Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 05 (உயிர்ச்சுவட்டு பாறைகள்)

- ஏ.எம். றியாஸ் அகமட்

பல மில்லியன் வருட உலகக் காலநிலையின் கோலங்களையும், புவித்தோற்றபுவிச்சரிதவியலையும் அறிந்துகொள்வதற்கும், ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கும் அல் ஹாஜர் மலைத் தொடரானது சர்வதேச அளவில் புவித்தோற்றவியல், புரிணாமவியல் விஞ்ஞானிகளுக்கு மிக முக்கியமான ஒரு இடமாக கருதப்படுகின்றது. ஏனெனில் அல்ஹாஜர் மலைத்தொடரானது பூமி முழுவதும் பனியால் மூடப்பட்ட மூன்று யுகங்களையும் உள்ளடக்கிய 825 மில்லியன் வருடகால பதிவுகளை உட்பொதிந்து வைத்திருக்கின்றது.

தற்போது நாங்கள் உள்நுழைந்திருக்கின்ற வழித்தடத்தில், பல மில்லியன் வருடங்களாக நீரின் ஓட்டத்தினாலும், அரிப்பினாலம் நதிப்படுக்கைக்கு இடையே இரு பக்கங்களும் செங்குத்தான உயரமான சுவர்கள் போன்ற பாறைகள் தோன்றியிருக்கின்றன. பாறைச் சுவர்கள் எங்கும் ஒன்றின் மேலொன்று படிந்த படைகள் அல்லது அடுக்கிய படைகள் காணப்படுகின்றன இந்த ஒவ்வொரு படையும், ஓவ்வொரு யுகத்தையும், அதன் காலங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, அந்தந்த யுகங்களுக்கும், காலங்களுக்கும் சொந்தமான தாவர, விலங்கு, நுண்ணுயிரிகளையும் உயிர்ச்சுவடாகப் புதைத்து வைத்திருக்கின்றன. கிறயொஜெனியன் (850 மில்லியன் வருடங்களுக்கு முன்), எடிகறாசியஸ் (630), கெம்பிரியன் (542), ஒடோவிசியன் (488), சிலூரியன் (433), டெவோனியன் (416), காபனிபெரஸ் (359), பெர்மியன் (299), றியாஸிக் (251), ஜுராசிக் (199), கிறற்றாசியஸ் (145), பெரியோஜீன் (65), நியோஜீன் (23), குவாட்டனரி (1.😎 படைகளின் கதம்பமாகவே அந்த உயிர்ச்சுவட்டு மதில் பாறைகள் இருந்திருக்கலாம்.

45 மில்லியன் வருடங்களுக்கு முன், ஆழம் குறைந்த கடலால் முற்றிலும்மூடப்பட்டதாக ஓமானும், இந்த அல் ஹாஜர் மலைத் தொடரும் இருந்திருக்கின்றன. இதன் காரணமாகவே முருகைக் கற்களின் பல்வேறு வடிவங்களையும், சுண்ணக் கற்களையும், டொலமைற்றாக்கப்பட்ட செபலோபோட்டு சுண்ணக் கற்களையும், பல கடல் விலங்குகளின் உயிர்ச்சுவடுகளின் தொகுதிகளையும் இந்த மலைத் தொடர்களின் எல்லா உயரங்களிலும், குறிப்பாக கடல் மட்டத்திலிருந்து 10000 அடிவரையுள்ள உயரமான இடங்களிலும் இலகுவாக கண்டுகொள்ளலாம். பொறாமினிபர்ஸ், பிறயோசோவன்ஸ், கொனொடொன்ற்ஸ், ஒஸ்றாகொட்ஸ், விதவிதமான முருகைக்கற்களின் இனங்கள், செபொலொபொட்ஸ் (டொலமைற்றாக்கப்பட்ட சுண்ணக் கற்களும், செபொலொபொட்களும்), மொலஸ்காக்கள், மிதக்கக்கூடிய பைவால்வுளிகள், பிறக்கியோபொட், றெடியொலாரியன்ஸ், அல்காக்கள், அந்தக் காலங்களுக்குரிய உயிரினங்களின் மிச்சங்கள், எச்சங்கள் போன்ற நீர்வாழ், நிலவாழ், கடல்வாழ் உயிரினங்கள் இந்தப் உயிர்ச்சுவட்டுப் பாறைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இவ்வாறான படைகளையும், உயிர்ச்சுவடுகளையும் அமெரிக்காவின் கொலறாடோவின் பிரதேசங்களிலேயே காணக்கூடியதாக இருக்கும் எனப் படித்திருக்கின்றேன். சனல்களிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிர்பாராதவிதமாக நான் கண்டதும், தரிசித்ததும் பரிணாம உயிரியலாளன் ஒருவனுக்கு நிச்சயமாக ஒரு கொடுப்பினையாகத்தான் இருக்க வேண்டும். அதுவும் ஒரு சுவர்க்கமாகத்தான் இருக்க வேண்டும்.

அதற்காக சுவர்க்கத்தில் வாகனத்தை நிறுத்தவில்லை. ஏனெனில் கண்ணெதிரேநரகம் ஒன்று காத்திருந்தது. வாகனத்திலிருந்து இறங்கி நேரம் செலவழித்து, புகைப்படங்கள் எடுத்து நேரத்தை விரையமாக்க விரும்பவில்லை. (வாகனத்தில் செல்லும்போதே புகைப்படம் எடுத்தேன். ஓரிரு படங்கள்தான் நன்றாக வந்திருந்தன).

இதற்கு பல காரணங்கள் இருந்தன. இருந்தாலும் இதற்கு முக்கியமான ஒரு அபாயகரமான, ஆபத்தான, பயங்கரமான காரணம் இருந்தது. எங்கள் வாகனம் பயணம் செய்துகொண்டிருப்பது இரு பக்கமும் செங்குத்தான உயிர்ச்சுவட்டு பாறைகளால் சூழப்பட்ட வெள்ளநீர் வழிந்தோடக்கூடிய கணவாயாகும். மலைப்பகுதிகளின் மிகத் தூரமான பகுதிகளிலும் பெய்கின்ற ஒரு பதினைந்து நிமிட சாதாரண மழை (றொறென்சியல் றெய்ன்) ஒன்றே போதும், மழை வெள்ளம் (பிளாஸ் பிளட்) எங்கள் வாகனத்தை மூடி, அடித்துச் சென்று எங்கள் கதைகளை முடிப்பதற்கு.

தற்போதைய காலநிலை மாற்றங்களின் காரணமாக வழமையைவிட பத்துமடங்கு அதிகமாக மழையானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெய்து முடிக்கின்றது. இப்போது பெப்ரவரி நடுப்பகுதி. தலைநகர் உள்ள மஸ்கட் மாகாணம், ஜனவரி, பெப்ரவரி மாதங்களிலேயே அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன. நாங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்ற மத்திய ஹாஜர் பகுதி பல்வேறு அபாயங்களைப் புதைத்து வைத்திருக்கும் கடின நிலத்தோற்றங்களை (வைல்ட் றெறெய்ன்) கொண்ட ஒரு அமைப்பாகும். இந்தக் பகுதிக்கு இரண்டு மழைக் காலங்கள் இருக்கின்றன. சிறு மழைப் பருவம் (ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே). பெரு மழைப் பருவம் (ஜூலை, ஓகஸ்ட்). நாங்கள் அபாயமான காலத்திற்குள்ளும், பிரதேசத்திற்குள்ளும் அகப்பட்டு நிற்கின்றோம் எனத் தெரிந்தது. இந்தப் பிரதேசத்தை அவரமாக கடந்துவிட வேண்டும் என்றும் புரிந்தத. மேன் வெர்சஸ் வைல்ட் பியர் கிறில்ஸ், இப்படிப்பட்ட இடங்களில் பிரயாணம் செய்யக்கூடாதென்றும், அவைகளை வேகமாக் கடந்துவிட வேண்டுமென்றுதான் வழமையாக அவரது நிகழ்ச்சிகளில் அறிவுரை கூறுவார். இது பற்றி மற்றவர்களிடம் கதைத்து அவர்களின் இக்கட்டான நிலைமையை அதிகரிக்கச் செய்ய நான் விரும்பவில்லை.

கடந்த வருடம் மே மாதம், இது போன்றதொரு வாகனத்தில் இது போன்றதொரு இடத்தில் பிரயாணம் செய்த இந்திய கேரளக் குடும்பம் ஒன்று எங்கோ ஒரு பிரதேசத்தில் பெய்த குறுகிய மழையால் உருவான வெள்ளத்தில் (பிளாஸ் பிளட்) மாட்டிக்கொண்டதனால் அவர்களது வாகனம் அடித்துச் செல்லப்பட்டு, அந்த வாகனத்தில் பிரயாணம் செய்த 7 பேரில் 6 பேர் தங்களது உயிரை இழக்க நேரிட்டது. வாகனத்தை ஓட்டிச் சென்றவர் மட்டும் பேரீச்சை மரத்தின் உச்சியைப் பிடித்துக்கொண்டு கொண்டு இருந்ததனால் தப்பியிருக்கின்றார். அவரின் பெயர் அகமட். நாங்களும் இரு அகமட் (கள்) (றியாஸ் அகமட், றயீசுல் அகமட்) இந்த வாகனத்தில் முன்னுக்கு இருக்கிறோம். இதில் எந்த அகமட் தப்புவாரோ தெரியாது. வானத்தின் நீலம் நீண்ட நேரம் நீளமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். செங்குத்தான பாறைச்சுவரால் சூழப்பட்ட, எளிதில் வெள்ள நீரால் நிரம்பக்கூடிய, மனித சஞ்சாரமற்ற, அமைதியான கணவாயில் எங்கள் வாகனம் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனாலும் கண்ணுக்கு முன்னே எங்களுக்கு அபாயம் ஒன்று காத்துக் கொண்டிருக்குப்பதுபோல்தான் தோன்றியது.








No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...