நான் கடந்த வருட ஆரம்பத்தில் மலேசியாவின் கெபொங், செலாங் டாருல்இசான் பிரதேசத்திலுள்ள அயனமண்டல மழைக்காடு ஒன்றுக்கு களவேலைகள் நிமித்தம் சென்றிருந்தேன். அங்கு தாவரங்களுடன் எனக்கு அற்புதமான அனுபவங்கள் கிடைத்தன. அந்த அனுபவங்களை தாவரங்களின் உரையாடல்கள் என எழுதியிருந்தேன். ஆனால் செம்மைப்படுத்தல்களுக்கான அவகாசம் கிடைப்பதிலுள்ள இடர்பாடுகள் காரணமாக வெளிக்கு விடுதல்களில் பெரிய தாமதம் ஏற்பட்டிருக்கின்றது. காலப் பொருத்தம் கருதி தாவரங்களின் உரையாடல்கள் - ஒன்று என்ற தொடரிலிருந்து சிறு பகுதியைத் தருகின்றேன்.
தாவரங்களின் உரையாடல்கள் - ஒன்று
விதானங்களின் வெட்கம் அல்லது விதானங்களின் இணக்கப்பாடின்மை அல்லது விதானங்களுக்கிடையேயான இடைவெளி.
……….
............
தாவரத்தின் இலைகளுள்ள உச்சிப் பகுதியை பொதுவாக முடி அல்லது உச்சி அல்லது விதானம் என்று கூறுவார்கள். பொதுவாக இயற்கைச் சூழலில் வளரும் தாவரங்களின் முடி அல்லது உச்சி அல்லது விதானம் ஒன்றொடொன்று ஒட்டி நிற்பதில்லை. இயற்கைச் சூழலில் மரங்கள் அருகருகே வளர்ந்தாலும், அதன் முடிகள் அல்லது உச்சிகள் வெவ்வேறு உயரங்களில் அதாவது வெளிப்பாட்டு படை, விதானம், கீழ்ப்படை, தரைப்படை போன்ற பல வகையான உச்சிகளை அல்லது முடிகளை உருவாக்கி ஒட்டி நிற்பதை தவிர்த்து இடைவெளிவிட்ட நிற்கின்றன. மலேசியாவின் கெபொங், செலாங் டாருல்இசான் பிரதேசத்திலுள்ள அயனமண்டல மழைக்காட்டில் நானும் எனது சக களவேலையாளர்களும் டிறயொபலனொப்ஸ் அறொமற்றிக்கா எனப்படும் போர்ணியோ கற்பூர அல்லது சுமாத்தரா கற்பூர அல்லது கற்பூர மரங்களில் இந்த விதானங்களின் வெட்கம் அல்லது விதானங்களின் இணக்கப்பாடின்மை அல்லது விதானங்களுக்கிடையேயான இடைவெளி நடத்தையை அவதானிக்க முடிந்தது. இது சுமார் 225 அடி உயர மரமென்பதால் இலகுவாக அவதானிக்க முடிந்தது. ஏன் இவ்வாறு இந்தத் தாவரங்களின் வெட்க நடத்தைகள் இருக்கின்றன என்பதற்கு பல உடற்றொழிலியல், பரிணாமவியல், நடத்தையியல் விளக்கங்கள் இருக்கின்றன. பல ஆய்வுகளின் முடிவில் அவைகளில் முக்கியமான ஒரு காரணமாக இலையுண்ணும் பூச்சியின் குடம்பியினால் உருவாகும் தொற்றை தடுப்பதற்காக எனக் கூறியிருக்கிறார்கள்.
இனி காடு போன்ற இயற்கையான மரங்கள் நிறைந்த இடங்களுக்குச் சென்றால், கண்களை மட்டும் திறக்காமல் உங்கள் இதயங்களை அகலத் திறவுங்கள். தாவரங்கள் உங்களுடன் உரையாடல்களை நிகழ்த்தும். நீங்களும் தாவரங்களுடன் உரையாடுங்கள். தாவரங்களிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறையவே இருக்கின்றன.
No comments:
Post a Comment