Tuesday, January 12, 2021

சூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு - 02: மரங்களும், விலங்குகளும், மனிதர்களும் பின்னிய உயிர்வலையில் உயிர்த்தெழுந்த வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்ச்சியாக இல்லை

 - அம்ரிதா ஏயெம்

அறிமுகம்;:
வடகோவை வரதராஜனின் நிலவு குளிர்ச்சியாக இல்லை (XV + 140 பக்கங்கள், சிவவாசுகி பதிப்பகம், சென்னை, 2005, மகிழ் பதிப்பகம், இலங்கை, 2015) சிறுகதைத் தொகுதி அது ஒரு மழைக்காலம், மொழி பெயர்ப்பு, மனவுரிவும், மரவுரிவும், மழைப் பஞ்சாங்கம், எறும்புக்குத் தெரியுமா?, நேர்முக வர்ணனை, மலினப்பட்ட மானிடங்கள், நிலவு குளிர்ச்சியாக இல்லை, வெளிறிகள், உப்பு, மனோபாவம், தாய்ப் பறவையும், சேய்ப் பறவையும் போன்ற 12 சிறுகதைகளை கொண்டிருக்கின்றது. இந்தக் கதைகள் சமூகவியல், தத்துவம், தாவரவியல், விலங்கியல், பயிராக்கவியல், உளவியல், சுற்றுச்சூழலியல், காலநிலையியல், அறிவியல் போன்ற பல விடயங்களைப் பேசுகின்றன. இந்தக் கதைகள் இவை எங்கும் கேலியும், கிண்டலும், எள்ளலும், எகாத்தாளமுமாக விரவிக்கிடக்கின்றன. இந்தச் சிறுகதைகள் எங்கும் பசுமையும், சுற்றுச்சூழல் அம்சங்கள் விரவிக் கிடந்தாலும், மனவுரிவும், மரவுரிவும், தாய்ப் பறவையும், சேய்ப் பறவையும் என்ற பசுமையும், சூழலியலும் கொண்ட முக்கியமான இரு கதைகளாகும்.
மனவுரிவும், மரவுரிவும்.. :
சாதாரண கிளரிக்கல் சேவையிலிருந்து இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் சித்தியெய்தி, அதிகாரியாகி, திறமையான நிருவாகியாகவிருந்து ஓய்வுபெற்ற அவர், தனது அந்த ஓய்வுக் காலத்திலேயே தான் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கைக்கான அர்த்தத்தை கண்டுபிடிக்க முனைகின்றார் அல்லது தேடுகின்றார்.
ஒரு கட்டத்தில் அவை தனது வாழ்க்கையின் ஆத்மார்த்தமான அர்த்தங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்கின்றார். வாழ்வின் அர்த்தம் எது? தனது மூதாதை மனிதனுக்கும், தனக்கும் ஆத்மார்த்தமான தொடர்பை ஏற்படுத்தி வாழ்க்கையை அர்த்தப்படுத்துவது எது? தனது ஓய்வு காலத்தில் தனக்கு மனநிறைவைத் தருவது எது? போன்ற கேள்விகளுக்கான விடையைக் கண்டுகொள்கின்றார்.
மரங்களை நடுவது.
மேற்கூறிய கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை விடை அது.
மண்ணைக் கிளறுவது, புதுவிடயங்களை அறிந்து கொள்வது, மண்வாசனையை நுகர்வது, மரங்களுடன் பேசுவது, அந்த மரங்களில் தங்கும் பறவைகளையும், அவற்றின் நடத்தைகளையும் அவதானிப்பது (உ-ம்: தூக்கணாங் குருவிக்கூடு), மரங்களை தண்ணீர்விட்டு, பசளையிட்டு பராமரிப்பது, அதனால் உருவாகும் இயற்கையுடனான நேசம் போன்றவைகளை பேரானந்தமாக உணர்கின்றார். தனது வாழ்க்கையின், அறுபது வயதிற்கு முன்னருள்ள அதாவது ஓய்வுக்கு முன்னருள்ள பகுதிகளை வீணாக்கிவிட்டோம் என்றும் நினைக்கின்றார்.
அவரது பிள்ளைகளும் வளர்ந்து வாழ்க்கைப்பட்டு வீட்டுக்கு வெளியே போதல், பேரப்பிள்ளைகளுக்கும் ஆற, அமர இருந்து கதைக்க நேரமின்மை, நெருங்கிய சினேகிதர்களும் படிப்படியாக இறந்துபோதல் போன்றவைகளால் தனிமையின் வெம்மையை உணர்ந்த சந்தர்ப்பங்களில், கதைப்பதற்கு, அளவளாவுதற்கு உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு, தனிமையின் கொடுமையை போக்குவதற்கு இந்த மரங்கள் உதவி செய்கின்றன.
அவர் வீட்டைச் சுற்றியும், வீட்டிற்கு அருகிலும் அவரது தந்தை வைத்த மற்றைய மரங்களும், வேப்பமரங்களும் இன்று வளர்ந்து பெரு விருட்சங்களாயிருந்தன. வேம்பு வைத்ததற்கு ஆயிரம் காரணங்கள். ஆயிரம் நன்மைகள்.
அவருக்கு பக்கத்துவீட்டில் வசிக்கும் வினோதன். விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர். மரங்கள், பயிர்கள், விலங்குகள் சம்பந்தமான நிறைய அறிவுள்ளவர். ஆலொசனைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியவர்.
ஒரு நாள் அவர் வினோதனைக் கூப்பிட்டு வீட்டுக்கு அருகில் இருக்கும் வளர்ந்த பெரிய வேப்ப மரம் காற்றில் வீட்டுக்கூரையிலுள்ள ஓடுகளுடன் உராய்ந்து அடிக்கடி ஓடுகள் உடைவதாலும், தனது மகளின் கட்டடத் தேவைக்கு மரம் தேவைப்படுவதாலும், விருப்பமில்லாமலேயே, பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அந்த மரத்தை, அதாவது தனது அப்பா நாட்டி, போற்றி வளர்த்த மரத்தை அகற்றுவதற்கு வினோதனிடம் ஆலோவனை கேட்க, ஆரம்பத்தில் அதற்கு உடன்படாத வினோதன், பின்னர் அந்த மரம் பத்து குளிரூட்டிகளுக்கு சமம் என்றும், ஒரு நாளைக்கு ஆறு சிலிண்டர்களுக்குள் நிரப்பக்கூடிய அளவு ஒட்சிசனை வெளவிடுகின்றது என்றும் மரங்களின் பல்வேறு நன்மைகளை விளங்கப்படுத்துகின்றார்.


இருந்தும் அவர் மரம் அகற்றப்படுவதில் உறுதியாக இருக்கின்றார். வினோதன் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்து ஆறு அங்குலத்திற்கு மரத்தைச் சுற்றி வட்டமாக மரவரியை அகற்றச் சொல்கிறார்;. அவ்வாறே செய்யப்பட்டது. அன்றிரவு இறந்துபோன அப்பா அவரது கனவில் மரவுரி அகற்றப்பட்ட வேம்பு போல காட்சியளிக்கின்றார். மரவுரி அகற்றப்பட்ட அந்த மரம் வடித்துக்கொண்டிருந்த வெள்ளையம், சிவப்பும் கலந்த திரவங்கள் அதன் கண்ணீரும், செந்நீருமாகத் தெரிய, குற்றவுணர்ச்சி காரணமாக அந்த மரப் பக்கமாக ஒன்றரை மாதங்களுக்கு மேலாக போகாமல் இருந்து, ஒரு நாள் சென்று பார்க்கிறார். மரவுரி அகற்றப்பட்ட மரத்தின் மரவுரி மீண்டும் வளர்ந்து மரம் பிழைக்கத் தொடங்கியிருந்தது. வேம்பு போராடி வெற்றிபெற்றிருந்தது. அதனால் பெரும் சந்தோசம் அடைந்த அவர் மரத்தை வெட்டத் தேவையில்லை என்றும், ஓடுகள் உடைந்தால் மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகின்றார்.

தாய்ப்பறவையும், சேய்ப்பறவையும்:
வரதன் நுட்பமான அவதானிப்புக்களை கொண்டவன். பறவைகள், விலங்கினங்களை அவதானிப்பதில் திறமைசாலி. காகங்கள் கரைதல்களின் வகைகள், அணில் கத்தலின் வகைகள். பறவைகள் எந்ததெந்த மாதங்களில் முட்டையிடும்?, குஞ்சு பொரிக்கும்?, எந்த உணவுகளை உட்கொள்ளும்?;, இவைகளையெல்லாம் நாட்குறிப்பில் குறிப்பெடுத்துக்கொள்பவன்.
ஒரு நாள் தனது அறையில் படித்துக்கொண்டிருந்த வரதனுக்கு மைனா ஒன்று வெளியில் கத்தும் சத்தம் கேட்க, அதனை அவதானிக்கின்றான். அது எதற்காக கத்துகின்றது என்பதைப் புரிந்து கொள்கின்றான். ஏற்கனவே கிளிகள் கூடு கட்டி, குஞ்சு பொரித்த பின், கைவிட்டிருந்த மரப்பொந்து ஒன்றை ஓணான் ஒன்று ஆக்கிரமித்திருந்தது. அதே பொந்து மைனாக்களுக்கு கூடு கட்ட தேவைப்பட்டிருந்தத. ஆனால் ஓணான் அதற்கு விடுவதாயில்லை. அதனை மைனா தனியாக விரட்ட முயற்சி செய்து முடியாமல் போக, தனது துணையுடன் வந்து, அதனைத் தாக்கி விரட்டி, கம்புகளும், குச்சிகளும் சேகரித்து கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரித்து குஞ்சுகளை பாராட்டி, சீராட்டி வளர்த்து வந்தன.
தாய், தந்தை குஞ்சுகளுக்கு வெட்டுக்கிளிகளையும், ஏனைய பழங்கள் தவிர்த்து வேப்பம் பழங்களையும் ஊட்டின. குஞ்சுகள் பொரித்து, இருபது நாளைக்குப் பிறகு வரதன் தனது அம்மா, அப்பா வீட்டில் இல்லாத நேரத்தில், பக்கத்து வீட்டில் ஏணியொன்றை வாங்கி வந்து, மைனா கூடு கட்டியிருந்த போஸ்டில் வைத்து ஏறி, தாய்ப் பறவையை துரத்தி, கூட்டிற்குள் கையை விட்டு, குஞ்சைப் பிடித்து, யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் கொண்டு வந்து தனது அறைக்குள் தயார் நிலையிலிருந்த கூட்டுக்குள் அதனை வளர்க்கும் எண்ணத்துடன் விட்டு, உணவூட்டி, பராமரித்து வந்தபோது, அடுத்த நாள் தந்தை இதனைக் கண்டுபிடித்து மைனாவை அதன் பெற்றோரிடத்தில் விடுவிக்க அறிவுரை கூற, அந்த அறிவுரையை வரதன் விரும்பாமல், இப்போதுவிட்டால் காகங்கள் போன்ற பறைவைகள் கொன்றுபோடும் என்கின்றான்.
தாய், தந்தை மைனாக்கள் தங்கள் குஞ்சைத் தொலைத்துவிட்ட படுகின்ற அவஸ்த்தைகளை வரதனுக்கு காட்டி விளங்குப்படுத்தி, வரதனின் தாயிற்கு நாளை சத்திரசிகிச்சை ஒன்று இருப்பதையும் விளங்கப்படுத்துகின்றார். உடனே ஏதோவொரு காரணத்தால் உந்தப்பட்டவனாக, தந்தை வீட்டுக்குள் சென்றபோது, மைனாக் குஞ்சை எடுத்துக்கொண்டு, ஏணிகொண்டு ஏறி, குஞ்சை கூட்டுக்குள் விட்டான். பொந்தினுள் குஞ்சைக் கண்ட தாய்ப் பறவை கலக்கம் குறைந்து, மகிழ்ச்சியால் கத்தியது.
இந்தக் கதையில் காகம், மைனா, ஓனாண், மணிப்புறா போன்ற பறவைகளின் நடத்தைகளும், வரதன் வளர்த்த விலங்குகளான முயல், புறா, கிளி, மைனா, மாம்பழக் குருவி, கானான்கோழி, மீன்கள். கீரிப்பூனை, ஆட்காட்டிக் குருவி, தினைக்குருவி, மரங்கொத்தி, புலூணி, அணில், வயற்குருவி, குக்குறுப் பாய்ஞ்சான், குயில் போன்றவைகளும் சொல்லப்படுகின்றன.

மழைப் பஞ்ஞாங்கம்:

இந்தக் கதை, மழை பெய்யாது கோடை காலம் நீண்டு போக, பல விசேட இயல்புகளும், திறமைகளும் கொண்ட மாடு மேய்க்கும் சின்னண்ணர் கோயிலின் முன் உண்ணாவிரதமிருந்து மழையைப் பெய்விக்கின்ற கதை. நக்கலும், நையாண்டியுமாக கதை விரிகின்றது. மழை பெய்வதற்கான விஞ்ஞானக் காரணங்களும், மழைபெய்வதற்கான காலநிலை, வானிலை போன்றவைகளின் ஒழுங்குகள், சின்னண்ணை மாடுகளைப் பராமரிக்கும் விதங்கள் விபரிக்கப்படுகின்றன.
இந்தக் கதையில் சின்னண்ணை மாடுகளிற்கு வௌ;வேறான வித்தியாசமான பெயர்களை இட்டிருப்பார். அடங்காப்பிடாரி மாடு, சண்டியன் மாடு, சொகுசு மாடு, கள்ளமாடு, அவசரக்கார மாடு, காரியக்கார மாடு, பாசாங்கு மாடு, அப்புராணி மாடு என்று எவ்வளவோ பெயர்கள். அவை மாடுகளின் மிகவும் நுண்மையான நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டவை. மயிலை, வெள்ளச்சி, நுரைச்சி, சிவப்பி, கறுப்பி, கழுகன் போன்ற பெயர்கள் மாடுகளின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டவை. சுட்டிச்சி, மொட்டைச்சி, ஆடு கொம்பி, தலை சுழற்றி, அஞ்சு முலைச்சி, ஆமை மடிச்சி, அலடியன் கண்டு போன்ற தனித்தனி அடையாளங்களை அடிப்படையாகக்கொண்டு மாடுகளுக்கு வைக்கப்பட்ட பெயர்களாகும். விலங்குகளில் செய்யப்படும் விலங்கு நடத்தைகள் சம்பந்தமான ஆய்வுகளிலும், இவ்வாறே பெயர்கள் விலங்குகளுக்கு தனித்தனியாக சூட்டப்படுகின்றன.
மாடுளைப் பற்றிய முதலாம் நிலை அனுபவம் உள்ள ஒருவரால்தான் இந்த எழுத்து சாத்தியப்படக்கூடியது. பல்வேறு இயல்புகளுள்ள மாடுகளையும், மாடுகளுடன் சின்னண்ணை கட்டுப்படுத்தும் விதம் போன்றவைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அது துலங்கலுக்கமைவான விலங்குக் கற்றல்களுக்கு (அசோசியேற்றிவ் லேனிங்) மிகச் சிறந்த உதாரணங்களாகும்.

தலைப்பில்லாத பத்தாவது சிறுகதை:
கோடை காலத்தில் கோப்பாயில், ஆனி, ஆடி மாதங்களில் கடல் நீர் சூடாகி, ஆவியாகி, செறிவாகி, கடலில் உப்பு விளைவதும், அதனை சேகரிக்க மக்கள் செல்வதும், உப்புக்கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள், அல்லது பொலிசார் அவர்களைத் தாக்குவதும், துரத்துவதும் வாடிக்கை. உப்புச் சேகரிக்கும் (உப்புக் கிள்ளும்) முறைமைகளும், அதன்போது மக்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைப் பேசும் ஒரு கதை. நாம் யாருமே எதிர்பார்க்காத, நமக்கு பரிச்சயமில்லாத கடல்சார் சூழற்றொகுதி ஒன்று இங்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. கடல் உப்பாகும் இந்தக் காலத்தில் ஆயிரக் கணக்கான மீன்கள் இறப்பதும், அவ்வாறு இறந்த மீன்களை தில்லைக் கிழவன் ஓலைப் பறிகளில் நிரப்பி, தனது தோட்டத்திலுள்ள தென்னை மரங்களைச் சுற்றி பொச்சு மட்டைகளுடன் புதைத்துவிட, அவரின் தோட்டத்திலுள்ள தென்னை மரங்கள் மட்டும் நூற்றுக் கணக்கில் தேங்காய்களை காய்த்துக் குலுங்குவதும் அறிவியல் முக்கியத்துவமுள்ள தகவலாகும்.

உயிர்வலை:
ஒரு மனிதனுக்கு இந்த நிலங்களிலுள்ள உயிருள்ளவையும், உயிரற்றவையும், மனிதர்களானவையும், மனிதர்களற்றவையும், வீட்டு விலங்குகளும், காட்டுப் பறவைகளும் ஒரே சாகியமாகும் அல்லது சமுதாயமாகும். இவைகளே, பூமியின் சொந்தங்கள். உயிரிகளின் சாராம்சமான உயிர்வலைகளை கவனமாகப் பின்னுகின்றன. அவைகளை கவனமாக, நிலைபேறான முறையில் பாதுகாப்பது நமது கடமை. இந்தக் கடமைகளை முன்னெடுப்பதில் ஒரு மனிதன் எப்போதும் பின்நிற்க கூடாது. உயிர்களிடத்தில் அன்பு கொண்டு. அவைகளை கவனமாகப் பாதுகாப்பது உயிர்வலையின் அறப் பொறுப்புக்கள் பற்றிய ஆத்மீகப் பெறுமதியைக் கொடுக்கிறது. இந்த நிலங்களினதும், உயிருள்ளனவும், உயிரற்றனவும், ஒவ்வொன்றும், ஒவ்வொன்றுடனும் இடைத்தொடர்புபட்டவைகள். நிலங்களும், உயிர்களும், உயிரற்றவைகளும், விலங்குகளும், தாவரங்களும், உயிர் வலைகள் பற்றிய நம்பிக்கைகளின் சாரம்.
மரங்கள்:
மனவுரியும், மரவுரியும் கதையில் மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலுள்ள உணர்வுபூர்வமான உறவும், சுற்றுச்சூழலுள்ள மரங்கள் குடும்பங்களுக்குள்ளேயும், குடும்பங்களுக்கிடையேயும், மனிதர்களுக்கிடையேயும், உறவுகளை தொன்று தொட்டு, பேணிப் பாதுகாக்கும் இடங்களாக இருந்து வருவதையும் சிறப்பாக சொல்லியிருக்கின்றார். இதுதான் எல்லாவற்றையும் சமத்துவமாகக் பார்க்கின்ற நிலை. தந்தை ஊஞ்சலாடுவது, பல்துலக்குவது, தேனீர் குடிப்பது, பத்திரிகை படிப்பது, அவரது அண்ணாவின் திருமணப் பேச்சு, அவரது தம்பியின் வெளிநாட்டுப் பயணத் தீர்மானங்கள், அவரது அம்மாவும் அப்பாவும் இரவு நேரங்களில் அலுப்பு தீருமட்டம் பேசிக்கொண்டிருந்தது, நிறையப் பறவைகள் வருவது அவைகளை அவதானிப்பது என மரங்கள் அவரின் தந்தையுடனும், அவருடனும், அவரின் குடும்பத்தினருடனும் உணர்வுபூர்வமாக வாழ்வின் இன்பங்கள், துன்பங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள் என எல்லா நிலையிலும் பங்கு கொண்டு, மரங்கள் மனிதர்களுடன் பாத்திரங்கரமாகவே மாறிவிட்டிருந்தன. மனிதனும், மரங்களும், மற்றமைகளும் இரண்டறக்கலந்த நிலை அது.
வரதன் மனிதர்களை மதிப்பவன். மரங்களை கொண்டாடுபவன். காட்டு விலங்குகளுடனும், நாட்டு விலங்குகளுடனும் விளையாட்டுத் தோழனாகுபவன். உயிர்களை அன்புடன் பார்ப்பவன். அதன் ஆத்மாக்களுடன் உரையாடுபவன். மரங்களின் அசைவையும், விலங்கு நடத்தைகளையும் கூர்ந்து நோக்குபவன். தனது சுற்றயலிலுள்ள ஒவ்வொரு கணத்திலும் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானிப்பவன். அதற்கு கருகோள்களை உருவாக்குபவன். அதனை துணிந்து பரிசோதித்து ஒரு முடிவுக்கு வருபவன். விஞ்ஞானி.
வடகோவையாரின் கதைகள் எங்கும் மரங்கள் வருகின்றன. அந்த மரங்கள் அவர் வைத்தது. அல்லது அவரின் முன்னோர்கள் வைத்தது. அல்லது வேறு யாரோ வைத்ததாகவும் இருக்கலாம். அவர் மரங்களை கொண்டாடுகிறார். மரங்கள் அவை தருகின்ற காட்சி, நுகர் இன்பத்திற்காக மட்டுமன்றி, 10 ஏசி இயந்திரங்கள் தரும் குளிர்மைக்கு சமனான குளிர்ச்சியை பெற வேண்டுமானால் மரங்களை கொண்டாட வேண்டும் என்கின்றார். அதன் காரணமாக ஏசி பாவனை குறையும். அது வெளிவிடுகின்ற சீஎப்சி குறையும். ஓசோன் ஓட்டையாதல் குறையும். அத்துடன் மரங்கள் காபனீரொட்சைட்டு வாயுவின்அளவைப் பேணும். புவி வெப்பமடைதல் குறையும். மரங்கள் காலநிலை மாற்றத்திற்கெதிராக போராடும். மரங்கள் ஆறு மனிதர்களுக்குத் தேவையான ஒட்சிசனைத் தருகின்றன. ஒரு மரத்தைக் கொல்வது ஆறு மனிதர்களைக் கொல்வதற்கும் சமனாகும்.
வடகோவையாரின் மரங்கள், மரத்தடிகள் யாவுமே மனிதர்களுக்கிடையே உறவையும், மனிதாபிமானத்தையும். அன்பையும் வளர்க்கும் இடங்களாகவே (றிலேசன்-இன்-பிளேஸ்) இருக்கின்றன. பிள்ளைகளுக்கும், தனக்கும் ஊஞ்சல் கட்டியாடும் இடமாகி, தேனீர் அருந்தும் இடமாகி, காலைப் பத்திரிகைகள் படிக்கும் இடமாகி, உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள், மற்றவர்களுடன் கருத்துக்கள் பரிமாறும் இடமாகி, பிள்ளைகளின் திருமணப் பேச்சுக்களை நடாத்தும் இடமாகி, வாழ்வின் முக்கிய தருணங்களின் முடிவுகள் எடுக்கும் இடமாகி, யாதுமாகிய இடங்களின் மொத்த இடமாயிருந்தது அவரின் மரங்கள். இது நவீன சூழலியல் கலாச்சாரத்தின் அல்லது சூழலியற் சமூகவியலின் மிக முக்கியமான அம்சமாகும்.

விலங்குகள்:
மரங்களை இலக்கியத்தில் உச்சிநலையினல் வைத்துக் கொண்டாடிய கதைசொல்லியாகவிருந்தாலும், வடகோவை தோழர்களாக அல்லது விளையாட்டுத் தோழர்களாக கொண்டாடிய, அவர் வளர்த்த காட்டு விலங்குகளினதும், வீட்டு விலங்குகளினதும்;, பறவைகளினதம் எண்ணிக்கையும், வகைகளும் மலைக்க வைக்கின்றன.
வீட்டு விலங்குகளில் மாடுகளுக்கு அதன் பல்வேறு இயல்புகளினதும், நிறங்கள், உடலமைப்பின் அடிப்படையில் பெயர் வைத்திருப்பது, பொலநறுவை கல்விகாரைப் பகுதிகளில் 1500 குரங்குகளில் பெயர் வைத்து ஆய்வு நடாத்திய ஜேர்மனிய விஞ்ஞானி டிட்டஸ் அவர்களின் ஞாபகத்தை மீட்டுகிறது. அதேபோல எனது ஆய்வுகளில் குரங்குகளுக்கு பெயர் வைத்ததும் ஞாபகத்திற்கு வருகின்றது.
விலங்குகளிற்கு பெயர் வைப்பது அந்தப்பெயர்களை வைத்து மாடுகளை அடக்குவது சொற்பேச்சு கேட்ட வைப்பது விலங்கு நடத்தையியலில் அசோசியற் லேனிங்கு சிறந்த உதாரணமாகும்.
பிள்ளையார் எறும்புகள் முட்டைகொண்டு திட்டையேற மழைவருவது, சத்தத்தை வைத்து பறவைகளின் பெயர்களைக் கண்டுபிடிப்பது, பறவைகளின் கூடுகட்டல் நடத்தைகள், பறவைகளின் மற்றைய நடத்தைகள், ஓணானுக்கும், மைனாவுக்குமான இட ஆதிக்க போட்டி, மைனாக்களின் ஊட்டல் நடத்தைகள் (வெட்டுக்கிளி. வேப்பம் பழம்) போன்ற நுண்ணிய நடத்தைகளின் கூறுகள் (இதோகிராம்) போன்ற எண்ணற்ற மிக நுணுக்கமான தகவல்கள் மிகுந்த வாசக ஈர்ப்புமிக்கதாக கதைகள் நெடுக விரவிக் காணப்படுகின்றன.
மனிதர்களையும், மற்றமைகளையும் வேறுபாடுகளில்லாது நேசித்த, உயிர்களிடத்தில் எல்லையற்ற அன்புள்ள ஒரு மனிதராலேயே விலங்குகளையும், பறவைகளையும், மரங்களையும், உயிர்களையும் நேசிப்பதற்கு சாத்தியமாகும்.
ழழைப்பஞ்சாங்கம் கதையில் வரும் வேட்டைத் திருவிழாவில் பங்குபற்றிக் கல்லெறியும் பக்தர்களை மனவேட்டையாடிகள் எனக் குறிப்பிடும் வடகோவையார், அவர்கள் தங்களுக்குள்ளிருக்கும் கற்கால மனிதர்களை வெளிப்படுத்துகிறார்கள் என்று பரிணாமப் பார்வையும், உளவியல் பார்வையும் ஒருங்கேசேர மனிதனை ஒரு சிறப்பு விலங்காக நினைத்து, அவனது நடத்தைகள் பற்றிய மிகவும் நுண்மையான பார்வைகளையும், உளவியல் விளக்கங்களையும் கொடுக்கிறார்.
வடகோவை வரதராஜன்:
வடகோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.ரி. வரதராஜன் என்னும் இயற்பெயர் கொண்ட வடகோவை வரதராஜன், சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், பத்தியெழுத்துக்கள் போன்றவைகளில் ஈடுபாடுள்ளவர். குண்டசாலை விவசாயக் கல்லூரியில் கற்று விவசாய விஞ்ஞான டிப்ளோமா பட்டம் பெற்றவர். இந்த தகமையும், தொழில்நுட்பக்கூறுகளின் மீதிருந்த தேர்ச்சியும் இந்தத் தொகுதிபூராக நாங்கள் தரிசிக்கக்கூடியதே. சிறந்த விவசாய தொழில்நுட்பவியலாளராக இருந்தும், கிராம உத்தியோகத்தராக கடமையை விரும்பி ஏற்றவர். இங்கே விவசாயமும் (பயிர் அல்லது மர அல்லது விலங்கு வளர்ப்பு), சமூகமும் ஒன்று கலக்கும் பொதுப்புள்ளி ஒன்றைக் கண்டடைந்திருக்கின்றார் என்றே கருதலாம். ஒரு கால்நடை வைத்தியராக தான் வரவிரும்பியதாக என்னிடம் ஒரு தரம் கூறியது ஞாபகம் வருகின்றது.
அறிவியல் விடயங்களை அல்லது அது சார்ந்த விடயங்களை இலக்கியமாக்கும்போது அவை பிரச்சாரத்;தன்மையுள்ளவைகளாகுவதற்கு அல்லது பாடக்குறிப்புக்களாகுவதற்கு ஒரு சிறு பிரிகோடே இருக்கின்றது. மொழியின் செப்பமும், பரந்த வாசிப்பும், ஒரு நிலவு குளிர்ச்சியாக இல்லை தொகுதியை சிறந்த இலக்கியமாக்கியிருக்கின்றது. சுமார் 30 தொடக்கம் 40 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு முக்கிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் பிரசுரமான இந்தக் கதைகள் இன்றும் சம காலத்திற்கு பொருந்தி வருவதானது, இந்தக் கதைகள் கால இடங்களை கடந்ததாகவும், எக் காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதும் வடகோவையாரின் எழுத்தின் சிறப்பம்சமாகும். நான் கண்டு, பேசி, கதைத்து, வாசித்து, கேள்விப்பட்டு அறிந்த நிஜ உலகின் வடகோவையாருக்கும், இந்தக் கதைகளின் சொல்லிகளுக்கும் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. வடகோவை வரதராஜன் சந்திரன், மழைப்பஞ்சாங்க கதைசொல்லி, மாமா, விநோதன், குமார், வரதன், வெளிறிகள் தந்தை, போன்றவற்றின் மொத்தக் கலவை. விநோதன், வரதன் போன்ற கதைகளில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் கதைகளுக்கிடையேயுள்ள பனுவலிடைத் தொடர்புளைத் தந்து, நிலவு குளிர்ச்சியாக இல்லை சிறுகதைத் தொகுதியை ஒரு நொன் லீனியர் நாவலாக காட்ட முயற்சிக்கின்றன.
மரங்களையும், விலங்குகளையும், இயற்கையையும், மனித நடத்தைகளின் வேறுபட்ட கோலங்கள், வினோதங்கள், சமுதாய முரண்கள், ஆளுமைப் பேதங்கள், மனிதர்களின் உள்மன யாத்திரைகள், இயற்கைச் சூழல், இயற்கை நேசம் போன்றவைகளையும் நுணுக்கமான கால இட சித்தரிப்புகளுடன் கேலியும், கிண்டலும் கலந்து சீரியசாக பேசிய நிலவு குளிர்ச்சியாக இல்லை சிறுகதைத் தொகுதி ஒரு கால சட்டத்தின் கொண்டாடத் தகுந்த வித்தியாசமான முயற்சியாகும்.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...