Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 11 (செவ்விந்திய பழங்குடித் தலைவனின் கடிதம்)

-ஏ.எம். றியாஸ் அகமட்

உலகம் முழுக்க தொல்குடிகள் உயிர்வலைகளை உடலாகவும், உயிராகவும்,ஆத்மாகவுமே மதித்திருக்கிறார்கள். இந்த ஓமானிகளின் உயிர்வலைகள் பற்றிய நம்பிக்கைகளின் சாரம் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களிடமிருந்து அவர்களின் நிலத்தை வாங்க அமெரிக்க அரசின் அப்போதைய ஜனாதிபதி பிராங்ளின் பியர்ஸ், 1855ம் ஆண்டு கடிதம் எழுதியபோது அக்கடிதத்திற்குப் பதிலளித்து செவ்விந்திய டுவாமிஷ் பழங்குடித் தலைவன் "சீயெட்டல்" எழுதிய பதில் கடிதம் ஞாபகத்திற்கு வந்து போகின்றது. இயலாமையுடனும் இலக்கியச் சுவையுடனும் எழுதப்பட்ட அந்தக் கடிதம் வரலாற்றில் தனி இடத்தை பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வகைக் கடிதங்கள் இருக்கின்றன. ஒன்று நீளமான கடிதம். மற்றது நீளம் குறைந்த கடிதம். நான் இரண்டாவதை மொழி பெயர்த்திருக்கிறேன். அக்கடிதம் வருமாறு:

வொஷிங்டனில் இருக்கும் மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்கள் எங்கள் நிலத்தை வாங்குவதற்கு விரும்புவதாக உங்கள் சொற்களை அந்தக் கடிதத்தில் அனுப்பி இருக்கிறீர்கள். இதமான நிலத்தையோ அதனை மேவிக் கவிந்துள்ள நீல வானத்தையோ விற்கவோ வாங்கவோ உங்களால் முடியுமா? இக்கருத்தே எங்களுக்கு மிக விசித்திரமாக இருக்கிறது. இளங்காற்றின் புத்துணர்வையும், மின்னும் நீர்ப்பரப்பில் பட்டுத் தெறித்துவரும் ஒளியும் எங்களுக்கே சொந்தமாகாதா போது, எவ்வாறு அவைகளை உங்களால் வாங்க முடியும்?

எனது மக்களுக்கு இம் மண்ணின் ஒவ்வொரு பகுதியும் புனிதமானது. பகலவனின் ஒளி பட்டு பளபளக்கும் ஊசியிலை மரங்களும், மணல் நிறைந்த ஒவ்வொரு கரையும், அடர் வன நிறை பனியும், பரந்த புல் வெளிகளும், அங்கு ரீங்காரமிட்டு இசைபாடும் ஒவ்வொரு பூச்சியும் என் மக்கள் நினைவிலும், அனுபவத்திலும் என்றும் மாறாத புனிதமாய் நிலைத்திருக்கும்.

எங்களுக்கு தெரியும் இம் மரங்களின் உள்ளே ஓடும் சாறு எங்களின் நாடிநாளங்களில் ஓடும் குருதி என்று. இனிய நறுமணமிக்க இந்த மலர்கள் எங்களின் சகோதரிகள். பெரும் பருந்தும், கரடியும், மானும் எங்கள் சகோதரர்கள். பாறையின் விளிம்புகள், பரந்த புல்வெளியின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடம்பின் கதகதப்பு, மற்றும் மனிதர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்திற்கு சொந்தமானவர்கள்.

ஓடைகளிலும், நதிகளிலும் மின்னிமின்னி பளபளத்துப் பாயும் நீர், அது சாதாரண நீர் அல்ல. அது எங்கள் முன்னோர்களின் இரத்தம். நாங்கள் எங்கள் நிலத்தை விற்றால், இந்த நிலங்கள் புனிதங்களால் நிறைந்தது என்று நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். எங்கள் ஏரிகளின் ஒவ்வொரு பளபளப்பான பிரதிபலிப்பும் எங்கள் மக்களின் வாழ்வின் நிகழ்வுகளின் நினைவுகளை சொல்லுகின்றன. இந்த நீரின் முணுமுணுப்பு என் தந்தையின் தந்தையின் குரலாகும்.

இந்த ஆறுகள் எனது சகோதரர்கள். அவைகள் எங்கள் தாகத்தை தணிக்கின்றன. அவை எங்கள் படகுகளை சுமந்து எங்கள் பிள்ளைகளை ஊட்டுகின்றன. உங்களின் எந்தச் சகோதரனுக்கும் அன்பைச் சொரிவதைப் போல, இந்த ஆறுகளுக்கும் அன்பைச் சொரியுங்கள்.

நாங்கள் எங்களது நிலத்தை உங்களுக்கு விற்றால், அது காக்கும் எல்லா உயிர்களுடன் தனது ஆன்மாவை பகிரும் இந்த காற்றானது, எங்களுக்கு விலைமதிப்பதற்றது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனது பாட்டனின் முதல் மூச்சையும், கடைசிப் பெரும் மூச்சையும் இந்தக் காற்றே தந்தது. வாழ்வின் ஆன்மாவை, இந்தக் காற்றே எங்கள் பிள்ளைகளுக்கும் தருகிறது. எனவே எங்களுடைய நிலத்தை நாங்கள் விற்றால், ஒரு மனிதன் காற்றின் சுகந்தத்தையும், பூக்களின் இனிமையையும் ருசிக்கக்கூடிய புனிதமான இடமொன்றை நீங்கள் அவனுக்கு ஒதுக்க வேண்டும்.

பூமி எங்களுக்குத் தாய். பூமியின் மீது என்ன வீழ்கிறதோ அது பூமியின் எல்லா மகன்களிலும் வீழ்கிறது என்பதை நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்தது போல நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல. மனிதன்தான் பூமிக்குச் சொந்தமானவன் என்பது எங்களுக்குத் தெரியும். இரத்தம் எங்களை இணைப்பது போல, எல்லாப் பொருட்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் உயிர் வலையை இழைக்கவில்லை. அதில் அவன் வெறுமனே ஒரு கண்ணிதான். அவன் அந்த கண்ணிக்கு தீங்கிழைத்தால், அவனே அவனுக்கு தீங்கிழைக்கிறான்.

ஓன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். எங்களின் கடவுள்தான் உங்களின் கடவுளும். அவருக்கு இந்த பூமி விலைமதிப்பற்றது. பூமிக்கு கெடுதல் செய்தால், அந்தப் பூமியைப் படைத்தவனை அவமதித்தது போலாகும்.

உங்களுடைய விதி எங்களுக்கு மர்மமான முடிச்சுக்களாகவே இருக்கின்றன.எங்களுடைய காட்டெருமைகள் அறுத்துக் கொல்லப்படுவதற்கும், காட்டுக் குதிரைகள் பிடிக்கப்படுவதற்கும் அவைகள் என்ன பாவம் செய்தன? காட்டின் மனித சஞ்சாரமற்ற இடங்கள் மனித வாசனகைளால் நிறைந்திருப்பதற்கும், மலைகளின் உச்சிகள் தொலைபேசிக் கம்பிகளாலும், கோபுரங்களாலும் நிறைந்திருப்பதற்கும் என்ன பாவம் செய்தன. அடர்ந்த வனங்கள் எங்கே சென்று போயின. பெருங்கழுகுகள் எங்கு மறைந்து போயின? வேகமான மட்டக் குதிரையை வீழ்த்தி, வேட்டையாடுவதைப் பற்றி என்ன சொல்ல முடியும்?. உயிர்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகின்றது.

கடைசிச் செவ்விந்தியனும் இந்த வனத்துடன் மறைந்து விட்டால், அவனின் நினைவுகளும், ஞாபகங்களும் இந்தப் பெரைரிப் புல்வெளியின் குறுக்காக ஊடறுக்கும் மேகங்களின் நிழல்களுடன் நகர்ந்துகொண்டிருக்கும். இந்தக் காடுகளும், கரைகளும் அப்போது இருக்குமா? எனது மக்கள் விட்டுச்சென்ற ஆன்மாவின் எச்சங்களில் ஏதாவதொன்றேதானும் அப்போது இருக்குமா?.

புதிதாய் பிறந்த குழந்தை தாயின் இதயத்துடிப்பை மிக விரும்புவது போல நாங்கள் இந்த பூமியை காதலிக்கிறோம். எனவே எங்களது நிலத்தை உங்களுக்கு விற்றால், நாங்கள் எங்களது நிலத்தை காதலித்தது போன்று நீங்களும் காதலியுங்கள். நாங்கள் பாதுகாத்தது போல் நீங்களும் பாதுகாருங்கள். இந்த நிலத்தை நீங்கள் எங்களிடமிருந்து பெறும்போது, இதனை உங்கள் மனங்களில் கவனமாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எல்லாப் பிள்ளைகளுக்குமாக இந்த நிலத்தை பாதுகாருங்கள். காதலியுங்கள். அன்பு செலுத்துங்கள். உங்களை கடவுள் அன்பு செய்வார்.

நாங்கள் இந்த நிலத்தின் பகுதி போல, நீங்களும் இந்த நிலத்தின் பகுதியே. இந்தப் பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. அது போல உங்களுக்கும் விலைமதிப்பற்றது.

ஒரு விடயம் எங்களுக்கு தெரியும். ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறான். செவ்விந்தியனோ, வெள்ளையனோ, எந்த மனிதனும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாக முடியாது. நாங்கள் எல்லோரும் இதற்குப் பிறகு சகோதரர்கள்.

இந்தக் கடிதத்தின் நீளமான ஒரு வடிவமும் இருக்கின்றது. அது இன்னும் ஆற்றாமையும், இலக்கியச் சுவையும் கொண்டது. அது தற்போதைய குறோனா உலகை எள்ளி நகையாடுகின்றது. அதன் மொழி பெயர்ப்பு இன்னொரு வகையான இலக்கியச்சுவையையும், உணர்வையும் தரக்கூடியது.

**

இந்த மலைகளும் பல பகுதிகளைக் கொண்டிருக்கின்றது. வெலி (பள்ளத்தாக்கு), ட்றம்ப்லின், கெட்ல், ஸ்பர் (இடைச்சரிவு), றிட்ஜ் (மெதுசரிவு), ஹம்ப் அல்லது ஹில்லொக் (திமில்), பீக் (உச்சி), சம்மிட் (சிகரம்), சோல்டர் (தோள்), சேட்ல் (சேணை), கிளிப் (செங்குத்து சரிவு), பேஸ் (முகம்), மெஸா, பட், பின்னாக்ல், கொல், றொக் (பாறை), ஹில் (குன்று), டைக், ரொறன்ற் (நீரோடை), கிறஸ்ட் (விளிம்பு), பாஸ், பிளட்டொ (பீடபூமி), ரூட்ஸ் (வேர்கள்), ஹோல், கேவ் (குகை) போன்ற பல பகுதிகளைக் கொண்டிருக்கின்றது.

நாங்கள் செல்லுகின்ற பாதை முழுவதும் இவைகளை தரிசித்தும், ரசித்தும், கண்டும், விலத்தியும், தாண்டியும் செல்கின்றோம்.

45 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நாங்கள் தற்போது பிரயாணம் செய்கின்ற மலைப் பகுதிகள் கடலின் கீழ் இருந்த காரணங்களால் தற்போதைய நிலக்காட்சிகள் வெள்ளையும், செம்மஞ்சளும் சேர்ந்த நிறங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. வெள்ளைசார்ந்த சிவத்த சுண்ணக் கற்களாகவும், பகுதியாகவும், முற்றாகவும் மாறிய டொலமைற்களாகவும் அவை காணப்பட்டிருக்க வேண்டும். மழைநீரிலும், மற்றைய நீர்களிலும் வளியிலிருக்கும் காபனீரொட்சைட்டு வாயு கரைந்து அந்த நீர்கள் காபனிக்கமிலமாக மாறி, அந்த அமிலம் காரமாகிய சுண்ணக்கற்களையும், டொலமைற்களையும் பல மில்லியன் வருடங்களாக அரித்து, நான் முன்னர் கூறிய மலையின் பல்வேறு பகுதிகளின் உருவாக்கத்திற்கான பல காரணிகளில் ஒரு காரணியாக இந்த அரிப்பு இருந்திருக்கலாம்.

எங்களுடைய வாகனம், சாகசமும், தீரமுமிக்கவர்கள் பிரயாணம் செய்யும்பாதைகளின் மேலே பிரயாணம் செய்த கொண்டிருந்தவேளை, நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு வாகனத்தைக் கண்டோம். அந்த வாகனத்தில் கவர்ச்சியும், வசீகரமும் நிறைந்த அறபி இளைஞர்கள் இருந்தார்கள். வழி கேட்டோம். எங்களை புரிந்துகொண்டார்கள். அதிக கரிசனை எடுக்காததுபோல், புன்னகைத்துக்கொண்டே, நீங்கள் போகும் வழியில் அருகே ஒரு கிராமம் இருக்கின்றது. அங்கே செல்லுங்கள் என்றார்கள். எந்த வழியிலும், வழி தவறவிடமாட்டோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் கரிசனை எடுக்காததுபோல் இருந்திருக்கலாம். அந்த மலைப் பாலையில் எங்களுக்கு உதவிட வானத்திலிருந்து இறங்கிய தேவ தூதர்கள்போல அவர்கள் காட்சி தந்தார்கள். இந்த மலைப் பாலையில் அடிக்கின்ற குளிர்ந்த வறட்சிக்கும் தேவதூதர்களின் முகங்களின் செஞ்செழிப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லாமல் இருந்தது.

அவர்கள் கூறியபடி, செல்கின்றோம் பாதை இடது பக்கம் கிளைக்கின்றது. ஆனால் கூகிள் மறுக்கின்றது. நேராகச் செல்கின்றோம். சிறிது நேரத்தில் நேரான பாதையில் இடது பக்கம் சுமார் பத்துமீற்றர் தூரத்தில் ஒரு உதைபந்தாட்ட மைதானமளவு பரப்புள்ள சம தரையில் அமைந்த கிராமம் ஒன்று வந்தது. நீண்ட நேரமாக ஆழ்கடலில், துடுப்பிழந்து, படகிழந்து அல்லலுற்று, சிக்கித் தவித்தவனுக்கு ஒரு துரும்பு கிடைத்தது போன்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு ஆதாரம் கிடைத்தது. அல்-ஜாரு-வல்-ஐஸி என்ற ஆதாரம் கிடைத்தது. கிராமம் கிடைத்தது.

புழுதிபடிந்த சிறிய பாதை அந்தக் கிராமத்துள் அழைத்துச் செல்கின்றது. அதற்குள் உள்நுழைகிறோம். அந்தக் கிராமத்தின் வாயிற் பகுதியில் இருபது, முப்பது பேர் தொழக்கூடிய ஒரு கட்டடம். அது பள்ளிவாசல். அடிக்கின்ற அனலையும் பொருட்படுத்தாது அதற்கு முன்னே படுத்துக்கிடந்து அசைபோட்டுக்கிடந்த ஒரு ஒட்டகம் எங்களைக் காண எழும்பி நின்று ஒரு கனைப்பு கனைத்து எங்களின் வருகையை மற்றவர்களுக்கு அறியச் செய்த பின் மீண்டும் பழையபடி படுத்து அசைபோடத் தொடங்கியது.

எங்களை அழைத்தச் சென்ற பாதையைப் பின்தொடர்ந்து, கிராமத்திற்குள்நுழைந்திருப்போம். சிறிய கட்டடம் வந்தது. அதனைத் தாண்டி வலது பக்கம் திரும்பியிருப்போம். பாதையும் முடிந்துவிட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் பத்து, பதினைந்து வீடுகள்தான் இருந்தன. உதைபந்தாட்ட மைதான அளவுள்ள கிராமத்தில் எங்ஙனம் நீளமான பாதைகளை எதிர்பார்த்திருப்பது?

மீண்டும் பின்பக்கமாக (றிவர்ஸில்) போன வழியில் வாகனம் திரும்பி வரும்போது, எங்களிடம் வாகனத்தில் இடமும், உணவும் சம்பந்தமான கோரிக்கைவிடுத்த இருவரையும் ஏற்றிக்கொண்டு, இன்னொரு வாகனம் அந்தச் சிறிய வீடுகள் ஒன்றிற்குள் செல்கின்றது. அவர்கள் இருவரும் அவர்களிற்கு விருந்தினர் என்பது புரிந்தது?

எங்கள் வாகனம் பின்பக்கமாக அந்தக் கட்டடத்திற்கு அருகில் வருவதற்கும், இருவர் அந்தக் கட்டடத்தின் வெளிக்கதவை பூட்டிவிட்டு வரத்தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. நாங்கள் அவர்களுடன் பேசுவதற்கு ஆயத்தமானோம். அவர்கள் எங்களுடைய கதைகள் எவற்றையும் காதில் வாங்கிக் கொள்ளாதமாதிரி தாங்கள் பூட்டிய அந்தக் கட்டடத்தின் கதவை உடனே மீண்டும் திறப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள். எங்களுக்கு கொஞ்சம் கலவரம் கலந்த வியப்பாக இருந்தது.

 

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...