Monday, January 11, 2021

சூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வு - 1


- ஏ.எம். றியாஸ் அகமட்

(குறிப்பு:- 49 வது இலக்கியச் சந்திப்பு (கிளிநொச்சி- வன்னி- 2019) நிகழ்வில், நான் சமர்ப்பித்த “பிரதிகளில் இயற்கை, சூழல், உயிரினங்கள்; சூழலியல் திறனாய்வை முன் வைத்து" கட்டுரையை, தொடர்ச்சியாக இங்கு இடப்போகிறேன். நமது படைப்பாளிகளின் படைப்புக்கள் இங்கு சூழலியல் அல்லது பசுமைத் திறனாய்வுக்குட்படுத்தப்படப் போகின்றன. இந்த கட்டுரையின் ஒரு பகுதி யாழ் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை நுாற்றாண்டு விழா சிறப்பு மலர் 2019, ”சன்மார்க்கன்” இதழில் வெளியாகியும் இருந்தது.)
அறிமுகம்:
Oikos (வீடு அல்லது வாழ்வதற்கான இடம்), Logos (கற்றல்) என்னும் கிரேக்க சொற்களிலிருந்து தோன்றியது Ecology என்னும் சூழலியல். இதிலிருந்து சூழலியல் எனப்படுவது உயிரினங்களை அவற்றின் வாழிடங்களில் கற்றல் எனலாம். அதாவது சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, உயிருள்ள கூறுகளைக், கற்கும் கற்கையாகும்.
ஜேர்மனைச் சேர்ந்த Hanns Reiter, 1885இல் சூழலியல் என்னும் பதத்தை உபயோகித்தார். 1869களில் ஒரு உயிரினத்தின் சேதன, அசேதன சூழல்களுக்கிடையிலான உறவுகளைக் கற்றல் சூழலியல் என Earnest Hackel வரைவிலக்கணப்படுத்தினார்.
1963இல் Eugene Odum, இயற்கையின் அமைப்பையும், தொழிற்பாட்டையும் பற்றிய கற்கை என வரைவிலக்கணப்படுத்தினார். இந்த வரைவிலக்கணமே இன்று மிகவும் பெரிதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. பின்னர் இந்தச் சூழலியல் ஒரு வகையில் தற்சூழலியல், ஒன்றிய சூழலியல் என இருவகையாக அணுகப்படும். பின்னர் தனியங்கி, குடித்தொகை, சாகியம், சூழற்றொகுதி, உயிர்க்கோளம் எனப் பல்வேறு மட்டங்களில் உயிருள்ள, உயிரற்ற கூறுகள் ஆராயப்படும்.
சூழலியலானது தனது மற்றைய இயற்கை விஞ்ஞானங்களுடன் சேர்ந்து மூலக்கூற்று சூழலியல், அங்கிகள் சூழலியல், குடித்தொகை சூழலியல், சாகியச் சூழலியல், சூழற்றொகுதி சூழலியல், நடத்தைச் சூழலியல் போன்ற பல உப துறைகளை உருவாக்கியிருக்கின்றது. அதேபோல சமூக விஞ்ஞானங்களின் உட்கூறுகளுடன் கொண்ட நெருக்கம் காரணமாக வெவ்வேறு துறைகளுடன் சேர்ந்து சூழல் பெண்ணியம் (Eco feminism) (இயற்கையுடன் இணைந்து பெண்ணை முன்வைக்கின்றது), சூழல் மொழியியல் (Eco linguistic) (மொழியை சூழல் நோக்கில ;அணுகுகனி;றது), சூழலியல் முதலாளித்துவம் (Capitalist Ecology), சூழலியல் மார்க்சியம் (Marxist Ecology), சமூகவியற் சூழலியல் (Social ecology), சூழல் மெய்யியல் (Eco philosophy), பின்காலனியச் சூழலியல் (Postcolonial ecology), சூழல் மானிடவியல் (Ecoanthropology), சூழல் உளவியல் (eco psychology) போன்ற துறைகளை உருவாக்கி சூழலியலானது பல்கிப் பெருகிய கோட்பாடாக விரிவடைந்து நிற்கின்றது. இவைகளில் ஒரு முக்கியமான துறைதான் சூழலியல் விமர்சனம் (Eco criticism).

சூழலியல் திறனாய்வு:
இலக்கியத்திற்கும் இயற்கைச் சூழலுக்கும் உள்ள உறவுகளை அடிப்படையாக் கொண்ட, சூழல் திறனாய்வு 1990 களில் ஐக்கிய அமரிக்காவில் தோற்றம் பெற்று பின்னர் ஐக்கிய இராச்சியம், மற்ற நாடுகளில் முன்னெடுக்கபட்டது. பூமியின் சுற்றுச் சூழல் பிரச்சினைகளை சரியாகக் கையாளுவதற்கு மனிதனுக்கும் இயற்கை சூழலுக்கும் உள்ள தொடர்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற கருதுகோளை சூழலியல் திறனாய்வு அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது என்ற கருத்தும் உண்டு.
1978 இல் வில்லியம் ரூக்கட் (William Rueckert) “சூழலியல் திறனாய்வு (Eco criticism) என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார். பின்னர் 1989 யில் கிலாட் பெல்டி (Glotfelty) என்ற பெண் அறிஞர் இதனைப் பிரபலயப்படுத்தினார். இவர் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவராக கருதப்படுகின்றார். 1992ம் ஆண்டில் இலக்கியம், சுற்றுச் சூழல் கல்விக்கான சங்கம் நிறுவப்படுகின்றது (Interdisciplinary studies in Literature and environment (ASLE))). இதனால் —Journal of Interdisciplinary Studies in Literature and Environment (ISLE) என்ற சஞ்சிகையும், நிறைய நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவரத் தொடங்குகின்றன.
இலக்கியத் திறனாய்வு அணுகுமுறையில் சூழலியல், இயற்கையின் தனித்தன்மையை வைத்து இயங்க முற்படுகின்றது. சூழலியல் திறனாய்வு இயற்கைக்கும், இலக்கியத்துக்குமுள்ள உறவைக் கற்றல், இயற்கையை மையப்படுத்திய படைப்புக்களை முதன்மைப்படுத்தல், இலக்கியங்களில் வெளிப்படுத்தும் இயற்கை சார்ந்த தன்மைகளை முன்வைத்தல், இயற்கையின் பேராற்றலை முதன்மைப்படுத்தல், மனிதமையச் செயற்பாடுகளால் ஏற்பட்ட இயற்கை அழிவுகளை முன்வைத்து மனிதனை மையப்படுத்தாமல், இயற்கையே மையமானது எனும் கருத்தை உருவாக்கல், இயற்கை – உயிரினங்களின் விடுதலையைக் கோருவதோடு அதேநேரம் மனிதனின் விடுதலைக்குமான பாதையாக அமைதல் போன்ற பல்வேறு பண்புகளைக்; கொண்டமைந்து காணப்படுகின்றது. இதன் காரணமாகவே சூழலியல் விமர்சனமானது பல்வேறு துறைகளுடனும், கோட்பாடுகளுடனும் இணைந்து செல்வதை அதிகமாக சாத்தியப்படுத்துகின்றது.
இன்னொரு வகையில் கூறப்போனால் சனத்தொகைப் பெருக்கம், அதன் காரணமாக உருவான கைத்தொழில் மயமாக்கம், நகரமயமாக்கம் போன்றவை இயற்கையையும், சுற்றுச் சூழலையும் கவனத்திற்கொள்ளாது அதீத இலாபத்தை நோக்கமாகக் கொண்ட உற்பத்தி முறைகளின் காரணமாக உருவான சூழல் மாசடைதல் (வளி, தரை, நீர், ஒலி, கதிர்த்தொழிற்பாடு), பூகோள வெப்பமுறல், பனியுருகல், கடல்மட்ட உயர்வு, ஓசோன்படை பாதிப்புக்குள்ளாதல், காடழிப்பு, வாழ்விடங்கள் சுருங்கல், பாலைவனமாதல், காட்டுத் தீ, மனிதர்கள்-விலங்குகள் மோதல் (யானை, சிறுத்தை, முதலை போன்றவைகளுடன்) காலநிலை மாற்றம், அதன் தொடர்ந்தேர்ச்சியான பேரனர்த்தங்கள், அந்நிய ஆக்கிரமிப்பு விலங்கு, தாவரங்கள் ஊடுருவல் போன்றவைகளால் இந்தப் பூழியின் இருப்பிற்கே ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது. “இந்தப் பூமியைக் காப்போம், வரும் தலைமுறைக்கு வாழ்விடம் அளிப்போம்” என்ற கருத்தாக்கத்தின் விளைவால் இலக்கியங்களை சூழலியலுடன் சம்பந்தப்படுத்தி உருவான நவீன திறனாய்வு முறைதான் “சூழலியல் திறனாய்வு” ஆகும். இதனை பசுமைத் திறனாய்வு (Green criticism) என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
சூழலியல் திறனாய்வின் போக்குகள்:
“சூழலியல் திறனாய்வு இலக்கியத்தை எத்தகைய முறையில் எல்லாம் அணுகுவதற்கு முயல்கிறது என்பதைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
1. இயற்கை குறித்த சமகாலப் படைப்புகளைச் சுற்றுச்சூழல் அறிவியல் வழங்கிய அறிவு கொண்டு ஆராய்தல்
2. பழம்பெரும் இலக்கியங்களில் இயற்கை எவ்வாறு இடம்பெற்றுள்ளது என விளக்குதல்.
3. மனிதர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு நடவடிக்கை இயற்கையின் மேல் எத்தகைய தாக்கத்தை வரலாறுதோறும் நிகழ்த்தியுள்ளது என்பதை இலக்கியங்களின் வழி வெளிக்கொணர்தல்.
4. இயற்கை குறித்த அறிவு, இலக்கியப் படைப்புகளில் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதைப் புலப்படுத்துதல்.
5. இயற்கைக்கும் மனிதர்களுக்குமான முரணையும், பகை நட்பையும் ஒத்திசைவையும் இலக்கிய வரலாற்றில் தேடி அலைதல்.
6. சுற்றுச்சூழல் திறனாய்வை வளர்த்தெடுப்பதன் மூலம் ‘புவியை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுதல்’ என்கிற தற்காலச் சமூகப் போராளிகளின் முயற்சிக்குத் துணைநிற்றல்.”
இலக்கியம் எவ்வாறு இயற்கையை ஒரு அழகியல் பண்டமாக புனைந்துள்ளது என்ற வரலாற்றை எடுத்துரைப்பதன் மூலம் விழிப்புணர்வை தூண்டுகின்றது. இலக்கியத் திறனாய்வு பூமியின் இயற்கை சூழலின் நிலைப்பாட்டிலிருந்து இலக்கியத்தையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றது.
சூழலியல் திறனாய்வாளர்கள் பின்வரும் கேள்விகளை எழுப்புகின்றார்கள்
1) ஒரு கவிதையில் இயற்கை எவ்வாறு முன்மொழியப்படுகின்றது?
2) ஒரு கதைப்பின்னலில் எவ்வாறு இயற்கை பொருட்கள் வினை புரிகின்றன?
3) நிலம் குறித்த நம்முடைய உருவகங்கள் இலக்கியச் செயற்பாட்டிற்கு எவ்வாறு உதவுகின்றன?
சுவீடனைச் சேர்ந்த 16 வயது சுற்றுச் சூழல் போராளியும் மாணவியுமான கிரேட்டா தன்பேர்க்கின் பின்வரும் கூற்று மிக முக்கியமாக கவனத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். “காலநிலை மாற்றத்தால் உருவாகும் பிரச்சினைகள் காரணமாக இன்று மனிதர்கள் பேரவலத்தையும், வாழ்வாதாரச் சிக்கலையும் எதிர்நோக்கி வருகின்றார்கள். அச்சு, ஒலி, ஒளி, இணையம் உட்பட அனைத்து ஊடகங்களும் இவை குறித்த செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எம் கண் முன்னே நிச்சயமற்ற எதிர்காலத்தை வைத்துக் கொண்டு மற்ற விடயங்களை அதிகமாக பேசிக்கொண்டிருக்கின்றோம்.”
எழுத்தாளர்கள்தான் ஒரு சமூகத்தின் மனச்சாட்சி. அவர்கள்தான் இந்தப் பேசாப் பொருளை அல்லது குறைவாக பேசப்பட்ட பொருளை பேச வேண்டும். தமிழிலக்கிய உலகில் காலநிலை மாற்றம் சம்பந்தமாக சிறு சலனம் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. சமீப காலங்களில் நாம் எதிர்கொண்டுள்ள சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு (இந்தியா, இலங்கை தமிழ்ச் சூழல்களில்) தமிழ் இலக்கியம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ன வகையில் செயலாற்றினார்கள் என்பதும் பேசப்பட வேண்டும்.
சூழலியல் குறித்த அறிவும், விழிப்புணர்வம் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. மனிதனை இயற்கையோடு வாழத் தூண்டுகின்ற சூழலியல,; இலக்கியங்களிலும், எழுத்துக்களிலும் மிகுதியாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதீத இலாபத்தை மையமாகக் கொண்ட உற்பத்தி முறைமையின் காரணமாக இயற்கை சுரண்டலுக்குள்ளாகி அழிவின் விழிம்பில் இருப்பதன் காரணமாக மனிதர்களினதும், மற்றமைகளினதும், மற்றவர்களினதும் இருப்பை நிலைப்படுத்த சூழலியல் குறித்த ஆய்வுகளும், எழுத்துக்களும், இலக்கியங்களும், விமர்சனங்களும் மிகவும் தேவைப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது.


No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...