- ஏ.எம். றியாஸ் அகமட்
வித்தியாசமானவை, சிறப்பானவை
மரங்கள் எதுவுமேயற்ற பசுமையான
கறுத்தப் பாறைகள்.
பூமியைச் சூடாக்கும்
கரியமில வாயுவைக்
கவர்ந்து கல்லாக மாற்றும்
கறுத்தப் பாறைகள்
பல யுகாந்திரங்களின்
உறிஞ்சிச் சேமிக்கும்
கறுத்தப் பாறைகள்
காலநிலை மாற்றத்திற்கெதிராக
பூமியை போராடிக் காத்திடும்
ஓமானின் அல்ஹாஜர் அற்புத
கறுத்தப் பாறைகளின கதை.
ஓமான் எங்கும் மலைகளின் நிறம் கறுப்பு. அல் ஹாஜரின் நிறம் கறுப்பு.இந்த மலைகள் சுவர்க்கம் என்றேன். அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. இந்த மலைகளில் மரங்கள் இல்லை. ஆனால் மலைகள் மரங்களின் வேலையைச் செய்கிறது. அல்ஹாஜரின் நிறம் கறுப்பு. பசுமையின் நிறம் கறுப்பு.
அல்ஹாஜர் மலைத்தொடர்
புவியின் இரண்டு கவசத் தகடுகள் ஒன்றொடொன்று மோதும்போது அல்லது ஒருங்கும்போது மலைகள் உருவாகின்றன. இதன் காரணமாகவே மலைகள் எப்போதும் கவசத் தகடுகளின் விளிம்புகளிலேயே இருக்கும். இந்த மலைத் தொடர் 30 மில்லியன் வருடங்களுக்கு முன் அறேபிய, இயுரேசிய புவிக் கவசத்தகடுகளின் ஓரங்களில் மோதல் தொடங்கியதனாலேயே உருவானதாக கருதப்படுகின்றது. 145 மில்லியன் தொடக்கம் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய, கிறற்றாசியஸ் யுகத்தில் ஒன்றுக்குமேல் ஒன்று வீழ்படிவான படைகள் உள்ளெடுக்கப்பட்டு, அந்தப் படைகளின்மீது உருவான மலைத் தொடரே இது. சுமார் 45 மில்லியன் வருடங்களுக்கு முன் ஆழங்குறைந்த கடற்பரப்பில் அல்ஹாஜர் மலைத்தொடர் முற்றாக மூடப்பட்டதாக காணப்பட்டிருக்கின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியரசிலிருந்து தொடங்கி ஓமானின் வடக்குப் பகுதி வரை 700 கிலோமீற்றர் நீளமம், 100 கிலோமீற்றர் அகலமும் கொண்டமைந்து காணப்படுகின்றது. இதன் சராசரி உயரம் 4000 அடிகளாகும். அதி உயரமான இடம் ஸம்ஸ் சிகரம். 10000 அடி. அதன் வேர்ப் பகுதி புவியோட்டிற்குக் கீழ் 37 தொடக்கம் 70 கிலோமீற்றர் பரவிக் காணப்படுகின்றது. இது பல நதிகளையும், நதிப்படுக்கைகளையும் உருவாக்கி இருக்கின்றது. பலநூற்றுக்கணக்கான இனத் தாவரங்களையும், விலங்கினங்களையும் கொண்டிருக்கின்றது.
அடிப்படையில் விலங்கியலாளனான நான், மரங்களுக்காக எனதுவாழ்நாட்களையே ஒப்படைத்திருக்கின்றேன் என்றே கூறலாம். ஏனெனில் மரங்களின்றி எதுவுமேயில்லை. மரங்கள் தரும் உணவு, உடை, மருந்து. கட்டடப்பொருட்கள், சூழலியற் சேவைகள் போன்றவைகளுக்காக மட்டும் அவை நேசிக்கப்பட வேண்டியவைகள் அல்ல. மாறாக அவைகள் வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு வாயுவை உறிஞ்சி, சமனிலைப்படுத்தி, பசுமைவீட்டுத் தாக்கத்திலிருந்து தவிர்த்து, பூமி வெப்பமடைதலையும் தடுக்கின்றது. பூகோளம் வெப்பமானால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயரும். அதேவேளை அதிகரித்த வெப்பநிலையின் காரணமாக, கடல்நீர் விரிவடைந்து கடல் மட்டம் உயரும். கடல் அரிப்பு ஏற்படம். பல கரையோரங்கள் பாதிக்கப்படும். உயிரினங்களும் பாதிக்கப்படும். பல்வேறு அனர்த்தங்களும் ஏற்படும்.
மரங்களைப்போன்று மலைகளும் வளிமண்டலத்திலள்ள காபனீரொட்சைட்டை உறிஞ்சுகின்றன என்றால் வியப்பாகத்தான் இருக்கும். அதுவும் உலகில் மிகச் சில இடங்களிலேயே இவ்வாறான மலைகள் காணப்படுகின்றன. ஓமான் அல்ஹாஜர் மலைகள் அவ்வாறான மலைகளில் பெரியதும், முக்கியமானதுமாகும் என்றால் மேலும் வியப்பாகத்தான் இருக்கும். அதற்கு அந்த கறுப்புத்தான் காரணமாகும். அந்தக் கறுப்பிலுள்ள இரசாயனப் பொருள்தான் காரணமாகும்……
தொடரும்....
No comments:
Post a Comment