Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை - 13

-             ஏ.எம். றியாஸ் அகமட்

எங்களுடைய கதைகள் எதனையும் கேட்காமல் உள்ளே வரச் சொல்கிறார்கள்.நான், சகலன், உமர் உள்ளே செல்கிறோம். தளத்திற்கு சல்லிக் கற்களை பரவியிருக்கிறார்கள். அங்கே இரண்டு பிளாஸ்ரிக் பாய்கள். இருக்கச் சொல்கிறார்கள். இருக்கிறோம். கஹ்வா என்ற அறேபியன் கோப்பியை, பேரீச்சம்பழங்களுடன் அருந்தச் சொல்கிறார்கள். அருந்துகிறோம். இரு பெட்டிகள் நிறைய வெவ்வேறு பழங்கள் இருந்தன. சாப்பிடச் சொல்கிறார்கள். நாங்கள் சாப்பிடவில்லை.

இப்போதுதான் எங்கள் கதைகளை கேட்கத் தொடங்குகிறார்கள். சொல்கிறோம். 17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெருவை எவ்வாறு இங்கிருந்து அடைவது என்பதை மிகவும் கவனமாக படங்கள்போட்டு அறபியில் விபரிக்கிறார்கள். அந்த வழிகள் எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு முடியாத சிக்கல் நிறைந்தவை என்பது புரிந்தது. உடனே பழங்கள் இருந்த காட்போட் பெட்டியின் மூடியின் ஒரு பகுதியை கிழித்தெடுத்து, அதில் வழிகளை கவனமாக வரைந்து, செல்லக்கூடாத வழிகளையும், செல்லவேண்டிய வழிகளையும் குறித்துத் தருகின்றார்கள். அந்தப் படமே கொஞ்சம் பயங்கரமாக இருந்தது. ஒரு தேவதைக்கு வாழ்க்கைப்பட்ட, வருவதையும், போவதையும் பிடித்து விழுங்கி ஏப்பம் விடுகின்ற, இரண்டு சிறிய கரங்களும், இரண்டு பெரிய கரங்களும், ஒரு நீண்ட காலும் கொண்ட கறுத்த ஒற்றைக் கண் ஜின் எங்களை, தங்களது தேசத்துக்கு வருக, வருக என வரவேற்பது போல இருந்தது.

அப்போது சுமார் 60 வயது மதிக்கத்தக்க வெள்ளையும், கறுப்பும் கலந்ததாடியுடன் சிவந்த நிற அறபி ஒருவர் உள்ளே வந்து சேர்கிறார். எங்கள் உரையாடலில் பங்குபற்றுகிறார். பின்னர்தான் புரிந்துகொண்டோம் அவர் அந்த கிராமத்து அல்லது சமுதாயத்து தலைவர் என்பது.

எங்களுக்கு அறபியில் வழி சொல்லிக்கொண்டிருந்த இருவரும், திடிரென ஆங்கிலத்திற்கு மாறுகிறார்கள். இப்போது நான் அவர்களுடன் கதைக்கத் தொடங்குகின்றேன். ஆரம்பத்திலேயே நீங்கள் எங்களுடன் ஆங்கிலத்திலேயே கதைத்திருக்கலாம்தானே என்றேன். பின்னர் அந்த ஊர், அவர்கள் பற்றி விசாரிக்கிறேன்.

என்னுடன் பேசிக் கொண்டிருப்பவர் அல் நாஸர் அல் வைசி. அவர் நகரப் புறத்திலுள்ள சுகாதாரத் துறையிலும், அவருடைய நண்பர் கல்வித்துறையிலும் வேலைசெய்கிறார்கள். ஒரு நீண்ட விடுமுறை கிடைத்தபோது அல் ஜாரு வல் ஐசி என்ற 30 குடும்பங்கள் மாத்திரமே தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் தங்களுடைய பூர்வீக மலைக் கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள். 1980களின் நடுப் பகுதியில், பெற்றோலிய எண்ணெயின் கண்டுபிடிப்பின் தொடக்கத்தில், சந்தைக் கைத்தொழிலை மையப்படுத்திய மையப்படுத்திய நவதாராளவாத நியோ லிபரல் பொருளாதார முறையை ஓமான் அறிமுகப்படுத்த, அதுவரை மிகவும் சிறப்பாகவும், பேண்தகவு நிலையிலும் இருந்த கிராமங்களின் விவசாய தன்னிறைவுப் பொருளாதாரம் பலமாக அடிபடத் தொடங்க, இளைஞர்களும், மக்களும் நகர்ப்புறம் தொழில் வாய்ப்புக்களுக்காகவும், உயர் ஊதியங்களுக்காகவும் நோக்கி நகரத் தொடங்குகிறார்கள். இருந்தாலும் மண்ணின் மனம், அதன் மரங்கள் (பயிர்கள்), விலங்குகள் (கால்நடைகள்) போன்றவற்றுடனான காதல், முன்னோர்களின் ஆத்மாக்களுடனான உணர்வுகளின் தொடர்புகள், நிலத்தின் தொன்மங்குளுடனான பல நூற்றாண்டைய உறவுகளை அறுக்கவிரும்பாத மனோநிலை போன்றவை காரணமாக மக்கள் இன்னும் மலைப் பாலைகளின் வெவ்வேறு அடுக்குகளிலுள்ள கிராமங்களில் மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் இருக்கிறார்கள்.

ஓமானிகள் மிகவும் உதவும் மனப்பான்மை உள்ளவர்கள். இங்கிதமானவர்கள்.இருந்தும் சில விடயங்களுக்கு முன்கூட்டியே அவர்களின் அனுமதியை நாம் பெறவேண்டும். அந்த விடயங்களில் அவர்களை நாங்கள் புகைப்படம் எடுத்தலும் ஒன்றாகும். உங்களுடன் புகைப்படம் எடுக்கலாமா? என்று கேட்;டேன். கிராமத் தலைவர் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வீடியோ எடுக்க வேண்டாம். புகைப்படம் மட்டும் எடுங்கள் என்றார்கள் அந்த இருவரும். இந்தப் படத்தை யூனுஸ் உமர் எடுத்தார்.

நாங்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, செல்வதற்கு எழுந்தோம். அப்போதுதான் வில்லங்கமே ஆரம்பமாகத் தொடங்கியது. எங்கே போகப் போகிறீர்கள்? அப்படியெல்லாம் போக முடியாது. வண்டியிலிருந்து எல்லோரும் இறங்கி களைப்பாறி, ஓய்வெடுத்து சாப்பிட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும் என்றார்கள்.

நாங்கள் எங்களை விளங்கப்படுத்தினோம். அதிகாலையில் புறப்பட்ட பயணம். வழிகள் தவறியது. அலைந்தது. சுற்றியது. எங்களது தற்போதைய நிலைமை எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினோம். அல் வைசி புரிந்துகொண்டு எங்களை வழியனுப்புவதற்கு விருப்பமேயில்லாமல் சம்மதித்தார். அவருடைய தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். இருந்தும் அவரின் நண்பர் சம்மதிக்கவில்லை. அவரையும் சிறிது நேரத்தில் சம்மதிக்க வைத்தோம். ஆனால் கிராமத்து அல்லது சமுதாயத்து தலைவர் எங்களை வழியனுப்ப சம்மதிக்கவில்லை. பெண்கள் ஓய்வெடுக்க தங்கள் பெண்களின் வீடுகள் இருக்கின்றன. அங்கு அவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்கிறார். அவரையும் பேசிப், பேசி எங்கள் நிலைமையை புரியவைத்தோம். இன்னுமொரு நாளைக்கு கட்டாயம் வருகிறோம் என்று உறுதிமொழியை அவருக்கு கொடுத்தோம். அவரும் விருப்பமில்லாமல் எங்களை வழியனுப்ப சம்மதிக்க வேண்டியிருந்தது.

வாகனத்திலிருந்த எங்கள் பெண்களுக்கு கொடுக்குமாறு ஒரு கூடை நிறையபழவகைகளைத் தந்து மிகுந்த கவலையோடு அல்லது தங்களை நம்பி வந்த விருந்தாளிகளை விருந்தோம்பமுடியவில்லை என்ற குற்றவுணர்ச்சியோடு எங்களை வழியனுப்பி வைத்தார்கள். வழியனுப்பும்போது, மீண்டும், மீண்டும் வழிகளைப் பற்றியும், தொலைந்துவிடக்கூடிய வழிகள் பற்றியும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்கு முகமனும், நன்றியும், பிரார்த்தனையும் செய்துவிட்டுப் புறப்பட்டோம். எவ்வளவு வித்தியாசமான மனிதர்கள்.

அவர்களைப் பொறுத்தவரையில், விருந்தினர்களை எதிர்பார்த்த வண்ணம் நாள்முழுவதும் விருந்தினர்களுக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர்களுடைய சப்லா அல்லது மஜ்லிஸ் காணப்படும். விருந்தினர்கள் விரும்பினால், கிராமத்தவர்கள் ஆகக் குறைந்தது மூன்று நாட்கள் அவர்களை விருந்தினர்களாக வைத்திருப்பார்கள். இவ்வாறு அந்தக் கிராமமோ, அங்குள்ள ஒரு குடும்பமோ அல்லது ஒரு தனி நபரோ அந்த விருந்தினர்கள்மீது தங்களது விருந்தோம்பலைக் காண்பிக்கத் தவறினால் அது தெய்வக் குற்றமும் மனிதாமானம் அற்ற செயல் என்பதும் அவர்களது அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கை.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில், அதிகாலையில் இருந்து, தொலைந்தும்-அலைந்தும், அலைந்தும்-தொலைந்தும் கொண்டிருக்கிறோம். கடல் மட்டத்திலிருந்து 2500 மீற்றர்கள் உயரமுள்ள, கணவாய்களும், பள்ளத்தாக்குகளும், ஏற்ற இறக்கங்களும், வழுக்குப் பாதைகளும், அபாயங்களும் நிறைந்த இந்த மலைப் பாலைகளில், நாங்கள் எங்கே இருக்கிறோம்?, எங்களைச் சுற்றி என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது? நாங்கள் எப்போது இந்த இக்கட்டிலிருந்த வெளியேறப்போகிறோம்? உண்மையில் நாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா? போன்ற பல விடைதெரியாத கேள்விகள் எங்களைச் சுற்றி குடைந்துகொண்டிருந்தன. பாதை கண்டு பிடித்து விரைவாக வீடு செல்ல வேண்டும்.

அந்தக் கிராமத்திலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய பாதைக்குள் நுழையும்போது, உதைபந்தாட்ட மைதானமளவு இருந்த அந்தக் கிராமத்தின் முன்றலில் உள்ள பள்ளிவாசலின் முன் அதீத வெயிலின் உஷ்ணத்தில் படுத்து அசைபோட்டுக் கிடந்து, நாங்கள் அந்தக் கிராமத்திற்குள் நுழையும்போது எங்களைக் கண்டு, எழும்பி, சத்தம்போட்டு, மீண்டும் படுத்து அசைபோட்ட ஒட்டகம் (அந்த ஒட்டகத்திற்கு நிச்சயமாக ஒரு பெயர் இருக்க வேண்டும். கேட்க மறந்துவிட்டேன்), இப்போது எங்களைக் கண்டு மீண்டும் எழும்பி நின்றது. ஆனால் கத்தவில்லை.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர் உயரத்திலிருந்து மெல்ல மெல்ல வாகனம் தற்போது இறங்கத் தொடங்குகிறது. சப்லாவின் பலநூற்றாண்டுக் கால கோர் ரோரி சாம்பிராணியின் வாசனை இன்னும் மனதைவிட்டு அகலாமலேயே இருந்தது. கண்முன்னாலே மீண்டும் கணவாய்களும், பள்ளத்தாக்குகளும், ஏற்றங்களும். இறக்கங்களும், ஒடுங்கிய வழுக்குப் பாதைகளும், பாறைகளும் தெளிவாக தெரிந்துகொண்டிருக்கின்றன. வாகனம் நம்பிக்கையுடன் இறங்கிக் கொண்டிருக்கின்றது.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...