Wednesday, January 13, 2021

இயற்கையின் புதிர்கள்

 இயற்கை எப்போதும் புதிர்களை நிறைத்து வைத்திருக்கின்றது. அவைகளை அதன் போக்கில் புரிந்துகொண்டால் எல்லாமே இலகுவானதாகிவிடுகின்றது. மரங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்குமான, குறிப்பாக விலங்குகளுக்குமான உறவுகள் அற்புதமானவை. காரண, காரியம் கொண்டவை. திருக்கொன்றை பழங்களில் துளையிட்டு, முட்டையிடும் பூச்சிகளுக்கும், அந்த மரங்களின் பரவலுக்கும் இடையிலான தொடர்பு அற்புதமானது.

Cassia fistula என்ற விஞ்ஞானப் பெயரையுடைய திருக்கொன்றை மரங்கள் (ඇහැළ, Golden shower tree), இந்திய உப கண்டத்திற்குரியன. மிகவும் அழகான, கவர்ச்சியான இந்த மரங்களை வித்துக்களின் மூலம் உருவாக்குவது கடினமானது. இதற்கு காரணம் அது கொண்டிருக்கின்ற தடித்த வித்துறைகளாகும். செயற்கையான முறைகளில் முளைக்கச் செய்ய பல்வேறு பரிகரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இயற்கையான நிலைமைகளில் நரிகள், மற்றும் பறவைகள் போன்ற விலங்குகள் இதன் பழங்களை உண்டு, மலங்களிலுள்ள விதைகளின் மூலம் பரவச் செய்கின்றன.
1 தொடக்கம் 2 அடி வரை நீளமானதும், 0.5 தொடக்கம் 1 அங்குலம் வரை அகலமானதுமான பழங்களில் காணப்படும் சிறிய அறைக்கு ஒவ்வொன்றாக பல விதைகள் காணப்படும். இந்த காய்கள் கீழே மழைகாலத்திற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கீழே விழத் தொடங்கும். அப்போது பூச்சிகள் ஒரு சில அறைகளில் வெளிப்பக்கமிருந்துளையிட்டு முட்டைகள் இடும். வாழ்க்கை வட்டம் முடித்து பெரும்பாலான நிறையுடலிகளும் வெளியேறும். அப்போது மழை காலமும் தொடங்க, மழை நீர் அந்த சிறிய அறைகளுக்கூடாக சென்று, அந்த பழங்களிலுள்ள விதைகளை நிரோதித்து, விதைகளும் முழைக்கத் தொடங்கியிருக்கும். அந்த நிலையில், இவ்வாறான விதைகளை சேகரித்து, திருக்கொன்றை மரங்களை இலகுவாக உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பூச்சிகள் முட்டைகள் இடுவதற்கு துளைகள் இடாவிட்டால், நீர் உள்ளேயும் போகாது, விதைகளும் முளைக்காது. இது ஒரு ஒன்றியவாழி முறை. ”நீ இடமும், உணவும் தந்தால், நான் உன் விதைகளை முளைக்கச் செய்வேன்” ரகமானது. இன்று நிறைய இவ்வாறான பழங்களைச் சேகரித்து, அவைகளை நாற்றுமேடையில் முளைக்கவிட்டிருக்கிறேன். இயற்கை இன்னும் எத்தனையோ அற்புதங்களை தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கிறது. முயன்றால் புரிந்துகொண்டு, அவைகளை பிரயோசனப்படுத்திவிடலாம்.



No comments:

Post a Comment

பாறைகளில் உறைந்து போன உயிர்ச்சுவடுகள்

  ஓமானின் வட பகுதியில், அல் பற்றினா தென் மாகாணத்தின் பகுதிகளில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது ஒரு இடம் என்னை மிகக் கவர்வதாய் இருந்தது. அந்...