Sunday, January 10, 2021

அல்ஹூதா குகை - ஓமான்

 


அல்ஹூதா குகையானது ஓமானின் அத் தகிலியா மாகாணத்தில் அல் ஹம்றா என்ற இடத்தில் ஜபல் ஸம்ஸ் என்ற மலையடிவாரத்தில் காணப்படும் 05 கிலோமீற்றர் நீளமான குகையாகும். இரண்டு மில்லியன் வருட பழமையான இந்த குகையானது 1990களின் ஆரம்பத்தில் கால்நடை மேய்ப்பர்களினால் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகையானது, பின்னர் 2006 ம் ஆண்டு அரசாங்கத்தினால் டிசம்பர் 2006ல் உல்லாசப் பிரயாணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது. வரவேற்கும் இடத்திலிருந்து குகைக்கு அழைத்துச் செல்ல சிறிய சொகுசு மின்சார இரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் குகையின் செழிப்பான உயிர்ப்பல்வகைமைக்கு இதற்குள் காணப்படும் நான்கு ஏரிகள் காரணமாக அமைந்திருக்கின்றது. Garra barreimiae, the Oman garra என்ற Omani blind cave fish (ஓமான் குருட்டு குகை மீன்) நன்கு பிரபல்யமானது. அத்துடன் பல்வேறு வகையான வெளவால், ஆத்ரோபோடாக்கள், மொலஸ்காக்கள், சிலந்திகள், நத்தைகள், நீர்ப் பூச்சிகள் போன்ற பல வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன.

அல்ஹூதா குகையானது மற்றைய ஓமான் குகைகள் போன்று அமில நீர், சுண்ணாம்புக் கல்லை கரையச் செய்ததால் உருவானதாகும். அதாவது மழைநீரில் வளியிலுள்ள அல்லது தரையிலுள்ள காபனீரொட்சைட்டு கரைவதால் உருவாகும் காபனிக் அமிலமானது ஒவ்வொரு நூறு வருடங்களுக்கும் 10 மில்லிமீற்றர் பாறைகளை அரித்ததன் காரணமாக இந்தக் குகை உருவாகியுள்ளது. பல மில்லியன் வருடங்களாக பாறையின் மேற்புறத்திலிருந்து துளித்துளியாக விழும் நீர்த்துளிகளிலுள்ள கனிப்பொருட்களின் வீழ்படிவுகள் காரணமாக பல்வேறு உருவங்களை குகையில் தோற்றுவித்துள்ளன. இந்த உலகில் கண்டங்கள் எவ்வாறு, இந்தக் குகை எவ்வாறு தோற்றம் பெற்றன என்ற அடிப்படையை விளக்கும் கூர்ப்பு உயிரியல் அல்லது புவியியல் சம்பந்தப்பட்ட ஒரு நூதனசாலையும் இங்கு இருக்கிறது.


No comments:

Post a Comment

கனவுத் தூரிகைகளால் வரைந்த ஓவியனின் கவிதைகள்

  வாசகசாலை பதிப்பகத்தின் (ராஜகீழ்ப்பாக்கம், கிழக்கு தாம்பரம், சென்னை 600 073) வெளியீடான ஏ. நஸ்புள்ளாஹ்வின் ”டாவின்சியின் ஓவியத்தில் நடனமாடுப...