Monday, May 31, 2021

விதைப்பந்துகளை மீளுருவாக்கம் செய்யும் ஆய்வறிவாளன் றியாஸ் அகமட்

 - து. கௌரீஸ்வரன்



திரு றியாஸ் அகமட் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து அப்பல்கலைக்கழகத்திலேயே விலங்கியல் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து தற்போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் சிரேஸ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்ற ஓர் ஆய்வறிவாளர்.

விலங்கியல் துறையினைச் சேர்ந்தவராக இவர் இருந்தாலும் படிக்கும் நாட்களிலும் விரிவுரையாற்றும் காலத்திலும் கலைத்துறையினருடன் குறிப்பாக நுண்கலைத்துறையினருடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைப் பேணிய ஒருவராக இயங்கியவர் இன்றும் இயங்கி வருபவர்.

இதன் காரணமாக விலங்கியல் துறை சார்ந்த ஆய்வறிவுடன் கூடிய சிறுகதைத் தொகுதி ஒன்றினை இவர் பல்கலைக்கழக நாட்களிலே வெளியிட்டார். விலங்கு நடத்தைகள் எனும் பெயரில் இச்சிறுகதைத்தொகுதி மூன்றாவதுமனிதன் வெளியீடாக வெளிவந்துள்ளது. இச்சிறுகதைத் தொகுதியில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் குரங்குகள் மற்றும் விலங்குகள் பற்றிய இவருடைய ஆய்வில் கண்டறியப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே உள்ளன. 

இத்துடன் சரிநிகர் பத்திரிகையில் இவர் எழுதிய சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை இவையும் நூலாக வெளிவந்துள்ளது. 

இவ்விதமாக கலை, இலக்கியம், சூழலியல், பண்பாடு, பெண்ணிலைவாதம், அரசியல், விஞ்ஞானம், விவசாயம், விலங்கியல் எனப் பல்துறைகள் சார்ந்தும் அதிக ஆர்வத்துடனும் பிரக்ஞையுடனும் செயலாற்றி வரும் ஒரு ஆய்வறிவாளராகிய திரு றியாஸ் அகமட் அவர்கள் அண்மைய வருடங்களிலிருந்து முன்னெடுத்து வரும் செயற்பாடாக விதைப்பந்துகளை விதைக்கும் நடவடிக்கை விளங்கி வருகின்றது. 

உலகின் மனிதகுல வரலாற்றில் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே புழக்கத்தில் இருந்துள்ள இந்த நடைமுறையினை திரு றியாஸ் அகமட் அவர்கள் நாம் வாழும் இந்தப் பூமியில் மீண்டும் பயில்வுக்குக் கொண்டுவர முயன்று வருகின்றார். 

ஒரு ஆராய்ச்சியாளருக்கே உரிய பண்புகளுடன் தான் கற்பிக்கும் மாணவர்களுடன் விதைப்பந்துகளை உருவாக்கும் செயற்றிட்டத்தை பரிசோதனைகளூடாக நடைமுறைப்படுத்தத் தொடங்கி முன்னெடுத்த போது வெற்றிகரமான நிலையினை அடைந்ததுடன் இன்று மெல்ல மெல்ல இதன் தேவையும் முக்கியத்துவமும் உணர்ந்த ஆக்கபூர்வமான மனிதர்களால் வலிமையடைந்து பரவலாக்கம் பெற்று வருகின்றது.

விதைப்பந்துகள் செய்து விதைக்கும் முறையினைப் பற்றி தான் ஆக்கியுள்ள விதைப்பந்துகளை விதைப்போம் எனுந் தெருவெளி 
நாடகத்தில் பின்வருமாறு விபரித்துள்ளார்.

'ஐந்து பங்கு களியும், ஒரு பங்கு சாணமும்,
ஒரு பங்கு சேதனப் பசளையும் கலந்து
ரொட்டிக்கு மாவு பிசைவது போல பிசைய வேணும்
பிசைந்த பின்னர் பந்துகளாக அவைகளை நாங்கள் ஆக்கிட வேண்டும்
ஆக்கிய பந்துள் நமக்கு உகந்த மரங்களின் விதைகளை வைத்திடல் வேண்டும்
விதைகளை வைத்ததும் விதைப்பந்தெனவே பெயரும் சூட்டி அழைத்திடல் வேண்டும்
ஒரு நாள் நிழலிலும் ஒரு நாள் வெயிலிலும் குளிர்த்தி உலர்த்தி எடுத்திட வேண்டும்'

பந்து வந்தது விதைப் பந்து வந்தது
பந்து வந்தது விதைப் பந்து வந்தது
வரட்சியை ஒழிக்க பந்து வந்தது
விருட்சங்கள் ஆக்கும் பந்து வந்தது
மண் வளத்தைக் காக்க வந்தது
மண்சரிவைத் தடுக்க வந்தது

சரி சரி இந்த விதைப்பந்துகள எப்ப எவ்வாறு நிலத்தில விதைக்கிற?

மழைகாலம் தொடங்குவதற்கு முன்னால் விதைக்க வேணும்

நாம உள்ளுரிலயும் வெளியூர்களிலயும் சுற்றுலாச் செல்லும் போது விதைக்கலாம்!.

நீண்ட பிரயாணங்கள், நடை பவனிகள் செல்லும் போதும் தேவையான இடங்களில விதைக்கலாம்!

மலைகள் ஏறும் போதும் விதைப்பந்துகள விதைக்கலாம்!

வீசிய விதை ஒரு ஆண்டு வரை பாதிப்பில்லாமல் விதைப்பந்தினுள் இருக்கும்

மழை பெஞ்சி
களி கரைஞ்சி
விதை முளைச்சி;
விரைவாக மரமாகி
பெரும் வனமாகும்.

வளர்ந்தால் மரம்
இல்லையேல் மண்ணுக்கு உரம்'

என இலகுவாகவும் எளிமையாகவும் முயற்சியுள்ள மனிதர்கள் அனைவராலும் செய்யக்  கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு செயல்முறையாகவும் முன்மொழிகின்றார். இதுவே இச்செயல்வாதத்தின் முக்கியத்துவமாகும்.

நவீன உலகமயமாக்கலின் சூழலியல் ஏகாதிபத்தியத்தை எதிர் கொண்டு நமது சூழலின் பேண்தகு தன்மையினை பாதுகாக்கும் வகையிலான தாவரவியல் மீளுருவாக்கச் செயற்பாடாகவே இந்த விதைப்பந்துகளை விதைக்கும் நடைமுறை அடையாளங் காணப்படுகின்றது. 

பின்காலனித்துவ பின்நவீனத்துவப் பின்னணியில் சமூகந்தழுவிய மீளுருவாக்கல் செயற்பாடுகள் குறித்த ஆழ்ந்த அறிவும் அதுசார்ந்த சிந்தனையும் தேடலும் மிக்க ஆய்வறிவுச் செயற்பாட்டாளராக திரு றியாஸ் அகமட் அவர்கள் பயணித்து வருவதன் பிரதிபலிப்பாகவே இந்த விதைப்பந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு மீளுருவாக்கம் பெற்றுள்ளன எனலாம்.









பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...