங்களை தொட்டுச் சென்றிருக்கிறார். அந்த முகநூல் பதிவுகளிலிருந்து எஸ்எல்எம் கொண்ட பல்பரிமாணம், பன்மைத்தன்மை போன்றவைகளின் வெட்டு முகத்தை வெளிக்கொணருவதே இந்த எழுத்தின் நோக்கமாகும். கையாளுவதற்கும், ஆதாரத்திற்கும் இலகுவானதும், அத்துடன் முகநூல் பதிவுகளுக்கும், எஸ்எல்எம் அவர்களின் தனிப்பட்ட வாழ்விற்கும் எவ்வித இடைவெளிகளும் காணப்படவும் என்ற காரணத்தினாலேயே, முகநூல் பதிவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

எஸ்எல்எம்மும் தாவரங்களும், எஸ்எல்எம்மும் விலங்குகளும், எஸ்எல்எம்மும் இயற்கையும், எஸ்எல்எம்மும் சுற்றுச்சூழலும், எஸ்எல்எம்மும் உணவும், எஸ்எல்எம்மும் வேளாண்மையும் என ஆறு தலையங்கங்களில் எஸ்எல்எம் ஆராயப்பட்டிருக்கின்றார். இந்த ஆறு தலையங்கங்களுமே எஸ்எல்எம் அவர்களின் ஆறு நூற்களாக வெளியிடப்படக்கூடிய தகுதிவாய்ந்தன. ஒவ்வொரு தலையங்கத்தின் கீழும்  அடைப்புக் குறிக்குள் இந்தக் கட்டுரையின் தலையங்கம் சார்ந்த முகநூல் பதிவுகளின் தலையங்கம் அல்;லது சாரம் தரப்பட்டிருக்கின்றது என்பதைக் கவனத்திற்கொள்க. கலைத்துப்போடப்பட்ட முகநூல் தலையங்கங்கள் அல்ல சாரங்களைக் கொண்டே அவரை ஊகித்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.

 

1)            எஸ்எல்எம்மும் தாவரங்களும்:

(ஆலமரம், கிண்ணை, ஜம்பு, தென்னை, காட்டுமா, மருங்கை மரம், இலந்தைகள்ளிப்பூ, பேராதனை மரங்கள், பாலை, கண்டல்காடு, மூதூர் அல்லி மரங்கள், சுரவணிய மரம், இலுப்பை, 50 வகை மரங்களின் பெயர்கள், பனை, வெண் சந்தன மரம், புங்கை, உக்குரஸ்ஸ, செவ்விளநீர், அம்பலவி, பப்சாசி, பனை நுங்கு, மா, தேன் தோடம்பழம், பூக்கள்மரமுந்திரி, முந்திரி, புளி, கொய்யா, வில்வ மரம், கல்யாண முருங்கை, கறிவேப்பிலை, கறுவா, இலவங்கப்பட்டை, கூரங்கொடிகறணைக்கீரை, பயற்றை, வட்டுக்காய், பசளிக் கீரை, கீரை, தூதுவளை, பூனை புடுக்கு, தண்ணிச் சோற்றுப் பழம், நாவல் பழங்கள், கிளாப் பழம், இனிப்பு புளி, மாங்கன்று, கீழ்க்காய் நெல்லி, சேற்றுப்புழப் பற்றை, தவசி முருங்கை, தூதுவளை, அன்னமுன்னா, ஓக்கிட்)

எஸ்எல்எம் அவர்களின் தாவரங்கள், செடி, கொடிகள் பற்றிய அறிவுபிரமிக்கத்தக்கது. அலாதியானது. அற்புதமானது. எந்த மரத்தினதும், செடியினதும் பெயரைக் கூறும் ஆற்றல் வாய்க்கப்பெற்ற திறமை, அவைகளது உணவு, மருத்துவ, மற்றைய பயன்களையும், அதன் முக்கியத்துவத்தையும் உடனடியாக கூறக்கூடிய ஆற்றலும் பிரமிக்கத்தக்கது. அவர் நடமாடும் நூலகத்தைப் போன்றவர். அல்லது தாவர, செடி கொடிகளின் அகராதி என்றுகூட சொல்லலாம்.

தாவரங்கள், செடிகள், கொடிகள், அவற்றில் அழிந்து போன தாவரங்கள், அருகிவரும் தாவரங்கள், சுதேசிய தாவரங்கள், பாதுக்கப்படவேண்டிய தாவரங்கள். அருகிப்போன உணவாகப் பயன்படுத்தும் பழங்கள், காய்கள், இலைகள், போன்றவைகளை எஸ்எல்எம் முகநூலில் பதிந்திருக்கிறார். அவகைளில் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மூலிகைகளும் உள்ளன. அவற்றின் மேல் மிகவும் ஆர்வவமாக இருந்திருக்கிறார் அது சம்பந்தமான விழிப்புணர்வையும் உருவாக்க முற்பட்டிருக்கிறார். அவரின் முகநூலில் காணப்பட்ட மரங்கள், பழங்கள், செடிகள், கொடிகள், மூலிகைகள், பூக்களுக்கு மேலே உள்ள முகநூல் பதவில் உள்ள தாவரங்கள் சம்பந்தமான விடயங்கள் சில உதாரணங்களாகும்.

2)            எஸ்எல்எம்மும் விலங்குகளும்:

(ஆடு, மாடு, மான், பூனை, உடும்பு, ஆட்டுக்குட்டி, ஆமை, மயில், யானை, நாட்டுக்கோழி, குருவிகளின் பெயர்கள், மூறா எருமைகள், எருமை பூனைக்குட்டி, குரங்கு, குதிரை, ஆமை, கொடுப்புலி நாய், மான்கள், தாறா, பச்சைக்கிளி, பறவை, கிளி தேன்கூடு, கொக்கு, வெள்ளையன் ஆடு, ராணி மாடு, இது மானிடக் காதல் - மாடு, கறுப்பு, வெள்ளை இணை பிரியாத தம்பதிகள்.  வண்ணத்துப்பூச்சிகளின் நடனம், வயல் வீதியில் வீசிய நாய்க்குட்டி)

எஸ்எல்எம் அடிப்படையில் ஒரு விலங்குப் பிரியர். அதற்குரிய கல்வியும், அறிவும், அனுபவமும், இயற்கையான மனநிலையும் அதற்கு அவருக்கு வாய்த்திருந்தது. சூழலில் நடக்கும் ஒவ்வொரு சிறு அசைவையும் கூர்ந்து நோக்குகிறார். அதனை ஏதோவொரு வகையில் பதிகிறார். முதலில், எந்த ஒரு விலங்கையும், பறவையையும், சிற்றுயிரிகளையும் தனக்கீடாக நோக்குகின்றார். அவைகளை நேசிக்கிறார். முடிந்தால் போசிக்கிறார். பின்னர் வெளியுலகமும் அதுபோல் இருக்குமாறு போதிக்காமல் நடந்து காட்டுகிறார். அல்லது வாழ்ந்து காட்டுகிறார். இது எல்லோருக்கும் சித்திப்பதில்லை.

அவரின் வெள்ளையன் ஆடு களவு போய், நீதின்றம் சென்று, அவதிப்பட்டுஇறந்துபோன கதை தெரிந்தவர்களும், கறுப்பு வெள்ளை மாடுகளின் இணை பிரியாத இல்லறத்தை அவர் நேசித்த பாங்கும், வெளவால்களுக்கும், பறவைகளுக்கும் கனிதருகின்ற மரங்களை தாரை வார்த்துக்கொடுத்த காதையும், மாடுகளின் இளவரசிகளுக்கு இரு நூறுகளுக்கும் அதிகமான பெயர்கள் வைத்து அழைத்து அவற்றில் அன்பு வைத்து நேசித்த விதமும், ராணி மாட்டின் மீது மனிதன் உணர்ந்து கொள்ள முடியாக் காதலைக் காட்டியதும், வண்ணத்துப் பூச்சிகளின் நடத்தை கலாபூர்வமாக ரசித்த விதமும், வயல் வீதியில் வீசியெறியப்பட்ட நாய்களுக்கு காட்டிய கரிசனையும், பறவைகளின் வலவை போதலில் காட்டிய அக்கறையும், மானிடநேயமிக்க விஞ்ஞானிகளுக்கு மட்டுமே உரியது. எஸ்எல்எம் ஒரு உயிரியல், நடத்தையியல் விஞ்ஞானியாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார். வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

3)            எஸ்எல்எம்மும் இயற்கையும்:

(மட்டக்களப்பு தமிழர் நிலக்காட்சிகள், காடு கரைகள், அதன் கதைகள், காரண காரியம், பரண், ஆமையரப்பாட புட்டி, வயல்வெளிகள், தூக்கணாங் குருவிக்கூடு, பாதைகள், மழை பொழிதல், பறவைகள் வலசை போதல், மாட்டு வண்டி, வாப்பாவின் பூனை, பறவை மரங்கள், தேன்கூடு, பாசிக்குடா கடற்கரை, வத்தை, ஏறாவூர் ஆற்றங்கரை, மரங்கள் சம்பந்தமான கவிதை)

எஸ்எல்எம் ஒரு இயற்கை நேசர். சிறு தூரமாயினும், பெருந் தூரமாயினும்பிரயாணிப்பதை விரும்புவர். அங்குள்ள, தாவர, விலங்கு சுற்றுச்சூழல், நிலக்காட்சிகளை கண்டு களித்து மகிழ்பவர். அவருக்குள் ஒரு திறமையான புகைப்படக் கலைஞன் எந்த நேரமும், தயாரான நிலையில் உயிர்ப்பாகவே ஒழிந்துகொண்டிருப்பதால், அவைகளைப் புகைப்படம் எடுத்து மகிழப்வர். அந்த நிலக் காட்சிகளின் கதைகளை தெரிந்து கொண்டு, மற்றவர்களையும் தெரிந்துகொள்ளச் செய்வார். அந் நிலங்களின் எவ்வளவு தொன்மங்கள், பழைய சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள் வழக்கொழிந்துள்ளன என்பதையும் வெளியே கொண்டுவந்துவிடுவார். உதாரணத்திற்கு மட்டக்களப்பு தமிழர் நிலக்காட்சிகள், வயல்வெளிகளையும், அங்கு தொங்கும் தூக்கணாங் குருவிக் கூடுகளின் அந்தரத்து மிதப்பையும், வாப்பாவின் பூனைகளையும், எத்தனை கவிஞர்களால் கூறமுடியும். அதனை வெளிப்படுத்துவதற்கு கவி மனம் உள் ஒளி ஓவியன் ஒருவனால் மட்டுமே முடியும்.

4)            எஸ்எல்எம்மும் சுற்றுச்சூழலும்:

(ஆற்றங்கரை கபளீகரம், மண் கொள்ளை, ஆற்றங்கரையை அசிங்க்கப்படுத்தலர தனியார் மருத்துவமனை அடாத்துக்கள், விறகுக்காக காடழிப்பு, திண்மக் கழிவுகள், பள்ளிவாசல் மரங்களைத் தறித்தல், ஆஸ்பத்திரி மரங்களை தறித்தல், மரங்களை அழித்தல், கீரையில் பூச்சிநாசினி, பாதை பாதிப்பு, வீதி மாசாக்கல், டெங்கு நுளம்பு, பாலை நகர் குளம், கிண்ணியா கடற்கரை, மீன், 200 வருட புளிய மரம், உயிர்வேலி, காஞ்சிரங்கொட்டை, புறொய்லர் கோழிக்குஞ்சுகள், மழையை வரவேற்றல், நெல்ஜெயராமன், ஆறு, மரங்கள் பற்றி கடிதம், கால்நடைக்கோ, பனை நடுகை, வேப்ப மரம் நடுகை மரங்களால் உலகை அழகுபடுத்துவோம். மரங்களை நேசிப்பவர், புங்குடுவீவிற்கு புங்கை மரங்களும், வவுனியாவிற்கு இலந்தை மரங்களும் அனுப்புதல், பனைகளைக் கொண்டாடுவோம,; வெளவால்களுக்கான பழங்களுக்கான மரங்கள், விதைகள்)

எஸ்எல்எம் அவர்களுக்குள் இருக்கும், நான் நேசிக்கும் முக்கியமான இரு பாத்திரங்கள் இருக்கின்றன. அவை சிறந்த சுற்றுச்சூழல் போராளியும், செயற்பாட்டாளருமாகும். எங்காவது சுற்றுச்சூழல் பங்கம் ஏற்படக் கண்டா, சுரண்டப்படுவதைக் கண்டால், அதனை புகைப்படம் எடுத்து, பதிவாக்கி, எழுதிவிடுவார். இதனால் அவர் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஆற்றங்கரைப் பிரச்சினைகள், வீதியில் குப்பைகள் கொட்டுதல், மரங்களை அழித்தல், பள்ளிவாசல்காரர்கள் மரங்களை அழித்தல், ஆஸ்பத்திரிக்காரர்கள் மரங்களை அழித்தல், காடுகள் அழிபடுபடுதல் போன்றவைகளைக் கேள்விப்பட்டால், கண்டால் அவருக்குள் ஒழிந்திருக்கும் அசுரன் பிறப்பெடுத்து மூர்க்கமாக போராடத் தொடங்கிவிடுவான். இதனால் என்றும்  மாபியாக்களுடனும், அரசியல்வாதிகளுடனும் முரண்பட்ட நிலையிலேயே அவரால் இருந்துகொள்ள முடிந்தது. இது இன்றைய தலைமுறைகளில் காண முடியாத அழிந்து போன ஒரு பண்பாகும்.

5)            எஸ்எல்எம்மும் உணவும்:

(கருவாடு, கத்தரிக்காய், மீன்பிடித்தல், உப்புக் கண்டம், சிங்களச் சிற்றுண்டி;,  தேன் வதை, பெரிய கடல்மீன், சினை நிறைந்த கடல்மீன், அறுக்குளாமீன், சள்ளல், பனையான், கொக்கிசான் மீன், கொய் மீன், குளத்து மீன்கள், இறால் வேட்டை, நண்டு, நெத்தலிக் கருவாடு, சுட்ட உப்பு சுங்கான், சுங்கான் கருவாடு, காட்டில் வளரும் நாட்டுக்கோழி, முருங்கையிலை, குப்பைக் கீரை, இலைக் கஞ்சி, பத்து இலைக் கசாயம், பால்சொதி, சுடுசோறு, இளநீர், அன்னாசிப் பழம்வேரில்பழுத்த பலா, நாவற்பழம், மோர், நண்டு பிறட்டல், சுடுசோறு, பழஞ் சோறு, சமையல் முறைகள், முருங்கைக்காய் சாம்பார், பாலாணம் மூன்று பிட்டுக்குழல்கள், வாகனேரி, கோல்டன்  பாலாணம் சாமானியர்களுடன் சாப்பாடு, கந்தூரி)

எஸ்எல்எம் ஒரு சாப்பாட்டுப் பிரியர். நன்றாக சுவையாக சமைக்கத் தெரிந்தவர் என்று அவரின் நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும். அவர் பார்த்த, கேட்ட, சமைத்து, உண்ட உணவுகளை வெளியுலகிற்கு அவர் வெளிப்படுத்தும் விதம் அலாதியானது. சமையல் குறிப்புக்களுடனேயே பெரும்பாலும் வெளிப்படுத்துவார். அவர் அதனை எங்களுக்கு அறியச் செய்யும் பாணியானது, வாயில் எச்சிலை ஊற வைத்து, அந்த உணவின் மேல் பெரு விருப்பத்தை ஏற்படுத்திவிடும்.

நாம் இழந்துபோன சத்துள்ள சுதேசிய உணவுகள், கஞ்சி வகைகள், மரக்கறிகள், பழங்கள், மாமிச உணவுகள், தானியங்கள் போன்றவற்றில் அதிக அக்கறை கொண்டிருந்தார். குறிப்பாக சேதன பசளையில் வளரந்த இயற்கை உணவுகளில் பெரிய நாட்டத்தைக் காட்டினார். அவர் செல்லும் வயல்வெளிகள், காடுகள் போன்றவைகளில் சாமானியர்கள் கொண்டுவந்த இவ்வாறான உணவுகளை அவர்களுடன் பகிர்ந்துண்டார்.

மாமாங்கம் கோயில் திருவிழாவில் அடிக்கடி சாப்பிட்ட முருங்கைக்காய் சாம்பார், பாலாணம், மூன்று குழல் பிட்டுக்களைப் பற்றி சிலாகிக்கும்போது அங்கு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், சகிப்புத்தன்மையும் மணக்கும். இது இன உறவின் நல்ல அடையாளம். கடந்த வருடங்களில் அதற்குத் தடை வந்தபோது அவர் துண்டு போய்விட்டதாக உணர முடிந்தது.

6)            எஸ்எல்எம்மும் வேளாண்மையும்:

(பயிர்களை விதைகளிலிருந்து உருவாக்கல், சிறுவர் விவசாயம், பூங்கனியின் தோட்டம், பலாமரம் ஒட்டுதல், முடிவெட்டிய மரம், சோளத் தோப்பு, கத்தரிச் செய்கை, வெள்ளைக் கத்தரி, போஞ்சி, ரொம் ஜேயிசி மா, சோளன் இனஉறவு, தென்னைச் செய்கை, இயற்கை விவசாயம், தேங்காய் பறித்தல், மாம் பழச் செய்கை, கற்றாளை செய்கை, கோழி எரு- கொச்சி, கத்தரி, புழுதி விதைப்பு, மக்கா பண்ணை பாவற்காய் அறுவடை, சோளம், மரவெள்ளிக் கிழங்கு, தக்காளி, கொச்சி, வத்தகைப்ழபம்,  அவரைக் காய், பீர்க்கை, வெண்டி, கன்னொருவ விவசாய தொழில்நுட்ப பூங்கா, மயில் வளர்த்தல், காளை மாடு சுளுக்கு, மாட்டுச்சூடு, பால் கறத்தல், தேனி வளர்த்தல், , வெள்ளச்சி மாடு சுகப் பிரசவம். தூண்டில், நெஞ்சம் நிறைந்த இளசரவிகள், மாடுகளின் பெயர்கள், கிறின் லாண்ட- இலநதை ஒட்டுமரங்கள், பள்ளிமடு பண்ணை சோழம் நட்டம், பட்டாளப் புP, மழை, பயிர் நட்டம், சிவப்பு வண்டுத்தாக்கம், கால்நடைத்தீவனம், உரப்பிரச்சனை, பாய் இழைத்தல், மாடு, உழவு, மீன்பிடி, மாட்டுவண்டி, பருத்திமனை, கோழித்தீன், கிண்ணியா கரைவலை, கட்டுவலை, மீன் காட்டில் வளர்ப்பு, மண்புழு) 

அடிப்படையில் எஸ்எல்எம் ஒரு விலங்கு வேளாண்மையாளர். தாவர, விலங்குவேளாண்மையாளர். கிளிநொச்சி விவசாயக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து, விவசாய போதனாசிரியராக இருந்து, கால்நடை மருத்துவரானவர். அவரது, அனுபவமும், அறிவும், இவைகளை எழுத்துரைக்கும் முறையும், எங்களை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். பயிர்களை விதைகளில் இருந்து உருவாக்குதல், எப்படி மரங்களை வெட்டி ஒட்டலாம், பராமரிக்கலாம்? பல்வேறு மரக்கறி, பழச் செய்கைகளை எவ்வாறு செய்யலாம்?, அவைகளின் விளைச்சலை எவ்வாறு அதிகரிக்கலாம்? அதற்கு எவ்வாறு இயற்கை உரத்தைப் பாவிக்கலாம்? என்பதோடு மட்டுமல்லாது, விவசாயிகள் எதிர்நோக்கும் பூச்சி, பீடை தாக்கங்கள், உரப் பிரச்சினைகள், நீர்ப்பாசனப் பிரச்சினைகள் போன்றவற்றையும் வெளிக்கொணருகிறார்.

அத்துடன் எவ்வாறு கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது?,  மருத்துவம்செய்வது?, சுகப் பிரசவம் செய்வது?, மற்றும் அதன் நடத்தைகள் போன்றவைகளை வெளிக்கொணருகிறார். அது மட்டுமல்லாமல், தேனி, கோழி, மீன் வளர்ப்பு போன்றவைகளிலும் ஆர்வம் காட்டுகிறார். இதனை அவரது பதிவுகளின் ஊடே கண்டு களிக்கின்றோம்.

அத்துடன் மலிவான தரமான, நஞ்சற்ற மரக்கறிகளும், பழங்களும் எங்கே கிடைக்கும் என்பதையும், மற்றும் தரமான மரக்கறி, செடிகள், தாவரங்கள், காட்டு மரங்கள் போன்றவறறை எங்கே பெற முடியும் என்பதையும் பதிவிட்டு, நுகர்வோருக்கும், மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றார்.

அது மட்டுமல்லாமல், இவ்வாறான உணவுகளையும், இயற்கையாய் விளைந்த கனிகளையும், காய்களையும், சத்துள்ள தானியங்களையும், பொருட்களையும் சந்தியில் அமர்ந்து விற்கும் ஒரு வயதுபோன பெண்ணருகில், அல்லது தெருத்தெருவாய் கூவிவிற்கும் ஆணருகில் கர்வம் களைந்து, இன, மதம் கடந்து அமர்ந்து, பல கதைகள் பேசி, அவர்களுக்கு பல ஆலோசனைகள் கூறி, அவர்களுடைய பொருட்களையும் வாங்கி, மற்றவர்களையும் அவைகளை வாங்கச் செய்து, பொதுவெளிக்கு சற்றும் அறிமுகமில்லா சாதாரண மாந்தர்களை பொது வெளிக்கு அறிமுகப்படுத்தி பிரபல்யமாக்கிவிடுகிறார்.

அத்துடன் இவைகளுக்கு மேலதிகமான அழிந்த நிலையில் இருக்கும் கந்தூரி சடங்கு, பாய் இழைப்பு, பருத்திமனை, மாட்டு வண்டிகள், போன்றவைகளையும், பாரம்பரிய நன்நீர், கடல்நீர் மீன்பிடி முறைகளையும் வெளிக்கொணருகிறார்.

பேச்சாற்றல் எஸ்எல்எம்முக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது, பல்வேறு மேற்கோள்களிலிருந்து உதாரணங்கள் காட்டி பேசுவார். மிக எளிமையான சொற்கள் மூலம் மிகவும் சிக்கலான விடயங்களை இலகுவாக விளங்கப்படுத்துவார். அவரது பேச்சில் கிராமியம் மணக்கும். ஹாஸ்யம் கொப்பளிக்கும். எல்லோரும் அதற்குள் இலகுவாக உள்நுழைந்துவிடுவார்கள்.

இயற்கை வழி விவசாயம், பரம்பரை மாற்றப்பட்டட விதைகள், மழைநீர் சேகரிப்பு, சிறுதானியங்கள், சுதேசிய தாவரங்கள், பயிர்கள், போன்றவற்றை பாதுகாப்பது, அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, திண்மக் கழிவு முகாமைத்துவம், நீர்வளங்களைக் காப்பது, காடுகளைக் காப்பது, பராமரிப்பது மரங்களை நடுவது, வளர்ப்பது, உருவாக்கிக் கொடுப்பது போன்றவற்றில் அதிக நாட்டம் கொண்டிருந்தார்.

பன்முகத்தன்மை வாய்ந்த எஸ்எல்எம் ஒரு பயிர் வேளாண்மை, விலங்குவேளாண்மை அறிஞர், இயற்கையை நேசிப்பவர், விவசாயிகள் நலனில் அக்கறையுள்ளவர்;, தோட்டக்கலை வல்லுனர், நீரியல் வல்லுனர், மனிதநேயர், பண்பாளர், பசுமை எழுத்தாளர், எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், அரசியல் செயற்பாட்டாளர். எல்லாராலும் இலகுவாக அணுகப்படக்கூடியவர். கேட்ட உதவிகளை யாருக்கும் செய்யக்கூடியவர். பயணங்களை விரும்பிய அவர், பயணங்களில், மனிதர்களையும், விலங்குகளையும், மரங்களைiயும், செடிகளையும், கொடிகளையும், விரும்பி நண்பர்களாக்கி படம் எடுத்த ஒளி ஓவியர்.

எஸ்எல்எம் ஹனிபா என்கின்ற பல்திறமை வாய்ந்த ஆளுமை தான் கற்ற கல்விக்கு அப்பால், காலத்தின் காலடியில், தனது அனுபவம், அறிவு, ஆளுமை, செயல்,  வாசிப்பு, எழுத்து போன்றவற்றின் ஊடே தன்னைத் தானே செதுக்கிக்கொண்ட நமது காலத்தின் மிக மகத்தான மனிதர் என்றால் அது மிகையாகாது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...