Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 06 (இந்த நிலக்காட்சியின் அபாயங்கள்)


        - ஏ.எம். றியாஸ் அகமட்

அமைதியாகவும், மெதுவாகவும், அபாயங்களை முன்னகர்த்தி எங்கள்வாகனம் முன்னேறிக் கொண்டிருந்தபோது, நிலக்காட்சிகளின் நிறங்கள் சட்டென்று மாறத் தொடங்கின. கறுப்பு நிறங்கள் முடிந்து சிவப்பும் மஞ்சளுமான செம்மஞ்கள் பிரதேசங்களிற்குள், நதிப்படுக்கைகளையும், பள்ளத்தாக்குகளையும், அபாயங்களையும் கடந்து அல்லது அவைகளிலிருந்து தப்பி, இஸ்மையாவிலிருந்து, வாதி அல்ஹப்பா பள்ளத்தாக்கின் நதிப் படுக்கைகளினூடாக சுமார் 38 வளைவுகளை தாண்டி, இன்னுமொரு நிலக்காட்சிக்குள் உள்நுழையத் தொடங்கினோம்.

சிவப்பு கலர் ஏரியா வந்திற்று. நிச்சயமா இஞ்ச மனிசக் குடியிருப்புக்கள் இருக்கும். மனிசன் இருப்பான். நமக்கு உதவியும் கிடைக்கும் என்றேன் நான்.

தொடங்கினதிலிருந்து ஒவ்வொரு ரென் மினிற்சுக்கும் அந்தா ஒரு இடம் வருகுது, இந்தா ஒரு இடம் வருகுது எண்டு சொல்லிக்கே இருக்கயள். இப்படித்தான் கன நேரத்திற்கு முந்தி அந்த வெள்ளக் கலருக்கும் சொன்னியள். போங்க பப்பப்பா என்றனர் பிள்ளைகள்.

சிவப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான். அத போல சிவப்புக் கலர் மலை வந்தா மனிசன் கட்டாயம் இருப்பான் என்றேன்.

ஒரே சிரிப்பாய் போய்விட்டத. நானும் பிள்ளைகளுக்கு கடந்த மூன்றுமணித்தியாலங்களுக்கு மேலாக நம்பிக்கைகள் பல சொல்ல, அவைகள் எல்லாம் பகிடியாகவே போய்க்கொண்டிருந்தன. இப்படி பிள்ளைகளுடன் நக்கலும், நையாண்டியுமாகவே பிரயாணம் தொடர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் அந்தச் சூழலுக்கு அதுதான் தேவைப்பட்டது.

கிறவல் நிறத்து பாறைகள் தோன்றத் தொடங்கின. பாதைகள் நேராயின. சந்தோசமாக இருந்தது. அதுவெல்லாம் அது கொஞ்ச நேரத்திற்குத்தான். ஐம்பது பாகையில் அந்தப் பாதை ஏறத் தொடங்கியது. அந்தப் பாதை ஒரு மலையுச்சியில் முடிவது தெரிந்தது. மலையுச்சியில் முடியும் பாதையின் தொடர்ச்சி தெரியவில்லை. தொடர்ச்சி என்னவாக இருக்கும்? அந்த iயுச்சிக்கு வாகனம் சென்றுவிட்டால் ஒருவேளை இறங்குவதற்கு பாதை தொடர்ச்சியாக இருக்குமா? அல்லது பாதாளம் இருந்தால் என்ன செய்வது? சுவர்க்கமா? நரகமா?. நம்பிக்கைதானே வாழ்க்கை.

ஓன்று மட்டும் புரிந்தது. அல்காபில்-டபாஹா-வாதி அல்ஹப்பா என்ற கொதிக்கும் கூட்டு எண்ணைச் சட்டிக்குள் இருந்து சுவாலைவிட்டு எரிந்துகொண்டிருக்கும் அடுப்பிற்குள் விழுந்துவிட்டோம். நெருப்புகளை அணைக்க முடியாது. ஆனால் கவனமாக நெருப்புகளிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று மட்டும் புரிந்தது.

பிடிமானமில்லா கிறவல் வீதியில்வாகனம் மலை உச்சியை அடைந்து கொண்டிருந்தபோது, மீண்டும் வாகனம் வழுக்கி கீழே சென்றுவிடுமோ என்று சந்தேகமாக இருந்தது. ஜப்பான்காரன் அப்படி வாகனத்தை செய்திருக்கமாட்டான் என மனம் திடமாகிக்கொண்டது. உச்சியிலிருந்து பார்த்தால் மீண்டும் ஒரு ஐம்பது பாகை இறக்கம். இவ்வாறு ஐந்து, ஆறு ஏற்றங்களும், இறக்கங்களும். ஈரல் கருகிப் போதல் என்பதற்கு அர்த்தம் அப்போதுதான் பிடிபடத்தொடங்கியது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 2000 மீற்றர் உயரத்தில் எங்களை வழிநடாத்திக் கொண்டிருந்த பாதை தொலைந்து ஒற்றையடிப்பாதையாகி மலைச்சிகரங்களின் இண்டு இடுக்கெல்லாம் தாவிச்சென்று மறைந்து போக, அதிலிருந்து இடப்பக்கமாக கிளைத்த இன்னொரு பாதை வேறொரு திசையில் தொடர்ந்து மலைகளின் விளிம்புகளிற்குள் எங்களை இட்டு வந்திருந்தத. மலை ஓரங்களை கவனமாக செதுக்கி பாதைகளை அமைத்திருந்தார்கள். சிறிய தூரங்களுக்கிடையில் மலையிலிருந்து சரிந்து விழுந்த கற்களையும்;, மண்ணையும் ஒதுக்கி வைத்திருந்தார்கள். இடது பக்கம் பிரமாண்டமான மலைகளும், வலது பக்கம் பல ஆயிரம் அடிகள் ஆழமான பள்ளத்தாக்குகளும், கணவாய்களுகளும், நதிப் படுக்கைகளும், சரிவுகளும் இருந்தன. நாங்கள் சென்ற திசையில் சமதளத்தில் மூன்று யு வளைவுகள் தெரிந்தன. ஒரே ஒரு வாகனம் போகப் போதுமான மலைப்பாதை. இன்னொரு வாகனம் எதிரே வந்தால். மிகவும் கடினமாகிவிடும். யு வளைவுகளின் அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது? என்றோ, பாதை எப்படி? என்றோ தெரியவும் இல்லை. முன்னைய அனுபவங்களும் இல்லை.

கடந்த வருடம் (2019) பெப்ரவரி மாதம், சகலனின் வீட்டுக்கு சற்றுஅண்மையிலேயே இருந்த, அவரின் நண்பனின் குடும்பம் ஒன்று. அவர்கள் இலங்கை அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள். அபாயங்களையும், பயங்கரங்களையும், கடினமான நிலத் தோற்றங்களையும் புதைத்து வைத்திருக்கும் இந்த மத்திய ஹாஜரின் ஜபல் அக்தர் என்ற மலைப் பகுதிக்கு விஜயம் செய்துவிட்டு திரும்புகையில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி தாய் பிள்ளைகள் உட்பட நான்கு பேர் உயிரிழக்க, தந்தையும், பிள்ளைகளுமாய் சேர்த்து மூன்று பேர் உயிர்தப்பியிருக்கிறார்கள். இதன் காரணமான உணர்வுரீதியான அழுத்தத்தால், சகலன் குடும்பத்தினர் கடந்த ஒரு வருடமாக எந்த நீண்ட தூர பிரயாணங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. எங்களின் வருகையைத் தொடர்ந்தே எங்களுடன் இந்தக் கால எல்லையின் முதலாவது புதிய நீண்ட பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அபாயங்களுக்குள்ளும் எங்களிடம் சில பலமான அம்சங்கள் அல்லது நேர்மறையான விடயங்கள் இருந்தன. முதலாவது இறைவனில் நம்பிக்கை வைத்து, அவனின் உதவியால் எப்படியோ இந்த சங்கடங்களை வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்தது, எனக்குத் தெரிந்த நல்ல சாரதிகள் ஐந்த ஆறு பேரைக் கூறச்சொன்னால், அதில் சகலனும் அடங்குவார். அவ்வளவு திறமான ட்றைவர் அவர். சிறுவயதியேயே அவர்கள் வீட்டில் வாகனம் இருந்தது. பயங்கொள்ளாமல் நீண்ட தூரங்களுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று வருவார். மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். அடுத்தது நல்ல தரத்தில் இருந்த மிற்சுபிசி பெஜரோ மொன்றிரோ 4 டபிள்யு டீ (4 வீல் ட்றைவ்) (பெஜரோ என்ற பெயர் தென்னமெரிக்காவில் 5000 மீற்றர் உயரங்களின் புல்வெளிகள், புதர்கள், வறண்ட காடுகளில் வசிக்கும் லியொபார்டஸ் பெஜறோஸ் என்ற பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்கை அடிப்படையாகக் கொண்டே இந்த வாகனத்திற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டது. எவ்வளவு பொருத்தமான பெயர்). இந்த நாட்டில் மூன்று வருடங்களிற்கு மேல் வாகனங்களின் டயர்களை மாற்றாமல் ஓட முடியாது. புதிய டயர்கள். அடுத்தது தாங்கி நிறைய பெற்றோல். அடுத்தது நேர்மறையான சிந்தனையுள்ள பிள்ளைகளும், நானும்.

பரப்பி வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான நைல் முதலையின் மேற்புறத்தைநோக்கி சிறு கறுப்பு பூச்சியொன்று முன்னங்கால் வழியாக முதுகு நோக்கி மெதுவாக நகவர்வது போன்று, வாகனம் சிவப்பும், மஞ்சளும் கலந்த செம்மஞ்கள் மலைகளில் தொடர்ச்சியாக ஏறிக்கொண்டே இருந்தது.

 


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...