Saturday, July 31, 2021

தொலைதலின் இனிமை – 03

 - ஏ.எம். றியாஸ் அகமட்

அல்வாசிலில் இருந்து புறப்பட்டு அஸ் ஸாஹிர்-ஹியால் வீதியால் அத்தாஹிர்என்ற இடத்தை கடந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரம் சென்றிருப்போம். கூகுளைவிட்டு பிழையாகச் செல்கிறோம். இடது பக்கம் செல்ல வேண்டும் என்று பின்னாலிருந்த பிள்ளைகள் கூறினர். வாகனத்தை நிறுத்தி பின்னால் ரிவர்ஸ் எடுத்து, இடது பக்கம் பார்த்தால் ஓரளவு தூரத்தே சுற்றிவர கறுத்த கறுத்த மலைகளால் சூழப்பட்ட கறுத்தப் பொட்டற்பாலை வெளி. கூகுள் கூறியபடி இடதுபக்கம் திருப்பி, சரளைக் கற்களின் மேல் மெதுவாக முன்னேறி டபாகா-இஸ்மையா வழித்தடத்தில் அல்காபில் சமவெளிக்குள் உள்நுழைந்தோம். இந்தச் சமவெளி டிபிக், அல்ஹய்லி மலைகளால் சூழப்பட்டிருந்தது. இங்குதான் ஓமானி வண்டியில் வழி கேட்டோம். இந்தச் சமவெளியிலிருந்து டபாகா பள்ளத்தாக்கு சமவெளியிற்குள் உள்நுழைகின்ற போதுதான் பிள்ளைகளின் சத்தம் கேட்டது. வாகனத்தை நிறுத்திய சகலன், அதனை என்னவென்று என்னை பார்க்கச் சொன்னார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமை இடங்களில் ஒன்றாக பிரகடனப்பட்ட பலாஜ் டாரிஸ் நீரோடைக்கு சென்று பிள்ளைகள் குளித்தபோது, தங்களது வீட்டிலுள்ள மீன்தொட்டிக்குள் விடுவதற்கென்று அந்த ஓடையிலிருந்த ஐந்து, ஆறு மீன்களை பொலித்தீன் பைகளின் உதவிகொண்டு பிடித்து, பிளாஸ்ரிக் போத்தலொன்றிற்குள் விட்டு, பிஸ்கட் போன்ற சாப்பாடுகளை கொடுத்து கடந்த இரண்டு நாட்களாக கவனமாக பாதுகாத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அந்த மீன்களில் ஒரு மீன் உணர்விழந்து, தலைகீழாக மிதக்கத் தொடங்கியதற்குத்தான் இந்தக் கூச்சலும், கும்மாளமும், களேபரமும்.

நான் படிப்பித்துக் கொடுக்கும் அக்வாட்டிக், பிஸ், பிஸ்ஸறீஸ்பயோலொஜிக்களும், அக்வாகல்ச்சரும் நினைவுக்கு வர, வோட்டர் குவாலிற்றி பராமீற்றர்கள் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டு, கடுமையாக வெயில் எறித்துக்கொண்டிருந்த அந்த யாருமற்ற பாலைவனச் சமவெளியில், யாரையும் வாகனத்தைவிட்டு இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் மட்டும் இறங்கி, வழித்தடத்தின் ஓரத்திலிருந்து சுமார் 10 மீற்றர் தொலைவிலிருந்த மரத்தடிக்கு சென்று, மீன் போத்தல் நீரை மீன்கள் வெளியே வந்துவிடாமல் அந்த மரத்திற்கு ஊற்றிவிட்டு, அப்போது எங்களுக்கு குடிப்பதற்கு மாத்திரம் வைத்திருந்த மூன்றரை லீற்றர் நீரில் கால் லீற்றரை மீன் போத்தலுக்குள் ஊற்றினேன். வாகனம் புறப்பட்டது. மீண்டும் பிள்ளைகள் சத்தம். அது சந்தோச சத்தம். பப்ஸ் (பெரியப்பாவின் சுருக்கம்), மீன் பிழைத்துவிட்டது. ஆங்கிலத்தில் கத்தினார்கள். நாங்கள் மூன்று, அவர்கள் ஐந்து. மொத்தம் எட்டு மீன்கள் பாலைவன பொட்டல்வெளி மீன்போத்தலுக்குள் மூன்றரை லீற்றர் நீருக்குள். இந்த மீன்கள் எப்போ மிதக்குமோ? என்னவாகுமோ? என்று தெரியாத நிலை. அவர்களின் மூத்த பிள்ளையின் சிறுவயதில் உலகம் புரியாத பொழுதுகளில் உலகத்தின் சிறந்த அறிவாளியாக என்னையே கருதியிருந்தது. கால மாற்றங்கள், நிலக்காட்சி மாற்றங்கள் அவர்களில் என்ன மாற்றங்களை உருவாக்கியிருக்குமோ தெரியாது?. இருந்தும் மீனைப் பிழைக்கவைத்த மந்திரக்கோல் என்னிடம் இருந்திருக்கலாம் என்று இப்போதும் நினைப்பார்களோ தெரியாது.

இந்தச் சமவெளியின் அல்காபில்-இஸ்மையா கோபுரப் பகுதியைத் தாண்டி பள்ளத்தாக்கின் மொத்தமாக 35 கிலோமீற்றர் தாண்டியதும், கண்ணுக்கு குளிர்ச்சிதரும் சந்தோசம் ஒன்று தெரிந்தது. பெருந்தெரு தெரிந்தது. பெரிய சந்தோசமாக தெரிந்தது. பாலைவன வெளியின் வெயிலிலில் சிக்கிய ஒருவருக்குத் தருவாகத் தெரிந்தது.

பெரும் சந்தோசத்துடன் பெருந்தெருவைத் தொடர்ந்தோம், இன்னும் அரைமணியோ, ஒரு மணியோ அதற்குள் எங்கள் இலக்கான ஹவியத் நஜீம் எரிநட்சத்திரக் கிணறுக்கு (அது இலக்கு என்று மறந்தும் போய்விட்டது) அல்லது 17ம் இலக்க மஸ்கட்-குறாயத்-சுர் பெருந்தெருவுக்கு (அதுதான் இலக்கென்று ஞாபகத்தில் இருக்கிறது) சென்றுவிடலாம் என்ற பெரு நம்பிக்கையில் அந்தத் தெருவை பின்தொடர்ந்தோம். ஐந்து கிலோ மீற்றர் சென்றிருப்போம் அந்த சந்தோசத்தில் இடிவிழுந்தது. பின்னாலுள்ள பிள்ளைகள் கூகுளைவிட்டு விலகுகிறோம் என்றனர். அப்படியே கூகுளை புறந்தள்ளி மதிக்காமல் சென்றிருந்தால் நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் சுற்றி வளைத்து பிரயாணம் செய்து, 25ம் இலக்க பெருந்தெருவுக்குள் நுழைந்து அங்கிருந்து 23ம் இலக்க பிட்பிட்-சுர் பெருந்தெருவுக்கு வந்து, வடக்கு அல்சர்க்கியா மாகாணத்தின் தலைநகரான இப்றாவிற்கு வந்து, நாங்கள் புறப்பட ஆரம்பித்த அல்வாசிலுக்கு மீண்டும் வந்து சேர்ந்திருப்போம். இதற்கு பல மணித்தியாலங்கள் எடுத்திருக்கும்.

வாகனத்தை கூகுள் சொன்னவாறே ரிவர்ஸ் எடுத்து திருப்பினோம். அது இஸ்மையா என்ற கிராமத்திற்கு இட்டுச் சென்றது. திடிரென கூகுள் வழி தொலைந்து திரும்பியது. கூகுளை எப்படி புரிந்துகொள்வதென்பதே புரியாமல் இருந்தது. இஸ்மையாவில் சகலன் வண்டியை நிறுத்தி இறங்கி சென்று, அங்கிருந்த சில அறபி இளைஞர்களிடம் வழிபற்றிக் கேட்டிருக்க வேண்டும்;. அவர்கள் பத்து நிமிடங்களுக்கு மேலாக நிலத்தில் படம் வரைந்து வழிகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட சிக்கலின் கடினதன்மை எனக்குள் புரிபடத்தொடங்கியது.

வாகனம் ஓடத்தொடங்கியது. ஒரு கிலோமீற்றர் சென்றிருப்போம். பெருந்தெருமுடிந்திருந்தது. வீடுகள். மரங்கள். மனிதவாடைகள் முடிந்திருந்தன. மனிதம் முடிந்திருந்தது. மனிதர்கள் முடிந்திருந்தனர். சுவர்க்கம் முடிந்திருந்தது. கண்ணுக்கு முன்னே நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் பள்ளமும், தாழ்வானதுமான பரப்பில் பள்ளத்தாக்குகள், கணவாய்கள், சமவெளிகள், உயர்ந்த மலைகள், சிகரங்கள், பாறைகள், வறண்டுபோன நதிப்படுக்கைகள், கருமை மேலோங்கிய பல வண்ண, பல வடிவ சிறு பாறைத்துண்டுகள், கற்கள், கூழான்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் போன்றவற்றை ஒரு குடுவையில் போட்டு நீண்ட நேரத்திற்கு குலுக்கி யாரோ கொட்டிவிட்டதைப் போல் அவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பரந்துகிடந்தன. நரகம் தெரிந்தது. ஒரு வேளை அது எனது சுவர்க்கம் என்னவோ?.

இஸ்மையா கிராமத்தின் கடைசிப் பெருந்தெருவின், கடைசிக் கோடியின் உயரமான பகுதியிலிருந்து சரளைக்கல் வழித்தடத்தில், கருங்கம்பள வரவேற்புடன் எங்கள் வாகனம் இறங்கத் தொடங்கியது. சிறிது நேரத்திற்கு வாகனம் அவ்வாறே சென்று கொண்டிருந்தது, சகலன் வாகனத்தை நிறுத்தினார். எழுநூறு கிலோமீற்றர் நீளமும், நூறு கிலோமீற்றர் அகலமும் கொண்ட, பள்ளத்தாக்குகள், கணவாய்கள், சமவெளிகள், உயர்ந்த மலைகள், சிகரங்கள், பாறைகள், வறண்டுபோன நதிப்படுக்கைகள், கருமை மேலோங்கிய பல வண்ண, பல வடிவ சிறு பாறைத்துண்டுகள், கற்கள், கூழான்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் கொண்ட அல்ஹாஜர் என்ற மலைத்தொடர் சமுத்திரத்தின், கடும் அபாயங்களையும், புதுமைகளையும், புதையல்களையும் பதுக்கியும், புதைத்தும் வைத்திருந்த அல்ஹாஜர் மத்திய பகுதியில் அலை கடல் துரும்பாகியதை புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் தொலைந்துவிட்டோம் என்பதை சகலன் சொன்னார்.

என் மனம் களிப்பில் இறக்கைகட்டி இண்டு இடுக்களிலெல்லாம் பறந்துநடனமாடத் தொடங்கியது. இறைவன் நல்லவர்களை கைவிடமாட்டான். சகலன் கடும் சந்தோசமாக்கும் பார்வையொன்றை புன்முறுவலுடன் என்மீது வீசினார். நாங்கள் நின்று கொண்டிருந்த வாதி அல்ஹப்பா பள்ளத்தாக்கு எங்கும், தொலைதலின் இனிமை தொடரப்போகின்றன என்ற அமைதியின் ஓசை பேரிரிரைச்சலாக கேட்டுக்கொண்டிருந்தது.

 
No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...