Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 01

 - ஏ.எம். றியாஸ் அகமட்

அத் தக்லியா மாகாணத்தில், அல் ஹம்றா என்ற இடத்திலுள்ள இரண்டுமில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்த அல்ஹுதா குகைகளுக்கு விஜயம் செய்துவிட்டு, வடக்கு அல் சர்க்கியா மாகாணத்திலுள்ள வித்தியா என்னுமிடத்திலுள்ள சர்க்கியா மணற்பாலைவனத்திற்கு அடுத்த விஜயத்தை மேற்கொள்ளவென ஒரு பின்னேரப் பொழுதில் புறப்பட்டோம். இடையிடையே சில இடங்களில் இறங்கி ஓய்வெடுத்து, தேனீர் அருந்தி சென்றுகொண்டிருந்தோம். வாகனத்தின் பின்னால் எங்கள் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் கூகிள் மெப்பில் செல்லுகின்ற வழியையும், இரவு தங்குவதற்கு பொருத்தமான ஹோட்டலையும் தேடிக்கொண்டும், வழிகாட்டிக்கொண்டுமிருந்தார்கள்.

இவ்வாறு வேகமாகவும், சீராகவும் எக்ஸ்பிரஸ் பாதையில் ஓடிக்கொண்டிருந்த எங்கள் வாகனம். நீண்ட தூரத்திற்கு யாருமற்ற, பரந்த, கறுத்தக்கற் பாலைக்குள் நுழைந்திருந்தது. அப்போது இரவுமாகியிருந்தது. அங்கு மின்சாரம் இல்லை. இடையிடையெ சிறு சிறு மரங்கள். ஆங்காங்கே ஒட்டகங்கள் சிலவும் மேய்ந்த கொண்டிருந்தன. அந்த இருளுக்குள் ஓரிரு மின்மினிகளும் கோடு கீறத் தொடங்கியிருந்தன. இந்த இருளுக்கு ஒளி கொடுக்க ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து, ஓமான் வளைகுடாவுக்கூடாக சந்திரன் பெரிய பந்தாக மெலெழத் தொடங்கியது. என் வாழ்நாளில் தரைக்கு நேருக்கு நேராக நீண்ட தூரத்தில் சந்திரப்பந்து மேலெழுந்ததை நான் அவதானித்திருந்ததில்லை. இது எனக்கு புதுவித அனுபவமாக இருந்தது. சந்திரத் துண்டில் அந்த ஒட்டகங்களின் கயிறுகள் கட்டப்பட்டிருந்தன. சந்திரன் செல்லுமிடமெல்லாம் ஒட்டகங்களும் சென்றன. அல்லது ஒட்டகங்கள் செல்லுமிடமெல்லாம் சந்திரனை இழுத்துக்கொண்ட சென்றுகொண்டிருந்தன. சந்திரனும் எங்களுக்கு சமாந்தரமாக பயணம் செய்துகொண்டிருந்தது ஓரளவு எங்களுக்குத் துணையாகி கருங்கற் பாலையின் தனிமையின் அசௌகரியத்ததை தணித்துவிட்டிருந்தது. பிள்ளைகள் எங்களுக்கு பொருத்தமான தங்குமிடத்தை கூகுளின் உதவியுடன் கண்டுபிடித்திருந்தார்கள். அது அல் வாசில் என்ற இடம். அங்கிருந்து அதிகாலை சற்றுத் தூரத்திலள்ள பாலைவனத்திற்கு செல்லுவதாக தீர்மானம் எடுத்து, ஹோட்டலில் தங்கி அதிகாலை அஸ் சர்கியா பாலைவனம் சென்றோம். அது அற்புதமான அனுபவமாக இருந்தது.

பாலைவனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து இன்னொரு மாகாணமான மஸ்கட்மாகாணத்திலுள்ள பிம்மாவிலுள்ள ஹவியத் நஜீம் எரிநட்சத்திரத்தின் கிணற்றுக்கு செல்வதற்கு உத்தேசித்திருந்தோம். வித்தியாவிலிருந்து 23ம் இலக்க பெருந்தெருவால் கிழக்குப் பக்கம் சென்றால் அந்தப் பெருந்தெரு அலபற்றினா 17ம் இலக்க பெருந்தெருவுடன் சுர் என்னும் இடத்தில் இணைகின்றது. அங்கிருந்து அதே பெருந்தெருவில் ஹல்காத், ரிவி, பின்ஸ் ஊடாக பிம்மாவை இலகுவாக 184 கிலோமீற்றர் பயணம் செய்வதன் மூலம் அடைந்தகொள்ளமுடியும். இதற்கு இரண்டரை மணித்தியாலங்கள்தான் பெரும்பாலும் எடுக்கும். இதுதான் வழமையான பாதை கூட. அந்த பாதையால் சிறிது தூரம் பயணத்தை தொடங்கி சென்றிருப்போம், பின்னாலிருந்த பிள்ளைகளிடத்திலிருந்து ஒரு ஆலோசனை. கூகிள்மெப் இதனை விட சிறிய குறுகிய ஒரு வழியைக் காட்டுகின்றது. எங்களுக்கு தூரமும், நேரமும் மிச்சம் என்றனர். பிள்ளைகளின் கருத்துக்கு மதிப்பளித்து, வாகனத்தை திருப்பி மீண்டும் வந்த வழியே கூகிள்மெப் காட்டும் குறுகியதூர வழிக்கு செல்வதற்கு மீண்டும் அல்வாசில் வந்து எங்கள் பயணம் குறுகிய பாதையை நோக்கி விரைந்தது. வண்டி வேகமாக சென்றுகொண்டிருக்கையில் பெருந்தெருவை விட்டு இன்னொரு உட்பாதைக்கு வண்டியைத் திருப்புமாறு கூகிள் கூறியது. வண்டியைத் திருப்பி சிறிது தூரம் சென்றிருப்போம். பெருந்தெருக்கள் மறைந்து, தெருவேயில்லாத அத்துவான கருங்கற் பாலைவனம். வீதியே இல்லை. ஆனால் வாகனங்கள் சென்றதற்கான தடங்கள் சிறிய சரளைக் கற்களின் மேல் இருந்தன. சரளைக் கற்களின் மேல் கவனமாக வாகனம் மெதுவாக செல்லத் தொடங்கியது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கற் கரும்பொட்டல் வெளி. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மரங்கள். இடைக்கிடையே ஒட்டகங்கள், கழுதைகள், கோவேறு கழுதைகள், மலையாடுகள், சில பறவைகள், பூச்சிகள் அவ்வளவும்தான் எம்மைச் சுற்றி இருக்கின்ற உயிரினங்கள். மனிதவாடையும், மனித சஞ்சாரமும் அறவே அற்ற அந்தக் கறுத்தற் பொட்டல் பாலையின் கரடுமுரடான சரளைக் கற்கள் நிறைந்த பாதையில் கூகிளின் உதவியுடன் பயணம் தொடர்ந்துகொண்டே இருந்தது. எரிபொருள் முடிந்தால் அல்லது வாகனத்திற்கு ஏதாவது பழுது வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது?. அதனை நல்லதொரு அனுபவமாக மாற்ற முயற்சிக்கின்ற நேர்மறையான சிந்தனையைத் தவிர வேறு என்னதான் அங்கு சிறந்ததாக இருக்க முடியும். தொலைத் தொடர்பும், இணையமும் பின்னொரு நேரத்தில் தொலைந்து போகலாம் என்று நினைத்து ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக பிள்ளைகள் கூகிள்மெப்பை போனில் சேமித்து வைத்துவிட்டார்கள். நாங்கள் பயணித்த வாகனமும், அதன் டயர்களும் நல்ல நிலையில் இருந்தாலும் சிறுகற்களின் மேல் வேகமாக பயணிக்க முடியவில்லை. பிரச்சினையான ஒரு வழியைத் தெரிவுசெய்துவிட்டோமோ என்றும் மனது எண்ணத் தொடங்குகின்றது. ஆனால் இந்தப் பிரயாணமும், கூகிள் தெரிவு செய்த தந்த இந்த சோட் றூட்டும், பின்னர் வரப்போகும் பெரியதொரு வில்லங்கத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்பது உறுதியாகத் தொடங்கியது..








No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...