Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 04

 - ஏ.எம். றியாஸ் அகமட்

சகலன். டொக்டர் றயீசுல் அகமட். அழைக்கப்படும் பெயர் டொக்டர் றயிஸ்.அவரும், நானும் பாடசாலைப் பருவம் முழுவதும் ஒரே பாடசாலையில் கற்றோம். எனக்கு ஒரு வருடத்திற்கு இளையவர். பெரும்புலவர் புலவர்மணி .மு. சரிபுத்தீன் அவர்களின் மகளின் மகன். பேரன். ஓமானில் கடந்த பத்து வருடங்களாக, அதன் தலைநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மயக்கமருந்து நிபுணராகவும், மருத்துவ அதிகாரியாகவும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். திறமையானவர். கெட்டிக்காரர் இந்தக் களேபரத்துக்குள்ளும் கடினமான லண்டன் டிப்ளோமோ பரீட்சையொன்றில் சித்தியடைந்துமிருந்தார். குடும்பமும் இங்கேயே இருக்கின்றது. மூன்று பிள்ளைகளும் (மகள் 17, மகன் 13, மகள் 7) இங்கேயே கற்கின்றார்கள். எனக்கும் அவருக்கும் சினிமா, இசை, புதிய இடங்களை தரிசித்தல், புதிய விடயங்களை அறிந்துகொள்ளல் என்பனவற்றில் ஒரேவகையான மீடிறன்கள்தான் இருந்திருக்கின்றன. எப்போதும் எதற்கும் கலங்காமல், முடிவுகளை விரைவாகவும், வேகமாகவும், உறுதியாகவும் எடுக்கக்கூடியவர். எப்போதும் நடைமுறைச் சாத்தியமாகவே (பிறக்டிகலாக) யோசிக்கக்கூடியவர்.

நாங்கள் தொலைந்துவிட்டோம். ஐயோ, அம்மா என்று கத்தி பிரயோசனமில்லை. நாங்களே உருவாக்கிக் கொண்ட அல்லது உள்நுழைந்துகொண்ட சிக்கலிலிருந்து நாங்களே எங்களை கவனமாக விடுவித்துக்கொண்டு வெளியே வரவேண்டும். இங்கே, இப்போது இதுவே எங்களுக்கிருக்கின்ற ஒரே தெரிவும், வழியுமாகும் என்றார் சகலன். வாகனத்தில் இருந்த எட்டுப்பேரில் இரு சகோதரிகளும் (அவரது மனைவியும், எனது மனைவியும்) பதட்டத்தில் இருந்தார்கள். எனக்கோ புளகாங்கிதம். அவருக்கோ இந்த விடுகதையின் முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்க்கப்போகின்றோம் என்ற ஆர்வம். பிள்ளைகளுக்கோ இன்றைக்கு சந்திக்கப் போகும் தரமான சம்பவங்களின் தொகுப்புக்களை கண்டுவிடத் துடிக்கின்ற சாகச களிநிலை மனம்.

வாகனம் சென்றுகொண்டிருக்கின்றது. இணையமும், தொலைத்தொடர்பும்தொலைந்து விட்டது என்ற மின்னலும் இடியுமான இன்னொரு சேதியையும்; பின்னாலிருந்து பிள்ளைகள் சொன்னார்கள். என்றாலும் ஏற்கனவே எங்கள் முழுப்பயணத்தின் கூகுள் மெப்பையும் புத்திசாலித்தனமான பிள்ளைகள் தொலைபேசியில் சேமித்துவிட்டிருந்தனர். தவறுதலாக தொலைபேசி கைவிரல்பட்டு, அதன் ஸ்கிறீன் அணைந்துவிட்டால், மெப் அவ்வளவும் சென்றுவிடும். மீண்டும் வராது. இதன் பாரதூரம் எங்களைவிட பிள்ளைகளுக்கு நன்றாக தெரிந்திருந்தது. கூகுள் மெப்பை இழந்துவிடக் கூடாது என்ற கரிசனை எங்கள் சூழலை இன்னும் இறுக்கப் பார்த்தது. எங்களது நக்கலும், கிண்டலும், நேர்மறை மனப்பான்மையும் இறுக்கத்தை ஓரளவு குறைக்க உதவினபோல்தான் தெரிந்தன.

வாதி அல்ஹப்பா பள்ளத்தாக்கில் வாகனம் சென்றுகொண்டிருக்கின்றது. ஒற்றையாக வந்துகொண்டிருந்த வழித்தடம் கண்ணுக்கு முன்னே ஓரிடத்தில் ஒக்டோபஸின் கால்களாய்க் கிளைக்கின்றன. எந்தக் காலைப் பின்பற்றுவது என்ற பெரிய குழப்பம். வண்டி ஓடிக்கொண்டிருந்தபொது எங்களுக்கு பின்னால் எங்களை நோக்கிய புழுதிக் கோளம் வேகமாகப் பறந்து வந்துகொண்டிருந்தது. வேகமாக எங்களை நெருங்கியும்விட்டிருந்தது. அது ரொயோட்டா ரூ பை ரூ வாகனம். அதனை நிறுத்தி வழிகள் பற்றிக் கேட்கலாம் என நினைத்தபோது, அதுவாகவே எங்கள் வாகனத்திற்கு சமாந்தரமாக நின்றது. கொஞ்சம் யோசனையுமாகிவிட்டத. வாகனத்திற்குள் இருவர் இருந்தனர். பின் பகுதியில் சில சாமான்களும் இருந்தன.

ஒரு சிறிய அச்சிடப்பட்;, அதன் மேல் அறபியில் எழுதப்பட்ட பேப்பரைத் தந்து, அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கின்றது என்று அறபியில் கேட்டனர். எனக்கு அப்துல்லாஹ் என்பதைத் தவிர எதையும் வாசிக்க முடியவில்லை. மற்றையவைகளை என்னால் வாசிக்கவும் முடியாது. அத்துடன் கையெழுத்தும் தெளிவாக இருக்கவும் இல்லை. நாங்கள் கற்று வாசித்த அறபு எழுத்துக்களுக்கு புள்ளிகள் இருந்தன. அந்த புள்ளிகளை வைத்துத்தான் அது , கா, கி, கீ, கு, கூ வா என்று அறிந்து கொள்வோம். இதன் காரணமாக அறபு மொழியில் ஐந்து, ஆறு எழுத்துக்களுக்கு ஒரே வடிவம் இருக்கும். அதாவது இந்தப் புள்ளிகள் உயிர், மெய்; குறியீடுகள் (ஸேர், ஸபர், பேஷ், {க்குன்) என அழைக்கப்படுகின்றன. அறபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் (அல்குர்ஆனைத் தவிர) பெரும்பாலும் உயிர்மெய் குறியிடுகளைப் பயன்படுத்துவதில்லை. குறியீடுகள் இல்லாமலேயே அதனை அவர்கள் சரியாக வாசித்துவிடுவார்கள். அதாவது நாங்கள் குத்துக்களும், புள்ளிகளும் இல்லாத வீடு, வளவு உறுதிப்பத்திரங்களை சரியாக வாசிப்பதுபோல.

சகலனுக்கும் அப்துல்லாஹ்தான் முடிந்தது. அந்த சிறிய காகிதத்தின் கீழேடோபார் வங்கி என்றிருந்தது. அந்த வங்கி ஓமானின் முக்கிய பத்து வங்கிகளில் ஒன்றாகும். அந்த வங்கி அனுப்பிய சாமான்களை அல்லது ஏதோவொன்றை அபாயங்களைப் புதைத்து வைத்திருந்த இந்தக் கரும்பொட்டற் பாலையின், ஏதோவொரு மூலையில் விநியோகிப்பதற்கு அவர்கள் எடுத்து வந்திருந்தார்கள்போல.

யுனஸ்கோ நிறுவனத்தின் 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஓமானின் வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் 96.11 சதவீதமாகும். அவற்றில் வளர்ந்த ஆண்களின், பெண்களின் சதவீதங்கள் முறையே 97.37, 93.21 ஆகும். வாசிக்கத் தெரியாத அந்த முதுமையின் எல்லையிலிருந்த ஆணைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அவர் ஒருவேளை வேலைக்கு வந்த வேறு நாட்டவராகக்கூட இருக்கலாம். மீண்டும் மீண்டும் ஐந்து ஆறு தடவைகள் வங்கியின் பெயரைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். வித்தியாசமானதும், புறநடையானதுமான இடங்களிலேதானே வித்தியாசமானதும், புறநடையானதுமான மனிதர்களினதும், மற்றமைகளினதும் ஒளிகளைத் தரிசிக்க முடியும்.

நாங்கள் எங்கள் வழிபற்றிக் கேட்டோம். ஒக்டோபஸின் பத்துக் கால்களில் தலைப்பக்க கால்களில் நேராக போவதற்கு நாங்கள் எடுத்த முடிவை மறுதலித்து, நிராகரித்து. இடதுபக்க நடுக்காலில் தொடரச் சொல்லி அறிவுரை கூறிவிட்டு, அந்தப் புழுதிப் பந்து ஒக்டோபஸின் தலைக்காலுக்கூடாக காற்றில் கரைந்து புள்ளியாகியது.

இடது பக்கம் திரும்பி, வாதி அல்ஹப்பாவை விட்டு, இன்னொரு வழித்தடத்துக்குள் நுழைகிறோம். சுமார் இருபது அடி அகலமான வழித்தடம். வழித்தடம் நெடுக இரு பக்கங்களும் சில வேளை ஒரு பக்கமும் ஐம்பது அல்லது நூறு அடிக்கு மேலாக சீராக சிலவேளை சீரில்லாமல் மதில்போல் கட்டப்பட்ட அமைப்பு.

கடவுளே! என்ன இது? என்னே! உன் கருணை. அது என் வாழ்நாளின் மிகப் பெரும் பாக்கியம். உணர்ச்சிப் பெருக்கீட்டால் வார்த்தைகள் வறண்டு போயின. இறைவா! உனக்கு ஆயிரம் கோடி நன்றிகள்.




No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...