- ஏ.எம். றியாஸ் அகமட்
உலகத்திலே மிகச் சிறந்த சாம்பிராணி ஓமானிலேயே பெறப்படுகின்றது.இயேசு நாதரின் சிறுவயதில் அவருக்கு பரிசாகக் கொடுத்த சாம்பிராணி இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இந்த நாட்டுக்கு சாம்பிராணியின் தேசம் என்ற பெயரும் இருக்கிறது. சாம்பிராணி யூத, கிறிஸ்த்தவ, இப்றாஹிமிய இஸ்லாம் மதங்களின் பண்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பை நீண்டகாலமாக கொண்டிருக்கின்றது. அதுபோலவே சாம்பிராணி புகைப்போடும் பாத்திரம் வரலாறு நெடுக ஓமானின் பாரம்பரியத்தில் முக்கிய பங்கை வகித்தும் வந்திருக்கின்றது. சாம்பிராணி விருந்தினர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் இங்கு பயன்படுகின்றது.
அறபியில் அல் லுபான் எனப்படும் சாம்பிராணி மரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற ஒரு வகை மணமுள்ள பிசினாகும். பேர்சறெசியா குடும்பத்து பொஸ்வெலியா சாதி மரங்களிலிருந்து பெறப்படுகின்றது. பொஸ்வெலியா சக்றா, பொஸ்வெலியா காற்றரி, பொஸ்வெலியா ப்றறீனா, பொஸ்வெலியா செற்றா, பொஸ்வெலியா துரிபெரா, பொஸ்வெலியா பபிரிபெரா போன்ற ஐந்து பிரதான இனங்களிலிருந்து சாம்பிராணி
பெறப்படுகின்றது. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தரங்களில் காணப்படுகின்றன. பொஸ்வெலியா சக்றா இனங்கள் சோமாலியாவிலும், யெமனிலும் கூட காணப்படுகின்றன. சோமாலியாவின் சாம்பிராணிகளின் மிகப்பெரும்பாலானவற்றை றோமன் கத்தோலிக்க தேவாலயங்களே கொள்வனவு செய்துகொள்கின்றன.
சுமார் பதினாறு அடி வரை வளரும் பொஸ்வேலியா சக்றா மரத்திலிருந்துகசியும், பிசின் போன்ற பொருளை அம் மரங்களிலிருந்து சேகரித்து, சாம்பிராணியைத் தயாரிக்கின்றார்கள். பொஸ்வேலியா மரத்தின் பல இனங்கள், வகைகளிலிருந்து, காலநிலை, விளையும் இடங்களின் மண்ணின் தன்மை, அறுவடை காலம் என்பனவற்றை பொறுத்து சாம்பிராணியின் தரம் மாறுபடுகின்றது. பெரும்பாலும் தரப்படுத்தல்கள் கைகளினாலேயே செய்யப்படுகின்றன. பொஸ்வேலியா சக்றா என்ற மரத்தின் சிறப்பியல்பு என்னவெனில் பாறைகளில் இலகுவாக வளர்ந்து, எந்தக் காற்றுக்கும், புயலுக்கும் எதிர்த்து நின்றுவிடும். இந்த மரங்கள் பத்து வயதானவுடன், பலன் கொடுக்கத் தொடங்கிவிடும்.
ஒரு வருடத்திற்கு இரண்டு தொடக்கம் மூன்று தடவைகள் சாம்பிராணிப் பிசின்களை மரங்களிலிருந்து சேகரிக்கிறார்கள். மரத்தில் வடிந்திருக்கும் இந்தப் பிசின்களை ”கண்ணீர்” என அழைக்கிறார்கள். பொஸ்வேலியா சக்றா மரத்தின் பட்டைகளில் கத்தியினால் சுரண்டி விடுவார்கள். பத்து நாட்களுக்கு பின்னர் மரப்பட்டைகளிலிருந்து கசிந்து கட்டியாகியிருக்கும், பிசின், றெசின் போன்றவைகளைச் சேகரித்து, குகைகளில் உள்ள அலுமாரிகளில் சுமார் 4 மாதங்களுக்கு முற்றாக உலர்ந்து கட்டியாவதற்கு விட்டுவிடுவார்கள்.
கோடை மழைக்குப் பிறகு வரும், இலையுதிர் காலத்தில் பெறப்படும்சாம்பிராணியே தரமானதாக இருக்கும் என்று ஓமானியர்கள் நம்புகின்றார்கள். ஏனெனில் இவற்றில் நல்ல மணமுள்ள றெர்பீன், செஸ்கிற்றர்பீன், டிற்றரபீன் போன்ற இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. தரமுயர்ந்த தெளிவான வெள்ளி நிறத்திலான சாம்பிராணியானது அந் நாட்டு அரசருக்குரியதாக வேறாக எடுத்து வைக்கப்படுகின்றது. இதனை மேல்நாட்டவர்கள்கூட அதிக பணம் கொடுத்தேயாயினும் பெற்றுக்கொள்வது கடினமாகும். கபில நிறமான, மாசுக்கள் நிறைந்த சாம்பிராணியே விலை குறைந்ததும், எங்களால் பெற்றுக்கொள்ளக்கூடியமானதுமாக இருக்கின்றது.
சாம்பிராணி மரத்திலிருந்து பெறப்படுகின்ற பிசின்களையும், றெசின்களையும் ஆவிப் பிரித்தெடுப்பு முறையில் அவற்றிலிருந்து பொஸ்வெலிக் அமிலத்தையும் பிரித்தெடுக்கிறார்கள். இவற்றிலிருந்து பெறப்படும் இரசாயனப் பொருட்களிலிருந்து சென்ற்கள், அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாம்பிராணியை ஓமானியர்கள் ஒரு சிகிச்சை முறையாகவே கருதுகிறார்கள். காலையில் இந்த சாம்பிராணியை வாய்க்குள் போட்டு மெல்லுவதன் மூலம் பல்லுக்குறுதியும், மூச்சுக்கு புத்துணர்வும் கிடைக்கிறது எனவும், மூட்டு அழற்சியையும், மன இறுக்கத்தையும் நீக்குகின்றது எனவும் நம்புகின்றார்கள். நீரிழிவு, வயிற்று அழற்சி, இரைப்பை புண்கள் போன்றவற்றை நீக்குவதற்கு மருந்தாகவும் சாம்பிராணி பாவிக்கப்படுகின்றது. சாம்பிராணி எரித்தலானது வளியைத் தூய்மையாக்கி, நோய்களைத் தடுத்து, பாதுகாப்புணர்வையும், புத்துணர்ச்சியான நல்ல மனநிலையையும் தருகின்றது என ஓமானின் வாய்மொழி வழக்காறுகள் கூறுகின்றன.
நல்ல தரமுள்ள சாம்பிராணி மரங்கள் ஓமானின் தெற்குப் பகுதியிலேயேசலாலாவிலேயே காணப்படுகின்றன. சாம்பிராணியின் தேசம் என ஓமானின் டோபார் பிரதேசத்தின் சலாலாவுக்கு அருகிலுள்ள கோர் ரோரி பகுதியை யுனஸ்கோ நிறுவனம் உலக மரபுரிமை இடமாக 2000ம் ஆண்டில் பிரகடனம் செய்துள்ளது. கி.மு. 300 ம் ஆண்டுகளில் இங்கிருந்தே கழுதைகள், குதிரைகள், ஒட்டகங்கள் போன்றவற்றில் மெசப்பத்தேமியா, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு சாம்பிராணி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. ஓமானின் தென் பகுதி சலாலாவின் காலநிலை சாம்பிராணி வகை மரங்கள் வளருவதற்கு மிகவும் பொருத்தமானதாக காணப்படுகின்றன. ஏனெனில் இதற்கு தேவையான மழையைத் தரக்கூடிய இந்தியக் காலநிலை இங்கே நிலவுகின்றது.
அதீத நுகர்வு, தீ வைத்தல், கால்நடைகள் கடித்தல், நீள்மூஞ்சி வண்டுத் தாக்கம், சாம்பிராணி மரம் பயிரிடப்படும் நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்படல், வறட்சி, காலநிலை மாற்றம் போன்றவை காரணமாக ஓமானின் சாம்பிராணி மரங்களின் அளவு குறையத் தொடங்கியுள்ளதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
மஸ்ஜுல்லாஹ்:
கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 மீற்றர் உயரத்திலிருந்து மெல்ல மெல்ல வாகனம் சப்லாவின் பலநூற்றாண்டுக் கால கோர் ரோரி சாம்பிராணியின் வாசனையை அனுபவித்தவாறே, கணவாய்கள், பள்ளத்தாக்குகள், ஏற்றங்கள். இறக்கங்கள், ஒடுங்கிய வழுக்குப் பாதைகள், பாறைகள் போன்றவைகளைக்க கடந்து வாகனம் நம்பிக்கையுடன் இறங்கிக் கொண்டிருக்கையில், தூரத்தில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. பிரமாண்டமான மலைகளை குடைந்து தோண்டிய ஒழுங்கற்ற வட்டவடிவான பாரிய கிணற்றின் அடிப்பகுதி போல இருந்த ஒன்றில் ஒரு கிராமம் தெரிந்தது. கிணற்றின் கால்வாசிப் பகுதி கணவாய்களுடனும், பள்ளத்தாக்குகளுடனும் சரிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது.
ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமைவாய்ந்த பல குகைகளையும், தொல் பொருள் அகழ்வுப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய மொத்தமாக ஏழு குடும்பங்களே வாழும் மஸ்ஜுல்லாஹ் என்னும் கிராமத்தை அடைகிறோம். எங்கள் நம்பிக்கையை அடைகிறோம்.
No comments:
Post a Comment