Monday, January 11, 2021

லங்கா ராணிகளின் பயணங்கள் முடிவதில்லை.

- அம்ரிதா ஏயெம்


நேற்று அருளரின் லங்கா ராணியில் மீண்டும் ஒரு தடவை பயணிக்க முடிந்தது. (நன்றி www.noolaham.org). எத்தனை வகையான மனிதர்கள், பாத்திரங்கள். கொழும்பில் மட்டும் பிறந்தோர். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உறவுண்டு அல்லது உறவில்லை, கொழும்பில் பிறந்து, யாழ்ப்பாணத்தில் வீடு உள்ளோர். யாழ்ப்பாணத்தில் பிறந்து கொழும்பில் வசித்தோர். கொழும்பை அண்டியவர்கள், மலையகத்தவர்கள், யாழ்ப்பாணத்தில் வதியாத முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பார் எனவும், அரசாங்கம் செய்வது சரி என்போர், பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கை வைத்தோர், அகிம்சைகளில் நம்பிக்கை வைத்தோர், ஆயுதத்தில் நம்பிக்கை வைத்தோர், இவற்றில் எவைகளிலுமே நம்பிக்கை வைக்காதோர், இவை பற்றி எதுவுமே தெரியாதோர், ஏதிலிகள், ஏமாற்றுக்காரர், புரட்சிக்காரர், சமூக சிந்தனையுடையோர், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் என பல்வகைமையினரான, எண்ணிக்கையில் 1200 பேர்களான அவர்கள் சுமார் 1000 கிலோமீற்றர் கடற்பயணத்தை 4000 இறாத்தல் பாண்களுடனும், 1500 பீங்கான்களுடனும், சாக்குச்சீலையால் மறைக்கப்பட்ட 30 வாளிக் கக்கூஸ்கள் (1200 பேர் 3 தடவை 3600 தடவைகள் ஒரு நாளைக்கு) உதவியுடன் லங்காராணிக் கப்பலில் கொழும்பிலிருந்து, காங்கேசன்துறைக்கு மூன்று நாட்களாக பயணம் செல்கின்றனர். அல்லது அகதிகளாக எடுத்துச் செல்லப்படுகின்றனர்.
நாவல் முழுவதும் நேர் மறையாகவும், எதிர்மறையாகவும் உள்ளவைகள் இன்றைய காலங்களின் கன்னங்களில் பளார் பளார் என அறைகின்றன. 1977இல் அருளர் லங்கா ராணியின் 165ம் பக்கத்தில் இப்படி கூறும் ஒரு பகுதி வருகிறது:
”இன்றும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியைக் கலைப்பதற்கு எத்தனையோ சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிமட்டத்தில் இருக்கும் தமிழர்களை ஒரு சிறு அளவிலாவது தட்டியெழுப்ப வெளிக்கிட்டிருக்கும் இந்த திராவிடர் இயக்கங்களுக்கு எதிராகவே இத்தனை சூழ்ச்சிகள் என்றால், ஒரு முழமையான தமிழனுடைய எழுச்சிக்கு எதிராக இந்தச் சக்திகள் எவ்வளவு பயங்கரமாகச் செயற்படும் என்பதை நீ சற்று எண்ணிப்பார். நாம் எந்தவிதமான அனுதாபத்தையும் இந்திய அரசிடமிருந்து எதிர்பார்க்கக்கூடாது. தமிழ்மக்களுடைய இதயங்கள் எங்களுக்காக குமுறிக்கொண்டிருக்கலாம். அது அவ்வளவும்தான். அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க இயலாது.”
ஒரு சிறு சம்பவம் அல்லது சம்பவம் ஊதிப் பெரிதாக்கல். பொய் பரவவிடல். ஊடகங்கள் அதற்கு துணைபோதல். மிதிக்கக்கூடியவர்கள் மிதிபடக்கூடியவர்களை விஞ்ஞான முறையில் திட்டங்கள் வகுத்து மிதித்தல். இழத்தல், துரத்தல். ஏதிலிகளாதல். மீண்டும் மீண்டும் அது நடத்தல். இதுதான் நடந்தது. நடக்கிறது. நடக்கப்போகிறது. இதுதான் அதன் வடிவம். பொறிமுறைகளும், தொழில்நுட்பங்களும், செய்நேர்த்தியும் மாறலாம். வடிவங்கள் மாறப்போவதில்லை. 1977ல் புறப்பட்ட லங்கா ராணிக்குள் நேற்றைய வருடத்தையும், அதற்கு முந்திய வருடத்தையும், அதற்கு முந்தைய வருடங்களையும்கூட கண்டுகொள்ளலாம்.
லங்கா ராணி என்னும் முகத்திற்கு பூசுகின்ற பூசல்மா வந்த காலம் எனது சின்னப் பருவங்களில் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. மனிதனின் சிறுவயது நினைவுகள் நிறங்கள், இசைகள், பாட்டுக்கள், மணங்கள், சம்பவங்கள் போன்றவைகளுடன் கோருக்கப்பட்டே நினைவுகளின் அடுக்குகளின் ஆழத்தில் பதியப்பட்டிருக்கும். நிறங்கள், இசைகள். பாட்டுகள், மணங்கள் நமது வெளிகளில் தற்செயலாக அருட்டும்போது. நினைவுகள் வெளிவரத் தொடங்குகின்றன. நீலமும், வெள்ளையும் கலந்த அந்த லங்கா ராணி பூசல்மாவின் மணம் நினைவுகளின் இன்பமாய் இருக்கும்போது, இந்த லங்கா ராணியின் கபிலச் சிவப்பு, நினைவுகளைப் பிறாண்டும் துன்பக்கேணியாகத்தான் இன்னும் இருக்கின்றது.
லங்கா ராணி பயணித்துக்கொண்டே இருக்கப்போகின்றது.
ஏனெனில் லங்கா ராணிகளின் பயணங்கள் முடிவதில்லை.

No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...