Monday, January 11, 2021

உயிரியல் பல்வகைமையும், காலநிலை மாற்றமும், பெரும்பரவல் தொற்றும்: கொவிட்-19 ஐ முன்வைத்து.


ஏ.எம். றியாஸ் அகமட், சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
அறிமுகம்:

மண், தாவரங்கள், விலங்கினங்கள். மனிதனின் உடல் நலம் ஆகிய எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை என்று 1873இல் பிறந்த ஆங்கிலேய தாவரவியலாளரும், இயற்கைவழி வேளாண்மையின் முன்னோடியுமான சேர் அல்பர்ட் ஹொவார்ட் கூறியிருந்தது, இந்தக் குரோனாக் காலத்தில் அடிக்கடி எனது மனதில் வந்து வந்து போகிறது.
மனிதனுக்கு விலங்குகளிலிருந்து வைரசு மூலம் பரவும் 142க்கும் மேற்பட்ட நோய்கள் தற்போது இனங்காணப்பட்டிருக்கின்றன. தற்கால உலகின் 10 சதவீதமான வைரசுக்களையே எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்திருக்கின்றது. மற்றையவை அனைத்தையும், அதாவது விலங்குகள் காவித் திரியும் வைரசுக்கள் உட்பட, அடையாளப்படுத்தி கண்டுபிடிக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் பற்றாக்குறை காரணமாக இன்னும் கண்டபிடிக்கமுடியாமல் உள்ளது. இவ்வகையான வைரசுக்கள் சுமார் 1.7 மில்லியனுக்கு அதிகமாக இருக்கலாம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.








உயிரியல் பல்வகைமையும் தொற்று நோய்களும்:
இந்தப் பூமியிலுள்ள உயிரிகளின் வாழிடங்கள் துண்டாடப்பட்டும், சிதைக்கப்பட்டும், முற்றாக அழிக்கப்பட்டும், உயிரினப் பல்வகைமை அழிக்கப்பட்டதன் காரணங்களாலேயே தொற்று நோய்களை உருவாக்கும் பல புதிய வைரசுக்கள் பரவத் தொடங்கின. அதற்கு நாம் கொடுக்கும் தற்போதைய பெரும் விலைதான் கொவிட்-19 பெரும் பரவல் தொற்று என சுற்றுச்சூழல் அறிஞர்களும், ஆய்வாளர்களும் மிகவும் உறுதியாக கருதுகிறார்கள். சீனாவில் உருவான கொவிட்-19 நோய் வளரும், வளர்ந்துவரும், வறுமையான நாடுகளின் நிதித்துறை, சுகாதாரத்துறை உள்ளடங்கலான பல துறைகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நாங்கள் காடுகளையும், வனவிலங்குகளின் இடங்களையும் அடாத்தாக அபகரித்தோம். அந்த வாழிடங்கள். கணக்கிலடங்காத தாவரங்கள், விலங்குகள், மற்றும் ஏனைய உயிரினங்கள்;, வைரசுக்கள் போன்றவை வாழ்வதற்கான இடங்களை அளித்திருந்தன. நாங்கள் அந்த வாழிடங்களிலுள்ள மரங்களை வெட்டி இருக்கிறோம். வைரசுக்களுக்கு விருந்துவழங்கியாக அடைக்கலம் கொடுத்த விலங்குகளை பிடித்துக் கொன்று, வெட்டி அல்லது உயிருடன் முழுவிலங்கையும,; சாப்பிடுவதற்காக சந்தைக்கு அனுப்பினோம். அதன் இயல்பிலேயே இருந்த இயற்கையை குழப்பினோம். அதன் சமனிலையை குழப்பினோம். தற்போது அனுபவிக்கின்றோம்.
றேபிஸ், பிளேக் (நூற்றாண்டுகளுக்கு முன், எலிகளிலிருந்து), லஸ்ஸா காய்ச்சல் (1969, எலிகள் - மேற்கு ஆபிரிக்கா), மார்பக் (1960, வெளவாலிலிருந்து, ஜெர்மன்), எபோலா (1976, புனுகுப் பூனை, வெளவால், குரங்குகள,; மத்திய ஆபிரிக்கா), எச்ஐவி அல்லது எய்ட்ஸ் (1980கள், பெரிய ஏப்புக் குரங்குகள்), மெர்ஸ் (2012, ஒட்டகத்திலிருந்து – மத்திய கிழக்கு), மேற்கு நைல் வைரஸ் (பறவைகள், 1937- உகண்டா, 1999- அமெரிக்கா), நிப்பா (2003-4. மலேசியா), சார்ஸ் (2003-2004, வெளவால், சீனா), சிக்கா (2007, குரங்கு, பழ வெளவால்;, ஆபிரிக்கா), பறவைக் காய்ச்சல் (2004-2007, பறவைகள், வட அமெரிக்கா), பன்றிக் காய்ச்சல் (2009, பன்றிகள்), லைம் பக்டிரியா நோய் (உண்ணிப் பூச்சிகள், அமரிக்கா) போன்றவை இவ்வகையான தொற்றுநோய்களுக்கு உதாரணங்களாகும்.
1960 தொடக்கம் 2004 வரை உருவான இவ்வகையான 335 நோய்களில், 60 சதவீதமானவை விலங்குகளினாலேயே பரப்பப்பட்டுள்ளன என்றும். இந்த நோய்ப் பரம்பலில் சுற்றுச்சூழலும், மனித நடத்தைகளும் மிகவும் இறுக்கமான தாக்கத்தையும், தொடர்பையும் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு ஆய்வு கூறுகின்றது.
காடுகளை குழப்புதல், வெட்டுதல், சுரங்கங்களைத் தோண்டுதல், நிலத்தோற்றங்களை குழப்புதல். பெருந்தெருக்களை அமைத்தல், நீர்மின்சாரம் போன்ற சக்தி உருவாகத்திற்கான கட்டமைப்புக்களை உருவாக்கல், தொடர்ச்சியான நகரமயமாக்கம், சமமற்ற வளப் பயயன்பாடு, சனத்தொகை அதிகரிப்பு (இதன் காரணமாக இதற்கு முன்னர் மனிதர்களின் அருகாமையை ஒரு போதும் சந்திக்காக விலங்குகளான எலிகள், மூஞ்சூறுகள், பறவைகள், வெளவால்கள், காட்டு முலையூட்டிகள், மனிதர்களின் அருகாமையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு, குடிதொகையைப் பெருக்கி அவைகளுடனான இடைத்தொடர்வை அதிகரித்திருக்கின்றோம்.) போன்றவை காரணமாக வனவிலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்கள் பரவுகின்றன.
உலகின் வடபகுதியிலுள்ள நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்ய உலகின் மற்றப் பகுதிகளிலுள்ள காடுகள்;, விலங்குகள், சூழற்றொகுதிகள், கனிப்பொருட்கள்;, பல ஆண்டுகளாக சுரண்டப்பட்டதனாலேயே இன்றைய பெரும் அவதியை மற்ற நாடுகள் எதிர்கொள்ள நேர்ந்திருக்கின்றன என்ற கருத்தும் இருக்கின்றது.
மேற்கு ஆபிரிக்க கிபன் நாட்டின், சமூகம் நீண்ட காலமாக நன்றாக, ஆரோக்கியமாக, தன்னிறைவாக இருந்தவர்கள். அவர்களுக்கு அருகிலிருந்த சுற்றுச்சூழலும், வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டதன் அல்லது குழப்பப்பட்டதன் காரணமாக அவர்கள் காட்டுக்குள் சென்று, அங்கிருந்த சிம்பன்சிக் குரங்குகளை உணவுக்காகக் கொன்று, தங்கள் கிராமங்களுக்குள் எடுத்துவந்து சாப்பிடத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக எபோலா, எச்ஐவி, டெங்கு போன்ற பலநோய்களுக்கு நீண்டகாலமாக அவர்கள் முகம் கொடுக்க நேரிட்டது. இதே போன்றுதான் லைம் என்னும் பக்டீரியாவினால் உருவாக்கப்படும் தொற்றுநோயும், காடுகள் துண்டாடப்படுவதன் காரணமாகவே உருவானது என்றும் அறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமும் தொற்று நோய்களும்:


இன்னொரு முக்கியமான விடயம் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல், காலநிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் விலங்குகளின் வாழிடங்களை இல்லால் செய்வதுடன், அவைகளில் மாற்றங்களையும் உருவாக்குகின்றன. இந்த மாற்றம் அந்த விலங்குகள் எப்படி வாழ்வது? எங்கே வாழ்வது? யார் யாரை கொன்றுண்ணுவது? போன்ற சூழலியல் நடத்தைகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் காலநிலை மாற்றமானது ஏழை மக்களை போசணைக் குறைவானவர்களாக மாற்றி, சுவாச நோய்களையும், வளியிலுள்ள மாசுத் துணிக்கைகளின் காரணமாக வேறு பல நோய்களை ஏற்படுத்தியும் அவர்களது நிர்ப்பீடனத் தொகுதியை வலுவிழக்கச் செய்து இலகுவாக தொற்றுநோயகளுக்குள்ளாக்குகின்றன. அத்துடன், காற்று மாசாதலின் காரணமாக வளிமண்டலத்தில் வெளிவிடப்படும் துணிக்கைகள் (இங்கே அவுஸ்தரேலிய, பிறேசில் காட்டுத் தீகளையும,; சீன, டெல்லி மாசுக்களையும் நினைத்துக்கொள்க), நோயாக்கிகளை மிக நீண்ட தூரத்திற்கு காவிக்கொண்டு செல்லும் தன்மையையும் கொண்டன, என்றும் கருதப்படுகின்றன.
காலநிலை மாற்றம் வன விலங்குகளை புதிய இடங்களுக்கு இடம்பெயரவேண்டிய நெருக்கடியை கொடுக்கின்றது. அதன் காரணமாக புதிய இடங்களில் இடம்பெயர்ந்த விலங்குகளானது, புதிய உயிரிகளுடன் இடைத்தொடர்பாடலை அதிகரிக்கின்ற சூழல் ஏற்படுகின்றது. இதன் காரணமாக வனவிலங்குகளிலிருந்து தொற்றுக்கள் இலகுவாக மற்ற உயிரிகளுக்கு ஏற்படுத்தப்படுகின்றன. காலநிலை ஏற்படும் மாற்றங்களானது எதிர்காலத்தில் இன்னும் பல பெரும்பரவல் தொற்றுக்களுக்கு வழிகோலுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வளவுக்கு அதிகமாக தாவர, விலங்குச் சூழல்கள் குழப்பப்படுகின்றனவோ, அவ்வளவிற்கதிகமாக வைரசுக்களினால் பரப்பப்படும் நோய்கள் புதிதாகத் தோன்றுவதற்கும், பரப்பப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அதாவது உயிரினப் பல்வகைமையின் அழிவு, காலநிலை மாற்றம் போன்றன புதுநோய்கள் பரவுவதற்கு நேர்விகித சமனாக இருக்கின்றன. புது விருந்துவழங்கிகளிடமிருந்து வருகின்ற புது நோய்கள் எப்போதும் ஆபத்துமிக்கவைகளாகவும், மிகவும் வீரியமிக்கவையானதாகவுமே இருக்கும்.
நோய்ச் சூழலியலாளர்கள், சட்டவிரோதமானமுறையிலும், சட்டவிரோதமற்றமுறையிலும் வனவிலங்குகளை கொன்று, வெட்டி, இறைச்சிகளை விற்பனை செய்யும் சந்தைகள் இந்த தொற்றுநோய்ப் பரப்பலில் பாரிய பங்குகளை வகிக்கின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தச் சந்தைகள் ஈரச் சந்தைகள் (வெற் மார்க்கட்) என அழைக்கப்படுகின்றன. இந்த ஈரச் சந்தைகள் எப்போதும் வெடித்து பேரனர்த்தத்தை உருவாக்கப்போகும் அணுகுண்டுக்கு சமனானது என்கின்றனர் அவர்கள்.

பரிணாமப் பாய்ச்சல்:
பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பரிணாமத்தின் பாதையில், இந்த வைரசுக்கள் தாங்களாகவே, இயற்கையாகவே தேர்வு செய்து தங்கியிருந்த அவர்களின் அதாவது வைரசுக்களின் சூழற்றொகுதியை நாங்கள் குழப்பி விட்டிருக்கின்றோம். (சிறிய உக்கும் மரக்கட்டை, விலங்குகளின் சிறிய தோற்பகுதி தொடக்கம் பாரிய சமுத்திரம் வரை சூழற்றொகுதிகளாகும் என்பதை இங்கு நினைவிற்கொள்க). குறிப்பிட்ட ஒரு சூழற்தொகுதியில் இயல்பாகவே அடர்த்தியாகவிருந்த வைரசுக்களின் சூழற்றொகுதியை குழப்பிவிட்டு, அதன் குடித்தொகையின் அடர்த்தியை ஐதாக்கியிருக்கின்றோம். இதன் காரணமாக இந்த வைரசுக்களுக்கு புதிய விருந்து வழங்கி அங்கிககள் தேவைப்படுகின்றன. வைரசுக்கள் புதிய விருந்து வழங்கி அங்கிகளை தேர்வுசெய்தும் கொள்கின்றன.
பொதுவாக விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு நோய்களை தொற்றச் செய்யும் வைரசுக்களுக்கு தங்களது புதிய விருந்து வழங்கிகளை மிக வேகமாக தெரிவு செய்யும், புதிய இடங்களுக்கு வேமாக அந்த நோய்களை பரவச் செய்யும் வல்லமை மிக அதிகமாகக் காணப்படுகின்றன. 70 தொடக்கம் 75 சதவீதமான தொற்றுநோய்கள் இவ்வாறே விலங்குகளிலிருந்து மனிதனினுக்கு பரவுகின்றன என பல ஆய்வுகள் கூறுகின்றன. பண்ணை விலங்குகளைவிட வனவிலங்குகளே எட்டு மடங்கு அதிகளவில் வைரசுக்களுக்கு விருந்து வழங்கிகளாக இருக்கின்றன.
எண்ணிக்கையற்ற நோயாக்கும் நுண்ணங்கிகள் தொடர்ச்சியான பரிணாம மாற்றங்களுக்குட்பட்டுக் கொண்டெ வந்திருக்கின்றன. ஒரு நிலையில் அவை மனிதனுக்கு அச்சுறுத்தலாக மாறியுமுள்ளன. ஏனெனில் ஓரு நிலையில் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பாய வேண்டிய தேவையும் அவைகளுக்குமிருக்கின்றன. இது பரிணாம பாய்ச்சல் எனப்படும். இந்தப் பாய்ச்சலுக்கு மூல காரணம், மனிதன். அவன் தனது சுற்றுச்சூழலில் இருந்த உயிரினப் பல்வகைமைக்கு செய்த அழிச்சாட்டியம் காரணமாக, இந்தப் பரிணாமப் பாய்ச்சலை அவன் நுண்ணங்கிகளுக்கு இலகுவாக்கிக் கொடுத்திருக்கின்றான்.
ஒரு புது நோயாக்கி நுண்ணுயிரானது, ஒரு விருந்துவழங்கியை தொற்றியவுடன், விருந்து வழங்கி தனது நிணநீர்த் தொகுதியின் உதவியுடன் அந்த நோயாக்கி நுண்ணங்கியைக் கொல்ல முயற்சிக்கின்றது. இந்த முடிவுறா பரிணாம விளையாட்டில் இரண்டும் ஒன்றை ஒன்று முற்றாக தோற்கடிக்க கடுமையாக முயலுகின்றன. ஆனால் இறுதியில் ஒன்று மட்டுமே வெற்றியை நிலைநாட்டுகின்றது. வாழ்க்கைப் போராட்டத்தில், தக்கன பிழைத்தன. அவைகளை இயற்கை தேர்வு செய்து கொண்டது.

கொவிட்-19 பெரும் பரவல் தொற்றானது காலநிலை மாற்றம்;, உயிரினப் பல்வகைமையின் சமனிலைக் குழப்பத்துடன் நேரடியாகவும், ஆழமாகவும் தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. கொவிட்-19 எமக்குக் கற்றுத் தந்த பாடங்களையும் நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். தாவரங்கள், விலங்குகள் எங்கள் சூழலியல் பங்காளர்கள். அவர்களது சுகாதாரமும், நலன்களும், வாழிடங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறிருந்தாலேயே பெரும்பரவல் தொற்றிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க முடியும்.
விருந்துவழங்கிகளான பெரும்பாலான முலையூட்டிகளில் அரைவாசிக்கு மேற்பட்டவை எலிக் குடும்பத்தைச் (றொடன்ற்கள்) சேர்ந்தவை. கால்வாசிக்கு மேற்பட்டவை வெளவால்களைச் சேர்ந்தவை. வெளவால்கள் எங்களுக்கு தீங்கு தரும் பீடை பூச்சிகளைகளக் கட்டுப்படுத்தி, அதேவேளை அயன் மகரந்தச் சேர்க்கைக்கும் உதவிசெய்து, காடு உருவாகத்திற்கும் உதவுகின்றன. அவைகள் சூழற்றொகுதியில் கீஸ்ற்றொன் இனங்களாக, அம்றல்லா இனங்களாக காணப்பட்டு, அந்தந்த சூழற்றொகுதிகளின் நித்திய நிலவுகைக்கு உயிர் கொடுக்கின்றன. அதேவேளை அது கொண்டிருக்கும் சுப்பர் நிணநீர்த் தொகுதி காரணமாக எந்த வைரசுத் தொற்றுக்கும் பாதிக்கப்படாது, மிக அதிக வகையான வைரசுக்களை கொண்டு காணப்படுகின்றன. ஆனால் மற்றவர்களுக்கு இந்த வெளவால் வைரசுக்கள் அதிக பாதிப்புக்களையும், தொற்றுநோய்களையும் ஏற்படுத்தும். (கொவிட்-19 வைரசுக்கள் வீட்டுப் பூனைகளிலும், மிருகக் காட்சி சாலையிலுள்ள புலியிலும் காணப்படுவதாகவும், மேலும் வீட்டு நாய்கள் போன்ற சில விலங்குகளில் குறைந்தளவில் தாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது)
காடுகளை அழித்து, வெளவால்களின் இருப்பிடங்களான மரங்களை அங்கு அழித்தால், வெளவால்களானது வாழிடங்களுக்கு மனிதக் குடியிருப்புக்களுக்கு அருகாமையைத்தான்; தேர்ந்தெடுக்கும். அதுபோல அந்த வெளவால்களை காடுகளிலிருந்து பிடித்து, கொன்று, வெட்டி உணவுக்காக மனிதர்களுக்கு விற்றால், அப்போது மனிதருக்கும் அதற்கும் நெருங்கிய இடைத்தொடர்பு ஏற்பட்டு நோய்த் தொற்றுக்கள் ஏற்படும்.
குதிரை லாட வெளவாலின் சுவையை ருசிப்பதை கட்டுப்படுத்த முடியாத கட்டுப்பாடு இல்லா நாக்குகளின் சீன மனங்களினாலும், இந்த வைரசின் இடை நிலை விகாரம் காணப்படும் பெங்கோலின் என்னும் எறும்பு தின்னியின் கடினமான செதில்களின் சாம்பல்கள், ஆணுறுப்பை வீரியப்படுத்தும் என்று நம்பிய மூட மனங்களினாலுமே இன்று நாம் எதிர்நோக்குகின்ற கொவிட்-19 பேரனர்த்தம் எம் அனைவரையும் ஆட்கொண்டிருக்கின்றது. அதற்கெதிராக கடுமையாக போராட வேண்டியும் ஏற்பட்டிருக்கின்றது.
பல பில்லியன் கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வனவிலங்கு

வர்த்தகத்தை நிரந்தரமாகத்தத் தடைசெய்யுமாறும், இதனால் நோய்கள் பரவுதலை தடை செய்யலாம் எனவும், அத்துடன் இந்தப் பூமியில் உயிரிகளை முற்றாக அழித்து, மறைந்து போகச் செய்வதில் முக்கிய பங்காற்றும் காரணியான வனவிலங்கு வர்த்தகம் தடுக்கப்பட வேண்டும் என்றும் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல், வனவிலங்குகள் அமைப்புகள், உலக சுகாதார தாபனத்திற்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.
முடிவுரை:
எவ்வளவுக்கு அதிகமாக தாவர, விலங்குச் சூழல்கள் குழப்பப்படுகின்றனவோ, அவ்வளவிற்கதிகமாக வைரசுக்களினால் பரப்பப்படும் நோய்கள் புதிதாகத் தோன்றுவதற்கும், பரப்பப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. அதாவது உயிரினப் பல்வகைமையின் அழிவு, காலநிலை மாற்றம் போன்றன புதுநோய்கள் பரவுவதற்கு நேர்விகித சமனாக இருக்கின்றன. புது விருந்து வழங்கிகளிடமிருந்து வருகின்ற புது நோய்கள் எப்போதும் ஆபத்துமிக்கவையாகவும்;, மிகவும் வீரியமிக்கவையானதாகவுமே இருக்கும்.
உலகத்தின் ஒரேயொரு மிகப் பெரிய சுயநலமுள்ள பிராணியான மனிதனின் சுயல நடத்தைகள், அந்த சுயநலமுள்ள மனித இனத்துடன் சேர்த்து மற்றைய எல்லாவற்றையுமே கடைசியில் அழித்துவிடும். நாங்கள் அடுத்த பெரும்பரவல் தொற்று எப்போது ஏற்படும் என எதிர்வுகூறல்களை கூறமுடியாது. ஆனாலும், அதனை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த திட்டங்களை நாங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இன்னொரு பெரும் பரவல் நிச்சயம் என்ற ஒரு விடயமே நிச்சயம் எனக் கூறலாம். பெரும் பரவல் தொற்றுக்கள் எங்கள் எதிர்காலங்களின் பகுதியாக இருக்கப் போகின்றன. இதற்கு ஒரே வழி காலநிலை மாற்றம்;, உயிரினப் பல்வகைமையை அழித்தல் போன்றவைகளளைக் கட்டுப்படுத்துவதுடன், எமது சுற்றுச் சூழலிலின் பங்காளர்களான தாவரங்கள், விலங்குகள் போன்றவைகளின் ஆரோக்கியமும், நலன்களும், வாழிடங்களும் பாதுகாக்கப்பட்டாலேயே, இவ்வாறான பெரும்பரவல் தொற்றிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க முடியும்.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...